Wednesday, July 16, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்





மூன்றாம் அதிகாரம்
கல்வி கற்றல்

ஐயா அவர்கள் இளைமைப் பருவத்தில் பள்ளிக்கூடத்து உபாத்தியாரிடத்துப் படித்துக்கொண்ட பின், 17ஆவது வயசில் வியாபார முறையை உத்தேசித்து யாழ்பாணம் போயிருந்த காலத்தில், அங்கே சுத்தாத்து வைத சைவ சித்தாந்த வியவஸ்தாபகராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானையடுத்து அத்தியந்த பக்தி விசுவாசத்துடன் சிஷ்யராக விருந்து, அவர்களிடத்தும், அவர்களுடைய மருகரும், முதன் மாணவருமாகிய வித்துவ சிரோமணி ஸ்ரீமத் பொன்னம்பல பிள்ளையவர்களிடத்தும், தமிழ் இலக்கண, இலக்கிய புராண இதிகாச முதலியவைகளை முறையாகப் பாடங்கேட்டுக் கொண்டார்கள்.


(ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்)

மேற்படி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் தம்மையடுத்த மாணாக்கராயுள்ள மற்றைத் தனவைசிய நகரத்தார்களை அழைக்கும் பொழுது அவர்கள் பெயருடன் “செட்டியார்“ என்று சேர்த்து அழைப்பார்கள். ‘ஐயா அவர்களை மட்டும் அவர்கள்பால் வைத்த அன்புரிமை மேலிட்டால் “சொக்கலிங்கம்” ‘ என்று பெயர் மாத்திரையாகவே சொல்லியழைப்பார்கள்.
ஐயா அவர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களுடைய திருவடிப் பாதுகையை பத்திர புஷ்பங்களால் பூசித்து வந்தார்கள். பின்பு நாவல குரு வணக்கம் என்று ஒரு பதிகமும் பாடி வணங்கியிருக்கிறார்கள். எப்பொழுதும் அவர்களுடைய மேன்மையையும், தீரத்தையும், கீர்த்தியையும் அடிக்கடி புகழ்ந்து பேசி வருவார்கள்.

மேலும், சிறந்து விளங்குகின்ற தேவகோட்டை மாநகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, புகழிடங் கொடுத்த பட்டினம் பூம்புகார்க்காணியாகவும், இருப்பைக் குடிக்கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவும் உடைய சூடாமணிபுரமுடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே), திருப்பெருந்துறை அண்ணாமலைச் செட்டியாரவர்கள் குமாரராகிய நாராயணச் செட்டியார் என்னும் ஸ்ரீலஸ்ரீ வன்றெண்ட தேசிகரவர்களையடுத்து சிஷ்யராக இருந்து அநேக இலக்கண இலக்கியங்களும், சாஸ்திரங்களும் பாட முறையிற் கேட்டுக்கொண்டார்கள். பின்பு, “வன்றெண்ட குருஸ்துதி” என்னும் நூலியற்றி அதில் அவர்களது தேக வியோகத்தைக் குறித்துத் தமக்குள்ள பிரிவாற்றாமையை விளக்கியிருக்கின்றார்கள். ஐயா அவர்கள் தாமியற்றி வெளியிட்ட நூல்களிலெல்லாம் தம்மை ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள் மாணாக்கரென்றே  வெளியிட்டமையின், வன்றெண்டரவர்களிடத்திலேயே பல நூல்களும் நிரம்பக் கற்றுப் புலமை நிரம்பப் பெற்றார்கள் என்பது தெரிகிறது.

ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்களிடம் பாடங்கேட்டுக்கொண்ட பின்பு; சிறப்புற்றேங்கிய காரைமா நகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, குலசேகரபுரம் பூம்புகார்க்காணியாகவும் , இளையாற்றக் குடிக் கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவுமுடைய கழநிவாசற் குடியார் கோத்திரத்திலே  (பட்டத்திலே), “சாலக்கரையார்” வீடு என்னும் குடும்பத்திலே, ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் செய்த அரும் பெருந் தவத்தால் அவதரித்த ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் உத்தமோத்தம  துவாதசாந்தபுரமாகிய மதுரைமா நகரத்தையடைந்து ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு நால்வகை மலரெடுத்து அத்தியற்புத விசித்திரக் கட்டுமாலை முதலிய புஷ்பப் பணிவிடைகள் செய்துகொண்டும், அமராபதிபுதூர் நகர தனவைசிய ஸ்ரீமான்கள் வயி.நாக.ராம. வகையார்களைக் கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலில் விமானம், மண்டபம், கோபுரம், திருமதில் முதலிய திருப்பணிகளை நடப்பித்து வருங்காலத்தில், அவற்றை அதி நுட்பதிட்ப    தீட்சண்யமாகிய பார்வையுடன் நடத்தியும், மேலும், தேவிக்கோட்டை ஸ்ரீமான்களாகிய, மெ. வகையாரைக் கொண்டும், அமராபதிபுதூர் வயி. நாக. ராம. வகையாரைக் கொண்டும் மற்றும் அன்பர்களைக் கொண்டும், அத்தலத்தில் அறுபத்துமூவர் குருபூசை மடம், திருநந்தனவனம் முதலியவைகளை தாபனஞ் செய்வித்தும் ,  முப்பத்தைந்து வருடகாலம், அம் மதுரைமா நகரின் எல்லையை விட்டு நீங்காது இருந்து, சுவர்ணகஞ்ச ஸ்நானானுட்டான  நித்திய நியம சிவபூஜை ஜெப தபத்தியான பாராயண பிரதக்ஷிண விரதசீலராய்ச் சாஸ்திர விற்பன்னராய் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவர தரிசனானந்தப் பெருவாழ்வுடையராய் நிர்மலானந்தக்கரண சிவத்தியான ஞானயோகச் சிவானுபூதிச் செல்வராய் விளங்கிக் கொண்டிருக்கு நாளில், ஐயா அவர்கள் அடுத்துச் சிஷ்யராக இருந்து, அவர்களுடைய நியமமேலீட்டால்  அவர்களுக்கு அவகாசங் கிடைப்பது அருமையாயிருந்தமையால், பக்தி விசுவாசத்துடன் நிழல்போல் விடாது பின் பற்றி நின்று கேட்பன கேட்பாரானார்கள்.  மேற்படி சுவாமிகளும் ஐயா அவர்களுடைய அத்தியந்த பக்தி சிரத்தை முதலியவைகளை நோக்கி, சிவாஸ்த்திர பாடஞ் சொல்லுதலும் சிவதருமம் என்று கருதி, திருமாலை கட்டும்பொழுதும், பிரதக்ஷினம்  வரும்பொழுதும், முறை வழுவாது பெரிய புராணம், சித்தாந்த சாஸ்திரம் முதலிய நூல்களை பாடஞ் சொல்லி வந்தார்கள்.

ஐயா அவர்கள் அவ்வாறு பாடங்கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் மூத்த மனைவியார் சிவபதம் அடைந்தமை தெரிந்தும் பாடங் கேட்குதலில் மிகுந்த சிரத்தையுடையவர்களாய் மதுரைமா நகரிலேயிருந்து, பின்பு கொஞ்சநாட் சென்று, சுவாமிகளால் வற்புறுத்தப்பட்டு ஊருக்கு வந்தார்கள்.

பின்பு, மேற்படி சுவாமிகள் நிரதிசயானந்தப்பெரும் பேறு பெற்றபின், ஐயா அவர்கள் மேற்படி சுவாமிகள் பேரில் “மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி” என்னும் ஒரு தோத்திர நூலும், மேற்படி சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும் இயற்றிப் பாராட்டினார்கள். அந்த சுவாமிகளுடைய திருவடிப் பாதுகையை ஐயா அவர்கள் பூஜை செய்கிற வேதிகைக்குப் பக்கத்தில் வைத்து நித்தியமும் பத்திர புஷ்பங்கொண்டு அருச்சித்து வந்தார்கள்.

முற்கூறிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் , ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள், ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் ஆகிய மூன்று குருமூர்த்திகளிடத்திலும் ஐயா அவர்கள் எப்பொழுதும் பக்திவிசுவாசத்துடனிருந்து, சமயம் வாய்த்த போதெல்லாம் அம்மூன்று குரவர்களுடைய குணாதிசயங்களையும், அருமை பெருமைகளையும் பாராட்டிப் பேசிக்கொண்டாடி வருவார்கள்.   அப்பெரியார்களுக்கும், ஐயா அவர்களுக்கும் புந்தியிற் பதிந்துள்ள உரிமை மகிழ்ச்சியைப் பற்றி:-
திருப்புத்தூர்ப் புராணத்தில்

     “மாற்றமொன்று சொலச்சொலித்தம் மகவம் மாற்றம்
           வயங்காமை யுரைப்பமகிழ் பிதாக்கண் மானத்
     தேற்றமிலேற் குணர்த்தியவன் ரெண்ட நாதன்
           றிருவால வாயர்மெய் யப்ப னெம்மான்  
     ஆற்றுபணி கொண்டடியென் முடியிற் சூட்டு
           மாறுமுக நாவலர்கோ னவன்றாட் கன்பே
     போற்றுவழி வந்தவிமற் சரமெய்ச் சீலர்
           புந்திமகிழ் வுறுவரென்சொற் புன்மை நோக்கி”.

எனவரும் செய்யுளால் நன்கு விளக்கியுள்ளார்கள். ஐயா அவர்கள் தங்களுடைய ஆசிரியர் மூவர்க்கும் அவரவர் சிவபத மடைந்த திருநக்ஷத்திரத்திலே குருபூசை நடத்தியும், நடப்பித்தும் அவர்களுடைய சரித்திரங்களை எடுத்து விரிவாகப் பிரசங்கித்தும் பாராட்டி வருவார்கள்.


