Friday, January 31, 2014

கம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன்

அன்பார்ந்த நண்பர்களே , 

நான் இந்த பதிவில் சொன்னது போல் 


கட்டுரையை எழுதுவதற்காகவாவது கமப்ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தை  சிறிது படித்து, அதிலிருந்து ஒரு துளியாக 

"கம்பனில் ஆளுமையியலில்  - கைகேயியின் ஆளுமை"  

என்ற தலைப்பில் ஒருவழியாக கட்டுரையை எழுதி சமர்பித்திருந்தேன். கட்டுரையும் தேர்வாகி விட்டது என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கோ உண்மையில நம்ப முடியலை. இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தான் அந்த நம்பிக்கையின்மைக்கு காரணம். 

முதலில் கட்டுரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி என்று சனவரி மாதம் 15ஆம் தேதி என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் கொடுத்திருந்த தலைப்புகளைப் பார்த்தவுடனே, எனக்கு எந்த தலைப்பை எடுப்பது என்று ஒரே குழப்பம். ரெண்டு மூணு தலைப்பை யோசிச்சு, கடைசியில எப்படியோ ஒரு தலைப்பை கண்டுப்பிடிச்சேன். அப்புறம் தான் மிகப்பெரிய சோதனையே, என்னிடம் கம்பராமாயணத்துக்கான உரைநடை புத்தகம் கிடையாது. இங்கு இருக்கும் ஒரு தனியார் நூலகத்தில்(இலங்கை தமிழர்கள் இந்த நூலகத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்துகிறார்கள். வெறும் தமிழ் புத்தகங்கள் மட்டும் தான் இருக்கும்). அந்த புத்தகக் கடலில்   என்னால் தேடி கண்டுப்பிடிக்க முடியலை. இந்த நூலகம் கணினி மயம் கிடையாது. அதனால் நாம் தான் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அப்படி தேடுவதற்கு எனக்கு பொறுமை இல்லை. நாங்கள் முன்பிருந்த வெண்ட்வோர்த்வில் (wentworthville) இடத்தில், நாங்கள் குடியிருந்த தெருவிலேயே ஒரு அரசாங்க நூலகம் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட தமிழ் நூலகள்,நாவல்கள் என்று இருக்கும். அதில் இந்த அயோத்தியா காண்டம் இருக்கிறது. ஆனால் என் நேரம் அதை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்த வழியும் மூடிவிட்டது.  வலைத்தளத்தில் அந்த புத்தகத்திற்கு பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நான் கேட்கும் நேரம் அது கிடைக்கவில்லை. 

கடைசியில், நண்பர் அன்பு ஜெயா அவர்கள், தன்னிடம் இருந்த புத்தகத்தையும், மேலும் இரண்டு கம்பராமாயன மின்னூலையும்   எனக்கு அளித்து, மாபெரும் உதவி புரிந்தார்கள். (அவர்களும் கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள்). 

இப்படி புத்தகத்தை தேடிப்பிடிப்பதிலேயே நாள் ஓடி விட்டது. இந்த மாதம் 13ஆம் தேதி போல் கம்பன் கழகத்தாரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, அவர்கள் கட்டுரையை சமர்பிக்க தேதியை இந்த மாதம் 31ஆம் தேதி வரை நீடித்திருப்பதாக சொன்னார்கள். ஆஹா, நமக்காகவே அவர்கள் நீடித்திருக்கிறார்கள், இனியும் தாமதம் செய்யாமல், கட்டுரையை எழுதிவிட வேண்டும் என்ற முனைப்போடு ஒரு வழியா கட்டுரையை எழுதி சந்தேகத்தோட தான் அனுப்பினேன். அந்த இராமனின் அருளால் கட்டுரை தேர்வு செய்யப்பட்டு விட்டது. 

மார்ச் 15,16 தேதிகளில் காரைக்குடியில் இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதில் தான் நான் இந்த கட்டுரையை வாசிக்கவுள்ளேன். 

இனி நான் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றெல்லாம் இனி தான் யோசிக்க வேண்டும். 

இந்த கட்டுரை மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட பின், நான் இங்கு அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். Wednesday, January 29, 2014

பச்சிளம் குழந்தையின் கேள்வி


புகைப்பட உதவி - கூகுள் ஆண்டவர்

"பூமிக்கு வந்து பதினைந்து
 நாட்களே ஆன என்னை
ஒரு குப்பையை எறிவது
 போல் எப்படியம்மா ஏறிய
முடிந்தது உன்னால்!!!

உன் வயிற்றில் வந்து
பிறந்தது தான் நான்
செய்த பாவமாம்மா?
உன்னுடைய ஐந்து நிமிட
சுகத்துக்கு நான் சாட்சி
ஆகாமல் இருக்க என்னை
உன் கர்ப்பப்பையிலேயே
அழித்திருக்கலாமே, அதை
ஏனம்மா நீ செய்யவில்லை

நீ அப்படி செய்யாமல்
விட்டதால், இன்று நான்
உன்னை போல் கேடுக்
கெட்ட மனிதர்கள் வாழும்
இந்த மோசமான உலகில்
அநாதை என்ற பட்டப்
பெயரோடு அல்லவா
வாழப்போகிறேன்!!

ஏய் இறைவா! குழந்தை
வரம் வேண்டி எத்தனையோ
பெண்கள் இருக்க, என்னை
ஏன் இந்த பாதகத்தியின்
வயிற்றில் பிறக்க வைத்தாய்???


இன்று பத்திரிக்கையில் ஒரு செய்தியை படித்து மனது மிகவும்  கனத்து விட்டது. பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தையை புகைவண்டியில்  ஒரு பையில் வைத்து விட்டு சென்று விட்டாள் தாய்மைக்கே களங்கம் விளைவித்த ஒரு அரக்கி.

அந்தப்பையில் ஏதாவது இருக்கும் என்று நினைத்து எடுத்த ஒரு வளையல் வியாபாரி, குழந்தை இருந்ததை பார்த்ததும், போலீசில் ஒப்படைத்து விட்டார். உடனடியாக அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் போலீசாரும் சேர்த்தனர்.  அந்த குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர், இன்னும் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால் அந்த குழந்தையின் உயிர் பிரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

எப்படித்தான் இந்த மாதிரி பெண்களுக்கு தான் கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இவ்வாறு தூக்கி எறிய மனசு வருகிறதோ??


Monday, January 27, 2014

இந்தியாவில் நன்றாக படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகைஇந்த பதிவு நான் சுட்டி விகடனில் இருந்து படித்த ஒரு செய்தியாகும்.

இன்னைக்கு நம்ம நாட்டில பகல் கொள்ளைன்னு ஒண்ணு இருந்தா, அது கல்விக்கொள்ளை தான். நிறைய பெற்றோர்கள் கடன்பட்டு,எப்படியோ தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக தான் படிக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்தும் விதமாகவும், பெற்றோர்களின் பொருளாதார பிரச்சனையை சமாளிக்கவும் இந்தியா அரசாங்கம் ஒரு உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தி அதன்படி படிக்கும்போதே ஆண்டுக்கு ரூ. 6000 கல்வி உதவித்தொகையயை பெறுவதற்கு வழி செய்திருக்கிறார்கள்.       அரசின் அங்கீகாரம்  பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், மத்திய  அரசின்   கல்வி             அமைப்பான NCERT          நடத்தும்  தேசிய              திறனறித்  தேர்வில் (National Talent Search Examination-NTSE) கலந்துக்கொண்டு வெற்றிபெற்றால், மூன்று  மாதங்களுக்கு ஒரு முறை 1,500 ரூபாய்  வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறுகிறது.

இந்த தேர்வில், எட்டாம்  வகுப்புவரையிலான  கணிதம்,  அறிவியல்  மற்றும்  சமூக  அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுமாம். சிறு  பகுதி  மட்டும் ஒன்பதாம்,  பத்தாம் வகுப்புப் பாடங்களில் இருந்து கேட்கப்படுமாம்.
மற்ற விவரங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்கச் சொல்லுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களைஇணையதளத்திலும் பெறலாமாம்.
இணையதள முகவரி:

தேர்வு நாள்: 22.02.14


(நான் இந்த இணைய தளங்களில் சென்றுப்பார்த்தேன், ஆனால் என்னால் ஒன்றும் கண்டுப்பிடிக்க இயலவில்லை. ஒரு வேளை எனக்கு பொறுமை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்) .

அரசாங்கம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு வெட்டியான செலுவகளை செய்து வரும்போது, அத்திப்பூத்த மாதிரி எப்பவாவது இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்யும்போது மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதனால் உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் சொல்லுங்கள்.

இந்த தகவலை தந்த சுட்டிவிகடனுக்கு நன்றி. 

Thursday, January 23, 2014

கொலஸ்ட்ரால் - தொடர்ச்சி

 

சென்ற வாரம் மீண்டும் உணவியலரை (Dietician) போய் சந்தித்தேன். அவர் முதல் தடவையே ஒரு பேப்பரை கொடுத்து, அடுத்த முறை வரும்போது, நீங்கள் தினமும் என்ன என்ன சாப்பிட்டீங்கன்னு எழுதிக்கிட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால நானும் தினமும் காலையில பிரட்டு இல்லன்னா சீரியல்ஸ், மதியம் சாதமும், கொழம்பும், காய்கறிகளும், இரவு இட்லி,தோசை இல்லன்னா பீட்ஸா, பாஸ்தான்னு சாப்பிட்டேன்னு அதில எழுதி கொண்டுபோயிருந்தேன். நீங்க எந்த அரிசியில சாதம் சாப்பிடுறீங்கன்னு கேட்டாங்க. நானும் பாஸ்மதி அரிசியில தான் சாப்பிடுறேன்ன்னு சொன்னேன். பாஸ்மதி அரிசியெல்லாம் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா இந்த இட்லி,தோசையைப் பத்தி தான் அவுங்களுக்கு ஒண்ணும் தெரியலை. இங்கிருக்கிற சில வெள்ளைக்காரர்களுக்கு தோசையைப் பற்றி தெரிஞ்சிருக்கு. ஆனா என் அதிர்ஷ்டம், இந்த அம்மாவிற்கு தோசை,இட்லி பற்றியெல்லாம் ஒண்ணுமே தெரியலை. அப்புறம் ஒரு வழியா அரிசியை ஊற வைக்கிறதிலிருந்து, இட்லி ஊத்துறது, தோசையை வார்த்துறது வரைக்கும் அவுங்களுக்கு புரிய வச்சேன். அவுங்க உடனே, நீங்க வந்து பாஸ்மதி அரிசியில தான் இதெல்லாம் சாப்பிடுறீங்க, அதனால ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு சொன்னாங்க. அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது, ஆஹா இந்த அம்மா, இட்லி,தோசை எல்லாம் கூட பாஸ்மதி அரிசியில தான் செய்வோம்னு நினைச்சுக்கிட்டாங்க போல. அட கடவுளே! சரி, மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிப்போம்னு, நாங்க சாதத்துக்கு பாஸ்மதி அரிசியும், இந்த மாதிரி இட்லி, தோசைக்கு வேற அரிசியும் தான் பயன்படுத்துவோம். அதுவும் எங்க ஊர்ல, சாதத்துக்கு கூட வேற அரிசியும், பிரியாணிக்கு மட்டும் தான் பாஸ்மதி அரிசியும் பயன்படுத்துவோம்னு அவுங்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அவுங்க தலையைப் பிடிச்சுக்கிட்டு, உங்களோட  சாப்பாட்டு  விஷயத்துல இவ்வளவு குழப்பமான்னு கேட்டுட்டு (இன்னும் கேட்டா நமக்கு தலைவலியை உண்டு பண்ணிடுவான்னு நினைச்சுக்கிட்டாங்க போல!!!), ஒரு பேப்பரை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தாங்க. அதுல, எந்த எந்த பொருட்கள்ல அதிகமா "GLYCAEMIC INDEX", எது எதில அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்குதுன்னு போட்டிருந்துச்சு. நம்மா சாப்பிடுகிற பொருட்கள்ல அந்த " GLYCAEMIC INDEX" குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கனுமாம்.

அந்த பட்டியல் தான் இது.

 இங்க பால் வந்து ரெண்டு வகையா கிடைக்கும். ஒண்ணு வந்து "FULL CREAM", இன்னொன்னு வந்து "LITE MILK / SKIM MILK". அதாவது என்னன்னா, "FULL CREAM" வந்து, நல்லா கெட்டியா, கொழுப்புச்சத்து எல்லாம் எடுக்காம இருக்கும், இன்னொரு பால் வந்து, மொட்டைத் தண்ணியா, கொழுப்புச்சத்து கொஞ்சம் கூட இல்லாம வாய்க்கு விளங்காம இருக்கும். நான் முன்னாடியெல்லாம் அந்த "FULL CREAM" பால்ல தான்  காபியோ,டியோ குடிப்பேன். (நல்லா கவனிச்சுக்குங்க, போட்டுக்குடிப்பேன்னு சொல்லலை, ஏன்னா போட்டுக் கொடுக்கிறது வீட்டு அம்மணியோட வேலையாச்சே!!!) போன தடவைவே, நீங்க "LITE MILK" தான் குடிக்கணும்னு சொன்னாங்க. அதனால நானும் அந்த "LITE MILK"ல டீயை குடிச்சேன். கடவுளே, வாய்க்கு விளங்கலை. டீயே இந்த நிலமைன்னா, காபி எப்படியிருக்கும்னு நினச்சுக்கிட்டு, சரி,இனிமே டீக்கு தடா போட்டுட வேண்டியது தான் போலன்னு முடிவெடுத்தேன். நல்ல காலம், நண்பர் அண்ணா சுந்தரம், கொலஸ்ட்ராலுக்காகவே ஒரு பால் இருக்குது அதை வாங்கி குடிங்கன்னு சொன்னாரு. அந்த பாலோட பேரு "HEART ACTIVE" . இப்ப இதுல தான் டீ குடிக்கிறதே. பரவாயில்லைன்னு தான் சொல்லணும்.

 
 
அப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. போன தடவை பாலுக்கு வேட்டு வச்சாங்க, இப்ப தயிருக்கு வேட்டு வச்சுட்டாங்க. அந்த வீணாப்போன தண்ணிப்பால் தயிரைத்தான் தான் சாப்பிடணுமாம். அம்மணி எப்பவும் கெட்டியான பாலைக் காய்ச்சித்தான் தயிர் செய்வாங்க, இப்ப அந்த "HEART ACTIVE" பால்லேருந்து நேத்து தான் தயிர் உறைய வச்சிருக்காங்க. பார்ப்போம், அந்த தயிர் எப்படியிருக்குன்னு.

பாட்டி வைத்தியம் -  இதுக்கு நடுவுல என் நண்பரோட மாமனார் ஊரிலிருந்து வந்தவர், எனக்கு கொலஸ்ட்ரால் இருக்குதுன்னு கேள்விப்பட்டவுடனே, அம்மணிகிகிட்ட இட்லி ஊத்தும்போது, முணு, நாலு இட்லியில பூண்டை தோலுரிச்சு போட்டுடுமா, அதுவும் இட்லியோட வெந்துடும். அந்த இட்லிகளை அவர் சாப்பிடட்டும். அப்புறம் கொலஸ்ட்ராலை நீங்க தான் தேடணும்னு சொன்னாரு. அடுத்த வாரத்திலிருந்து தான் அதை முயற்சி செய்து பார்க்கணும்.

 
 Tuesday, January 21, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – இறுதிப் பகுதி

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3
அன்றைக்கு இரவு அந்த டர்கிஷ் கெபாபை சாப்பிட்டு முடிச்சவுடனே,அம்மணி கொண்டு வந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு,புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாயிடுச்சு.பக்கத்துல ஒரு இந்திய உணவகம் இருந்தது நியாபகத்துக்கு வந்துச்சு அங்க போய் வெறும் தயிரை மட்டும் கேட்டுப்பார்த்து வாங்கிக்கிட்டு வரலாம்னு போனேன். நல்ல காலம் நான் போன நேரம் உணவகத்துல கணக்கு வழக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச நேரம் லேட்டாகியிருந்தா உணவகத்தை மூடியிருப்பாங்க. இந்த இடத்துல நான் ஆஸ்திரேலியாவிலுள்ள கடைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது இங்கு இருக்கும் கடைகள் எல்லாம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையும்,மற்றும் வெள்ளிக்கிழமையும் மாலை 7மணிக்கெல்லாம் மூடப்படும். வியாழக்கிழமை மட்டும் சற்று லேட்டாக 9 அல்லது 10மணி வரை திறந்திருக்கும். சனி,ஞாயிறுகளில் எல்லாம் மாலை 4மணிக்கெல்லாம் மூடப்படும். சூப்பர் மார்க்கெட் கடைகள் மட்டும் இரவு தாமதமாக மூடுவார்கள். நாங்கள் இங்கு வந்த புதிதில், இதெல்லாம் தெரிந்தும் சனி ஞாயிறுகளில், பொறுமையாக வீட்டைவிட்டு கிளம்பி ஷாப்பிங் போகலாம்னு போனா, அங்க ஒரு கடையும் திறந்திருக்காது. ரொம்பவே கடுப்பா இருக்கும். நான் டிராக் மாறி போறேன்னு நினைக்கிறேன். இந்த கடைகளைப் பற்றி வேற ஒரு பதிவுல சொல்றேன்.

அந்த உணவகத்துக்குள்ள போய், கொஞ்சம் தயிர்
கிடைக்குமான்னு கேட்டேன். அப்போது கல்லாவில் இருந்த பெண்மணி பணத்தை எல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தார்.அவருடைய கணவனைப் போல் இருந்தவர், அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு, ஹிந்த்தியில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் தான் அந்த ஹோட்டலை நடத்துகிறவர்களாம் (கிளம்பும்போது கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்).

சகோதரர்களே, நன்றாக கவனியுங்கள்,வீட்டில் தான் நாம் நிதித்துறையை பிரதம மந்திரியான மனைவியிடம் கொடுத்துவிட்டு, வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் ஜனாதிபதியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறோம். வியாபாரத்திலும் அந்த கணவன் தன் மனைவியிடம் நிதித்துறையை கொடுத்து விட்டு, வேலை செய்யும் ஊழியரைப்போல் நான் கேட்ட வெறும் தயிரை எடுத்து வர உள்ள சென்று விட்டார்.

போகும்போது என்னிடம் வெறும் தயிர் மட்டும் போதுமான்னு கேட்டார், நானும் அந்த தயிரோட கொஞ்சம் உப்பையும் கொடுங்கள் என்று சொன்னேன். அவரும் நான் கேட்டதற்கு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று தயிரை ஒரு சின்ன பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உப்பை தயிரில் கலந்திருக்கிறேன் என்று கூறி மூன்று டாலர் வாங்கிக்கொண்டு, அதை மனைவியிடம் கொடுத்தார். நானும் இந்த உணவகத்தில் பெண்மணியின் ஆட்சி தான் நடக்கிறது போலன்னு நினைத்துக்கொண்டு தயிரோடு தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் காலையில் தயிர் சாதம், புளியோதரை எல்லாம் எடுத்துக்கொண்டு "CATHEDRAL ROCKS" எனும் இடத்துக்கு போனோம். அதுவும் கியாமா போகிற வழியில் "கியாமா டௌன்ஸ் (KIAMA DOWNS)"எனும் இடத்தில் இருந்தது. ஆஹா, அந்த இடத்தை பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.

அங்கே கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு, பிறகு எங்கே போகலாம்னு நான் "கியாமா சுற்றுலா அலுவலகத்தில்" இருந்து சுட்டுக்கிட்டு வந்த புத்தகக்தை புரட்டிப்பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது ஓவியா, அப்பா நாம மறுபடியும் அந்த ப்லோ ஹோல் எடத்துக்கே போகலாம். நேத்து நீங்க எங்களை சீக்கிரம் கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க, அதனால மறுபடியும் போய் ரொம்ப நேரம் அங்க இருக்கணும்னு சொன்னாங்க.  சரி, அவுங்க ஆசையை என் கெடுப்பானேன்னு, மறுபடியும் கியாமாவிற்கு போய், முதல்ல சாப்பிட ஒரு அருமையான இடமா பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டோம். எங்களோட புளியோதரை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா தயிர் சாதம் தான் காலைவாரி விட்டுடுச்சு. புளிப்புன்னா, புளிப்பு அப்படி ஒரு புளிப்பு. அடப்பாவி, இந்த புளிப்புத்தயிருக்குத்தானா மூணு டாலர்ன்னு நினைச்சுக்கிட்டு, தயிர் சாதத்துல மறுபடியும் தண்ணி எல்லாம் ஊத்தி, எப்படியோ ஓவியாவிற்கும் இனியாவிற்கும் கொடுத்தோம். இனியா கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அதுக்குமேல சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்.ஏற்கனவே, அவுங்க "தண்ணி குடிச்சா வாந்தி வரும்னு" சொல்லியிருக்கிறதுனால
(அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்-தண்ணி குடித்தால் வாந்தி வரும் 
 
அவுங்க சாப்பிட்ட வரை போதும்னு சாப்பாட்டுக்கடையை ஏறக்கட்டி, அந்த ப்லோ ஹோலுக்கு போனோம். எங்க நல்ல நேரம் அன்றைக்கும் தண்ணீர் நல்லா மேலே எழும்பி வந்துச்சு. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, வீட்டுக்கு போகலாம்னு கிளம்பினோம். போகும்போது "GRAND PACIFIC DRIVE" வழியாக போய் அந்த "SEA CLIFF BRIDGE" யையும் பார்த்துக்கொண்டு போகலாம்னு முடிவெடுத்து அந்த "GRAND PACIFIC DRIVE" ஸைன் போர்டை பார்த்துக்கொண்டே போனோம். அப்படி போகும்போது என்ன பிரச்சனை என்றால், இரண்டு மூன்று பாதைகள் பிரியும்போது அந்த ஸைன் போர்ட் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஒரு குத்து மதிப்பா வண்டியை ஓட்டிக்கிட்டு போனேன். ஒரு வழியா ஊர்,உலகத்தை எல்லாம் சுத்தின பிறகு, அந்த ப்ரிட்ஜும் கண்ணுல தென்பட்டுச்சு.

 
அந்த இடத்தை பார்க்தவுடனே ஆஹா, இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது வீண் போகலைடா சாமின்னு நினைக்க தோணுச்சு. இத்தனைக்கும் இந்த ப்ரிட்ஜ் வெறும் 660 மீட்டர் தான். ஆனாலும் கண்ணுக்கு அப்படி ஒரு அழகான விருந்தை அந்த ப்ரிட்ஜ் கொடுத்துச்சு. வண்டியை ஓரங்கட்டுறதுக்கு கொஞ்சம் இடம் விட்டுவச்சிருந்தாங்க. அந்த இடத்துல வண்டியை ஓரங்கட்டிட்டு, இறங்கி புகைப்படம் எல்லாம் எடுத்துக்கிட்டு 4.30 மணியைப்போல வீடு வந்து சேர்ந்தோம்.
 
அந்த மூன்று நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், இந்த வருடத்திற்கான ஒரு புத்துணர்ச்சியாகவும் அமைஞ்சது.

Sunday, January 19, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள் – இயற்பகை நாயனார்

இங்கு சிட்னியில் எனக்கு தெரிந்து, SBS வானொலி, தமிழ் முழக்கம் வானொலி, ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் (ATBC), இன்பத் தமிழ்ஒலி என்று ஏகப்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டில், நான் தமிழ் முழக்கம் வானொலிக்காக ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமைகளில் 30 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்கள் வரையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினேன். சென்ற வருடம்(2013), வீட்டு அம்மணிக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனையால், என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த வருடமும் என்னால் முடியாது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். சகோதரி சங்கீதா அவர்கள், நீங்கள் பத்து நிமிடங்கள் மட்டும் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குங்கள் என்று கூறினார். நானும் பத்து நிமிடத்திற்கு என்ன நிகழ்ச்சியை வழங்கலாம் என்று எண்ணிய பொழுது, ஏன் நாம் 63 நாயன்மார்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை வழங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தோன்றியது. வெறும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல், திருக்குறளோடு ஒப்பிட்டு கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி சங்கீதாவிடம் சொன்னேன். அவர்களும் நன்றாக பண்ணுங்கள். ஆனால் வெறும் சைவத்தை மட்டும் சொல்லாமல், வைஷ்ணவத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள், மற்றும் இஸ்லாம், கிருத்துவ மதத்தை சார்ந்த இறையடியார்களையும் பற்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நேற்று முதல் நிகழ்ச்சியாக “இயற்பக நாயனார்” வாழ்க்கை வரலாற்றை திருக்குறளோடு பொருத்தி தமிழ் முழக்க வானொலிக்கு வழங்கினேன். அதையே, பதிவாகப் போட்டால் என்ன என்று தோன்றியது. அது தான் இந்த பதிவு. “கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்என்று ஔவைப் பாட்டி சொன்னாள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு முக்கிய காரணம், ஒரு ஊரில், எப்பொழுதும் கோயில் கோபுரமே மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும். அதற்குமேல் ஒரு கட்டிடத்தை யாரும் கட்ட மாட்டார்கள். அப்படி கோபுரம் உயரமாக இருக்கும் போது, அதன் கலசங்கள் கோபுர உச்சியில் இருந்துக்கொண்டு, கோவிலுக்குள் நடைபெறும், பூஜைகளுக்கு ஏற்ப சக்தி பெற்று, அந்த சக்தியை காற்றின் மூலம் ஊர் முழுக்க பரப்பச்செய்யும். இதனால், கெட்ட சக்திகள் ஊருக்குள் வர முடியாது. மேலும் அந்த கோபுரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு, அதாவதுகோபுர தரிசனம் கோடி புண்ணியம்”. நாம் வாழ் நாளில் ஒரு முறையாவது கோபுரத்தைப் பார்த்து வணங்கினால், நம்முடைய பாவ/புண்ணிய கணக்கில், கோடி புண்ணியங்கள் சேரும் என்று ஒரு ஐதீகம். அடுத்து கோயில் என்று ஒன்று இருந்தால், அந்த கோயிலுக்கு, மரத்தால் ஆன தேர் ஒன்று இருக்கும். அந்த தேரின் சிறப்பை அடுத்த இறையடியார் வாழ்க்கையில் பார்க்கலாம்.

    -
புத்தகத்தில்படித்தது.இனி, இயற்பகை நாயானரின் சரித்திரதிற்குப் போகலாமா.உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று புகார் () காவேரிபூம்பட்டினம். இது ஆரம்ப கால சோழர் மன்னர்களின் தலைநகரம். அந்த நகரம் கடற்கரையை ஒட்டியுள்ளது. அதனால் அது ஒரு மிகப் பெரிய வாணிப ஸ்தலமாக விளங்கியது. அங்கு ஒரு வணிகர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஏகப்பட்ட வியாபாரங்களுக்கும், சொத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருந்தார். அவர் ஒரு பெரிய சிவ பக்தர். அவர் தனக்கு அவ்வளவு சொதுக்கள் இருந்தும், ஆடம்பரமாக வாழாமல், எளிய முறையில் வாழ்ந்து வந்தார். பின் எதற்காக அவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்றால்,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 

வேளாண்மை செய்தார் பொருட்டு
”. 


அதாவது, இல்லறத்தைப் போற்றி வாழ்வது என்பது வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து, விருந்தினரை வரவேற்று உதவி செய்வதேயாகும். இந்த திருக்குறளின் நியதிப்படி அவர் சொத்துக்களை சேர்த்தும், காத்தும், வருகின்ற சிவனடியார்களுக்கு, தன்னிடம் இல்லை என்று கூறாமல், இருக்கும் சொத்துக்களை எல்லாம் வாரி வழங்கி வாழ்ந்து வந்தார். கர்ணனின் பரம்பரையில் இருந்து வந்தவரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தர்மங்கள் செய்து வந்தார்.தன்னிடம் யாசகம் கேட்டு வரும் சிவனடியார்களிடம், இல்லை என்று சொல்லக் கூடாது என்கிற கொள்கையோடு வாழ்ந்தார்.ஒரு நாள், அவர் வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர், உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சிவனின் ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், இயற்பகையாருக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. உடனே, அவரை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்தார். ஸ்வாமி, தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினால், நான் அதை தங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவேன் என்றார். அதற்கு அந்த சிவனடியாரும், நான் கேட்கும் பொருளை, நீ தருவதாக கூறி உறுதியளித்தால், அது என்ன பொருள் என்று சொல்லுவேன் என்று கூறினார். இயற்பகையார் ஒரு நொடிக் கூட யோசிக்காமல், நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருந்தால், அந்த நொடி முதல் அது உங்களுக்கே சொந்தம் என்று கூறி உறுதியளித்தார். அவர் கூறியதைக் கேட்ட சிவனடியாரும் முகமலர்ந்தார். பிறகு கொஞ்சமும் தயங்காமல் ஒரு பொருளைக் கேட்டார். அவர் கேட்ட அந்தப் பொருள் இருக்கே, கண்டிப்பாக யாராலுமே அதைக் கொடுக்க முடியாது. இப்படி ஒரு பொருளையா அந்த சிவனடியார் கேட்பார்!!அந்தப் பொருள் ஒரு விலை மதிப்பில்லாத பெரிய செல்வம்.

அந்த சிவனடியார், உன்னுடைய மனைவியைக் கொடு என்று இயற்பகையாரிடம் கேட்டார். இந்த மாதிரி நம்மிடம் யாராவது கேட்டுயிருந்தால், நாம் அவர்களை வெட்டியேப் போட்டிருப்போம். ஆனால், இயற்பகையாரோ, கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல், அதே இன்முகத்தோடு, அவரைப் பார்த்து, நீங்கள் கேட்ட பொருள் என்னிடம் இருப்பதைப் நினைத்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிறகு தன் மனைவியிடம் சென்று, நான் வாக்குக் கொடுத்தப்படி, நீ இந்த நொடி முதல் அந்த சிவனடியாருக்குச் சொந்தம் என்று கூறினார். அந்த உத்தமியோ, இதைக் கேட்டவுடன், பேரதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் உடனே சுய உணர்வுப் பெற்று, கணவனின் விருப்பத்தை பூர்த்திச் செய்வதே ஒரு நல்ல மனைவியின் கடமை என்று நினைத்து, அந்த சிவனடியாரோடு செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயத்தை தன்னுடைய மனைவி தனக்காக ஒப்புக்கொண்டதை எண்ணி, இயற்பகையர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

பிறகு, அவர் அந்த சிவனடியரிடம் சென்று, வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்றுக் கேட்டார். அந்த சிவனடியாரும், நான் உன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொண்டு போகும்போது, உன்னுடைய சொந்தக்காரர்கள் என்னிடம் சண்டைப் போடலாம். அதனால், நீ எனக்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுக் கூறினார். உடனே, இயற்பகையாரும், என் சொந்தக்காரர்கள் யாராவது உங்களை எதிர்த்தால், நான் அவர்களை என் வாளால் வெட்டிப்போடுகிறேன் என்றுக் கூறி தன் வாளையும், கேடயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, அந்த சிவனடியாருக்குப், பாதுக்காப்பாகச் சென்றார்.

இந்த விஷயம், அவருடைய சொந்தக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே அவர்கள் எல்லோரும், இந்த இயற்பகையாருக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது, இல்லையென்றால் யாராவது தன் மனைவியை பிறருக்கு தானமாக கொடுப்பார்களா!!! என்று கோபப்பட்டார்கள். இந்த அநியாயத்தைத் தடுக்க வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்து, ஆளாளுக்கு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்கள். ஊருக்கு வெளியே சொந்தக்காரர்கள், அவர்களைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, சிவனடியார் மிகவும் பயந்து விட்டார். நான் எப்படி உன்னைக் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று பயந்தவாறு, அந்த உத்தமியிடம் கேட்டார். உடனே, அந்த உத்தமியும், நீங்கள் பயப்பட வேண்டாம் சுவாமி, இவர்களை என் கணவர் வெற்றிக்கொள்வார் என்றுக் கூறித் தைரியமளித்தார். இயற்பகையார், அவர்களை எல்லாம் பார்த்து, இது என் சொந்த விஷயம், இதில் யாரும் தலையிட வேண்டாம். நீங்கள் எல்லாம் திரும்பிப் போங்கள் என்றுக் கூறினார். ஏற்கனவே கோபமாக இருந்த அவர்கள், இவருடைய பேச்சைக்கேட்டு, ரொம்பவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள், நீ இப்படி உன் மனைவியை இன்னொருவரிடம் அனுப்புவதால், நம்முடைய குடும்பத்திற்கு மிகவும் கெட்டப்பெயரை உண்டுப் பண்ணுகிறாய் என்று திட்டினார்கள். தர்மம் செய்ய வேண்டும் தான், அதற்காக தன் மனைவியையே அந்த சிவனடியார் கேட்டார் என்பதற்காக அவருடன் அனுப்பலாமா? வேண்டுமானால் அந்த சிவனடியாருக்கு உன்னிடம் உள்ள வேறு ஏதாவது ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அனுப்பு என்று யோசனைக் கூறினார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் நாங்கள் உன் மனைவியை அவருடன் அனுப்ப விடமாட்டோம் என்று கோபமாக கூறினார்கள். அதற்கு இயற்பகையார், என்னைப் பொறுத்தவரை, சிவனடியார் யாராவது என்னிடம் இருக்கும் ஒருப் பொருளைக் கேட்டால், மறுக்காமல் கொடுத்து விடுவது தான் என் பழக்கம். அதனை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறி , அவர்களது யோசனையை ஏற்க மறுத்துவிட்டார். சொந்தக்காரர்களும் , சரி இனிமேல் பேசிப் பயனில்லை என்று எண்ணி, எல்லாம் அந்த சிவனடியாரல் வந்தது என்று கோபப்பட்டு, அவரைத் தாக்கப் போனார்கள் . இதனால் மிகவும் ஆத்திரமடைந்த இயற்பகையாரோ, வேறு வழி இல்லாமல், தன் சொந்தக்காரர்களோடு சண்டைப் போட்டார். கடைசியில் சொந்தக்க்காராகள் அனைவரும் மாண்டுப் போனார்கள்.இதனைப் பார்த்த அந்த சிவனடியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இயற்பகையாரே, நீர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டாய் என்று கூறி பரவசப் பட்டார்.

பிறகு வேறு எந்த தடங்களும் இல்லாமல், அவர்கள் சாய்க்காடு என்னும் இடத்தை அடைந்தார்கள். சரி இனிமேல் எந்தத் தொந்தரவும் வராது என்று எண்ணிய சிவனடியார், இயற்பகையாரைப் பார்த்து, உன்னுடயை உதவி இனிமேல் எனக்குத் தேவைப்படாது, அதனால் நீ போகலாம் என்றுக் கூறினார். இதைக் கேட்டு நிம்மதியடைந்த இயற்பகையாரும், சரி நீங்கள் பத்திரமாக செல்லுங்கள். நான் மெதுவாக திரும்பி போகிறேன் என்று கூறி, தன் மனைவியைக் கூட பார்க்காமல் திரும்பி நடந்தார்.

இயற்பகையார், கொஞ்ச தூரம் கூட திரும்பிப் போயிருக்க மாட்டார், அதற்குள்ளே மிகவும் சத்தத்துடன் அந்த சிவனடியார், இயற்பகையாரைக் கூப்பிட்டார். அந்த சத்தத்தைக் கேட்டவுடன், வேறு யாரோ அவர்களைத் தாக்க வந்துட்டார்கள் என்று எண்ணிய இயற்பகையார் மீண்டும் அவர்களை நோக்கி மிக வேகமாக திரும்பி வந்தார். அங்கே, அவருடைய மனைவி மட்டும் இருந்தார்,அந்த சிவனடியாரைக் காணவில்லை. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனைவியிடம் யாராவது வந்து அந்த சிவனடியாருக்கு தொல்லைக் கொடுத்தார்காளா என்று கேட்டார். அந்த அம்மையாரும் யாரும் வரவில்லை, ஆனால் திடீரென்று, அந்த சிவனடியாரைக் காணவில்லை. நான் எங்குத் தேடியும் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றுக் கூறினார். இதனால் மிகவும் வருத்தமடைந்த இயற்பகையார், இனி என்ன செய்வது என்று மனம் கலங்கினார்.

அப்பொழுது, ஒரு மிகப் பெரிய அதிசயம் அங்கு நிகழ்ந்தது. இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியோடு, விண்ணில் தோன்றினார்.

இயற்பகையாரே!!!, உம்முடைய பெருமையை, உலகுக்கு, உணர்த்தவே, யாம் சிவனடியார் வேடம் பூண்டு, உம்மிடம் உம் மனைவியை யாசகம் கேட்டு வந்தோம். உம்முடைய சிவ பக்தி, எம்மை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது. நீ உன் மனைவியாரோடு, எம்மிடம் சேருவாயாக!!! என்று அருள் புரிந்து மறைந்தார். அதற்குப் பிறகு இருவரும் மோட்சம் பெற்று, சிவபெருமானின் காலடியில் சேர்ந்தார்கள். இவரால், மாண்ட உறவினரும் மோட்சம் பெற்றனர். இறைவனே இவருடையப் பெருமையை/கொடைத் தன்மையை உலகிற்கு உணர்த்தினார் என்பது மிக மிகப் பெரிய விஷயம்.

இவருடைய பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா!!! ஆனால் இவருடைய சரித்திரத்தைத் தெரிந்துக் கொண்ட பிறகு, இந்தப் பெயர் அவருக்கு சரியாக தான் இருக்கிறது என்று தெரிகிறது. இவரது பெற்றோருக்கு, இவர் பிற்காலத்தில், இயற்கைக்கு எதிராக தன் மனைவியை வேறு ஒருவருக்கு தானமாக வழங்குவார் என்று தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவருக்குஇயற்பகையார்என்ற பெயரை வைத்திருக்கிறார்கள் போல.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள, சாயாவனம் எனும் கோவிலில் இயற்பகை நாயனார் விழா நடைப்பெறுகிறது.

அடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று  வேறு ஒரு இறையடியாரோடு உங்களை சந்திக்கிறேன்.