தமிழின் முச்சங்கங்கள் – ஒரு விளக்கம்
சக்தி ஜெயா இளங்கோவன் – ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வொர்தி.
முன்னுரை
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியைப்
புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லை. செந்தமிழ், பசுந்தமிழ், நற்றமிழ்,
தீந்தமிழ் என்றும் தேமதுரத்தமிழ் என்றும் புலவர்களால் பாடப்பட்ட நம் தமிழ் மொழியை
முச்சங்கங்களே வளர்க்க மிகவும் உதவியாய் இருந்தன. இம் மூன்று சங்கங்களின் விபரங்களைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை இந்தக் கட்டுரையில் விளக்கப்போகிறேன்.
முச்சங்கங்கள் - தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் தமிழில் இருந்ததாக
இறையனார் என்ற
புலவர் அகப்பொருள் [2] என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த அகப்பொருளுக்கு உரை எழுதிய நக்கீரனும் இதை உறுதி
செய்துள்ளார். இதைத் தவிர கி.வா.
ஜகந்நதான் அவர்கள் எழுதிய மனை விளக்கில் [5] சங்கக்காட்சிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தக் காலத்தில் அரசர்கள் தமிழ்ச்
சங்கங்களை உருவாக்கினார்கள். இச்சங்கங்கள் மூலம் அரசர்கள் புலவர்களை ஆதரித்துக் கவிதைகள், காப்பியங்கள்,
இலக்கியங்கள், முதலியவற்றை எழுதுவதற்கு உதவி செய்தார்கள். முதல் இரண்டு
சங்கங்களும் ஆழிப்பேரலையின் (சுனாமி)
காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும், மூன்றாவது சங்கம் இப்பொழுது உள்ள மதுரையில்
இருந்தது என்றும் இணையதளத்தில்
உள்ள பல தமிழ் ஆதாரங்கள்
மூலம் தெரிய வருகிறது [3]. பல பண்டிதர்கள் முதல் இரண்டு சங்கங்கள் உண்மையில் இருந்தனவா என்ற கேள்வியை எழுப்பினார்கள். மூன்றாம் சங்கம் நிச்சயம் இருந்தது என்று சான்று
இருக்கிறது[3] ஆனால் மற்ற இரண்டு சங்கங்களும் இருந்தனவா, இல்லையா, எந்த வருடங்களில் இருந்தன என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. தொல்காப்பியர்
எழுதிய தொல்காப்பியத்தின் காலம்கூட கி. மு. 300 முதல் கி. பி. 500க்கு உட்பட்ட
காலமாக இருக்கலாமென்று பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன [4].
தலைச்சங்கம்
தலைச்சங்கம் மதுரையில்
4440 வருடங்கள் இருந்தது, மதுரையின் அந்தப் பகுதி கடலில் அழிக்கப்பட்டதால் இப்பொழுது தலைச்சங்கம் இருந்த இடம் தமிழ் நாட்டின் வரை படத்தில்
இல்லை. தலைச்சங்கம் ஏறத்தாழ கி.மு. 9600 ஆம் ஆண்டு ஆரம்பித்து கி.மு. 5200 வரை இருந்ததாக நம்பப்படுகிறது. தலைச்சங்கத்தில்4449
புலவர்கள் இருந்ததாகவும், அதில் 549 புலவர்கள் பாடல்கள் பாடியவர்கள் [2] என்றும் அவர்களில் முக்கிய புலவர்கள்,
அகத்தியனார், முரிஞ்சியூர் முடிநாகராயர் மற்றும் நிதியின் கிழவன் என்றும் நம்பப்படுகிறது. தலைச் சங்கத்தில் சிவன், முருகன், குபேரன் என கடவுள்களும் இருந்தார்கள் என்றும் கூறுகிறார்கள். பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலியவை இக்காலக்கட்டத்தில்
பாடபட்ட/எழுதப்பட்ட நூல்கள். இவர்களில் கவியரங்கு ஏறிய புலவர்களின் எண்ணிக்கை 7 ஆகும். அவர்கள்
பயன்படுத்திய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். தலைச்சங்கம்
பேணிய அரசர்களின் எண்ணிக்கை 89 என்றும் அவர்களின் பெயர்கள் காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]
இடைச்சங்கம்
இரண்டாவது சங்கம் இடைச்சங்கம்
என்று அழைக்கப்பட்டது. இச்சங்கம் 3700 வருடங்கள்
கபாடபுரத்தில் நிலவியதாகக் கூறப்படுகிறது. இடைச்சங்கத்தில் பங்கேற்ற புலவர்கள் மொத்தம்
3700. இடைச்சங்கத்தில் பங்கேற்ற புலவர்களின் எண்ணிக்கையும் சங்கம் நிலவிய
வருடங்களின் எண்ணிக்கையும் ஒன்றாக (3700) இருப்பது சந்தேகத்தை அளிக்கிறது.
இச்சங்கத்தில் பங்கேற்ற முக்கிய புலவர்கள் அகத்தியனார், தொல்காப்பியனார், வெள்ளூர்க் காப்பியன்,
சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான் ஆகியோர். அதில் பாடல்கள் இயற்றியவர்கள்
மொத்தம் 59 ஆகும். கவியரங்கு ஏறிய புலவர்களின் எண்ணிக்கை 5.[2] கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் முதலியவை
இக்காலத்தில் பாடப்பட்ட நூல்கள் ஆகும். அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல்கள் அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் ஆகியவை ஆகும். [2]
கடைச்சங்கம்
கடைசிச் சங்கம்
அதாவது கடைச்சங்கம் உத்தர மதுரையில் நிலவியது என்றும், 1850 வருடங்கள் நிலவியது என்றும் விகிபிடியாவில் காணப்படுகிறது.
இச்சங்கத்தில் மொத்தம் 449 புலவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. [2]
இச்சங்கத்தில் பங்கேற்ற முக்கிய புலவர்கள், சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆகியோர்
மற்றும் பலர். கடைச்சங்கத்தில் 449 புலவர்கள் இருந்ததாகவும், அதில் 49 புலவர்கள் பாடல்கள் பாடியவர்கள் என்றும் தெரியவருகிறது. பாடப்பட்ட பாடல்கள் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை இத் தொடக்கத்தன. இச்சங்கத்தை நிலவிய அரசர்கள் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை. அவர்கள் பயன்படுத்திய இலக்கண
நூல் அகத்தியம் மற்றும் தொல்காப்பியம். தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப்
பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும்
பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதமும், இராமாயணமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
முடிவுரை
தமிழை வளர்க்க இம்முச்சங்கங்களை உருவாக்கினார்கள். அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் போன்ற நூல்கள் எதிர்காலத்தில்
வரும் சந்ததியருக்கு உதவியாக இருக்கும். இந்த ஆய்வின் மூலம் அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும்
இடையே பேச்சுத் தமிழ் மற்றும் எழுத்துத் தமிழில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன
என்றும், அக்காலத்தில் தமிழை வளர்க்க மிகவும்
பாடுபட்டிருக்கிறார்கள் என்றும் நான் தெரிந்துகொண்டேன்.
சான்றுக் குறிப்புகள்:
5. கி.வா. ஜகந்நதான் அவர்கள் எழுதிய ‘மனை விளக்கு’
என்ற நூல்
No comments:
Post a Comment