மூன்றாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-----------------------------------
நான்காம் அதிகாரம்

கல்விகற்பித்தல் 

18 comments:

  1. ஆஸ்த்ரேலிய பயணக்கட்டுரையிலிருந்து சட்டென தேவகோட்டை வந்து விட்டீர்கள்

    (மேலும், சிறந்து விளங்குகின்ற தேவகோட்டை மாநகரின் கண்ணே)

    இந்த வரிகளை ரசித்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைக்கு தகவல்களை எல்லாம் சேகரிக்க நேரம் வேண்டும்.அதனால் தான் வாரம் ஒரு முறை அக்கட்டுரையை வெளியிடுகிறேன் என்று சொன்னேன்.

      "//(மேலும், சிறந்து விளங்குகின்ற தேவகோட்டை மாநகரின் கண்ணே)//"

      - இது சொக்கலிங்க ஐயா அவர்களின் சரித்திரப் புத்தகத்தில் உள்ள வரிகள்.

      ஓ! நீங்கள் தேவகோட்டை அல்லவா, அதனால் தான் அந்த வரிகளை ரசித்திருக்கிறீர்கள்..

      முதன்மையாக வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  2. கோவில் திருப்பணி, குருபூசை மடம் எல்லாம் அறியப் பெற்றேன்.நன்று,நன்று தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  3. ஐயாவின் சரிதம் படிக்க சுவையாக அமைகிறது! அன்றைய உரைநடை அறிந்து கொள்ள முடிகிறது! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  4. தங்களின் பணி தொடரட்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  5. செம்மாந்த நடை!
    படிக்கப்படிக்கப் பழமையின் வாசனையில் நெஞ்சு நிறைகிறது!
    காலம் கட்டித்திருக்கின்ற புத்தகங்களை அறிஞர்களை அறியத்தரும் தங்களின் திருப்பணிகளை,
    சரியை, கிரியை, யோகம், ஞானமெனும் சிவ புண்ணியங்களுள் கிரியையாய்க் காண்கிறேன். ஐயாவின் வரலாற்றைத் தொடருங்கால்,
    “பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
    சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது!
    ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
    நாவி அணைந்த நடுதறி யாமே.“
    எனக் கூறிச் சென்ற திருமூலன் நினைவுக்கு வருகிறான்!
    தொடருங்கள் அய்யா!
    தங்களின் பணிக்கென் தலைதாழ்ந்த வணக்கங்கள்!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த திருப்பணிகளை செய்வதற்கு, முதலில் என் மனதில் விதை விதைத்தவர்களான, கரைக்குடியில் வசிக்கும் வினைத்தீர்த்தான் அண்ணன், கம்பன் அடிசூடி. ஐயா பழனியப்பன் மற்றும் இங்கு வசிக்கும் அருச்சுனமணி ஐயா ஆகியோருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

      மேலும் சைவ சித்தாந்த சொக்கலிங்க ஐயா அவர்களின் ஆசியால் தான் என்னால் இந்த பணியை செய்ய முடிகிறது.

      தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

  6. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் இவரைப்பற்றி எனதுபதிவு கதை சொல்லவா ? புகைப்படத்தை காண... கீழே சொடுக்குக...

    http://www.killergee.blogspot.ae/2014/05/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. நானும் தங்களின் இந்த பதிவை படித்துள்ளேன்.

      Delete
  7. ஐயாவைப்பற்றி அறிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள். தொடரட்டும் பணி , வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜ் சார்

      Delete
  8. தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  9. இது வரை அறிந்திராத சைவ சித்தாந்த சொக்கலிங்கப் பெரியவரைப் பற்றி அறிந்து கொண்டோம்! என்ன அழகாக எழுதி உள்ளீர்கள்! முந்தைய பதிவுகளையும் நிச்சயமாகப் படிக்க வேண்டும்! படிக்கின்றோம்! அருமை தொடருங்கள் சார்! நாங்களும் தொடர்கின்றோம்! இதற்கு பின்னூட்டம் அன்றே நீங்கள் பதிவு இட்டவுடன் போட்டோம் ஆனால் பின்னூட்டம் போகவே இல்லை! தாமதமாகிவிட்டது!

    நன்றி இது போன்ற சைவப் பெரியார்களைப் பற்றி எழுதுவதற்கு!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிறிய திருத்தம் ஐயா, நான் எழுதவில்லை. அடியேன் வெறும் தட்டச்சு செய்பவன் தான். ஐயா அவர்களுடைய சரித்திரத்தை, அவர்களுடைய மாணவர்களில் ஒருவர் எழுதியிருக்கிறார்கள். அதைத்தான் நான் இணையத்தில் ஏற்றும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete