Tuesday, January 14, 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சகோதர சகோதரிகளே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.



“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கிணங்க, இந்த தை மாதம் முதல் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்து வரும் அனைத்து கற்களும் தானாக விலகி, நீங்கள் சிகப்பு கம்பளத்தில் வீர நடை போட்டு வாழ்வின் உச்சாணியை தொடுவதற்கு இந்தத் தை மகள் அருள் புரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.
 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் சமயத்தில் என் குடும்பத்தார் இந்தியாவில் இருந்ததால், ஒரு விபரீத ஆசை தோன்றியது, அதைத்தான் நான் ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.
 
படிக்காதவர்கள் அதனை இங்கே படிக்கவும் –


சென்ற வருடமும், அதற்கு முந்திய வருடமும், நாங்கள், இங்கே “பொங்கல் விழாவை” கொண்டாடினோம். ஒரு ஹாலை வாடைகைக்கு எடுத்து, வாழை மரம் கட்டி, காஸ் அடுப்பில் பொங்கல் வைத்து, “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லி,பொங்கலைப் படைத்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல், இசை நாடகம் என்று தமிழின் கலைகளைப் போற்றி, வெளியிலிருந்து வரவழைத்த பொங்கல் விருந்தை உண்டு, இறுதியாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஒன்றுத்திரட்டி, ஒலி-ஒளிப்  புதிர் போட்டிகளை நடத்தி இனிதே அவ்விழாவினை  கொண்டாடினோம்.

இதில் முக்கியமாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்களின் படைப்புகளை “பொங்கல் மலாராக” வெளியிட்டோம். மேலும் பெண்களின் முக்கியக்கலையான கோலத்தை “கோலப்போட்டியாக” நடத்தினோம். போட்டியில் பங்குப்பெரும் பெண்கள் பொங்கல் விழாவின் முதல்நாளன்று தங்கள் வீட்டில் கோலத்தை போட்டு வைக்கவேண்டும். விழாக் குழுவைச் சேர்ந்த இருவர், அக்கோலங்களை புகைப்படம் எடுத்து, அதற்கு “K1,K2,..” என்று பெயரிட்டு, பொங்கல் விழாவன்று, அதனை மற்றவர்களின் பார்வைக்கு வைப்பார்கள். விழாவிற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் அக்கோலங்களை மதிப்பிட்டுவார்கள் அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், முதல் மூன்று பரிசுகள் மற்றும் பங்குப்பெற்றமைக்கான பரிசுகள் வழங்கி கோலம் போட்ட பெண்மணிகளை கவுரவித்தோம்.

அக்கோலங்களில் சில உங்களின் பார்வைக்கு.  


 

 
 
 

 
 







 
 
 


 

புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கல் நிகழ்ச்சியை நடத்துவதால், அடுத்த தலைமுறையினர், நம்முடைய பண்டிகையின் சிறப்பைப் தெரிந்துக்கொண்டு, அதை தங்களது சங்கதியினருக்கும் எடுத்துச் செல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

 தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடத்தியதால், இந்த  ஆண்டுக்கு சற்று ஓய்வுக்கொடுத்து அடுத்த ஆண்டு தொடரலாம் என்று முடிவெடுத்ததினால், இந்த ஆண்டு பொங்கல் விழாவினை கொண்டாடவில்லை.

 
 
 இந்தப் புகைப்படம் மதுரைத் தமிழனுக்கு சமர்ப்பனம்.

இது நாங்கள் போட்ட “குடும்பம் ஒரு கோவில்” என்ற நாடகத்தில் வரும் ஒரு காட்சி. இதில் “மனைவிகளிடமிருந்து கணவனைக் காப்பாற்றும் சங்கத்தின்” தலைவனாக அடியேனும், செயலாளராக நண்பர் திரு.விஜய் சம்பத்தும்.

 
மீண்டும் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Monday, January 13, 2014

தமிழ் பாடம் நாடகம் - SBS வானொலியில் ஒளிப்பரப்பப்பட்டது



நான் இந்த பதிவில் சொன்னபடி  - தமிழ் பாடம் நாடகம்

SBS வானொலியில் நேற்று இரவு ஒளிப்பரப்பப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.







 


இந்த நாடகத்தை கேட்பதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  -



இதில் நடுவில் "நன்றி வன்கம்" என்று சொல்லுவது என்னுடைய இரண்டாவது
மகாராணி - இனியா தான்.


 

அன்றைக்கு எல்லா குழந்தைகளும் காதில் மைக்கை எல்லாம் மாட்டிக்கொண்டு இருந்ததைப் பார்த்த இனியா, நானும் அந்த மாதிரி மைக்கை மாட்டி பேச வேண்டும் என்று ஒரே அழுகை. அதனால் கடைசியில் அவருக்கும் மைக்கை மாற்றி "நன்றி வணக்கம்" என்று சொல்லச் சொன்னோம். அது தான் அந்த "நன்றி வன்கம்"
 

Friday, January 10, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

இந்த ரோட்டிலேயே ஒரு ஏழுட்டு நிமிடம் நடந்தீங்கன்னா பீச் வந்துடும்னு சொன்னதை நம்பி, நாங்க நடக்க ஆரம்பிச்சோம். ஒரு வழியா 25 நிமிடங்கள் நடந்த பிறகு பீச் கண்ணில தென்பட்டுச்சு.அந்த பீச்ல போய் உட்கார்ந்தவுடனே, ஓவியாவும் இனியாவும் மண்ணில் விளையாட ஆரம்பிச்சாங்க.



இவுங்க மண்ணில் விளையாடுறதை பார்த்தபோது, எனக்கு என் சிறுவயது நியாபகம் தான் வந்தது. அப்போது இவர்கள் விளையாடுகிற மாதிரி பிளாஸ்டிக் பாத்திரங்கள் எல்லாம் கிடையாது, கண்டனூரில் என் ஆயா வீட்டு முன்பு இருக்கும் ஈர மணலில் வெறும் கைகளைக்கொண்டு வீடுக்கட்டி, தண்டவாளம் அமைத்தெல்லாம் விளையாடுவோம். உம்... அதெல்லாம் அந்த காலம்!!!!.

ஒரு மணிநேரம் அங்கே இருந்துவிட்டு, திரும்பி நடந்து அறைக்கு இரவு ஒரு 8.15 மணியைப்போல் வந்து சேர்ந்தோம்.
அறைக்குள்ள வந்தவுடனே, பசின்னா பசி அப்படி ஒரு அகோர பசி. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லியும் சட்னியும் சூடு பண்ணி (அறைல மைக்ரோவேவ் ஓவன் மற்றும் சில தட்டுமுட்டு சாமங்களும் இருந்துச்சு) சாப்பிட்டு முடிச்சோம். நாங்க இருந்த அறைல, ஒரு பெரிய குயின் சைஸ் பெட்டும், ஒரு சோபாவும் இருந்துச்சு. நான் அறையை முன்பதிவு செய்யும்போது சோபா கம் பெட் இருக்கும்னு சொன்னாங்க. சரி, இந்த சோபாவைத்தான் பெட்டாக மாத்தணும் போலன்னு நினைச்சுக்கிட்டு, அந்த சோபாக்கூட ரொம்ப நேரமா போராடி, ஒரு வழியா அதை பெட்டா மாத்தி படுத்து தூங்கி மறு நாள் காலைல 7,30 மணியைப் போல எந்திரிச்சோம்.


இது தான் அந்த சோபா


அப்படியிருந்த சோபா தான், இப்படி பெட்டாக மாறியிருக்கு

வீட்டு அம்மணி ஸ்ட்ராங்ககா ஒரு டீ போட்டுக்கொடுத்தாங்க. சரி, பரவாயில்லையே டீ போட்டுக்கொடுக்கிறாங்களேன்னு நினைச்சா, டீ கப்பை கைல கொடுத்துட்டு, பாருங்க நான் இங்க வந்தும் உங்களுக்கு டீ போட்டுக்கொடுக்கிறேன்னு, சொன்னாங்க. நான் ரொம்ப சமர்த்தா, அதை அப்படியே ஒரு காதுல வாங்கி, இன்னொரு காதுல வெளியில விட்டுட்டேன். அப்புறம் எல்லோரும் குளிச்சு, பிரட் சாப்பிட்டுவிட்டு(இதுவும் உபயம் வீட்டு அம்மணி தான்!!!!). ஒன்பது மணியைப்போல கிளம்பி, நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கிற “கியாமா (KIAMA)”  அப்படிங்கிற இடத்துக்கு போனோம். அந்த ஊர் “ப்லோ ஹோலுக்கு (BLOW HOLE)” மிகவும் பிரசத்திப்பெற்றது.

