சிலர் மோப்பம் பிடிப்பதில்
வல்லவர்களாக இருப்பார்கள். அவர்களை பார்த்து நீ, நாயா
பிறந்திருக்க வேண்டியவன், தப்பி மனிதனா பிறந்துட்ட என்று வேடிக்கையாக
கூறுவதுண்டு. அதேமாதிரி, நகைச்சுவை துணுக்குகளில் கூட, “நான் அடுத்த ஜென்மத்திலையாவது நாயா பிறக்கணும், ஏன்னா
என் மனைவி நாய்க்கு தான் பயப்பிடுறான்னு” சொல்வதுண்டு. என்ன தான் வேடிக்கையாக மனிதனை
நாயோடு ஒப்பிட்டு பேசினாலும், சிலருக்கு நாயின் மீது அளவு கடந்த
அன்பும்,பாசமும் இருக்கு. அதன் வெளிப்பாடாக, அவர்கள் நாய்களை தங்கள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். ஆனால்
இன்று பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தியை,என்னால் ஜீரணிக்கவே
முடியலை. அதுவும் நாய் சம்பந்தப்பட்ட செய்தி தான். பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு
நாயின் மீது, அப்படி என்ன தான் ஒரு காதலோ(கருமாந்திரமோ!!), தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி
செய்துள்ளனராம். இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு
பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். இவர் தான் உண்மையிலேயே நாயாக பிறந்திருக்க வேண்டியவர், தப்பி மனிதனாக பிறந்து விட்டார். அவருடைய புகைப்படத்தை கீழே பாருங்கள் (இரவு
நேரங்களில் இந்த புகைப்படத்தை பார்த்து, பயந்தால், நான் பொறுப்பில்லை).
Wednesday, June 26, 2013
Tuesday, June 18, 2013
வாங்க தமிழில் தட்டச்சு அடிக்கலாம்
மூன்று வருடங்கள் வரை, எனக்கு தமிழில் தட்டச்சு அடிப்பது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வந்தது.
நான் ஜப்பானில் இருக்கும்போது, ஒரு ஜப்பானியர் தமிழ்நாட்டிற்கு
போகமலே, தமிழின் மீது ஆர்வம் கொண்டு, தமிழை
எழுதவும், படிக்கவும் கற்றிருந்தார். அவருடன் உரையாடும்போது, தமிழ் எந்த அளவுக்கு வேற்று நாட்டவரை ஆட்சி செய்திருக்கிறது என்பதை கண்கூடாக
தெரிந்து கொண்டேன். அவருடன் தமிழின் பெருமைகளை பேசும்போது, நான்
ஒரு தமிழன்னு மிக பெரிய கர்வம் எனக்கு ஏற்படும். ஆனால் என்னுடைய கர்வத்தை பார்த்து, தமிழ் தாயிக்கே பொறுக்கவில்லை போல(கல்லூரி நாட்களில் நான் அதிக வகுப்புகளை
புறக்கணித்தது, தமிழ் வகுப்பை தான். அதுவும் தமிழ் வகுப்பு முதலாண்டில்
மட்டும் தான் இருக்கும். தேர்வில் மற்ற பாடங்களில் எல்லாம் நான் முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், தமிழில் இரண்டாம் வகுப்பில் தான் தேறினேன்.) அன்றைக்கு இப்படி நான் தமிழுக்கு
ஆற்றிய சேவையை பார்த்த தமிழ் தாய்,என்னுடைய அந்த கர்வத்தை அடுக்குவதற்காக, அந்த ஜப்பானியரை ஒரு நாள் தமிழில் கிட்டதட்ட ஒன்றரை பக்கத்துக்கு மின்னஞ்சல்
அனுப்ப செய்து விட்டாள். அந்த மின்னஞ்சலை பார்த்த எனக்கு, திருடனுக்கு
தேள் கொட்டின கதையாகி போச்சு. தமிழில் எனக்கு தட்டச்சு பண்ண தெரியாது, ஆங்கிலத்தில் அந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பினால், என்னுடைய மானம் கப்பலேறிவிடும். எப்படியோ வேறு ஒரு நண்பரின் உதவியோடு தமிழில்
தட்டச்சு பண்ணுவதற்கு கற்றுக் கொண்டு, அந்த மின்னஞ்சலுக்கு ஐந்து
வரியில் பதில் பண்ணினேன்(தமிழில் ஐந்து வரிகள் தட்டச்சு பண்ணுவதற்கு நான் எடுத்துக்கொண்ட
நேரம் கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள்). அதற்கு பிறகு, தமிழில்
தட்டச்சு பண்ணுவதற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டேன். இங்கு வந்த பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் திரு. அண்ணா சுந்தரமும், மாணிக்கம் ராமநாதனும் எப்படி எளிதாக
தமிழில் தட்டச்சு பண்ணுவது என்று சொன்னார்கள். அவர்களின் உதவியோடு தங்லிஷில் தட்டச்சு
பண்ண ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், போக போக, எனக்கு அது மிகவும் எளிமையாகி விட்டது.
என்னுடைய நண்பர்கள் சிலர், நீங்கள் எப்படி தமிழில் தட்டச்சு அடிக்கிறீர்கள்
என்று ஆர்வமாக கேட்டதுண்டு. நானும் அவர்களுக்கு அதனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் மாதிரி இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. இப்பொழுது தமிழில் தட்டச்சு செய்வதற்கு
நிறைய மென்பொருள்கள் வந்துவிட்டது. அதிலும் ஒழுங்குறியிடு(uniciode) முறையில் தட்டச்சு அடிக்கும் முறையில் வந்து விட்டது. இந்த பதிவில் எனக்கு
தெரிந்த, நான் பயன்படுத்துகிற முறையை உங்களுக்கு விளக்குகிறேன்.
இந்த பதிவை பார்த்து, யாராவது ஒருவர் தமிழில் தட்டச்சு அடித்தால்
கூட, அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
- முதலில் இந்த இணையதளத்திற்கு
செல்லுங்கள்.
- Install Desktop Version பொத்தானை அமுக்குங்கள்.
- Install now பொத்தானை
அமுக்குங்கள்.
- பிறகு பதிவிறக்கம் ஆன அந்த tamil.exeயை உங்கள் கணினியில் install செய்யுங்கள்.
- உங்கள் கணினியில் control panelக்கு சென்று
- Change keyboards or other input methodsக்குள் சென்று, change keyboardsக்குள் செல்லுங்கள்.
- மேலே சொன்னபடி மாற்றுங்கள்.
- பிறகு advanced key settingsக்குள் செல்லுங்கள்
- மேலே சொன்னபடி மாற்றுங்கள்.
- இப்போது உங்கள் கணினியில் கீழே உள்ள task barல் ENனை கிளிக் பண்ணினால்,TA தெரியும். அதனை தேர்ந்தெடுங்கள்.
இப்போது நீங்கள் தங்லிஷில் அடிக்க தயாராகி விட்டீர்கள். ஒரு
word documentடை புதிதாக ஓபன் பண்ணுங்கள்.
இது மாதிரி நீங்கள்
தமிழில் தட்டச்சு அடிக்கலாம். கொஞ்சம் சிரமமான காரியமே, தங்லிஷில் அடிப்பது தான். அது போக போக உங்களுக்கு எளிதாகி விடும்.
நான் மேலே சொன்னது அனைத்தும் windows 7க்கான விளக்கங்கள். நீங்கள் windows XP, windows vista போன்றவைகளை பயன்படுத்தினால், இந்த இணையத்தள முகவரிக்கு சென்று,அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின் படி மாற்றிக் கொள்ளுங்கள்.
http://www.bhashaindia.com/ilit/GettingStarted.aspx?languageName=Tamil&redir=true&postInstall=false#Windows7
இதையே கீழேயுள்ள காணொளியைப் பார்த்தும் செய்யலாம்.
நான் மேலே சொன்னது அனைத்தும் windows 7க்கான விளக்கங்கள். நீங்கள் windows XP, windows vista போன்றவைகளை பயன்படுத்தினால், இந்த இணையத்தள முகவரிக்கு சென்று,அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளின் படி மாற்றிக் கொள்ளுங்கள்.
http://www.bhashaindia.com/ilit/GettingStarted.aspx?languageName=Tamil&redir=true&postInstall=false#Windows7
இதையே கீழேயுள்ள காணொளியைப் பார்த்தும் செய்யலாம்.
Saturday, June 8, 2013
நான் படித்து ரசித்த சிரிப்புத் துணுக்குகள்
போன
வருஷம் நான் பதித்த அந்த பதிவுல சொன்ன மாதிரி,
பெண்கள் ரசிக்க கூடிய துணுக்குகளை இந்த
பதிவில் பதியிறேன்.
பெண்களுக்கு பிடித்தவை:
கணவன்:
உனக்கு WIFEக்கு அர்த்தம் தெரியுமா? Without Information, Fighting Everytime.
மனைவி:
அது கிடையாதுங்க, With Idiot For Ever.
காதலன்: நாம இரண்டு
பேரும் மோதிரம் மாத்திக்கலாம்னு சொன்னா வேண்டாங்கிறியே! ஏன்?
காதலி:
உங்க மோதிரம் இரண்டு கிராம். என் மோதிரம் நாலு கிராம் அதான்.
கலா: என்ன சண்டை
வந்தாலும் என் கணவர் சாப்பாட்டுல மட்டும் கோபத்தை காட்ட மாட்டாரு.
மாலா: நிஜமாவா?
கலா:
ஆமாம். சமைச்சு வச்சுட்டுதான் போவாரு.
கணவன்: ஏண்டி என் பிராணன
வாங்குற?
மனைவி:
உங்ககிட்ட வாங்குறதுக்கு வேற என்ன இருக்கு.
கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.
டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால்,மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லை பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு
சீக்கிரம் பிடுங்கிறீர்களோ,அவ்வளவுக்கு நல்லது. என்றாள் அந்த பெண்.
அவள் சொன்னதை கேட்டு, மிகவும் வியந்த டாக்டர்,
நீங்க உண்மையிலேயே தைரியசாலி
தான், எந்த பல் என்றார்?
அன்பே!உங்கள்
பல்லைக் காட்டுங்க, என்றாள் அவள் தன் கணவன் பக்கம்
திரும்பி.
கணவன்: இது மாதிரி தொடர்ந்து
என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் நான் மிருகமா மாறிடுவேன். ஜாக்கிரதை.
மனைவி:
நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்.
-
போனா போகுதுன்னு, ஆண்கள் ரசிக்கிறதுக்காக சில துணுக்குகள்.
ஆண்களுக்கு பிடித்தவை:
குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே
இருக்குது?
கிரி:
என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி
வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.
ஒரே தமாசு தான் போங்க.
புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா
வாங்க கடைக்கு போனான்.
கடைக்காரர்: சார்,உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?
வந்தவன்:
பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னைய பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க..
இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே! இந்த பெண்டாட்டிங்களை
அடக்கவே முடியாது போல. நீ எப்படிடா?
குமார்: நேத்து, என் பொண்டாட்டியை முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: கேக்குறதுக்கே,ரொம்ப சந்தோஷமா இருக்கு. சொல்லு,சொல்லு அப்புறம்.
குமார்: அப்புறம் அவ சொன்னா....
“மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழே
இருந்து வெளியே வந்து சண்ட போடுன்னு.
Wednesday, June 5, 2013
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வி
இந்த தலைப்பில் தான் நான் மலேஷியாவில்
நடந்து முடிந்த 10வது உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரையை அனுப்பியிருந்தேன்.
துரதிர்ஷ்டமாக, என்னால் அங்கு சென்று, இந்த கட்டுரையை படைக்க முடியவில்லை. இந்த கட்டுரை, மாநாட்டு
மலரில் வெளிவந்துள்ளது.
அதனை உங்கள் பார்வைக்கு....
அறிமுகம்
“கோவில் இல்லா
ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஒளவை மூதாட்டி நமக்கு அருளிய அறிவுரை. இன்று, தமிழர்களாகிய நாம், “தமிழ்ப்
பள்ளிக்கூடம் இல்லாத நாட்டிற்கு புலம்
பெயர வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்
பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்து
வருகிறோம். இன்றைய காலகட்டத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில், தமிழர்களுக்கு தமிழ்க் கல்வியானது ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்று
சொன்னால் அது மிகையாகாது.
இக்கட்டுரையில் ஆஸ்திரேலியாவை
உதாரணமாக கொண்டு, புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வியைப் பற்றி அலசி
ஆராயப்படும். ஆஸ்திரேலியா ஒரு பல்லினக் கலாச்சார நாடு. உலகம் முழுவதிலுமிருந்து
வந்து குடியேறிய மக்கள் தங்கள் தாய் மொழியை மறக்காமல் இருக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கவும் ஆஸ்திரேலியா அரசாங்கம் வழி
வகுக்கிறது. மேலும் 1987 ஆம் ஆண்டு, முதல் தேசிய மொழிக்
கொள்கை அமலுக்கு வந்தது (1). இந்த கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று
ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளைக் காப்பாற்றி பேணி வளர்த்தல்,
மற்றொன்று இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல் ஆகும்.
நோக்கம்
ஆஸ்திரேலியாவில்
தமிழ்க் கல்வியின் அவசியத்தையும், ஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ்க் கல்வியை
எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதையும், தமிழ்க் கல்வியை கற்பிப்பதில்
உள்ள சவால்களும் மற்றும் அந்த சவால்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைப்
பற்றியும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ் கல்வியின் அவசியம்
இங்கு
ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் தான் முதல் மொழி. நம் தமிழ்க் குழந்தைகள் வீட்டில்
இருக்கும் நேரத்தை விட வெளியில் இருக்கும் நேரம் தான் அதிகம். அதனால் அவர்கள்
படிப்படியாக நம் தாய் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியை பின்பற்ற
ஆரம்பித்தார்கள். அந்த மொழியின் தாக்கம் வீட்டிற்குள்ளும் வர ஆரம்பித்தது. அதாவது வீட்டில் பெற்றோர்கள்
தமிழில் பேசினாலும், குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பதிலுரைக்க
ஆரம்பித்தார்கள். புலம் பெயர்ந்த நம் தமிழ் பெற்றோர்களுக்கு இது ஒரு
பேரதிர்ச்சியாக இருந்தது. எங்கே அடுத்த தலைமுறையினர் தமிழையே மறந்து விடுவார்களோ என்று அஞ்சினார்கள். இதற்கு சரியான தீர்வு தமிழ் பள்ளி தான் என்று எண்ணி, தமிழ் பள்ளியை தோற்று வித்தார்கள். ஆஸ்திரேலியாவின்
முதல் தமிழ் பள்ளியாக 1977ஆம் ஆண்டு “பாலர் மலர் தமிழ் பள்ளி” நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின்
சிட்னி நகரில் தொடங்கப்பட்டது(2). வார இறுதி நாட்களில் மட்டுமே தமிழ் வகுப்புகள்
நடத்தப்பட்டன. இன்று பாலர்மலர் பள்ளி 5 கிளைகளாக விரிவடைந்திருக்கிறது. பின்னர்
1979ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் விக்டோரியா மாநிலத்தின் மெல்பெர்ன்
நகரில் தமிழ் பள்ளியை தோற்றுவித்தார்கள்(3). இவ்வாறு ஆஸ்திரேலியாவின் மற்ற
மாநிலங்களிலுள்ள பிரிஸ்பேன்,அடிலெய்ட்,கான்பரா,பெர்த் போன்ற நகரங்களிலும் தமிழ் பள்ளிகள் இயங்குகிறது. சிட்னியில்
மட்டும் தற்சமயம் 11 தமிழ்ப்பள்ளிகள் தமிழை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கச்
சேவை செய்து வருகின்றன.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊக்கம்
ஆஸ்திரேலிய
அரசாங்கம் பல்வேறு ஒத்துழைப்புகளை தமிழ் மொழி வளர்ச்சிக்காக வழங்கி வருகிறது.
·
அரசுப் பள்ளிகளில் இலவசமாக வார இறுதி நாட்களில் தமிழ்
பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி.
·
தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிதி
உதவி.
·
ஆசிரியர் பயிற்சிக்காக கட்டணத்தில் சலுகை
·
ஆசிரியர்களின் மேலதிகப் பயிற்சிக்காக பயிலரங்குகள்
நடத்துதல்.
தமிழ் கல்வியை கற்பிப்பதில் உள்ள சவால்கள்
ஆங்கிலத்தை முதன்மையாக கொண்ட ஒரு நாட்டில், தமிழை கற்பிப்பது
என்பது சாதாரணமான விடயம் கிடையாது. நாங்களும் இங்கு அந்த சவால்கள் சிலவற்றை சந்திக்கிறோம்.
- பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களே ஆசிரியர்களாக இருப்பது
இங்கு தமிழ் பள்ளிகளில்
தமிழாசிரியர்களாக இருப்பவர்களில் பலர் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தான்.
அவர்கள் வார நாட்களில் வெவ்வேறு தொழில் புரிபவர்கள். மேலும் அவர்கள் இங்கு உள்ள பல்கலைக்கழகங்களால் (உ-ம்: சிட்னி பல்கலைக்கழகம் (4),நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (5), உள்ளங்காங்
பல்கலைக்கழகம் (6)) நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சிகளுக்கான சான்றிதழ் வகுப்புகளில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறையின் காரணமாக, தமிழார்வம் உள்ள
பெற்றோர்கள் ஆசிரியர்களாக வருவதற்கு தயங்குவதுண்டு. இதனால் ஆசிரியர்
பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
- மாணவர்களின் ஏனைய முன்னுரிமைகளோடு போட்டி போடுதல்
இங்கு பள்ளிகளில் தமிழ் ஒரு
கட்டாய பாடமாக இல்லாததால், பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழை
கற்பதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கிறார்கள்.
தமிழ் கற்பதோ வார இறுதி நாட்களில்
மட்டும் தான். ஆனால் பல மாணவர்கள் வார இறுதி நாட்களில்
தான் மற்ற வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் (உம்: பாட்டு, நடனம், விளையாட்டு,நீச்சல் போன்றவை).
இதனால் அவர்களுக்கு தமிழ்
கற்பதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது. மேலும்
சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் தமிழை படித்து, பெரிய பண்டிதனாகவா போகிறார்கள் என்ற ஒரு
எண்ணமும் இருக்கிறது.
- குறிக்கோளின்றி தமிழ் பள்ளிக்கு வருதல்
நிறைய மாணவர்கள்
தமிழ் பள்ளிக்கு வருவதே, தங்கள் நண்பர்களை சந்திக்கவும், ஒரு பொழுது
போக்கிற்காகவும் தான். இங்கு ஆஸ்திரேலியாவில் நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும்
தென்ஆஸ்திரேலியா மாநிலங்களில் பள்ளி மேல் நிலை வகுப்புகளில் (Higher Secondary – Year 11 and 12) தமிழை ஒரு பாடமாக
எடுத்துப்படிக்க அனுமதி உள்ளது (7). HSC (High School Certificate) வகுப்பில் அதாவது 12ஆம் வகுப்பில் தமிழில் எடுக்கும்
மதிப்பெண்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முக்கிய பங்கு ஆற்றும் என்பது நிறைய பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதனால்
தங்கள் குழந்தைகள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்ற மனநிலை நிறைய
பெற்றோர்களிடம் இருக்கிறது.
- பல்கலைக்கழகங்களில் தமிழை எடுத்து படிக்க முடியாத நிலை
பள்ளி மேல் நிலை
வகுப்புகளில் தமிழை படித்து முடித்து விட்ட மாணவர்களுக்கு, மேற்கொண்டு தமிழை
படிக்க பல்கலைக் கழகங்களில் வசதி இல்லாத ஒரு நிலைமை இங்கு இருக்கிறது.
சவால்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்டுகிறது
பொதுவாக தமிழர்களாகிய
நாம் வாழ்கையில் சந்திக்கக்கூடிய சவால்களை எல்லாம் எதிர்கொண்டு அவைகளை சந்தர்ப்பமாக
மாற்றுவோம். அதுபோல் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்வி கற்பிப்பதினால் ஏற்படும்
சவால்களையும் சந்தர்ப்பங்களாக மாற்றியுள்ளோம்.
·
பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தங்கங்கள்
சிட்னி
நகரில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளும் ஒருங்கிணைந்து “நியூ சவுத் வேல்ஸ் தமிழ்
பாடசாலைகள் கூட்டமைப்பு” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அந்த நிறுவனத்தின்
கீழ் பாடத்திட்டக்குழு ஒன்றும் புத்தகக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
பாடத்திட்டக்குழுவானது, மழலையர் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு
வரை ஒரு பாடத்திட்டமும், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான
ஒரு பாடத்திட்டமும் தயாரித்தது. இதனால், சரியான பாடத்திட்டம்
பயன்பாட்டில் உள்ளது.
·
12ஆம் வகுப்புக்கான தமிழ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு
இங்கு மாணவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படிக்கும்போதே 12ஆம்
வகுப்புக்கான தமிழ்த் தேர்வை எழுத முடியும். இதனால் அவர்கள் 12ஆம் வகுப்பு சிறிது
எளிதாக இருக்கும். அதேபோல், தமிழ் மொழியில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களில் எந்தவொரு பாடப் பிரிவிலும் சேரலாம். ஆஸ்திரேலியாவில் மொழி பெயர்ப்பாளருக்கான தேர்வில் [8] எளிதில் வெற்றி பெற்று மொழிப்பெயர்ப்பாளராக ஆக முடியும் என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் 12ஆம் வகுப்புக்கான தமிழ் தேர்வை பற்றி விரிவாக
எடுத்துரைத்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். .
முடிவுரை
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்
மொழியின் அவசியத்தை முதலில் பெற்றோர்கள் உணர்ந்து,
கண்டிப்பாக வீட்டில் தமிழில் தான் உரையாடவேண்டும் என்றும்,
வார இறுதி நாட்களில் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று
சங்கல்பம் எடுத்து கொண்டால், நிச்சயமாக தமிழ் மொழி
அடுத்தடுத்த தலைமுறையினரை சென்றடையும்
என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
சான்றுக் குறிப்புகள்/References
1.
FECCA, Federation of Ethnic
Communities’ Councils of Australia (1987)
3.
Kandiah,
A (2008) People speaking Tamil at home in Australia.
4. Sydney University Professional Development Courses -
http://cce.sydney.edu.au/course/Professional+Development
5. University of New South
Wales – Institute of Languages - http://www.languages.unsw.edu.au/langTeaching/languageTeaching_main.html
6. University of Wollongong Language
Centre - http://www.uow.edu.au/arts/language/index.html
- National Accreditation Authority For Translators and
Interpreters Ltd - http://www.naati.com.au/home_page.html
Tuesday, June 4, 2013
சிட்னியில் உலக தமிழ் இலக்கிய மாநாடும் திருவள்ளுவர் சிலை திறப்பும்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
( விழா மலர்க்குழு மற்றும் மக்கள் தொடர்பு சார்பாக )
சிட்னியில் செப்டெம்பர்
2013 இல் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு
நடக்கவுள்ளது. அந் நிகழ்வின் போது
திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. உலகத்தமிழ் சங்கமும் , தமிழ் இலக்கிய கலை மன்றமும் இணைந்து இந் நிகழ்ச்சியில் வள்ளுவப்
பெருந்தகையின் ஏழு
அடி உயரமுள்ள சிலை ஒன்றை சிட்னியில் நிறுவத் திட்டமிடப் பட்டுள்ளது.
இம்மாநாட்டின் முக்கிய
நோக்கம் உலகளாவி பரந்து வழும் தமிழர்களை ஒன்றிணைத்து இளைய தலைமுறைக்கு தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறுவதாகும்.அதன் ஒரு பகுதியாக , இடைக்காடர் , ‘கடுகைத்துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் ‘என்று அளவிற் சிறிய அதிசயம் என வியந்த
திருகுறளை மேன்மை படுத்தி ஐயன் வள்ளுவனைப் பணிந்து வியந்து வணங்கும் முகமாக திருவள்ளுவர் சிலை
அமைக்கப் பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில்
முழுமுயற்சியாக ஈடு பட்டுள்ள தமிழ் இலக்கிய கலை மன்றத்தை சேர்ந்த , திரு மகேந்திரன், இம் மாபெரும் விழாவில் கருத்தரங்கு,
கவியரங்கு, ஆய்வரங்கு, இசை
அரங்கு, நடன அரங்கு, தமிழின்
தொன்மையையும் , பெருமையையும் எடுத்து இயம்பும் கண்காட்சி ஆகிய முத்தமிழ்
அம்சங்களும் இடம் பெறும்’ எனத் தெரிவித்தார்.
இவ் விழாவினை
சிறப்பிக்கும் முகமாக வெளி நாடுகளிலிருந்து வரும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட
தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள். கலைஞர்கள், தமிழ் பேராசிரியர்கள், இசைவாணர்கள் போன்ற பல்துறை
முத்தமிழ் வித்தகர்கள் சிட்னியல் கூடி, ஊர் கூடி தேர்
இழுக்கும் இந்த தமிழ் தொண்டை செய்ய இருக்கின்றனர்.
‘மெல்லத் தமிழினிச் சாகும்-. அந்த மேற்குமொழிகள்
புவிமிசையோங்கும்’ என்று மகாகவி
பாரதியின் கவலை நீக்கி ‘இதோ ஒரு யுகப் புரட்சி’, எழுந்தோம் , விழித்தோம், தமிழினை வளர்ப்போம்
என்று ஒரு எழுச்சி மாநாடாக இந்த விழாவினை நடத்த இவ் விழாக்
குழு திட்டமிட்டுள்ளது.
உள்ளுர் அறிஞர்களும், கலைஞர்களும்,
தமிழ் ஆன்றோர்களும் பங்கேற்கும் இவ் விழாவில் ‘தமிழ் இளைஞர்களிடையே
தமிழின் சிறப்பை, பண்பாட்டை, தமிழர்களின் வாழ்வியல்
மாண்பை’ கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும். தமிழரென்ற
அடையளாத்துடன் பெருமிதத்துடன் கலந்து கொள்ள அனைவரையும், உலகத்தமிழ் சங்கமும் , தமிழ்
இலக்கிய கலை மன்றமும் இணைந்து வரவேற்கின்றன.
யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913
ஆண்டு பிறந்த தனிநாயகம் அடிகள் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ்
தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. முதல்
உலகத் தமிழ் மாநாடு நடத்தப் பட்டது. பின்னர் தமிழக் மக்கள் பலமுறை உலகத் தமிழ்
மாநாடுகளை நடத்தினர்.இந்த ஆண்டு சிட்னிக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ளது
நமக்கெல்லாம் மிகப் பெருமையாகும்.
இவ்விழாவினை ஒட்டி விழா மலர் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. ஆய்வுக்
கட்டுரைகளை அனுப்பி பங்களிக்க விரும்பும் தமிழ் நண்பர்கள் கட்டுரைகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் (lawyer.chandrika@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆலோசனை வழங்க விரும்புவோர் P O Box 96, Regents Park, NSW 2143, அல்லது (lawyer.chandrika@gmail.com) மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
‘திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்,மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்பிறந்தோம் நாங்கள்.’ என்ற
பாரதிதாசன் பாடல் வரிக்கமைய தமிழ் முழங்க சிட்னியில் இடம் பிடிப்போம்.தமிழ் தாயின்
திருத்தேரின் வடம் பிடிப்போம்.
துடிப்புள்ள இளையவர்
உழைப்பினைத் தருக.
முது தமிழறிஞர்கள்
அறிவுரை தருக.
ஆர்வமுள்ள அனைவரும்
வருகை தருக.
தமிழால் இணைவோம் !
தமிழை நுகர்வோம்!!
கரம் கோர்ப்போம்! தமிழ்
வளர்ப்போம்!!
கட்டுரை விதி
முறைகள்
· கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளுக்குள் ஒன்றாக அடங்க வேண்டும.
· அரசியல், இனத்துவேசத்தை தூண்டும் கட்டுரைகள்
நிராகரிக்கப்படும்.
· கட்டுரைகளின் தரம், அடங்கல், எழுத்து ஆகியவை நடுவர் குழு
பரிந்துரைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
· நடுவர்களின் முடிவே கட்டுரை பிரசுரமாவதை தீர்மானிக்கும்.
· A 4 -5 பக்கங்களுக்கு மிகை படாமல்.
· 10 அளவு ஒற்றை குறீயீட்டு எழுத்துரு.(Unicode).
· மின்னஞ்சலில் உடல் பகுதியில் ஒட்டி அனுப்பவும். இணைப்பாக அனுப்ப வேண்டாம்.
· கட்டுரைகளின் கருத்துக்கள் படைப்பாளியின்
பொறுப்பாகும்.
· நடுவர்களின் பார்வையில் கட்டுரைகளின் கருத்துக்களில் சில பகுதிகள் அகற்றப்
பட வேண்டும் எனப் பட்டால் அகற்ற வேண்டியது படைப்பாளியின்
பொறுப்பாகும்.
· கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2013
கட்டுரைத் தலைப்பு கீழ் கண்ட பரந்த
தலைப்புகளை சார்ந்த ஏதாவது ஒன்றின் கீழ்
இருக்கலாம்.
· சங்கத் தமிழ் பாடி தமிழர் புகழ் வளர்ப்போம்
· இலக்கியங்களில் சிறந்தது தமிழ் இலக்கியங்கள்
· தமிழர் வரலாற்றை இளம் தலை முறையினருக்கு…….
· தமிழர் வரலாறு
· சங்க இலக்கியங்களில் சிறப்பியல்
· சங்க காலம் காட்டும் தமிழரின் வளம்
· யாமறிந்த மொழியே தமிழ்
· தொன்மையான மொழி தமிழே!
· புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தமிழ்
· சங்க கால போர் முறைகள்
· தமிழ் மொழி செம்மொழியே…
· இலங்கைத் தமிழர் வரலாறு
· சிந்து வெளி நாகரிகத்தில் தமிழர்
· தமிழின் நவீனத்துவம்
· கணனித் தமிழ்
Dr Chandrika
Subramaniyan
Solicitor
Solicitor
0433099000
நன்றி: தமிழ்முரசு ஆஸ்திரேலியா – இணையதள பத்திரிக்கை
Subscribe to:
Posts (Atom)