இந்த தலைப்பில் தான் நான் மலேஷியாவில்
நடந்து முடிந்த 10வது உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரையை அனுப்பியிருந்தேன்.
துரதிர்ஷ்டமாக, என்னால் அங்கு சென்று, இந்த கட்டுரையை படைக்க முடியவில்லை. இந்த கட்டுரை, மாநாட்டு
மலரில் வெளிவந்துள்ளது.
அதனை உங்கள் பார்வைக்கு....
அறிமுகம்
“கோவில் இல்லா
ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது ஒளவை மூதாட்டி நமக்கு அருளிய அறிவுரை. இன்று, தமிழர்களாகிய நாம், “தமிழ்ப்
பள்ளிக்கூடம் இல்லாத நாட்டிற்கு புலம்
பெயர வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்
பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்து
வருகிறோம். இன்றைய காலகட்டத்தில், புலம் பெயர்ந்த நாடுகளில், தமிழர்களுக்கு தமிழ்க் கல்வியானது ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்று
சொன்னால் அது மிகையாகாது.
இக்கட்டுரையில் ஆஸ்திரேலியாவை
உதாரணமாக கொண்டு, புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்வியைப் பற்றி அலசி
ஆராயப்படும். ஆஸ்திரேலியா ஒரு பல்லினக் கலாச்சார நாடு. உலகம் முழுவதிலுமிருந்து
வந்து குடியேறிய மக்கள் தங்கள் தாய் மொழியை மறக்காமல் இருக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கவும் ஆஸ்திரேலியா அரசாங்கம் வழி
வகுக்கிறது. மேலும் 1987 ஆம் ஆண்டு, முதல் தேசிய மொழிக்
கொள்கை அமலுக்கு வந்தது (1). இந்த கொள்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று
ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளைக் காப்பாற்றி பேணி வளர்த்தல்,
மற்றொன்று இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல் ஆகும்.
நோக்கம்
ஆஸ்திரேலியாவில்
தமிழ்க் கல்வியின் அவசியத்தையும், ஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ்க் கல்வியை
எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதையும், தமிழ்க் கல்வியை கற்பிப்பதில்
உள்ள சவால்களும் மற்றும் அந்த சவால்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைப்
பற்றியும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ் கல்வியின் அவசியம்
இங்கு
ஆஸ்திரேலியாவில் ஆங்கிலம் தான் முதல் மொழி. நம் தமிழ்க் குழந்தைகள் வீட்டில்
இருக்கும் நேரத்தை விட வெளியில் இருக்கும் நேரம் தான் அதிகம். அதனால் அவர்கள்
படிப்படியாக நம் தாய் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியை பின்பற்ற
ஆரம்பித்தார்கள். அந்த மொழியின் தாக்கம் வீட்டிற்குள்ளும் வர ஆரம்பித்தது. அதாவது வீட்டில் பெற்றோர்கள்
தமிழில் பேசினாலும், குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பதிலுரைக்க
ஆரம்பித்தார்கள். புலம் பெயர்ந்த நம் தமிழ் பெற்றோர்களுக்கு இது ஒரு
பேரதிர்ச்சியாக இருந்தது. எங்கே அடுத்த தலைமுறையினர் தமிழையே மறந்து விடுவார்களோ என்று அஞ்சினார்கள். இதற்கு சரியான தீர்வு தமிழ் பள்ளி தான் என்று எண்ணி, தமிழ் பள்ளியை தோற்று வித்தார்கள். ஆஸ்திரேலியாவின்
முதல் தமிழ் பள்ளியாக 1977ஆம் ஆண்டு “பாலர் மலர் தமிழ் பள்ளி” நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின்
சிட்னி நகரில் தொடங்கப்பட்டது(2). வார இறுதி நாட்களில் மட்டுமே தமிழ் வகுப்புகள்
நடத்தப்பட்டன. இன்று பாலர்மலர் பள்ளி 5 கிளைகளாக விரிவடைந்திருக்கிறது. பின்னர்
1979ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் விக்டோரியா மாநிலத்தின் மெல்பெர்ன்
நகரில் தமிழ் பள்ளியை தோற்றுவித்தார்கள்(3). இவ்வாறு ஆஸ்திரேலியாவின் மற்ற
மாநிலங்களிலுள்ள பிரிஸ்பேன்,அடிலெய்ட்,கான்பரா,பெர்த் போன்ற நகரங்களிலும் தமிழ் பள்ளிகள் இயங்குகிறது. சிட்னியில்
மட்டும் தற்சமயம் 11 தமிழ்ப்பள்ளிகள் தமிழை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கச்
சேவை செய்து வருகின்றன.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊக்கம்
ஆஸ்திரேலிய
அரசாங்கம் பல்வேறு ஒத்துழைப்புகளை தமிழ் மொழி வளர்ச்சிக்காக வழங்கி வருகிறது.
·
அரசுப் பள்ளிகளில் இலவசமாக வார இறுதி நாட்களில் தமிழ்
பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி.
·
தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட அளவு நிதி
உதவி.
·
ஆசிரியர் பயிற்சிக்காக கட்டணத்தில் சலுகை
·
ஆசிரியர்களின் மேலதிகப் பயிற்சிக்காக பயிலரங்குகள்
நடத்துதல்.
தமிழ் கல்வியை கற்பிப்பதில் உள்ள சவால்கள்
ஆங்கிலத்தை முதன்மையாக கொண்ட ஒரு நாட்டில், தமிழை கற்பிப்பது
என்பது சாதாரணமான விடயம் கிடையாது. நாங்களும் இங்கு அந்த சவால்கள் சிலவற்றை சந்திக்கிறோம்.
- பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்களே ஆசிரியர்களாக இருப்பது
இங்கு தமிழ் பள்ளிகளில்
தமிழாசிரியர்களாக இருப்பவர்களில் பலர் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தான்.
அவர்கள் வார நாட்களில் வெவ்வேறு தொழில் புரிபவர்கள். மேலும் அவர்கள் இங்கு உள்ள பல்கலைக்கழகங்களால் (உ-ம்: சிட்னி பல்கலைக்கழகம் (4),நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (5), உள்ளங்காங்
பல்கலைக்கழகம் (6)) நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சிகளுக்கான சான்றிதழ் வகுப்புகளில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறையின் காரணமாக, தமிழார்வம் உள்ள
பெற்றோர்கள் ஆசிரியர்களாக வருவதற்கு தயங்குவதுண்டு. இதனால் ஆசிரியர்
பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
- மாணவர்களின் ஏனைய முன்னுரிமைகளோடு போட்டி போடுதல்
இங்கு பள்ளிகளில் தமிழ் ஒரு
கட்டாய பாடமாக இல்லாததால், பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழை
கற்பதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கிறார்கள்.
தமிழ் கற்பதோ வார இறுதி நாட்களில்
மட்டும் தான். ஆனால் பல மாணவர்கள் வார இறுதி நாட்களில்
தான் மற்ற வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் (உம்: பாட்டு, நடனம், விளையாட்டு,நீச்சல் போன்றவை).
இதனால் அவர்களுக்கு தமிழ்
கற்பதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது. மேலும்
சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் தமிழை படித்து, பெரிய பண்டிதனாகவா போகிறார்கள் என்ற ஒரு
எண்ணமும் இருக்கிறது.
- குறிக்கோளின்றி தமிழ் பள்ளிக்கு வருதல்
நிறைய மாணவர்கள்
தமிழ் பள்ளிக்கு வருவதே, தங்கள் நண்பர்களை சந்திக்கவும், ஒரு பொழுது
போக்கிற்காகவும் தான். இங்கு ஆஸ்திரேலியாவில் நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும்
தென்ஆஸ்திரேலியா மாநிலங்களில் பள்ளி மேல் நிலை வகுப்புகளில் (Higher Secondary – Year 11 and 12) தமிழை ஒரு பாடமாக
எடுத்துப்படிக்க அனுமதி உள்ளது (7). HSC (High School Certificate) வகுப்பில் அதாவது 12ஆம் வகுப்பில் தமிழில் எடுக்கும்
மதிப்பெண்கள் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முக்கிய பங்கு ஆற்றும் என்பது நிறைய பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதனால்
தங்கள் குழந்தைகள் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்ற மனநிலை நிறைய
பெற்றோர்களிடம் இருக்கிறது.
- பல்கலைக்கழகங்களில் தமிழை எடுத்து படிக்க முடியாத நிலை
பள்ளி மேல் நிலை
வகுப்புகளில் தமிழை படித்து முடித்து விட்ட மாணவர்களுக்கு, மேற்கொண்டு தமிழை
படிக்க பல்கலைக் கழகங்களில் வசதி இல்லாத ஒரு நிலைமை இங்கு இருக்கிறது.
சவால்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்டுகிறது
பொதுவாக தமிழர்களாகிய
நாம் வாழ்கையில் சந்திக்கக்கூடிய சவால்களை எல்லாம் எதிர்கொண்டு அவைகளை சந்தர்ப்பமாக
மாற்றுவோம். அதுபோல் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்வி கற்பிப்பதினால் ஏற்படும்
சவால்களையும் சந்தர்ப்பங்களாக மாற்றியுள்ளோம்.
·
பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தங்கங்கள்
சிட்னி
நகரில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளும் ஒருங்கிணைந்து “நியூ சவுத் வேல்ஸ் தமிழ்
பாடசாலைகள் கூட்டமைப்பு” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அந்த நிறுவனத்தின்
கீழ் பாடத்திட்டக்குழு ஒன்றும் புத்தகக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
பாடத்திட்டக்குழுவானது, மழலையர் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு
வரை ஒரு பாடத்திட்டமும், 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான
ஒரு பாடத்திட்டமும் தயாரித்தது. இதனால், சரியான பாடத்திட்டம்
பயன்பாட்டில் உள்ளது.
·
12ஆம் வகுப்புக்கான தமிழ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு
இங்கு மாணவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படிக்கும்போதே 12ஆம்
வகுப்புக்கான தமிழ்த் தேர்வை எழுத முடியும். இதனால் அவர்கள் 12ஆம் வகுப்பு சிறிது
எளிதாக இருக்கும். அதேபோல், தமிழ் மொழியில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களில் எந்தவொரு பாடப் பிரிவிலும் சேரலாம். ஆஸ்திரேலியாவில் மொழி பெயர்ப்பாளருக்கான தேர்வில் [8] எளிதில் வெற்றி பெற்று மொழிப்பெயர்ப்பாளராக ஆக முடியும் என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் 12ஆம் வகுப்புக்கான தமிழ் தேர்வை பற்றி விரிவாக
எடுத்துரைத்து அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். .
முடிவுரை
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்
மொழியின் அவசியத்தை முதலில் பெற்றோர்கள் உணர்ந்து,
கண்டிப்பாக வீட்டில் தமிழில் தான் உரையாடவேண்டும் என்றும்,
வார இறுதி நாட்களில் தங்கள் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று
சங்கல்பம் எடுத்து கொண்டால், நிச்சயமாக தமிழ் மொழி
அடுத்தடுத்த தலைமுறையினரை சென்றடையும்
என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
சான்றுக் குறிப்புகள்/References
1.
FECCA, Federation of Ethnic
Communities’ Councils of Australia (1987)
3.
Kandiah,
A (2008) People speaking Tamil at home in Australia.
4. Sydney University Professional Development Courses -
http://cce.sydney.edu.au/course/Professional+Development
5. University of New South
Wales – Institute of Languages - http://www.languages.unsw.edu.au/langTeaching/languageTeaching_main.html
6. University of Wollongong Language
Centre - http://www.uow.edu.au/arts/language/index.html
- National Accreditation Authority For Translators and
Interpreters Ltd - http://www.naati.com.au/home_page.html
ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்க்க எடுக்கப்படும் முயற்சி மகிழ்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete