Wednesday, October 17, 2012

தாய்மை – 1


நமக்கு குழந்தை பிறந்துடுச்சு, அதுவும் ஆண் குழந்தை. பாருங்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா.

அருகில் படுத்திருந்த அவள் கணவன் முருகன், அவளை எழுப்பி, “என்னம்மா கனவா” என்று கேட்டான்.

அவளும், “வெறும் கனவு தானா, நான் கூட நமக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துடுச்சுன்னு நினைச்சுட்டேன்” என்றாள்.

“இப்ப மணி நாலு. விடியற்காலைல காண்கிற கனவு பலிச்சுடும்னு சொல்லுவாங்க. கவலைப்படாதே, சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும்” என்றான் முருகன்.

“நமக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் முடிஞ்சுடுச்சு, ஒரு தடவை கூட எனக்கு நாள் தள்ளிப் போகலை. எனக்கு தெரிஞ்சு எத்தனை பேருக்கு தெரியுமா கல்யாணம் ஆன அடுத்த மாசமே தள்ளிப் போயி, முத வருஷ கல்யாண நாளையே, குழந்தையோடு கொண்டாடி இருக்காங்க. எனக்கு மட்டும் ஏங்க இப்படி! அந்த ஆண்டவனுக்கு ஏங்க நம்ம மேல கருணையே இல்லை. நான் என்ன காரு, பங்களாவா கேக்குறேன், ஒரு குழந்தையை தானே கேக்குறேன்” என்று அவன் மார்பில் தலை சாய்த்து விசும்பினாள் தேவசேனா.

ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே, ஆண்டவனுக்கு தெரியும், நமக்கு எப்ப குழந்தையை கொடுக்கணும்னு. நாம தான் இங்க மதுரைல இருக்கிற கைராசி டாக்டரை பார்த்துட்டோமே,நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால சீக்கிரம் நமக்கு குழந்தை பிறக்கும். நீ எதையும் நினைக்காம தூங்கு” என்றான் முருகன்.

காலையில், தேவசேனா எழுந்து தலை குளித்து, காப்பி போட்டுக்கொண்டிருக்கும்போது,

“என்னடி! இந்த மாசமும் தலை முழுகிட்டியா” என்று கேட்டபடி அங்கு வந்தாள் மாமியார் மரகதம்.

“ஆ! ஆ! ஆமாம் அத்தை” என்று மென்று முழுங்கியபடி பதிலுரைத்தாள் தேவசேனா.

“நீ, இப்படி, ஒவ்வொரு மாசமும், தலை முழுகிக்கிட்டு இருந்தா, ஒரு நாள் நாங்க உன்னைய ஒரேடியா தலை முழுக வேண்டி வரும், இந்தா, இந்த காபியை மாமா கிட்ட கொடு” என்று கூறிவிட்டு, மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

மனசுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொண்டு, கண்களிலிருந்து வெளியேறத் துடிக்கும் கண்ணீரை அடக்கியபடியே, மாமனார் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் தேவசேனா.

வராண்டாவில் பேப்பரை மேய்ந்துக் கொண்டிருந்த வெங்கடாச்சலத்தின் காதுகளுக்குள் அந்த உரையாடல் விழுந்தது.

“இந்தாங்க மாமா காபி” என்றாள் தேவசேனா.

“என்னம்மா, இன்னைக்கும் அர்ச்சனையா?, அவளால தினமும் காலைல உன்னைய அர்ச்சனை பண்ணாம இருக்க முடியாது. இதை நினைச்சு கவலைப்படாதேம்மா” என்றார்.

“நான் ஒண்ணும் நினைச்சுக்கலை மாமா” என்றாள்.

என்ன,அங்க ஒரு பஞ்சாயத்து நடக்குது. ஏண்டி, நான் உன்னைய காபி தானே கொடுத்துட்டு வர சொன்னேன், எவ்வளவு வேலை இருக்கு, இங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்டபடியே அங்கு வந்தாள் மரகதம்.

“ஏன் மரகதம், அவளை ஒண்ணும் சொல்லாம இருக்க முடியாதா உன்னால” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.

“எனக்கு மட்டும் அவளை எதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்னு ஆசையா என்ன! இந்த மாசமாவது அவளுக்கு நாள் தள்ளிப் போகும்னு ஒரு நப்பாசைல இருந்தேன். நான் கண்ணு மூடுறதுக்குள்ள ஒரு பேரப் பிள்ளைய பார்த்துடலாம்னு பார்த்தா, அதை நடக்க விடமாட்டா போலிருக்கே” என்றாள் மரகதம்.

“நீ அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போய் சேர மாட்ட, நம்ம வீட்டில சீக்கிரம் ஒரு குழந்தையோட சத்தம் கேக்கத்தான் போகுது. சும்மா, அவ மனசை நோகடிச்சுக்கிட்டு இருக்காதே” என்று கோபமாக சொன்னார் வெங்கடாச்சலம்.

“உக்கும், மருமகளை ஒண்ணு சொல்லிடக் கூடாதே, உடனே என்னைய அடக்கிடுவீங்களே!, இந்த வீட்டில எல்லாருக்கும் நான் புலம்புறது தான் கஷ்டமா இருக்குது என்று முனங்கியபடி சென்றாள் மரகதம்.

தேவசேனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரை பார்க்கிறார் வெங்கடாச்சலம்.

“முதல்ல கண்ணைத் துடைம்மா, அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமில்ல. சரிம்மா, உன் புருஷன் எந்திரிச்சுட்டானா” என்று கேட்டார்.

“கண்ணைத் துடைத்துக் கொண்டே, இந்நேரம் எந்திரிச்சிருக்கணும் மாமா” என்றாள் தேவசேனா.

அப்போது அங்கு வந்து சேர்ந்த முருகனிடம், வெங்கடாச்சலம், “முருகா, இன்னைக்கு நீ போய் கடையைத் திற, நான் கடை விஷயமா திருச்சி வரைக்கும் போயிட்டு, நாளைக்கு காலைல வரேன்” என்றார்.

“சரிப்பா என்று அப்பாவிடம் கூறிவிட்டு, தேவ்ஸ், நீ போய் டிபனை ரெடி பண்ணு, நான் குளிச்சிட்டு வரேன்” என்றான் முருகன்.

“சரிங்க, நான் இட்லியை சூடா அவிச்சு எடுக்கிறேன். நீங்க அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துடுங்க” என்றபடி சமையலறைக்கு போனாள்.

கணவனும் மாமனாரும் சென்ற பிறகு, மதிய சமையலை முடித்து, கடைப் பையனிடம் கணவனுக்கு சாப்பாட்டை அனுப்பிவிட்டு,மாமியார் சாப்பிட்டு தூங்க போனபின் தானும் சாப்பிட்டு, டி‌வியை போட்டதில், பாட்டு சேனலில், கல்கி திரைப்படத்திலிருந்து ஒரு பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. தேவசேனாவோ,அதில் நடித்த கீதாவின் இடத்தில் தன்னை பொருத்திப் பார்த்து, தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தாள்.

முத்து முத்து மகளே, முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினில் நீ வா
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

முன்னூறு நாள் கர்ப்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்
என்றாலும் தாய்தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடி வாழ்க கண்ணே
புறாவைப்போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறமலே பெரும் சுகம் நீயே

எழுதுகிறேன் ஒரு கடிதம்

அதைப் பார்த்த படியே அழுதழுது, அப்படியே தூங்கிப் போனாள்.

அன்றிரவு எட்டு மணிக்கு, முருகன் வீட்டிற்கு திரும்பியபொழுது, வீடே இருளில் மூழ்கியிருந்தது. கதவைத் திறந்து, “தேவ்ஸ்,தேவ்ஸ்”, "அம்மா, அம்மா" என்று அழைத்தபடியே வரவேற்பறையில் இருந்த ஸ்விட்சைப் போட்டான்.

அங்கே....                                           பகுதி - 2
[தொடரும்]

    

Sunday, October 14, 2012

மாற்றான் VS சாருலதா – விமர்சனம்


வீட்டு அம்மணியும், மகாரணிகளும் ஊருக்கு சென்று விட்டதால், படம் பார்க்க நிறைய நேரம் கிடைக்கிறது. முன்பெல்லாம் ஒரு படத்தை பார்த்து முடிக்க கிட்டதட்ட, 10-15 நாட்கள் ஆகும். அதற்குள் அந்த கதையே மறந்து போகும். ஆனால் இப்பொழுதோ, ஒரு படத்தை பார்த்து முடித்து விட்டு தான் அடுத்த வேலையே. இரண்டு வாரத்துக்கு முன்பு, பிரியாமணி  நடித்த சாருலதா படத்தை பார்த்தேன். இதற்கு விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும்போது மாற்றானும், இதே மாதிரி ஒட்டிப் பிறந்தவர்களின் வாழ்கையில் நடக்கும் கதை என்று தெரிந்தது. நேற்று தான் மாற்றானை திரை அரங்கில் சென்று பார்த்தேன். சரி, இரண்டு படங்களையும் தொடர்பு படுத்தி ஒரு விமர்சனத்தை எழுதலாம் என்று நினைத்து, இதோ இரு படங்களின் திரை விமர்சனம்.

முதலில், இந்த இரு படங்களின் ஒற்றுமைகளை பார்ப்போம்.

மாற்றானில் சூரியா இரட்டைப் பிறவிகளாக ஒட்டிப் பிறந்திருப்பார்கள். சாருலதாவிலோ ப்ரியாமணி ஒட்டிப் பிறந்திருப்பார்கள். இரு சூரியாக்களுக்கும் காஜல் அகர்வாலின் மீது காதல் வரும். அதே மாதிரி, இரு பிரியாமணிகளுக்கும் ஸ்கந்தாவின் மீது காதல் வரும். இரு படங்களிலும், ஒட்டிப் பிறந்தவர்களில் ஒருவர் இறந்து விடுவார், இன்னொருவரோ, மற்றவரை போல் மாறி விடுவார்.  இரு படங்களிலும் இரட்டையர்களை பிரித்து காட்டுவதற்கு அவர்களின் சிகை அலங்காரத்தில் வித்தியாசத்தை காட்டியிருப்பார்கள். வெவ்வேறு பிரச்சனைகளுக்காக இரண்டு சூரியாக்களும், இரண்டு பிரியாமணிகளும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இரண்டு சூரியாக்களும் நடனமாடுவார்கள். அதே மாதிரி, இரண்டு பிரியாமணிகளும் வயலின் வாசிப்பார்கள்.

இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும், இரு படங்களின் கதைக்களம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்கள்.


  
சாருலதா - திகில் படமான 'சாருலதா' தாய்லாந்தில் வெளியான 'அலோன்' என்ற படத்தின் தழுவலாகும். சாருவும், லதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, எந்த நிலையிலும் பிரியக்கூடாது என்று உறுதியோடு வளர்கின்றனர். சாதுவான குணம் கொண்ட பெண்ணாக சாருவும், முரட்டுக் குணம் கொண்ட பெண்ணாக லதாவும் வளர்கிறார்கள். இருபது வயது வரை எந்தப் பிரச்சனையயும் இல்லை. அதன் பின் ஸ்கந்தாவை பார்த்த முதல் பார்வையிலே காதலில் விழுகிறார் லதா. எங்கே தன் காதலால், சாருவை பிரிய நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி, தன் காதலை மனதுக்குள்ளேயே புதைத்து விடுகிறார். இது தெரியாமல், ஸ்கந்தா சாருவை காதலிக்க, சாருவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இதை அறிந்த லதாவோ “நான் உனக்காக என் காதலை குழி தோண்டி புதைத்தால், நீங்கள் இருவரும் எனக்கா துரோகம் செய்கிறீர்கள்” என்று சாருவோடு சண்டை போடுகிறார். இந்த சண்டையில், அசந்தர்ப்பமாக இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார். இன்னொருவர் ஸ்கந்தாவை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கையில், இறந்தவரின் ஆவி தன்னோடு ஒட்டிப் பிறந்த சகோதரியை பயமுறுத்தி, அவளை நிம்மதியில்லாமல் செய்கிறது. இறந்தது யார், அந்த ஆவி அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழ அனுமதித்ததா என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே பிரியாமணியின் நடிப்பு தான். இரண்டு கதாபாத்திரங்களை தன் உடல் அசைவுகளின்  மூலம் வித்தியாசப்படுத்தி பிரமாதமாக நடித்திருக்கிறார். தான் ஒரு தேசிய விருது வாங்கிய நடிகை என்பதை மீண்டும் அந்த இறுதிக் காட்சியில் நிருபித்திருக்கிறார். இயக்குனர் பொன் குமரனுக்கு இது முதல் படம். தன் முத்திரையை படிக்க முயற்சித்து, அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.



மாற்றான் – அகிலனும், விமலனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் இப்படி பிறப்பதற்கு, இவர்களின் தந்தை தான் காரணம். சூர்யாவின் தந்தை ஒரு மரபணு ஆராய்ச்சியாளர். தனக்கு பிறக்கப் போகும் குழந்தை பல சக்திகள் கொண்டதாக பிறக்க வேண்டும் என்று நினைத்து, தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறக்கச் செய்கிறார். அந்த ஆராய்ச்சியின் தோல்வியால் ஒரு இதயம், இரு உடல் என்று இரட்டை குழந்தை ஒட்டி பிறக்கிறது.இந்நிலையில், ஏழ்மையில் இருக்கும் அவர், குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒன்றை தயாரித்து அதன் மூலம் பெரிய கோடீஸ்வரனாகிறார். குறுகிய காலத்தில் அந்த நிறுவனம் அடையும் வளர்ச்சியை கண்டு, போட்டி நிறுவனங்கள் அந்த பால் பவுடர் தயாரிக்கும் முறையை அறிய முயற்சிக்கிறார்கள்.  ரஷ்யாவில் இருந்து வரும் ஒரு பெண்ணும், சூர்யாவின் அப்பாவுடைய பால்  பவுடர் நிறுவனத்தை உளவு பார்க்கிறார். இதற்கிடையில் அந்த நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரியும் காஜல் அகர்வாலுக்கும். இரட்டை சூர்யாவில் அமைதியான சூர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சூர்யாவின் அப்பாவுடைய பால் பவுடர் நிறுவனத்தைப் பற்றி தகவலை சேகரிக்கும் அந்த ரஷ்ய பெண் கொல்லப்படுகிறார். கொலை செய்யப்பட்ட அந்த பெண், இறப்பதற்கு முன்பு தான் சேகரித்த தகவல்களை ஒரு பென்டிரைவில் காப்பி செய்து அதை விழுங்கி விடுகிறார். அந்த பென்டிரைவ்  சாதுவான சூர்யாவிடம் கிடைக்கிறது. அந்த பென்டிரைவ்வை  கைபற்ற நினைக்கும் ஒரு கும்பல் சூர்யாவை தாக்குகிறது. இந்த தாக்குதலில் சாதுவான சூர்யா இறந்துப் போகிறார். பிறகு உயிரோடு  இருக்கும் இன்னொரு சூர்யாவிடம் அந்த பென்டிரைவர் கிடைக்கிறது. அதை வைத்து சூர்யா என்ன செய்தார்? சூர்யாவின் அப்பா தயாரிக்கும் பால் பவுடரில் அப்படி என்ன இருக்கிறது? என்பதுதான் மீது கதை. ஓட்டிப் பிறந்த இரட்டையர்களாக வரும் அகிலன் விமலன் கதாபாத்திரங்களில் சூர்யா சும்மா பூந்து விளையாடியிருக்கிறார்”.  ஒட்டிப் பிறந்த இருவரும் நடனமாடுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். இந்த படத்துக்காக சூர்யா ரொம்பவும் சிரமப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. ஒரு சூர்யா இறந்தவுடன், உயிரோடு இருக்கும் இன்னொரு சூரியா முதன்முதலில் தானாக நடக்கும் காட்சி ஒன்றே போதும், எந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டிருக்கிறார் என்று கூற. படம் பார்க்கும் நமக்கே ஒரு சூரியாவை மட்டும் பார்க்கும்போது, இன்னொரு சூரியாவை காணோமே என்று ஏங்க வைத்திருப்பது, இந்தப் படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி. ஒளிப்பதிவு நம் கண்களுக்கு பெரிய விருந்தையே அளிக்கிறது. இந்தப் படத்தில் மிகவும் சிரமமான ஒன்று சண்டைக் காட்சிகளும் நடனக் காட்சிகளும் தான்.  சிறப்பாக நடித்த பெருமை சூர்யாவுக்கு போனாலும், அது நிறைவேறக் காரணமாக இருந்த பீட்டர் ஹெய்ன் மற்றும் நடன இயக்குனர்கள் பிருந்தாவும் தினேஷும் பாராட்டுக்குரியவர்கள்.  முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியை ரொம்பவும் இழுத்து, எப்ப தான் படம் முடியுமோ என்று என்ன வைக்கிறது.

ஆக மொத்தத்தில், இரு படங்களையுமே சூரியாவுக்காகவும்,பிரியாயமணிக்காகவும் பார்க்கலாம்.

Tuesday, October 9, 2012

ஆண்கள் சமையல்


சமையல் கலைக்கு உதாரணம் சொல்பவர்கள் “நள மகராஜாவை” தான் சொல்லுவார்கள். அதற்கு ஏற்ற மாதிரி, பெரிய பெரிய நட்சத்திர உணவகங்களில் ஆண்கள் தான் முதன்மை சமையல் நிபுணர்களாக இருப்பார்கள். இன்னும் சொல்லனும்னா, இங்கு ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் வரும் “மாஸ்டர் செஃப்(Master Chef)” நிகழ்ச்சியில் கூட, ஆண்கள் தான் நீதிபதிகளாக இருக்கிறார்கள். சமையல்னா ஆண்கள் தான் அப்படிங்கிறது மாறிப்போய் பெண்கள், வீட்டில் சமையலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள் (பின்ன! பெண்கள்  உள்ளே நுழையாத துறை ஏதாவது இருக்கிறதா என்ன!!!). அவர்கள் இப்படி சமையலை குத்தகை  எடுத்துக்கிட்டதுனால தான், என்னை மாதிரி ஆட்கள், சமையலறை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். எதுக்குடா, தெரிஞ்ச விஷயத்துக்கு போயி இவ்வளவு பில்டப் கொடுக்கிறானேன்னு பார்க்கிறீங்களா, சரி விஷயத்துக்கு வரேன். நான் வார இறுதியில் தமிழ் சொல்லிக் கொடுக்கும் தமிழ் பள்ளியிலிருந்து, ஒவ்வொரு வருடமும் சிட்னியில் உள்ள ஏதாவது ஒரு முகாமிற்கு போயி இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவோம். இதை, எங்கள் பள்ளியின் முதல்வர் தான் ஆரம்பித்து வைத்தார். இந்த முகாமில் என்ன சிறப்பு என்றால், அந்த இரண்டு நாட்களும், அதாவது, வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை 3 நேரமும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு நேரமும், ஆக மொத்தம் 6 வேளைக்கு ஆண்கள் மட்டுமே சமைத்து, பெண்கள் சாப்பிடுவார்கள். நடு, நடுவில், இந்த காபி, டீ, பஜ்ஜி, சொஜ்ஜி போன்றவைகளும் உண்டு. பெண்கள் சமையல்கட்டுப் பக்கம் தலையை கூட காட்ட மாட்டார்கள். அவர்களுடைய ஒரே வேலை, அரட்டை அடிப்பது, ஆண்கள் சமைத்ததை சாப்பிடுவது, தூங்குவது தான். இதில், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் மட்டும் இன்னும் ஒரு வேலையாக அந்த குழந்தையை கவனித்துக் கொள்வார்கள்.  அந்த அளவுக்கு பெண்கள் அந்த இரண்டு நாளும் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். ஆனால், அப்படியும் சொல்லமுடியாது, சில பேர் ஒரேடியாக அரட்டை அடித்து சோர்வடைந்து விடுவார்கள். இந்த முகாமில் இன்னொரு விசேடம் என்னவென்றால், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவது தான். ஒவ்வொருவரிடமும் இவ்வளவு திறமை இருக்கிறதா என்று அப்பொழுது தான் தெரியும்.
இந்த ஆண்டும், மூன்றாவது வருடமாக, சென்ற வெள்ளிக்கிழமை மாலை  நாங்கள் ஒரு 75 பேர் முகாமிற்கு சென்றோம். அந்த முகாம், நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து கிட்டதட்ட 65 கிலோமீட்டர் தூரத்தில், சரியான ஒரு காட்டுப் பகுதியில் இருந்தது. அங்கு சென்றவுடன், எங்கள் தமிழ் பள்ளியின் சமையல் கலை நிபுணர்கள் இரவுக்கு கொத்து பரோட்டா செய்தார்கள். முக்கியமாக ஒரு விஷயத்தை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும், அதாவது நான் இந்த முகாம்களில் எல்லாம் சமைத்தது இல்லை. வெறும் எடுபுடி தான் (வேற என்னங்க பண்ண முடியும், வீட்டு அம்மணிக்கு எடுபுடியாவே இருந்து பழகிப்போயிடுச்சு). ஆனா, நான் மட்டும் இல்லைங்க, என்னைய மாதிரி, நிறைய எடுபுடிகள், அந்த முகாமில் இருந்தார்கள். காய்களை எல்லாம் நறுக்குவதும், பாத்திரங்களை எல்லாம் கழுவுவதுமாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட எடுபிடி வேலைகளை ஒழுங்காக செய்தோம். அந்த இரவில், நாங்க ஒரு நான்கு பேர் காய்களை நறுக்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு நண்பரின் மனைவி நாங்கள் எல்லாம் எப்படி வேலை பார்க்கிறோம் என்று பார்க்க வந்தார். வந்தவர், ஒரு நிமிடம் அப்படியே நின்று, திடீரென்று, “ஏங்க என் வீட்டுக்காருக்கு நல்லா சமைக்க தெரியும், அவரைப் போயி காய்களை நறுக்க விட்டுட்டீங்களேன்னு கேட்டாரு. உடனே, என் பக்கத்தில் இருந்த நண்பர், அம்மா தாயே, நீ கிளம்பு, நானே, ஏதோ ஒரு நாலு பேருக்கு, ஐந்து பேருக்கு  சமைச்சிருக்கேன். இங்க என்னடான்னா 75 பேருக்கு சமைக்கணுமாம், நம்மாலாள எல்லாம் அந்த அளவுக்கு முடியாதுன்னு ஒதுங்கி எடுபிடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ வேற!, என்ன, இப்ப, நான் சமைக்கணும் அவ்வளவுதானே, வீட்டுக்கு வந்து உனக்கு ஒரு நேரம் சமைச்சு போடுறேன். இப்ப இடத்தை காலி பண்ணுன்னு அழாத குறையா கெஞ்சி, அவுங்களை கிளப்பப் பார்த்தாரு. நான் உடனே, என் பங்குக்கு, ஏங்க “கத்தி பிடிச்ச கையால, எப்படிங்க கரண்டியை பிடிக்கிறதுன்னு” ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தேன். (பின்ன, இந்த மாதிரி நேரங்கள்ல, நண்பனை விட்டுக்கொடுக்க முடியுமா!!). வேற வழியில்லாம அவுங்க கிளம்பி போயிட்டாங்க. அப்புறம் தான் நம்ம நண்பருக்கு நிம்மதியே வந்துச்சு. ரொம்ப பேருக்கு, அந்த நண்பர் நல்லா சமைப்பாருன்னு தெரியாது. திருமணத்துக்கு முன்னாடி, அவர் தனிக்காட்டு ராஜாவா, இருந்தபோது, அவர் நல்லா சமையல் செஞ்சு சாப்பிட்டிருக்காரு. இதை ஒரு சிறப்பு தகுதியா வச்சு, அவருக்கு பெண் பார்த்த இடத்துல , அவருக்கு வேண்டாதவங்க பெண் வீட்டாரிடம் போட்டு கொடுத்திருக்காங்க. அந்த பெண்ணும், ஆஹா, நமக்கு வரபோற கணவருக்கு நல்லா சமைக்கத்தெரிஞ்சிருக்கு, அதனால நமக்கு பிரச்சனை இல்லைன்னு, அவருக்கு கழுத்தை நீட்டிட்டாங்க. ஆனா, நண்பர் யாரு!!, கல்யாணம் ஆகி, ஏழெட்டு வருஷமா ஒரு வேளை கூட, மனைவியை உட்காரவச்சு சமைச்சு போடலை. இங்கையாவது, நம்ம கணவர் சமைச்சதை சாப்பிட்டு பார்க்கலாங்கிற ஒரு நப்பாசைல, அவர் மனைவியும் போட்டுப் பார்த்திருக்காங்க. ஆனா ஒண்ணும் நடக்கலை. இந்த மாதிரி எத்தனை பேர் மனதுக்குள் ஆசையை வைத்திருப்பார்களோ!!  எங்க வீட்டு அம்மணிக்கு, ரொம்ப பெரிய ஆசை!, நான் எபடியாவது இந்த மாதிரி இடங்களில் ஏதாவது ஒன்றாவது செய்வதற்கு கத்துக்கொண்டு, அவர்களுக்கு செய்து கொடுப்பேன்னு. நாம யாரு!!!, இங்கேயும் எடுபிடியாவே ஓட்டிடுவோம் இல்ல!. அப்புறம் மறு நாள் காலைல ஐந்து மணிக்கெல்லாம், டீ மாஸ்டர் (டீ, காபி எல்லாம் போடுறது  தான் அந்த நண்பரோட வேலை) டீ போட்டு, எங்களையெல்லாம் எழுப்பிவிட்டார். நானும் எழுந்து, எடுபிடி வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டேன் (வீட்டில் ஒரு நாள் கூட ஐந்து மணிக்கு எழுந்ததே இல்லை). காலைல இட்லி, பொங்கல், ஊத்தப்பம், ரெண்டு வகையான சட்னி,சாம்பார் அப்படின்னு ஒரு கல்யாண விருந்தையே செஞ்சோம். மழையும், இந்த ஆண்கள் எல்லாம் எப்படி சமைக்கிறாங்கன்னு பார்க்க வந்துடுச்சு. அதனால, குழந்தைகளுக்கு தான் கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு. இருந்தாலும் நம்ம குழந்தைகள் அறைலேயே இருப்பாங்களா என்ன? அடாது மழை பெய்தாலும், விடாமல் நாங்கள் வெளியே சென்று எங்களுக்கான ஆக்டிவிட்டியில் இறங்குவோம்னு, ரெயின்கோட் எல்லாம் போட்டுக்கொண்டு அவர்கள் கிளம்பி போனார்கள். மதியமும் ரசம், புளிக்கொழம்பு,ரெண்டு பொரியல், கூட்டுன்னு அசத்தினோம். மாலை ஐந்து மணிக்கு மேல், அடியேன் எழுதின “கோவிந்தா படம் தயாரிக்கிறார்ன்னு” ஒரு நகைச்சுவை நாடகத்தை போட்டோம். அந்த நாடகத்துக்காக ஒரு மூன்று நாட்கள் பயிற்சி செய்து அன்றைக்கு அரங்கேற்றினோம். சென்ற வருடமும் ”மேலை நாட்டு மருமகள்” என்கிற நாடகத்தை அடியேன் எழுதி, அரங்கேற்றினோம். இந்த முகாம் மூலமாக, என் நாடகங்களுக்கு, அருமையான கலைஞர்கள் கிடைத்துள்ளனர். நான் எதிர்பார்த்ததை விட, பெண்கள் மிக ஆர்வமாக நாடகத்தில் நடிக்க வந்தார்கள். மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு, மதிய உணவாக மல்லி பிரியாணியை செய்தோம். அன்றைக்கு மேஜிக் செய்வதற்கு வெளியிலிருந்து ஒருவர் வந்து எங்களுக்கு மேஜிக் செய்து காட்டினார். பிறகு, எல்லா குழந்தைகளையும் அவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி பரிசு கொடுத்தோம். இறுதியாக, இந்த வருடம் புதிதாக முகாமுக்கு வந்தவர்களிடம், அவர்களின் அனுபவத்தை கேட்டோம். அதில் ஒரு தாய்குலம், இந்த இரண்டு நாளும் நான் எங்கள் அம்மா வீட்டில் இருந்தது போல் இருந்தேன் என்று கூறினார். (இருக்காதா பின்ன, தாய் வீட்டீல், காபியாவது போட வேண்டும்,இங்கு அதுவும் கிடையாது. அப்புறம்  ஏன் சொல்ல மாட்டீங்க!) அடுத்த வருடத்து முகாமுக்கான தேதியை முடிவு பண்ணி அறிவிச்சோம், அதாவது மூன்று நாள் விடுமுறையில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) இந்த முகாமை நடத்துவோம் என்று கூறியவுடன், பெண்களிடமிருந்து பயங்கிற ஆரவாரம் எழுந்தது. என்னன்னு பார்த்தா, மூன்று நாளைக்கும் ஆண்கள் சமைக்க போறீங்களேன்னு சொன்னாங்க. அட! ராமா, நாங்க மூன்று நாள் விடுமுறையில் முகாமை நடத்துவோம் என்று சொன்னதற்கு காரணமே, கடைசி நாள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்ன்னு (ரெண்டு நாள் முழுக்க வேலை பார்த்து சோர்ந்து போய் விடுகிறோம்!!!) சொன்னோம். இறுதியாக, எல்லா அறைகளையும், சமையலறை எல்லாம் சுத்தம் செஞ்சு வீட்டுக்கு திரும்பினோம். அந்த இரண்டு நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, சமையலறையில் வேலை பார்க்கும்போதும் சரி, இரவு அறையில் வந்து படுக்கும்போதும் சரி, ஒரே அரட்டைக் கச்சேரி தான், அப்படியே, மனது கல்லூரி காலத்துக்கு சென்றுவிட்டது.

வருஷம் 365 நாளும் பெண்கள் ஓய்வில்லாமல் நமக்காக சமைக்கும்போது, நாம ஒரு இரண்டு நாள் அவர்களுக்கு ஓய்வு அளித்தோம்ன்னு எண்ணும்போது மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தலை தூக்குகிறதை மறுக்க முடியாது.   

Friday, October 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 10

பகுதி-9

நானும் மேப்பையும் ரோடையும் பார்த்துக்கிட்டே அந்த பஸ்ல வந்தேன். எனக்கு பின்னாடி உக்கார்ந்த வெள்ளைக்காரரும், என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை. அடுத்த பஸ்ஸை எடுக்கிறதுக்கான ஸ்டாப்பும் வந்துச்சு. எதிர் சைட்ல “KMART” கடை ஒரு சின்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள இருந்துச்சு. எதுக்கு இன்னொரு பஸ் எடுத்து போகணும், பேசாம இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கே போனா என்னன்னு யோசிச்சு, அந்த ஸ்டாப்லேயே இறங்கி எதிர் பக்கம் போறதுக்காக, சிக்னல்ல நின்னேன். எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தவரும் பின்னாடியே இறங்கி நடந்து அந்த சிக்னல்ல எனக்கு பக்கத்துல வந்து நின்னாரு. என் கிட்ட வந்து, நீங்க எங்க போகணும்னு கேட்டாரு. நான் உடனே அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போகணும்னு சொன்னேன். உடனே, அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு. அட கடவுளே! இந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு போறதுக்குதானா, நீங்க மேப்பையும் ரோடையும் பார்த்துக்கிட்டு வந்தீங்க. நான் கூட, நீங்க போக வேண்டிய பாதையை விட்டுட்டீங்க, எங்க இறங்குறதுன்னு தெரியாம கஷ்டப்படுறீங்கன்னு நினைச்சேன், ஆமா, நீங்க அமெரிக்காவுக்கு புதுசா, இல்ல இந்த இடத்துக்கு புதுசான்னு கேட்டாரு. நான் சிட்னிலேருந்து வறேன்னு சொன்னேன். அவர், உடனே பரவாயில்லையே, நீங்களே தனியா பஸ் எடுத்து சுத்திப் பார்க்கிறீங்களான்னு ஆச்சிரியப்பட்டு, சரி, உங்களுக்கு இந்த மாலைப் பொழுது, நல்ல சந்தோஷத்தை கொடுக்கட்டும்னு சொல்லி, ரோட்டைக் கடந்து, அந்தப் பக்கம் போனாரு. ஊர் பேர் தெரியாத இடத்துல, நம்மளையும் மதிச்சு, ஏதாவது உதவி வேணுமான்னு கேக்குறதுக்கு கூட ஒருத்தர் இருக்கறேன்னு நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சிரியமா போச்சு. அப்புறம் நானும் ரோட்டைக் கடந்து அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள்ள போயி,KMART” கடைக்கு போனேன். சிட்னில இருக்கிற “KMART” கடைக்குள்ள போனா எப்படி இருக்குமோ, அதே மாதிரி, கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம, அப்படியே இருந்துச்சு. நானும் அந்த கடைக்குள்ளேயும், அங்க இருந்த மற்ற கடைக்குள்ளேயும் கொஞ்சம் நேரம் சுற்றிப் பார்த்துட்டு, திரும்பவும் ரெண்டு பஸ் எடுத்து, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன். அப்பவே மணி ஏழரை ஆயிருந்துச்சு. அந்த இடத்துலேயே, ஒரு ரெஸ்டாரண்ட் இருந்துச்சு. அதுக்குள்ள போய்,pasta”வை ஒரு கட்டு கட்டிட்டுட்டு, நண்பரோட அறைக்கு வந்தேன். அறைக்குள்ள, நண்பரும்,மனைவியும், அவரோட நண்பரும், அவர் மனைவியும் இருந்தாங்க. அந்த நண்பரும் அங்கேயே இன்னொரு அறையை எடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சுது. நான் உள்ள போனவுடனே, “எங்க தனியா போய் சுத்திட்டு வரிங்கன்னு” ஒரு பெரிய கேள்விக்கனையை எல்லோரும் தொடுத்தாங்க. நானும், அமெரிக்கா வந்ததே, ஊரை சுத்திப்பாக்குறதுக்கு தானேன்னு சொன்னேன். உடனே, இன்னொரு நண்பரோட மனைவி, அது எப்படிங்க நீங்க மட்டும் தனியா அமெரிக்கா வரலாம். மனைவியையும் கூட்டிக்கிட்டு இல்ல வந்திருக்கணும்னு சொன்னாங்க. ஆஹா, வீட்டு அம்மணிக்கு இப்படியெல்லாம் சப்போர்ட் கிடைக்குதான்னு நினைச்சேன். என்னோட ரெண்டு மகாராணிகளும் ரொம்ப சின்னவங்களாக இருக்காங்க. அவுங்களை கூட்டிக்கிட்டு நாங்க வந்திருந்தோம்னா, நாங்க அமெரிக்காவை சுற்றிப் பார்க்க வேண்டாம், அமெரிக்காவே எங்களை சுத்தி சுத்திப் பார்த்திருக்கும்னு சொல்லி, ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடியே,UNIVERSAL STUDIOS HOLLYWOOD” போறதுக்கு இணையதளம் வழியா முன்பதிவு செஞ்சு வச்சிருந்தேன். நண்பர்கள் எல்லாம் மறுநாள் என்ன பண்ணப்போறிங்கன்னு கேட்டாங்க. “HOLLYWOOD STUDIOS” போகப்போறேன்ன்னு சொன்னேன். உடனே, அவுங்க எல்லோரும் நாங்களும் வரோம், எல்லோரும் ஒண்ணா போகலாம்னு சொன்னாங்க. மறுநாள், எல்லோரும் அந்த நண்பரோட கார்ல “UNIVERSAL STUDIOS HOLLYWOOD”க்கு போனோம். நான் ஏற்கனவே எட்டு வருஷத்துக்கு  முன்னாடி, ஜப்பான்ல  “UNIVERSAL STUDIOS”க்கு போயிருக்கிறேன். என்ன இருந்தாலும் அங்க இருந்தது “நகல்”, இது தானே “அசல்” அதனாலே அசலுக்கும், நகலுக்கும் என்ன வித்தியாசம்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன்.  

சும்மா சொல்லக்கூடாது, அசல், அசல்தான். நகல், நகல்தான். உண்மையிலே ரொம்ப பிரம்மாண்டமாகவும், ஆச்சிரியமாவாகவும் இருந்துச்சு.
உள்ள போகும்போதே, அங்க, அங்க நின்னு புகைப்படம் எடுத்துக்கிட்டோம்.



அந்த அமெரிக்காவிலே இருக்கிற நண்பர் வந்து, இங்க நில்லுங்க, நான் உங்களை புகப்படம் எடுக்கிறேன்னு, ஒரு இடத்துல நிக்கச் சொல்லிட்டு, என் எதிர்ல, நின்னு ஃபோகஸ் பண்ணிப் பார்த்தாரு, அப்புறம் அப்படி, இப்படின்னு ஃபோகஸ் பண்ணிப் பார்த்தாரு, கடைசில, குத்த வச்சுக்கிட்டு ஒரு வழியா என்னைய புகைப்படம் எடுத்தாரு. நான் கூட, இவரு, இந்த இடத்துக்குள்ள வந்தவுடனே, தன்னை ஒரு ஹாலிவுட் காமிரா மேன்னு நினைச்சுக்கிட்டாரு போலன்னு நினைச்சுக்கிட்டேன். அந்த புகைப்படத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் இவர், உண்மைலேயே, அப்படி  நினைச்சிருந்தாலும் தப்பில்லைன்னு தோணுச்சு. இது தான் அந்த  புகைப்படம்.

“SPECIAL EFFECTS STAGE” அப்படிங்கிற ஒரு இடத்துல, ஹாலிவுட் படங்கள்ல சில காட்சிகளை எப்படியெல்லாம் எடுத்திருக்காங்கன்னு காமிச்சாங்க. படத்துல நாம பார்த்து ஆச்சிரியப்பட்டு பார்த்த சில காட்சிகள், இங்க அதை எப்படி எடுத்தாங்கன்னு காமிக்கும்போது, ச்சை!! இப்படிதான் எடுத்தாங்களான்னு தோணும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் முன்னேறியிருக்கு.


அப்புறம் ஒரு மணிநேரம் train மாதிரி உள்ள வண்டில போயி உள்ளுக்குள்ள சுத்திப்பார்த்தோம். நிறைய தெருக்கள்,வீடுகள்ன்னு எல்லா செட்டிங்ஸ்சையும் பார்த்தோம்.





அதற்கப்புறம்,SHREK” திரைப்படத்தை “4D”யில் பார்த்தோம். அந்த அனுபவமும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அமெரிக்காவை சுற்றிப் பார்க்க போறவுங்க, கண்டிப்பா இந்த இடத்துக்கு போயே ஆகணும். அந்த அளவுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு.


என்னால ரொம்ப நேரம் அங்க இருக்க முடியலை, ஏன்னா அன்றைக்கு இரவு தான் நான், அமெரிக்காவிலிருந்து திரும்பி சிட்னி வந்தாகனும். நான் தங்கியிருந்த ஹோட்டல்லுக்கு ஏர்போர்ட் ஷட்டில் வேன் 6.30க்கு வரும். அதற்குள்ளே, நான் திரும்பி ஹோட்டல்லுக்கு போகணும். அதனால 4.30 மணிக்கு, நான் “HOLLYWOOD”லேருந்து கிளம்பி, ஒரு டாக்ஸி பிடித்து,Union Station”க்கு வந்து,  அங்கேருந்து ஒரு train எடுத்து நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு 6.15க்கு வந்து சேர்ந்தேன். சொல்லி வச்ச மாதிரி, சரியா 6.30க்கு அந்த ஏர்போர்ட் ஷட்டில் வேன் வந்தது. நானும் அதில ஏறி, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து, அங்கேருந்து சிட்னி போற விமானத்துல ஏறி, ஜூன் 15ஆம் தேதி காலை சிட்னி வந்து சேர்ந்தேன். அன்று தான், எங்கள் இரண்டாவது மகாராணி இந்த பூவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் ஆன திருநாள். அதனால தான் நானும், இன்னும் ஓரிரெண்டு நாள் அமெரிக்காவில் இருக்காமல் திரும்பி வந்தேன்.

முற்றும்


Saturday, September 29, 2012

எங்கள் ஊர் ஆட்டோ ஸ்டாண்ட்


என்னடாது! சிட்னில போயி ஆட்டோ எல்லாம் இருக்குதான்னு யோசிக்காதீங்க. டாக்ஸி ஸ்டாண்டை தான் அப்படி சொன்னேன். அந்த டாக்ஸி ஸ்டாண்ட், நான் இருக்கிற இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்குது. நம்ம பஞ்சாபி அண்ணாத்தைங்க ரெண்டு பேரு தான் அந்த டாக்ஸி ஸ்டாண்டையே, குத்தகை எடுத்திருக்காங்க. அவுங்க ரெண்டு பேரும் ஒரு பத்து, பன்னிரெண்டு வண்டிகளை வச்சு, நம்ம இந்தியர்களுக்கு டிரைவர் வேலையை கொடுத்திருக்காங்க. நான் தினமும் காலைல 7.30 மணிக்கு என்னோட காரை கொண்டுப்போய் ஸ்டேஷனுக்கு கொஞ்ச துரத்துல இருக்கிற பார்க்கிங்ல நிறுத்திட்டு ஸ்டேஷனுக்கு நடந்து போகும்போது, இந்த டாக்ஸி ஸ்டாண்ட் கண்ணுல படும். உடனே எனக்கு நம்மூர்ல இருக்கிற ஆட்டோ ஸ்டாண்ட் தான் நியாபகத்துக்கு வரும். அங்க எல்லோரும் ஆட்டோவை ஓரங்கட்டிட்டு, அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது போயி ஆட்டோ வருமான்னு கேட்டா, ரெண்டாவதோ, மூணாவதோ உள்ள ஆட்டோல போயி ஏறிக்க சொல்லுவாங்க. அதே மாதிரி, இங்கேயும் எல்லோரும் ஒண்ணா நின்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருப்பாங்க. யாராவது டாக்ஸி வருமான்னு கேட்டா, அதே மாதிரி ஏதாவது ஒரு கார்ல ஏறிக்க சொல்லுவாங்க. என்ன! இங்க பக்கத்துல டீக் கடை எல்லாம் இல்ல, அது தான் வித்தியாசம். நான் தினமும் இந்த டாக்ஸி ஸ்டாண்ட்ல இருக்கிறவங்களை பார்க்குறதுனால,  ஒண்ணு, ரெண்டு பேர் என்னைய பார்த்து, “கைசா ஹை”ன்னு கேப்பாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு ஹிந்தி வார்த்தைகளை நியாபகம் வச்சு, “அச்சா ஹை”ன்னு சொல்லுவேன். ஒரு நாள் என்னோட வண்டியை காலைல சர்வீஸுக்கு விட்டுட்டு, சியாந்திரமா ஆபிஸ் முடிச்சு வரும்போது வண்டியை எடுத்துக்கலாம்னு ஆபிஸ் போனேன். ஆபிஸ்ல இருக்கிற கடன்காரனுங்க(!) அன்னைக்குன்னு பார்த்து என்னைய ராத்திரி பத்து மணி வரைக்கும் ஆபிஸ்ல உக்கார வச்சுட்டாணுங்க. அப்புறம் இங்கில்பர்ன் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது மணி 11.30 ஆச்சு. சரி, இந்த நேரத்துல நம்ம வீட்டுக்கு நடந்து போக வேண்டாம்னு (நடந்தா ஒரு 15-20 நிமிஷம் தான் ஆகும்) நினைச்சு, அந்த டாக்ஸி ஸ்டாண்டுக்கு வந்தேன். அங்க என்னைய பார்த்து “கைசா ஹை”ன்னு கேக்குறவர் தான் இருந்தாரு. நான் அவரிடம் வீட்டு முகவரியை சொல்லி, வண்டிக்குள்ள ஏறி உட்கார்ந்தேன். அவர் வண்டியை எடுத்தவுடனே, என்கிட்ட சரளமா ஹிந்தில பேச ஆரம்பிச்சுட்டாரு. எனக்கோ தர்ம சங்கடமா போச்சு. சரி, வீடு பக்கத்துல தானே இருக்கு, எப்படியாவது சமாளிச்சுக்கலாம்னு நானும் எனக்கு தெரிஞ்ச அச்சா ஹை” “டீக்கே” அப்படின்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு வந்தேன். ஒரு நேரத்துல டிரைவர் அண்ணாத்தைக்கு தெரிஞ்சுப் போச்சு, எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு. அப்புறம் அவர் ஹிந்தில கேட்ட கடைசி கேள்வியை, ஆங்கிலத்துல கேட்டாரு. அவர் கேட்ட கேள்வி, இது தான், அடிக்கடி உங்களுக்கு வேலைல இந்த மாதிரி லேட்டாகுமா, இல்ல எப்பவாது தானான்னு கேட்டாரு. அவர் இந்த கேள்வியை ஹிந்தியில கேட்டபோது, நான் ரொம்ப புத்திசாலித்தனமா அச்சா ஹை”ன்னு சொல்லியிருக்கேன். அதுல தான் அவர் கடுப்பாயிட்டு, ஆங்கிலத்துல கேட்டாரு. அட! ராமா! ஆரம்பத்துலேயே, இப்படி புரியிர மாதிரி ஆங்கிலத்துலேயே பேசிக்கிட்டு வந்திருந்தாருன்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் . நமக்கு ஹிந்தி தெரியாதுங்கிறதையும் கண்டுப்பிடிச்சிருக்க முடியாதேன்னு நினைச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் வீடு வர்ற வரைக்கும் அவர் என்கிட்ட ஒண்ணுமே பேசலை. மறு நாள்லேருந்து காலைல அவர் என்னைய டாக்ஸி ஸ்டாண்ட்ல பார்க்கும்போது, ஆங்கிலத்துலயே “good morning” அப்படின்னு சொல்லுவாரு. (பரவாயில்லை மனுசனுக்கு கற்பூர புத்தி தான்!!)
அன்னைக்கு நான் ஸ்டேஷன்லேருந்து டாக்ஸி எடுக்கும்போது, சரி, எப்படியும் ஒரு 5$ தான் வரும்னு நினைச்சேன். கடைசில பார்த்தா, அந்த மீட்டர் 8.50$ரை காட்டுது. என்னாடான்னா, ராத்திரி 10மணிக்கு மேல 20% கூட கொடுக்கணுமாம். சரி தான், நம்ம ஊர்ல இருக்கிற ஆட்டோ டிரைவருங்க, மீட்டர் போடாம நம்ம கிட்ட கொள்ளை அடிக்கிறாங்கன்னு பார்த்தா, இங்க இருக்கிற டாக்ஸி டிரைவர்களோ, மீட்டர போட்டு நம்மளை கொள்ளை அடிக்கிறாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். 

அமெரிக்காவில் அடியேன் – 9

பகுதி-8

ஒரு வழியா, நான் மதியம் அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்தா, நண்பரும் அவர் மனைவியும், அவரோட இன்னொரு நண்பரோட வெளியில போயிட்டாங்க. சரி, நம்மளோட கை வந்த கலையை திருப்பியும் ஆரம்பிப்போம்னு, வரவேற்பறைல இருந்த அம்மா கிட்ட போயி, இங்க ஷாப்பிங் பண்றதுக்கு எப்படி போலாம்னு கேட்டேன். (நானும் ஒவ்வொரு ஊருலேயும் பொழுது போறதுக்காக ஷாப்பிங் பண்றேங்கிற பேர்ல பஸ்ல ஊரை சுத்துறதே வேலையாப் போச்சு). வரவேற்பறைல இருந்த அம்மா, ரொம்பவே நல்ல அம்மாவா இருந்தாங்க. நீங்க எந்த மாதிரி ஷாப்பிங் பண்ணணும்னு முதல்ல கேட்டாங்க. நானும், இந்த மாதிரி, இந்த மாதிரி, இது வாங்கணும், அப்புறம், அந்த மாதிரி அந்த மாதிரி அது வாங்கணும்னு, என்னமோ எல்லாம் வாங்கப் போற மாதிரி பீலா விட்டேன். உடனே, அந்த அம்மா பக்கத்திலிருந்த ஒரு மேப் எடுத்து, நாம நடுவுல இருக்கோம். இடது பக்கமா பஸ்ல போனோம்னா “wall mart” ஷாப்பிங் கடை வரும். அங்க இது ஒண்ணு தான் இருக்கு. அதுவே வலது பக்கம் பஸ் எடுத்து போனோம்னா, ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அங்க நிறைய கடைங்க இருக்கு, உங்களுக்கு பிடிச்சதை நீங்க அள்ளிக்கிட்டு வரலாம்ன்னு சொன்னாங்க (அவுங்க நினைச்சுக்கிட்டாங்க, நான் என்னமோ கடையையே சுருட்டிக்கிட்டு வரப்போறேன்னு). எந்தப் பக்கம் போனாலும் நீங்க ரெண்டு பஸ் மாறனும்ன்னு சொன்னாங்க. எந்த எந்த ஸ்டாப்ல இறங்கி பஸ் மாறனும்னு வேற என் மண்டைக்கு புரியுற மாதிரி சொன்னாங்க. அவுங்களுக்கு ஒரு பெரிய கும்புடு போட்டு, அந்த மேப்பையும் வாங்கிக்கிட்டு அந்த அறைய விட்டு வெளியில வந்து முதல்ல எந்தப் பக்கம் போறதுன்னு கொஞ்ச நேரம் யோசிச்சேன். நமக்கு தான் சாமானியத்துல ஒரு முடிவும் எடுக்க வராதே. சரி, காசைப் போட்டு பாக்கவேண்டியதுதான்னு காசைப் போட்டு பார்த்ததுல ஷாப்பிங் கம்ப்ளெக்ஸ்க்கு போகலாம்னு வந்துச்சு. நானும் முத பஸ்ஸை எடுத்து, மேப்பை பார்த்துகிட்டே, ரெண்டாவது பஸ் மாறுவதற்காக,சரியான  ஸ்டாப்பிங்ல இறங்கி, ரெண்டாவது பஸ்ல ஏறினேன். உடனே எனக்குள்ள இருந்த முன் ஜாக்கிரதை முத்தன்னா  முழிச்சுக்கிட்டான். ஏற்கனவே ஒரு தடவை அடிப்பட்டதுனால, இந்த தடவை ஒழுங்கா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இறங்கணும்னு, அந்த டிரைவர் அண்ணாத்தைக்கிட்ட சொல்லி, அவர் பக்கத்துலேயே நின்னேன். உடனே அவருக்கு வந்ததே கோபம், முதல்ல என்னைய உள்ள போயி உக்காரச் சொன்னாரு. நான் அவர் பக்கத்துலே நிக்கக்கூடாதாம் (என்னமோ அவரை மடக்கி, பஸ்ஸை கடத்திக்கிட்டு போயிருவேனோன்னு அவருக்கு பயம் போல). அப்புறம் அந்த ஸ்டாப்பிங் வந்தவுடனே, என்னைய கூப்பிட்டு இறங்க சொன்னாரு. பஸ்ஸை விட்டு இறங்கி பார்த்தா, ஒரு பெரிய ஸ்தூபில கடைங்க பேரா எழுதி இருந்துச்சு. 