கடற்கரை ஓரத்துல பாறைகளுக்கு இடையில் ஒரு 25-30 அடி ஆழத்தில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும். காற்றானது தென்கிழக்கிலிருந்து (South east) விசும்போது, கடல் அலையானது அந்த ஓடையின் வாயிலுக்குள் நுழைந்து, காற்றை அமுக்கும். காற்று அந்த அமுக்கத்திலிருந்து விடுப்படும்போது, பெரிய சத்தத்துடன், வெளிப்படும், அப்போது தண்ணீரும் அடியிலிருந்து மேலே எழும்பும். இது தான் BLOW HOLE.





பாறைகளுக்கு இடையில் உள்ள ஒரு பெரிய ஓட்டை


இந்த ஓட்டையிலிருந்து தான் தண்ணீர் சத்தமாக மேலே எழும்பி வரும்




புகைப்பட உதவி: கூகிள் ஆண்டவர் (இந்த புகைப்படம் மட்டும்)


அங்கு நிறைய பாறைகள் இருந்தது. நான் அந்த பாறைகளுக்கிடையில் எல்லாம் சிறிது தூரம் சென்று புகைப்படங்களை எடுத்தேன்.






அப்புறம் திரும்பி காருக்கு வரும்வழியில், அம்மணி ஓவியாவிடமும், இனியாவிடமும் குளிர் கண்ணாடிகளை கொடுத்து போட்டுக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்களோ வேண்டுமென்றே, தலைகீழாக திருப்பி போட்டுக்கொண்டார்கள். உடனே அம்மணி அதை ஒரு கிளிக் பண்ணிக்கொண்டார்கள்.  




அன்று நாங்கள் புளியோதரையை அறையிலிருந்து செய்துக்கொண்டு வரவில்லை (புளியோதரை செய்வதற்கு, அரிசி, புளிக்காய்ச்சல் மற்றும் ரைஸ் குக்கர் எல்லாம் கொண்டு வந்திருந்தோம்). வெளியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து வந்தது எவ்வளவு பெரிய பிசகாகி விட்டது என்று அப்பொழுது தான் புரிந்தது. அதனை அடுத்த பகுதியான  கடைசிப் பகுதியில் சொல்கிறேன் .

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3
 
- தொடரும்  















Tuesday, January 7, 2014

சனவரி 6 – வேட்டி தினம்

இப்பொழுதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு “சிறப்பு தினமாக” உலகில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் நிறைய விழிப்புணர்வு தினங்களும் அடங்கும். இதில் கொடுமை என்னவென்றால், விழிப்புணர்வு தினங்களை காட்டிலும் “காதலர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையார் தினம்” போன்ற தினங்களைத்தான் மக்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்னடா இவன் அன்னையர் தினத்தை, மகளிர் தினத்தை எல்லாம் கொடுமை என்று சொல்லுகிறானே என்று கோபப்பட்டு நம் சகோதரிகள் என்னைத் திட்டக்கூடும். ஒரு வேளை செலவு பண்ணி என்னை அடிக்கக் கூட வந்தாலும் வரலாம். என்னைப் பொருத்தவரை எல்லாத் தினங்களுமே அவர்களுக்காகத்தானே நாம் அற்பணித்திருக்கிறோம், பிறகு எதற்கு குறிப்பிட்ட ஒரு தினத்தை மட்டும் நாம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தான் தவிர வேற ஒன்றுமில்லை சகோதரிகளே!!!
 
சரி, விஷயத்துக்கு வருகிறேன். நேற்று நம் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஆண்கள்  எல்லோரும் நம் பாரம்பரிய ஆடையான வேட்டியை அணிந்தபடி வேலைக்கு வந்து “வேட்டி தினமாக” கொண்டாடியிருக்கிறார்கள்.  இதை பத்திரிக்கையில் படித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கு எவ்வாறு சேலை அழகையும் கம்பீரத்தையும்  கொடுக்கிறதோ அதேபோல் ஆண்களுக்கு வேட்டி அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கிறது.

 

புகப்படம் உதவி: தட்ஸ்தமிழ்

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்காவது, வேட்டி அணியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு வேட்டி அணியும் வாய்ப்பு மிக மிக குறைவே. அதனால் தான் நாங்கள் இங்கு கோவிலில் நடக்கும் பூசைகளிலும், விசேச நாட்களிலும் வேட்டியைக் கட்டிக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, வேட்டியை கட்டிக்கொள்கிறோம். சென்ற இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இங்கு “பொங்கல் திருநாளை” வெகு விமர்சையாக கொண்டாடினோம். ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொன்னோம். அப்போது ஒரு சிலர், எங்களிடம் வேட்டி இல்லை என்று சொன்னார்கள். ஒன்றுக்கு மேல் வேட்டியை வைத்திருப்பவர்கள் எல்லோரும் வேட்டியை கொடுக்கிறோம் என்று சொன்னோம். உடனே, வேட்டி இல்லை என்று சொன்னவர்கள், நீங்கள் வேட்டி கொடுத்தாலும் எங்களுக்கு வேட்டி கட்டத்தெரியாதே என்று ஒரு குண்டைப் போட்டார்கள். சரி, நாங்க உங்களுக்கு வேட்டியை கட்டிவிடுகிறோம் என்று சொன்னபோதும், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்ப எப்படி இவர்கள் திருமணத்தன்று வேட்டி கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று எங்களுக்கு பெரிய ஆச்சிரியம். அந்த கேள்விக்கு அவர்கள், திருமணத்தன்று, தாலி கட்டுகிற சமயத்தில், மற்றவர்களின் உதவியால் வேட்டியைக் கட்டி பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு, எப்படியோ சமாளித்தோம். அதற்கு பிறகு, நாங்க வேட்டி பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை என்றார்கள். இவ்வாறு தான் வேட்டியணியும் பழக்கம் மறைந்து கொண்டு வருகிறது.

 அடப்பாவிகளா! நம்முடைய பாரம்பரிய ஆடையை கூட எங்களுக்கு கட்டத் தெரியாதுன்னு சொல்றாங்களேன்னு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ஏற்கனவே, நம்முடைய பாரம்பரிய விஷயங்கள் நிறைய மறைந்து கொண்டு வருகிறது. வேட்டி அணிவதும் அந்த வரிசையில் போய் சேராமல் இருப்பதற்கு இது போன்ற வேட்டி தினம் கண்டிப்பாக தேவை தான். ஆனால் இதனை எல்லோரும் பின்பற்றுவார்களா????

 

பின் குறிப்பு: இந்த பதிவை நான் நேற்றே எழுதியிருக்க வேண்டும். என்ன பண்ணுவது, நான் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்ததினால், செய்திகளை படிக்க முடியவில்லை. இன்று அலுவலகத்திற்கு வந்த பிறகு தான் செய்திகளை படிக்க முடிந்தது. அதனால் தான் தாமதமாக இந்த பதிவு.

Monday, January 6, 2014

உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-1

என்னடா, நீ இன்னும் தலைவா படம் அனுபவத்தையே முடிக்கலை, அதுக்குள்ள இன்னொரு தொடர் கட்டுரையை ஆரம்பிச்சுட்டே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தலைவா தொடர் அதிகபட்சமாக இன்னும் மூன்று பகுதிக்குள் முடிந்து விடும். அந்த தொடர் படம் வெளிவந்தவுடன் தான் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்ததால், இவ்வளவு தாமாதாமாகி விட்டது. இந்த உள்ளூர் சுற்றுலா தொடர் இரண்டு பகுதிகள் தான். அதனால் தான் இதனை ஆரம்பித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.


2012ஆம் ஆண்டு இறுதியில், அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில், ஆறு குடும்பங்கள் சேர்ந்து ஏறக்குறைய 600கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காஃப்ஸ் ஹார்பர் (“coffs harbour”) என்ற இடத்துக்கு காரில் சென்றோம். அது தான் நான் கார் ஓட்டிச்சென்ற முதல் தொலைத்தூர கார் பயணம். 2013ஆம் ஆண்டு முடிவில், எனக்கு இரண்டு நாட்கள் தான் விடுமுறை இருந்தது. அதனால் எங்குக் செல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஓவியாவோ, நாம் எங்காவது சென்று இரண்டு,மூன்று தங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அதனால் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை எங்கள் வீட்டிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வுள்ளாங்காங் (“Wollongong”) சென்று இரண்டு நாட்கள் தங்கி, இன்று மாலை தான் வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு நாட்கள் தங்குறதுன்னு முடிவாகி விட்டது. அதனால எங்க வீட்டு அம்மணி, ரைஸ் குக்கர் முதற்கொண்டு, அரிசி,புளிக்காச்சல், இட்லி,சட்னி என்று ஏகப்பட்ட முட்டை முடிச்சுகளை முதல் நாள் இரவே எடுத்து காரில் வைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழ்மை காலையில நாங்க அப்படி இப்படின்னு கிளம்பவே 10.30 மணி ஆயிடுச்சு. சரியா 11.30 மணியைப்போல அந்த ஹோட்டலுக்கு போனோம். 2.00 மணிக்கு தான் செக்-இன் செய்ய முடியும். இருந்தாலும் எங்களோட அறைக்குள்ள போயிடலாம் அப்படின்னு ஒரு குருட்டு நம்பிக்கையில, ஹோட்டலுக்கு போனேன். அங்க இப்பத்தான் உங்க அறையை சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, அதனால நீங்க ரெண்டு மணிக்கே வாங்கன்னு சொல்லிட்டாங்க. நம்க்கு எப்பவுமே சரியான நம்பிக்கையே ஒழுங்கா வேலை செய்யாது, இதுல குருட்டு நம்பிக்கை எப்படி வேலை செய்யும்னு நினைச்சுக்கிட்டு, சரி பக்கத்துல இருக்கிற புத்தர் கோவிலுக்கு போகலாம்னு அங்க போனோம்.



அந்த புத்தர் கோவிலுக்கு பேர் – “Nan Tien Temple” (இதற்கு, “தெற்கில் ஒரு சொர்க்கம்” என்று சீன மொழியில் அர்த்தமாம். இந்த கோவில் இருப்பதும் சிட்னியின் தெற்கில் தான்). 26 ஏக்கர் பரப்பளவில், 1995ல் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஊருக்கு, இந்த கோவில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். 




இந்த கோவில் வளாகத்தில் வெளிப்பிரகாரத்தில்(தரைத்தளத்தில்)  எட்டடுக்கு “பகோடா” (“pagoda”) இருக்கிறது. இந்த பகோடாவிற்கு போவதற்கு நம்மூர் மலைமேல் இருக்கும் கோவில்களுக்கு செல்வது போல், படிகள் ஏறி செல்ல வேண்டும்.



இந்த பகோடாவிற்கு நேர் எதிரில் தான் இந்த புத்தர் சிலை இருக்கிறது.
  
இந்த தரைத்தளத்தில் தான் கார் பார்க்கிங் இருக்கிறது. இந்த தளத்தைச் சுற்றிலும் நிறைய சின்ன சின்ன சிலைகள் அழகாக காட்சியளிக்கிறது. உதாரணத்திற்கு, என் மனதை கவர்ந்த சில சிலைகளின் புகைப்படங்களை கீழே பாருங்கள்.








நாங்கள் நேராக முதலில் மெயின் டெம்பிளுக்குள் சென்றோம். நம்மூர் கோவில்கள் மாதிரி, செருப்பை வெளியில் விட்டுவிட்டு செல்ல வேண்டும். அங்கே ஒரு பெரிய ஹால் மாதிரியான ஒரு அரை இருக்கிறது. மேடையில் ஐந்து புத்தர் சிலைகள் இருக்கின்றன. தரையில் அமராமல் உட்காருவதற்கு ஏற்ற பலகைகள் வைத்திருக்கிறார்கள். அதில் அமர்ந்து கொண்டு பிராத்தனை செய்கிறார்கள். அந்த அறையை சுற்றி 10,000 சிறிய உருவத்திலான புத்தர்களை சுவற்றில் பதித்திருக்கிறார்கள். மண்டபத்திற்குள் யாரும் புகைப்படம் எடுக்க கூடாது. சரி,புகைப்படம் எடுக்க முடியாது போல இருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, நிறைய பேர் வெளியில் நின்று கொண்டு உள்நோக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்பற்றி எடுத்துக்கொண்டேன்.





கோவில் வளாகத்திற்குள் ஒரு அழகான தாமரைக் குளம் உள்ளது.



இதில் இரண்டு வாத்துக்கள் சென்றுக்கொண்டிருந்தன.





 அப்போது ஒரு வாத்து தண்ணீரில் மூழ்கும் போது, நான் கிளிக் செய்தது தான் இந்த படம்.




