Sunday, October 28, 2012

இரு பச்சிளம் குழந்தைகள் – வெவ்வேறு சூழ்நிலையில்

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தினப்பத்திரிக்கையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை பற்றிய வெவ்வேறு செய்தியை படிக்க நேர்ந்தது. இவ்விரு செய்திகளும், நான் மிக சமீபத்தில் பதித்த என் முதல் சிறுகதையான “தாய்மை”யுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது.  
முதல் செய்தி, சென்னை மெரீனா கடற்கரையில், உழைப்பாளர் சிலையின் பின்புறத்தில், அனாதையாக வீசப்பட்டு கிடந்த, பச்சிளம் குழந்தையை பற்றியது.
நான் என் கதையில், மனைவி என்ற அந்தஸ்தை காட்டிலும், தாய்மை என்ற அந்தஸ்து தான் ஒரு பெண்ணை பெருமை பட வைக்கிறது என்று கூறியிருப்பேன். ஆனால், இந்த செய்தியை படித்தபிறகு, இப்படியும் ஒரு கல் நெஞ்சம் கொண்ட தாய் இருப்பாளோ என்று எண்ண வைக்கிறது. அந்த பெண்ணை தாய் என்று சொல்வதை காட்டிலும் ஒரு அரக்கி என்று சொன்னால் தான் சரியா இருக்கும். அந்த குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்தால் அது உருவாகாமலே தடுத்திருந்திருக்கலாம். அப்படியும் மீறி அந்த குழந்தை பிறந்து விட்டது எனும்போது, குறைந்தபட்சம் அநாதை ஆசிரமத்திலையாவது அந்த குழந்தையை சேர்திருந்திருக்கலாம். இது எதுவுமில்லாமல், கடற்கரை சாலையில் பொம்மையை வீசி எறிகிற மாதிரி, அந்த குழந்தையை வீசி எறிந்து விட்டு சென்றிருக்கிறாள் அந்த தாய் உருவில் இருந்த அரக்கி. கடற்கரையில் அதுவும் ஒரு மறைவிடத்தில், எத்தனை வகையான ஜந்துக்குள் இருக்கும், நாய்கள் திரியும். இதில் ஏதாவது ஒன்று கடித்திருந்தால்,அந்த குழந்தை என்னவாகியிருக்கும். அந்த குழந்தை எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்கிற ஒரு மனப்பான்மை தான் தெரிகிறது அந்த அரக்கியிடம். நல்ல வேளை, அந்த குழந்தைக்கு எதுவும் ஆகாமல், கடற்கரையில் ரோந்து வந்த போலீசார் கண்டெடுத்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அரக்கிக்கு குழந்தையாய் வந்து பிறந்தது தான் அந்த குழந்தை செய்த பாவமா?
அடுத்த செய்தி, பிறந்து ஒரு மாதமே ஆன, பச்சிளம் குழந்தை தாமினி, தன் ஏழை ரிக்ஷா தொழிலாளி தந்தையை, லட்சாதிபதி ஆக்கியுள்ளதைப் பற்றியது.
பொதுவாகவே, பெண்களுக்கு, பிரசவம் என்பது மறு ஜென்மம் எடுப்பது போன்றதாகும். கிட்டதட்ட, 99.9 சதவீத பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அந்த .1 சதவீத பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுகிறார்கள். என் தாய்மை கதையில் வருகிற மாதிரியே உண்மையில் ஒரு பெண்ணும் பிரசவத்தில் இறந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர் நகர வீதிகளில், சைக்கிள் ரிக்ஷா ஓட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர், பப்லு. கடந்த மாதம் 20ஆம் தேதி, அவரின் மனைவி பிரசவத்தில், மிகக் குறைந்த எடையில் ஒரு பெண் குழந்தையை அவருக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். அந்த பெண் குழந்தையை அவர் சுமை என்று நினைக்காமல், தன் தோளில் தூளி ஒன்றை கட்டி, அதில் குழந்தையை தொங்க விட்டவாறு, ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். மிகுந்த பாசத்துடன் அந்தக் நோஞ்சான் குழந்தையை, பப்லு வளர்த்து வருவதைக் கண்ட, தனியார் "டிவி' நிருபர், அதை செய்தியாக, "டிவி'யில் வெளியிட, பப்லுவின் நிலைமையே மாறிவிட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தை தாமினியை, தங்கள் மருத்துவமனையில் சேர்த்த தனியார் மருத்துவமனை, இலவசமாக "இங்குபேட்டரில்' வைத்து, உயிர் காக்கும் சிகிச்சை அளித்து, குழந்தையைக் காப்பாற்றி விட்டது. அந்தக் குழந்தையை, பப்லு எப்படி வளர்க்கப் போகிறார் என்ற கவலையில், நல்ல உள்ளம் படைத்த பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்து, அவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினர். ராஜஸ்தான் மாநில அரசு, குழந்தையின் மருத்துவச் செலவை ஏற்க முன்வந்தது. வங்கி ஒன்று, பப்லுவுக்கு, 10 ஆயிரம் ரூபாயில், புதிய ரிக்ஷா வாங்கிக் கொடுக்க முன்வந்துள்ளது. ஜெய்ப்பூர் மாவட்ட கலெக்டர், "என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என உறுதி அளித்துள்ளார். அந்த குழந்தையின் தந்தை பப்லு தற்போது லட்சாதிபதியாகி விட்டார். அவர், அந்த பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி:
"இந்தப் பணத்தை வைத்து, தாயில்லாத என் குழந்தையை நன்றாக  வளர்த்து, நன்றாக படிக்க வைத்து, உயர்ந்த நிலைமைக்கு    ஆளாக்குவேன்'   என, உறுதியளிக்கிறார் பப்லு.அவர் மேலும்     கூறியதாவது:என்      குழந்தையை வைத்து பிச்சை எடுக்க, நான்      விரும்பவில்லை. நல்ல      முறையில் வளர்க்க விரும்புகிறேன். பெண்      குழந்தைகளைப் புறக்கணிக்கும் இந்த சமுதாயத்தில், என்னைப் பார்த்து பலரும் மனம்      மாற வேண்டும்.தோளில் தூளி கட்டி, அவளை   வளர்க்க நான்     தயாரானேன். என் நிலையைப் பார்த்து, வருந்திய பலரும் உதவி    செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி".இவ்வாறு அவர்   தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையோ தாயிருந்தும், அந்த தாயின் அன்பு கிடைக்காமல் அநாதை ஆசிரமத்தில் வளர்கிறது. மற்றொரு குழந்தையோ, பிறக்கும்போதே, தாயை இழந்து, தாயுமானவராக இருக்கும் தன் தந்தையிடம் வளர்கிறது.  இந்த வேறுபாட்டில் தான் ஆண்டவனுடைய படைப்பின் சூட்சமம் இருக்கிறது.  இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்டால், நாமும் ஞானிகள் தான்.   