ஆனா, இந்த ஷாப்பிங் மாலும் வித்தியாசமா இருந்துச்சு, என்னன்னா, வானமே இந்த ஷாப்பிங் மாலுக்கு கூரையா இருந்தது தான்.



நானும், அப்படியே எல்லாக் கடைக்குள்ளேயும் ஏறி, இறங்கி வேடிக்கை!! பார்த்து, அப்புறம் பேருக்கு, ஏதோ ஒரு சிலதை மட்டும் வாங்கிக்கிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன், அப்புறம்  வால் மார்ட்டுக்கு” போலாம்னு முடிவெடுத்து, மேப்பை பார்த்து, பஸ்ல ஏறினேன். மறுபடியும் அடுத்த பஸ்ஸுக்காக எங்க இறங்கணும்னு மேப்பையும் ரோடையும் மாறி, மாறி பார்த்துக்கிட்டே வந்தேன். எனக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தவரு, என்னையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திருக்காரு. அது எனக்கு தெரியலை.

அவர் என்ன பண்ணினாருங்கிறதை அப்புறம் சொல்றேன். 
இதுவே கடைசி பாகமா இருக்கும்னு  நினைச்சேன். ஆனா, அடுத்த  பாகம் தான்  இந்த தொடரோட கடைசி பாகமா இருக்கும்னு சொல்லிக் கொள்கிறேன். (10 பாகமாக இருக்கட்டுமேன்னு தான், வேற ஒண்ணும் இல்லை)
                                                    பகுதி-10

Thursday, September 27, 2012

சுந்தர பாண்டியன் – விமர்சனம்


முதல்ல, அமெரிக்காவில் அடியேனின் கடைசி பாகத்தை தான் எழுதணும்னு உட்கார்ந்தேன். ஆனா பாருங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்த இந்த படம், விமர்சனத்தை எழுது,எழுதுன்னு என்னைய ரொம்ப தொந்தரவு பண்ணிக்கிட்டு இருந்துச்சு. அதனால முதல்ல விமர்சனம் அப்புறம் அந்த அமெரிக்கவோட கடைசி பாகத்தை எழுதலாம்னு முடிவு பண்ணி, இதோ உங்களுக்காக சுந்தர பாண்டியன் விமர்சனம்.

நட்பு, காதல், துரோகம் என்று ஒரு கலவை தான், இந்த சுந்தர பாண்டியன். ஒரு பெண்ணை இருவர் ஒரு தலையாக காதலிப்பதும், அந்த பெண்ணின் பெற்றோரோ, அவரை தங்கள் மூத்த மாப்பிள்ளையின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும், அந்த பெண்ணோ மற்றொருவரை காதலிப்பதும், இறுதியில் அவர் யாரை கைப் பிடித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. அந்த பெண்ணுக்காக, அடிதடி, கொலைன்னு படம் பயணிக்குது. ஒரு பெண்ணுக்காக கொலை வரைக்கும் போகணுமான்னு யோசிக்க தோணும். ஆனா, அந்த யோசைனையை கூட , மிக அழகாக தன்னுடைய நடிப்பால் லக்ஷ்மி மேனன் மறக்க வைக்கிறார். வெட்கப்படும்போதும் சரி, கண்களை உருட்டி அதட்டும் போதும் சரி மிக அழகாக நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அவருடைய கண்களும் நடித்திருக்கிறது. தனக்கு நகைச்சுவையாகவும் நடிக்க தெரியும் என்று சசிகுமார் நிருபித்திருக்கிறார். தன் அத்தைப் பெண்களை வம்புக்கு இழுப்பதும், அதுவும் திருமணமான அந்த அத்தைப் பெண் ஜானகியை  அடிக்கடி வம்புக்கிழுப்பதும்,  நண்பனின் காதலுக்கு உதவி புரிவதும்னு ஒரு பக்கா வெட்டி ஆபிசராக வாழ்ந்திருக்கிறார். இடைவேளை வரை, அந்த “தாமரை” பஸ்லேயே திரைக்கதை பயணம் செஞ்சாலும், நமக்கு அலுப்பே வரலை. அதற்கு முக்கிய காரணம் அவருடைய நண்பனாக வரும் பரோட்டா சூரி தான். அவர் வாயைத் திறந்தாலே போதும் சிரிப்பு மழை தான். பஸ்ஸில் வருகிற பெண்களை கவருவதற்கு, இயக்குனர் PH.D. பட்டமே வாங்கியிருப்பாரு போலயிருக்கு.

தன் நண்பனின் காதலுக்கு சசிகுமார் உதவி பண்ணப்போய், தானே அவளுடைய காதலில் விழுந்து, இறுதியில் தன் நண்பர்களின் துரோகத்தால் கொல்லப்பட்டாரா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லுகிறது. அந்த க்ளைமாக்ஸ் சண்டை தான், சினிமாத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அப்பாவியாக அறிமுகமாகி, பிறகு வில்லனாக அவதாரம் எடுக்கும் அப்புக்குட்டியின் நடிப்பு மிக அருமை. இன்னொருவரையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும், அது லக்ஷ்மி மேனனின் நண்பியாக வரும் அந்த பெண். அவருடைய பேர் தெரியல. அவரும் அழகாக இருக்கிறார்,மிக அருமையாகவும் நடித்திருக்கிறார். அதுவும், பஸ்ஸில், சசிகுமாரின் நண்பன்,இனிகோ பிரபாகரன், லக்ஷ்மி மேனனிடம் காதலை சொல்லுவதற்காக நின்றுக் கொண்டிருக்குக்கும்போது, எங்கே தன்னிடம் மாற்றி காதலை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில், எண்ணையில் போட்ட கடுகாட்டம் பொரி பொரின்னு அந்த இனிகோ பிரபாகரனை பொரித்து எடுப்பாரே அருமை. சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேனும் சரி, லக்ஷ்மி மேனனின் அப்பாவாக வரும் தென்னவனும் சரி, உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி தான், இந்த படத்துல வர ஒரு காட்சி. அது சசிகுமாரின் தந்தை நரேன், தனியாக தன் மகனுக்கு பெண் கேட்கும் காட்சி. அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமே, அழகு தான். அந்த காட்சியில் பங்குப்பெற்றிருந்த நடிகர்களும் தங்கள் பங்கை மிக நேர்த்தியாக செய்து அந்த காட்சியை தூக்கி நிறுத்தியிருப்பார்கள்.

 படத்தில நச்சுன்னு சில வசனங்கள் வரும்.
"எதிரியை அழிக்க நினைக்கக் கூடாது... ஜெயிக்க நினைக்கணும்!"
"எதிரியே இல்லைன்னா, நாம வாழலாம். ஆனா, வளர முடியாது",
 "வீட்டுல இருந்து வெளியில போறப்ப எல்லாம், 'பார்த்துப் பழகு... பார்த்துப் பழகுனு சொல்லுவாங்க. பழகுன நீங்களே இப்படிப் பண்ணினா யாரைடா நம்புறது?"
"குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது, அதாண்டா நட்பு" இப்படி ஆங்காங்கே வரும் வசனங்கள், நம்மை யோசிக்கச் செய்கின்றன.

இந்த படத்தை பார்த்த பிறகு, ரொம்ப நாளைக்கு அப்புறம் கலகலப்பா ஒரு படத்தை பார்த்தோம்னு திருப்தி ஏற்படும். அது தான் இந்த படத்தோட வெற்றியே.