ஒரு வழியாக நாங்க இந்த கோவிலை சுற்றி பார்த்து முடித்து பிறகு நேரத்தை பார்த்தால், மணி இரண்டாகியிருந்தது. நாங்க ஹோட்டலுக்கு போய் சேர்ந்தபோது மணி இரண்டரை. அறைக்குள்ள போய் கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு, பீச்சிற்கு போகலாம் என்று கிளம்பினோம். அந்த ஹோட்டல் வரவேற்பறையில் இருந்தவர்களிடம் பீச்சிற்கு எப்படி போக வேண்டும் என்று கேட்டபொழுது, அவர்கள், இங்கேருந்து ஒரு ஏழெட்டு நிமிட நடையில் பீச் வந்துவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நம்பி நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்... நடந்தோம்... நடந்துக்கொனேயிருந்தோம்...

எவ்வளவு நேரம் நாங்கள் நடந்து அந்த பீச்சை அடைந்தோம் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.


உள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-2


Friday, January 3, 2014

இப்படி ஒரு மாமியார் – அப்படி ஒரு மருமகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் படித்த ஒரு செய்தி, என்னை அப்படியே நெகிழச் செய்துவிட்டது. 

              
             புகைப்படம் நன்றி - தட்ஸ்தமிழ்
      
மாமியார் ஒருவர் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுத்து தன் மருமகளுக்கு மறு வாழ்வு அளித்தார் என்று. அந்த மருமகளும் தனக்கு உயிர் பிச்சை அளித்த தன் மாமியாரை தெய்வமாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். அந்த மருமகள் மாமியாரிடம் எவ்வளவு அன்பாக நடந்துக்கொண்டிருப்பார் என்று நமக்கு இந்த ஒரு செய்தியே விளக்குகிறது. அது போல் அந்த மாமியாரும் மருமகளிடத்தில் பாசமாக தன் சொந்த மகளைப் போல் பார்த்துக்கொண்டிருப்பார் என்று தெரிகிறது. இந்த மாதிரி ஒவ்வொருவர் வீட்டிலும் மாமியாரும் மருமகளும் இருந்து விட்டால் அந்த வீட்டில் மகனாகவும் கணவனாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த ஆண் மகனுக்கு, உலகில் இதைவிட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்.

அன்றைக்கு அந்த செய்தியை படித்தவுடன், இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி இன்று ஜூனியர் விகடனில் “உதவி செய்யாத மாமியார்.. தீர்த்துக்கட்டிய மருமகள்” என்ற ஒரு செய்தியை படிக்கும் வரை தான் நீடித்தது.

ஒரு வயதான தம்பதியருக்கு இரண்டு மகள்கள்,மற்றும் ஒரே ஒரு மகன். அந்த மகனுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கு,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அந்த குடும்பத்தலைவர் அவருடைய சொந்த வீட்டை தன் மகனுடைய பேரில் எழுதி வைத்து இறந்து விட்டார். ஆனால் அந்த அம்மாவோ, தன்னுடைய மகனை அந்த வீட்டில் தங்க அனுமதிக்கலை. காரணம் மருமகளின் குடும்பத்தாரோடு ஏற்பட்ட வரதட்சணை தகராறு. அதனால அந்த மகன் பக்கத்துல வாடகை வீட்டில குடியிருந்திருக்காரு. அந்த வயதான அம்மாவிற்கு கணவன் இறந்தபிறகு, வாடகைப் பணமாக மாதம் 15,00 ரூபாய் வந்துக்கொண்டிருந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஒத்த ரூபாயை கூட தன் மகனுக்கு கொடுக்கலை. இதனால் கடுப்பாகிப்போன அந்த மருமகள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயம் பார்த்து கூலிப்படையை அமைத்து கொலை செய்திருக்கிறார். இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கார்.

இந்த செய்தியைப் படித்தவுடன், இப்படியும் ஒரு மருமகள் இருப்பாரா என்று எண்ணினேன். இதில் தவறு அந்த மருமகளிடம் மட்டும் இல்லை, அந்த மாமியாரிடமும் இருந்திருக்கிறது. அவர்களும் தன் மகனின் மீது உள்ளார்ந்த அன்பு வைத்திருந்திருந்தால்,மருமகள் வீட்டில் போடுவதாக சொன்ன நகையை போடவில்லை என்பதை பெருந்தன்மையோடு மன்னித்திருந்திருப்பார். அவர் அப்படி மன்னித்திருந்திருந்து, தன் மகனுக்கு உதவி செய்திருந்தால், ஒரு வேளை அந்த மருமகள் இப்படிப்பட்ட ஒரு கொலைப்பாதகத்தை செய்திருக்கமாட்டாரோ என்னவோ.

சரி, மாமியார் தான் தங்கள் கஷ்டங்களுக்கு உதவில்லை என்றாலும், அவர் காலத்துக்கு பிறகு, தாங்கள் தான் அந்த சொத்தை அனுபவிக்கப்போகிறோமே என்று எண்ணியிருந்தால், இந்த கொலைச் செயலிலிருந்து விடுப்பட்டிருக்கலாம். இப்படி இருவருமே ஒத்துப்போகாமல், கடைசியில் மாமியார், மருமகள் கையால் கொல்லப்பட்டதும், அந்த மருமகளும் கம்பி எண்ணிக்கொண்டிருப்பதும் தான் மிச்சம். அவர்கள் இருவராலும் அந்த சொத்தை கடைசி வரை அனுபவிக்க முடியவில்லை.


மாறி வரும் உலகில், நம்முடைய பாரம்பரியம் மிக்க கலாச்சாராமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை திரும்பி வந்தால் தான், இன்றைக்கு நடக்கும் அதிகமான விவகாரத்துக்களும், இம்மாதிரியான கொலைகளும் குறையும். ஆனால் அந்த நாள் என்றைக்கு வரும் என்று தான் தெரியவில்லை. 

Wednesday, January 1, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிட்னியில் இப்போது புத்தாண்டு பிறந்து விட்டது.

என்னுடைய நண்பர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள் எனக்கு அளித்த புத்தாண்டு பரிசை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9.00 மணிக்கும், 12.00மணிக்கும் சிட்னி சிட்டியில் நடக்கும் பத்து நிமிட வாண வேடிக்கைகள் (fireworks) மிகவும் பிரசத்திப் பெற்றவை. குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு, நாங்கள் ஒரு முறை அந்த வாண வேடிக்கைகளை நேரில் சென்று பார்த்தோம். போதுமடா சாமி என்றாகி விட்டது. அந்த அளவிற்கு கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். நாங்கள் நேரில் பார்த்த அந்த வாண வேடிக்கையை தனியா ஒரு பதிவவே போடலாம். அதற்கு பிறகு எல்லாம் நாங்கள் தொலைக்காட்சியிலேயே அந்த நிகழ்வுகளை பார்த்து விடுவோம்.

சிட்டியில் கூட்டத்தை குறைப்பதற்காக, ஒவ்வொரு கவுன்சிலும் இரண்டு வாண வேடிக்கைகளை நடத்துவார்கள் (9மணி மற்றும் 12மணி). இன்று நாங்களும் எங்கள் கவுன்சிலான campbeltownக்கு இரவு 8.30 மணிக்கெல்லாம் சென்றோம். பார்த்தால் அங்கும் ஒரே மக்கள் கூட்டம் தான். ஒரு வழியா எங்கே நல்லா தெரியுமோ, அந்த இடத்துக்கு சென்று நின்று, அந்த வாண வேடிக்கைகளை பார்த்தோம். நான் என்னுடைய அலைபேசியில்,எனக்குத் தெரிந்த அளவில் அதனை காணொளியாக படம் பிடித்துக்கொண்டேன். அதிலிருந்து ஒரு துளியை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.



அந்த நிகழ்வு முடிந்தது என்னவோ 9.10க்கு. ஆனால் நாங்கள் வீட்டிற்கு வந்ததோ 10.30மணி. இத்தனைக்கும் வெறும் 15கிலோமீட்டர் தான் தூரம். போகும்போது சரியாக 10 நிமிடத்திற்கெல்லாம் போய்விட்டோம். ஆனால் அங்கேயிருந்து காரை எடுத்து வெளியில் வருவதற்கு தான் அவ்வளவு நேரம். அப்புறம் 12 மணி வரை முழித்திருந்து, தொலைக்காட்சியில் அந்த பிரம்மாண்ட வாண வேடிக்கைகளைப் பார்த்தோம். சிறிது நேரத்திற்கெல்லாம், யூடியூபில் அதனை போட்டுவிட்டார்கள். அதனையும் உங்களின் பார்வைக்கு.

  
மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்