Tuesday, October 23, 2012

மதுரை ஆதீன மடம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டது

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம் இன்று -???

மேல சொன்ன பதிவுக்கு, பாலோஅப் தான் இந்த பதிவு. 
மதுரை ஆதீன மடம் கடந்த  சில மாதங்களாக கேவலமான மனிதர் ஒருவரின் பிடியினால் இருட்டறையில் தவித்து வந்தது. தற்போது அவர் பிடியிலிருந்து விடுபட்டு, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கொடுத்து தான் இளைய ஆதீனப் பதவியை பெற்றிருக்கிறார் என்று நான் முன்பு சொன்னது தவறு. ஒரு கோடி ரூபாய் என்ற சிறு மீனைப் போட்டு,ஆயிரம் கோடி ரூபாய் என்ற பெரிய திமிங்கலத்தை பிடிக்கப்பார்க்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் அப்போது இருந்தது. ஆனால் அந்த மனிதர் லேசுப்பட்டவரா என்ன! தூண்டிலைக் கூட போடாமல், பெரிய திமிங்கலத்தையே பிடிக்கப் பார்த்திருக்கிறார் என்பது, மூத்த ஆதீனம் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "அந்த மனிதர், ஆதீன மடத்துக்கு நூறு கோடி ரூபாய் தருவதாகவும், அதில் ஐந்து கோடி ரூபாய் உடனே தருவதாகவும் கூறினார், ஆனால் ஒரு பைசா கூட இது நாள் வரை அவர் தரவில்லை. அவர் ஒரு மிகப் பெரிய பொய்யர்" என்று அந்த பேட்டியில் மூத்த ஆதீனம் சொல்லியிருக்கிறார். இப்படி சொன்ன சொல்லை கூட காப்பாற்றாமல் இருந்திருக்கிறார் அந்த கேவலமான மனிதர். மேலும், புதிதாக ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து, அந்த அறக்கட்டளை தான் இனி மடத்துச் சொத்தான ரூபாய் ஆயிரம் கோடியை பராமரிக்கும் என்று அறிவித்திருந்தார். நல்ல வேளை, அந்த கேடுகெட்ட மனிதரை இளைய ஆதீன பொறுப்பிலிருந்து தூக்கியவுடன், அந்த அரக்கட்டளையையும் மூத்த ஆதீனம் கலைத்து விட்டார்.

இந்த பதிவை பதிப்பதற்கு முன், நான் ஒரு பத்திரிக்கையில் படித்த ஒரு கட்டுரை , மீண்டும் மனதை நெருடச் செய்துள்ளது. அதாவது, இளைய மடாதிபதி பொறுப்பிலிருந்து அந்த ஒழுக்கங்கெட்ட மனிதரை நீக்கியதே ஒரு நாடகமாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது அந்த கட்டுரை. இதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இனியும் அந்த பழமையான மடத்தின் பெருமை குன்றாமல் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம்.

பின்குறிப்பு:

நான் அந்த கேவலமான மனிதரின் பெயரை சொல்லாததற்கு காரணம், அவருடைய பேரை எழுதி, என் கையை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதால் தான். மேலும் அந்த மனிதருக்கு மரியாதை கொடுப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தான்.

Sunday, October 21, 2012

தாய்மை – 4

 
டாக்டர் கவிதாவும், மரகதத்திடம், “பெரியம்மா, நீங்க பாட்டியாக போறீங்க. உங்க மருமகளுக்கு நாற்பத்தைந்து நாள் ஆயிருக்கு. நீங்க டாக்டர் மணிமேகலையிடமே இனிமே செக்கப் பண்ணிக்கிங்க. அப்புறம் ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால உங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க” என்று கூறினார்.
“ரொம்ப சந்தோஷம் டாக்டர். நல்ல செய்தியை சொன்ன உங்க வாயிக்கு சர்க்கரையை தான் போடணும். கண்டிப்பா, என் பொண்ணு மாதிரி நான் நல்லா பார்த்துப்பேன் டாக்டர்” என்று கூறி தேவசேனாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள் மரகதம்.
தேவசேனாவிடம், “முதல்ல அந்த முனைல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போவோம்” என்று கூறியபடியே அந்த பிள்ளையார் கோவிலுக்கு தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள் மரகதம்.
வீட்டிற்கு திரும்பியவுடன், மரகதம், “தேவசேனா, நீ போயி ரெஸ்ட் எடுத்துக்க. நான் ராத்திரிக்கு சேமியா பாயாசம் பண்ணி வைக்கிறேன். அப்புறம், இப்பவே உன் புருஷனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடாதே. அவன் ராத்திரி வந்தவுடனே, நேர்லேயே சொல்லு. அப்பத்தான் அவன் சந்தோசப்படுறதை நீ பார்க்க முடியும்” என்றாள்.
இரவு, வெங்கடாச்சலமும், முருகனும் கடையை சாத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
முருகன் அவர்களுடைய அறைக்கு சென்றவுடன், பின்னாடியே சென்ற தேவசேனா, அந்த அறை கதவை மூடிவிட்டு, அவனை கட்டிப்பிடித்து, அவன் முகம் முழுவதும், முத்தம் மழை பொழிந்தாள். இந்த திடீர் முத்தமழையில், முருகன் திக்குமுக்காடிப் போனான். பிறகு அவளிடமிருந்து விலகி,
“என்ன தேவ்ஸ், இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கே. அப்புறம்  சேலை வேற கட்டியிருக்கே. எப்பவும் நைட்டி தானே போட்டிருப்பே, என்ன விஷயம்” என்று கேட்டான்.
தேவசேனா, தன் சேலையை சற்று விலக்கி, அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து, தன் கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டாள்.
அந்த வெட்கப் பார்வையும், தன் கையை எடுத்து அவள் வையிற்றில் வைத்துக் கொண்டிருப்பதையும், முருகனுக்கு விஷயத்தை புரியவைத்தது. இருந்தாலும், அவள் வாயிலிருந்து அந்த விஷயத்தை கேட்க ஆசைப்பட்டவன் போல,
“என்னம்மா, நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலை” என்றான்.
“அதான், பதில் சொல்லிட்டேனே” என்றாள் அவளும்.
“எங்க சொன்ன? ஒண்ணுமே சொல்லாம என் கையை எடுத்து உன் வயித்தில வச்சுக்கிட்டு இருக்கே. வயித்தை வலிக்குதா” என்று எதுவும் புரியாத மாதிரி கேட்டான் முருகன்.
“ச்சீ சுத்த மோசம்பா நீங்க. எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு, இப்ப ஒண்ணும் புரியாத மாதிரி நடிக்கிறீங்க. சரி, என் வாயல சொல்லணும் அவ்வளவுதானே. நீங்க அப்பாவாக போறீங்க” என்று வெட்கத்தோடு சொன்னாள் தேவசேனா.
அவன் அவளை, அப்படியே தூக்கி ஒரு சுத்து சுத்தி, இறக்கி விட்டு, “பாரு இப்ப நீயும் அம்மாவாக போறே. என்ன நமக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இதுக்கு போய் மனசை கஷ்டபடுத்திக்கிட்டு.... சரி, இப்ப நீ வாயும்  வயிறுமா இருக்க. உனக்கு என்ன வேணும்” என்று கேட்டான்.  
“இந்த சந்தோஷமே, எனக்கு பெரிய சந்தோஷம். இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம். அதோடு, நீங்க எனக்காக உங்கம்மாக்கிட்ட எதிர்த்து பேசுனீங்க பாருங்க, அது போதும். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்,நீங்க தாங்க எனக்கு புருஷனா வரணும்” என்று தொண்டை அடைக்க கூறினாள்.
“ஏய், என்ன திடீர்னு செண்டிமெண்டா பேசுற” என்று கேட்டான்.
அதற்கு தேவசேனா, “எல்லா பெண்களும், தன்னைப் பத்தி மாமியார் ஏதாவது அநியாயமாக பேசுனா, தன் கணவன் தன் சார்பா பேசணும்னு நினைப்பாங்க. எனக்கு, உங்கம்மா, உங்களை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு சொல்லும்போது, நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா அழகா அவுங்க வாயை அடைச்சு, என் மனசுல பாலை வார்த்தீங்க. இந்த குழந்தையை பெத்துக்கொடுத்துட்டு, நான் செத்துப்போனா கூட, உங்களோடு நூறு வருஷம் சேர்ந்து வாழ்ந்த திருப்தி இருக்குமுங்க” என்று கூறினாள்.
“என்னது இது, ஒரு நல்ல விஷயத்தை சொல்லிட்டு, சாவு,கீவுன்னு பேசிக்கிட்டு. இன்னொரு தடவை, உன் வாயிலிருந்து இந்த மாதிரி வார்த்தை வர கூட புரிஞ்சுதா” என்று அதட்டினான் முருகன்.
அங்கே, வரவேற்பறையில், மரகதம் தன் கணவனிடம், தேவசேனா உண்டாகியிருப்பதை பத்தி பேசிக்கொண்டிருந்தாள்.
அதற்கு பிறகு வந்த நாட்களில், மரகதம், தேவசேனாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. மரகதமே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
மரகதமும், முருகனும், தேவசேனாவும் செக்கப்புக்கு சென்றபோது, டாக்டர் தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, எல்லோரிடமும்,
“தேவசேனாவுக்கு பிரஷர் இருக்குது. அதனால அவ பெட் ரெஸ்ட்லேயே இருக்கட்டும் என்று சொல்லி, தேவசேனாவிடம், இங்க பாரும்மா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் முத பிரசவம் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனா நீ ரொம்பவே பயப்பிடுற. நார்மலா இரு. மனசுக்கு இதமான நல்லா இசையை கேளு. எல்லாம் நல்ல படியா நடக்கும் என்றார்.
உடனே மரகதம், “ஏன் டாக்டர், பெருசா பிரச்சனை எதுவும் இல்லையேன்னு” தன் சந்தேகத்தை கேட்டாள்.
டாக்டரும், “ஒண்ணும் பயப்பிடுறதுக்கு இல்லை. ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால, குழந்தை நல்லபடியா பிறக்குமான்னு ரொம்ப பயப்பிடுறாங்க”, வேற ஒண்ணும் இல்லை. என்றார்.
வீட்டுக்கு திரும்பும் வழி எல்லாம், மரகதமும், முருகனும் அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை வெங்கடாச்சலம், மரகதத்திடம்,
“என்ன! மரகதம், மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லா வேலையும் நீ தான் செய்யுற போல” என்று கேட்டார்.
அதற்கு மரகதமும், அவ பிள்ளத்தாச்சியா இருக்கா, போதாக்குறைக்கு அவளுக்கு பிரஷர் வேற. அவளைப் போய் எப்படிங்க எல்லா வேலையும் செய்யச் சொல்றது. பாவம், அவளுக்கு அவ ஆத்தா இருந்தா, இந்நேரம் அங்க போய் சவுகரியமா இருப்பா. அதான், அவ அங்க இருக்கிற மாதிரியே, இங்க இருக்கணும்னு தான், அவளை ஒரு வேலை செய்ய சொல்றதில்லை” என்றாள்.
சரி, அவளுக்கு இப்ப ஆறு மாசம் நடக்குது. அவளை அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறியா, இல்ல, நம்மலே இங்க பிரசவம் பார்த்துடுவோமா?” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“எனக்கு, அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறதுக்கு இஷ்டமே இல்லை. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, நாம பிரசவம் பார்ப்போம் இல்ல. இவளும் நம்ம பொண்ணு தான். பேசாம நாமளே இங்கேயே பிரசவம் பார்த்துடுவோம். எதுக்கும் அவளையும் ஒரு வார்த்தை கேப்போம்” என்றாள் மரகதம்.
“அட!மருமக என்னையிலிருந்து உன் பொண்ணா ஆனா? உன் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, அன்னைக்கு உம் மவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதை பத்தி பேசுவியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் வெங்கடாச்சலம்.
அதற்கு மரகதம், “நான் தான் இப்ப மாறிட்டேன் இல்ல!,சும்மா அதையே சொல்லாதீங்க. இந்த குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடுமோன்னு பயத்துல தான் அன்னைக்கு அப்படி பேசுனேன். இப்ப, நான் அவளை என் பொண்ணாதான் பார்க்குறேன்” என்றாள்.
“சரி, சரி, நீ மாறினது ரொம்ப சந்தோஷம். உன் பொண்ணை கூப்பிடு, அவக் கிட்டயே அண்ணன் வீட்டுக்கு போறியான்னு கேப்போம்” என்றார்.
உடனே மரகதமும், “தேவசேனா, முருகா இரண்டு பேரும் சத்த இங்க வந்துட்டு போங்கப்பா” என்றாள்.
முருகனும், தேவசேனாவும் அவர்கள் அறையை விட்டு வந்தார்கள்.
வெங்கடாச்சலம், தேவசேனாவிடம், “ஏம்மா, பிரசவத்தை இங்கேயே வச்சுக்கலாமா, இல்ல உங்க அண்ணன் வீட்டுக்கு போறியாம்மா” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.
தேவசேனாவும்,”நான் இங்கேயே இருக்கத்தான் மாமா விரும்புறேன். என்னைய அத்தை தங்கத் தட்டுல வச்சு தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. எங்க அண்ணி கூட இந்த அளவுக்கு என்னைய பார்த்துக்க மாட்டாங்க. நான் இங்கேயே இருந்துடுறேனே மாமா. இல்ல, முத பிரசவம் தாய் வீட்டில தான் நடக்கணும்னு நினைச்சிங்கன்னா, நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“அம்மாடி, பேசாம நீ இங்கேயே இருந்துடு. டேய் முருகா, நீ அவுங்க அண்ணன் வீட்டுக்கு போனை போட்டுக்கொடு, நான் பேசி சொல்லிடுறேன்” என்றார் வெங்கடாச்சலம்.
தேவசேனா, பிரசவத்துக்கான நாளை நெருங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு, பிரசவ வலி எடுத்து, எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று, தேவசேனாவை அட்மிட் பண்ணி வெளியே காத்திருந்தார்கள்.
“முருகா, உன் மச்சினனுக்கு, போன் செஞ்சு தேவசேனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்னு சொல்லிடு” என்றார் வெங்கடாச்சலம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு, தேவசேனாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர் வெளியே வந்து முருகனிடம்,”உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்றார். பிறகு, எங்களால சின்ன உசுரைத்தான் காப்பாத்த முடிஞ்சுது. பெரிய உசுரை காப்பாத்த முடியலை. இந்த மாதிரி சூழ்நிலைல, நாங்க பெரிய உசுரைத் தான் முதல்ல காப்பாத்த பார்போம். ஆனா இவுங்க விஷயத்துல, எங்களால அவுங்களை காப்பாத்த முடியலை” என்றார்.
முருகன் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துவிட்டான்.
உடனே, மரகதம், “என் மருமக குழந்தையை கொடுத்துட்டு, போய் சேர்ந்துட்டாளா. ஐயோ, நானே என் மருமகளே கொன்னுட்டானே. இவரு அப்பவே சொன்னாரு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு. நான் கேட்டிருந்தா, இந்நேரம் என் மருமக உயிரோடு இருந்திருப்பாளேன்னு” ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.
வெங்கடாச்சலம் தான், மரகதத்தையும், முருகனையும் சமாதானப்படுத்தி, பிரசவ அறைக்கு கூட்டிக்கிட்டு போனார்.
அங்கே, தேவசேனா, தான் பெண்ணாய் பிறந்ததுக்கான முழுமையை அடைந்து விட்டோம், இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் என்ற எண்ணத்தில், தான் பெற்றெடுத்த செல்வத்தையும், தன் காதல் கணவனையும், தந்தையாக இருந்த மாமனாரையும், கடைசிக் காலத்தில் தாயாக மாறிய மாமியாரையும் என்று எல்லோரையும் தவிக்கவிட்டுட்டு மறைந்து விட்டாள்.
பக்கத்தில் இருந்த அவள் பெற்ற செல்வமோ, “அம்மா, என்னை இந்த உலகத்துக்கு காட்டுவதற்காக, நீ இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாயே” என்று சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தது.
[முற்றும்]

Saturday, October 20, 2012

தாய்மை – 3

பகுதி - 2

மறு நாள் காலை, வரவேற்பறையில் வெங்கடாச்சலம் உட்கார்ந்துக் கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். மரகதமும், தேவசேனாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

மரகதம், “நானும் ஆறு வருஷம் பொறுத்துப் பார்த்துட்டேன், இவ, இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசை கொடுக்கிற மாதிரி தெரியலை. இவளை தள்ளி வச்சுட்டு,என்னோட ஒண்ணுவிட்ட அண்ணன் கிட்ட உன்னோட இரண்டாவது பொண்ணை, என் வீட்டுக்கு மருமகளா அனுப்புறியான்னு கேக்கப்போறேன்” என்றாள்.

அங்கே வந்த முருகன், “அம்மா, என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியான்னு” கேட்டான்.

“நான் நல்லா புரிஞ்சு தான் பேசுறேன். பின்ன என்னடா, நேத்து அந்த வளைக்காப்புல, நான் பட்ட கஷ்டம் இருக்கே, அப்பப்பா, என்னமோ எனக்கு தான் குழந்தையே இல்லாத மாதிரி, ஒவ்வொருத்தியும் என்னைய பார்க்குறதும், குசு,குசுன்னு அவளுங்களுக்குள்ளேயே பேசிக்கிறதுமா, ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு” என்றாள்.

உடனே வெங்கடாச்சலம், “அப்புறம் ஏன் போனே?” என்று கேட்டார்.

“ஆ! இது நல்லாயிருக்கே கதை, புது செருப்பு கடிக்குதுன்னு, போட்டுக்காமா வெறு காலோட நடக்க முடியுமா. எனக்கு இனிமே இவளுக்கு குழந்தை பிறக்கும்னு நம்பிக்கை இல்லை. அதனால தான், இவனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்”. என்றாள் மரகதம்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தேவசேனாவுக்கோ, கண்களிலிருந்து கண்ணீர், தாரை தாரையாக வழிந்துக் கொண்டிருந்தது.

ஏம்மா, அவ நம்பளை நம்பி வந்திருக்கா, அவளுக்கு எப்படிம்மா துரோகம் பண்றது. ஏற்கனவே அவளுக்கு அப்பா, அம்மா கிடையாது. அவ அண்ணன் தான் அவளுக்கு கல்யாணத்தையே பண்ணிவச்சாரு. இப்ப அவளை அவ அண்ணன் வீட்டுக்கு அனுப்பிட்டு, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் ரொம்ப பாவம்மா. என்ன ஆனாலும் சரி இவ தான் எனக்கு கடைசி வரைக்கும் பொண்டாட்டி.என்னால வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியாது” என்று குரலை உயர்த்தி பேசினான் முருகன்.

“சரியா சொன்னடா என் சிங்கக்குட்டி. இங்க பாரு, மரகதம் நீ சொன்ன பாயிண்ட்க்கே வரேன். புது செருப்பு காலை கடிக்குதுன்னா, காலுக்கு எண்ணையை தடவிக்கிட்டு, அந்த செருப்பையே மாட்டிக்கிட்டு போவமே ஒழிய, அந்த செருப்பை தூக்கிப் போட்டுட்டு, வேற ஒரு செருப்பை வாங்க மாட்டோம். இந்த காலத்துல குழந்தை இல்லைங்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு. அப்படியும், அவனுக்கு குழந்தை பிறக்கலையா, ஒரு அநாதை குழந்தையை தத்து எடுத்துக்குவோம்.” என்றார் வெங்கடாச்சலம்.

“என்னது! தத்து எடுக்கிறதா. அதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்” என்று முரண்டு பிடித்தாள் மரகதம்.

வெங்கடாச்சலம் மரகதத்திடம், “சரி, இதுக்கு வேற ஒரு வழி சொல்றேன். ஏண்டி, அவ வீட்டுக்கு விலக்காயி எத்தனை நாள் ஆச்சு” என்று கேட்டார்.

மரகதமும், இன்னைக்கு இரண்டாவது நாள்” என்று கூறினாள்.

வெங்கடாச்சலம் உடனே மகனிடம் திரும்பி, “அடுத்த வாரத்திலிருந்து, பத்து நாளைக்கு நீ கடைக்கு வர வேண்டாம். நீங்க இரண்டு பேரும் எங்கையாவது, ஒரு மலைப் பிரதேசத்துக்கோ, இல்ல பெங்களூர், மைசூர்ன்னு எங்கேயாவது போய் சந்தோஷமா இருந்துட்டு வாங்க. இது உங்களுக்கு இரண்டாவது தேனிலவுன்னு நினைச்சுக்கிட்டு போங்க. நமக்கு குழந்தை இல்லையே அப்படிங்கிற கவலை கொஞ்சம் கூட இருக்க கூடாது. என்ன புரிஞ்சுதா. அப்புறம் முக்கியமா ஒரு விஷயம், திரும்பி வீட்டுக்கு வர்ற வழியில, தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற கற்பரட்சாம்பிகை கோவிலுக்கு கண்டிப்பா போயிட்டு வாங்க” என்று கூறினார்.

அதற்கு முருகன், “இல்லப்பா, இந்த தடவை போய் டாக்டரை பார்க்கலாம்னு நினைக்கிறேன்” என்றான்.

“இந்த தடவை அவ உண்டாகலைன்னா, அடுத்த தடவை கண்டிப்பா போய் டாக்டரை பாருங்க. எனக்கென்னமோ, இந்த தடவை அவ கண்டிப்பா உண்டாயிடுவான்னு மனசுக்கு படுது. அப்புறம் உங்கள் இஷ்டம்” என்றார்.

சரிப்பா, “நீங்க இவ்வளவு நம்பிக்கையா சொல்லும்போது, நாங்க ஊட்டிக்கு போயிட்டு வரோம்பா” என்றான் முருகன்.

ஒரு வாரம் கழித்து, முருகனும், தேவசேனாவும் ஊட்டிக்கு இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றார்கள். பத்து நாள் கழித்து, வீட்டுக்கு திரும்பியவுடன், தேவசேனா, தன் மாமியாரிடம்,

“இந்தாங்க அத்தை, கற்பரட்சாம்பிகை கோவிலோட பிரசாதம்” என்று கொடுத்தாள்.

“என்னம்மா, நல்லா சந்தோஷமா இருந்தீங்களா” என்று கேட்டாள் மரகதம்.

“நல்லா சந்தோஷமா இருந்தோம் அத்தை” என்று கூறியபொழுது அவளுடைய பட்டுக் கன்னம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அதனை மறைப்பதற்காக, அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள் தேவசேனா,

மரகதமும், அதனை புரிந்துக் கொண்டு, பூஜை அறைக்கு சென்று,

கடவுளே!, இந்த தடவையாவது, அவ கண்டிப்பா உண்டாகிடனும்னு" , மனமுருக வேண்டிக்கொண்டாள்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு ஒரு நாள் மதிய வேளை. மரகதம், தேவசேனாவிடம், “ஏண்டி போன வாரமே உனக்கு தூரம் வந்திருக்கணுமே, இன்னும் வரலையா” என்று கேட்டாள்

“இன்னும் வரலை அத்தை. சரியா ஏழு நாள் தள்ளி போயிருக்கு” என்று கூறினாள்.

“கடவுளே! இது நல்லதுக்காகத்தான் தள்ளிப் போயிருக்கணும். உம். அந்த காலத்துல என்னோட மாமியாரே, எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கும்போது, நாடி பிடிச்சு பார்த்துச் சொன்னாங்க. எனக்கு அப்படியெல்லாம் பார்க்க தெரியாதே. சரி, வா அடுத்த தெருவுல இருக்கிற டாக்டர் கவிதா கிட்ட போய் பார்ப்போம்” என்று மரகதம் தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள்.
 
டாக்டர் கவிதாவும், தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, மரகதத்திடம்....

[தொடரும்]                                                                         பகுதி - 4


தாய்மை – 2

பகுதி - 1

வரவேற்பறையில் இருந்த ஸ்விட்சைப் போட்டவுடன், அங்கே ஒரு ஓரத்தில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை புதைத்து உட்கார்ந்திருந்தாள் தேவசேனா. முருகன் அவள் அருகில் சென்று, அவளை தொட்டுத் தூக்கியவுடன்,அவனுடைய ஸ்பரிசத்துக்காக காத்திருந்தவள் மாதிரி, அவன் நெஞ்சில் முகம் புதைத்து, ஓ! வென்று அழுதாள்.

முருகன், என்ன நடந்தது, ஏன் இப்படி அழுற?, அம்மா எங்கே” என்று கேட்டான்.

அதற்கு அவள், அவனை நிமிர்ந்து பார்த்து, “மூணாவது வீட்டில இருக்கிற சீதாவிற்கு வளைக்காப்பாம், அதுக்கு போயிருக்காங்க” என்றாள்.

இப்போது, அவள் அழுகின்ற காரணத்தை ஓரளவு புரிந்து கொண்டான் முருகன். இருந்தாலும் முழுமையாக தெரிந்துக் கொள்வதற்காக,
“நீ போகலையா” என்று கேட்டான்

அவனிடமிருந்து விலகி, நன்றாக கண்களைத் துடைத்துக் கொண்டு,  
“எனக்கும் போகணும்னு ஆசை தான், ஆனா, என்னைய தான் அவ மாமியார் கூப்பிடவேயில்லையே! என்னமோ நான் தீண்டத்தகாதவ மாதிரி, அத்தை கிட்ட நீங்க மட்டும் வாங்கன்னு சொல்லிட்டு போறாங்க. இதைக் கேட்டா, நான் மலடி, நான் சீதாவைப் பார்த்து பொறாமைப் படுவேன், கண்ணுப் போட்டுறுவேன்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி என்கிட்ட மத்தவுங்க நடக்கும் போது என்னால தாங்க முடியலைங்க. அதான் லைட்டு கூட போடாம மனசு உடைந்து போய் உட்கார்ந்திருக்கேன்” என்று தன் மணக்குமறல்களை கொட்டித்தீர்த்தாள்.

“இதை எல்லாம் பெருசா நினைச்சு கவலைப் படாதேடா” என்றான் முருகன்.

“எப்படிங்க கவலைப்படாம இருக்க முடியும். ஒரு பெண் தாய்மை என்ற பாக்கியத்தை அடையும்போது தாங்க அவ பெண்ணா பிறந்ததுக்கான முழுமையை அடையிறா. என்னதான் அவளுக்கு மனைவின்னு  அந்தஸ்த்து கிடைச்சாலும், அவ தாய்மை அடையலைன்னா, அவளுக்கு இந்த சமுகத்துல மலடின்னு தாங்க பேரு. ஒரு குழந்தையை பத்து மாசம் வயித்துல சுமந்து, அது தன்னோட பிஞ்சுக் காலால உதைக்கும்போதும், அந்தப் பக்கம் இந்தப் பக்கம்னு நகரும்போதும் கிடைக்கிற உணர்வே ஒரு தனி சுகம்னு எல்லோரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அந்த மாதிரியான ஒரு உணர்வு, ஒரு சுகம் இதெல்லாம் எனக்கு கிடைக்காமா போயிடுமாங்க? நான் ஒரு பெண்ணுக்கான முழுமையை அடையாமப் போயிடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்குங்க” என்று தன் ஆதங்கத்தை எல்லாம் வெளிப்படுத்தினாள் தேவசேனா.

“உனக்கு மட்டும் தான் அம்மாவாகணும்னு ஆசை இருக்கா என்னா, எனக்கும், எப்ப அப்பாவாக போறேன், ஒரு குழந்தை எப்ப நம்மளை அப்பான்னு கூப்பிடப் போகுதுன்னு மனசுக்குள்ள எவ்வளவு ஏக்கம் இருக்கு தெரியுமா. அதுக்காக, நான் உன்னைய மாதிரி புலம்பிக்கிட்டா இருக்கேன். அதனால இந்த புலம்புறதை நிறுத்திட்டு சாதாரணமா இருக்கப் பாரு” என்றான்.

“நீங்க ஆம்பிளை, நாலு இடத்துக்கு போறீங்க, நாலு பேரை பார்க்குறீங்க, அதனால உங்களுக்கு குழந்தை இல்லைங்கிற கவலை ரொம்ப தெரியாது. ஆனா, எனக்கு இந்த வீடு தானேங்க உலகம். அப்புறம் எனக்கு குழந்தை இல்லைங்கிற நினைப்பு வராம என்னங்க பண்ணும்” என்றாள்.

அதற்கு முருகன், “உன் கஷ்டம் எனக்கு புரியுதும்மா. முடிஞ்சவரைக்கும் உன் மனசை வேற வேலைல திருப்பப் பாரு. முடியலையா, என்கிட்ட இப்ப உன் கவலையை சொன்ன மாதிரி சொல்லு” என்றான்.

“உங்க கிட்ட, என் கஷ்டங்களை சொன்னதுக்கு அப்புறம் தான், என் மனசு லேசான மாதிரி இருக்கு. சரி, சாப்பிட வாங்க” என்று முருகனை அழைத்தாள் தேவசேனா.

“நீ சாப்பிட்டியா” என்று கேட்டான் முருகன்.

“நான் எப்பங்க உங்களை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கேன்” என்று பதிலுரைத்தாள்.

“சரி வா, இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம், ஆமா அம்மா?” என்று கேட்டான் முருகன்.

“அவுங்க அங்கேயே சாப்பிட்டுட்டு, லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு போனாங்க” என்றாள் தேவசேனா.

மறு நாள் காலை, வெங்கடாசலமும் ஊரிலிருந்து திரும்பியிருந்தார். அப்போது அங்கே வரவேற்பறையில் ஒரு பெரிய பிரளயமே நடந்துக் கொண்டிருந்தது....                     
                                                                                                                         பகுதி - 3
[தொடரும்]