Sunday, April 27, 2014

தெனாலிராமன் – விமர்சனம்



நான்  இந்த பதிவில் சொன்னமாதிரி - வந்துட்டான்யா... வந்துட்டான்!!!

வடிவேலு மூன்றாண்டு வனவாசத்தை முடித்து தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இம்முறை நகைச்சுவை நடிகனாக இல்லாமல், கதாநாயகனாக வந்திருக்கிறார்.




கதை என்னன்னு பார்த்தால், விகட நகரத்தை ஆண்டு வரும் மன்னனுக்கு 36 மனைவிகள் மற்றும் 52 குழந்தைகள். எப்பொழுதும் தன் குடும்பத்தையே பற்றியே சிந்திப்பதால், தன் நவரத்தின அமைச்சர்கள் (அதாவது 9 அமைச்சர்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு நாட்டை ஆண்டு வருகிறார். இந்த 9 அமைச்சர்களில் ஒரு அமைச்சரைத் தவிர மற்ற 8 அமைச்சர்களும் ஊழலுக்கு பெயர் போனவர்கள். பணத்துக்காக தங்கள் நாட்டை சீன தேசத்திடம் அடகு வைக்க முயல்கிறார்கள். அதற்கு நேர்மையான அமைச்சர் முட்டுக்கட்டையாக இருப்பதால், சினிமா தர்மப்படி அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். இந்த இடத்திற்கு இன்னொரு வடிவேலான தெனாலி ராமன் சில பல போராட்டங்களுக்கிடையில் அமைச்சராக உள்ளே நுழைகிறார். 





இதில் ஒரு முக்கிய ட்விஸ்ட் என்னவென்றால், தெனாலிராமான் புரட்சிப்படையை சேர்ந்தவன். மன்னனைப் பிடிக்காமல், அவனை கொல்ல வேண்டும் என்று வாழ்பவன். இதற்கிடையில் சீன தேசத்தோடு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, அந்த நாட்டின் வர்த்தக ஸ்தலமே, சீன தேசத்து வர்த்தக ஸ்தலம் போல் காட்சியளிக்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆத்திரப்பட்டு மன்னனை கொல்வதற்காக சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில், மன்னன் ஒரு அப்பிராணி, இதற்கு முழுப்பொறுப்பும் அந்த 8 அமைச்சர்கள் தான் என்று கண்டுப்பிடிக்கிறான் தெனாலிராமன். இப்படி ஒரு நல்லவன் இருக்கும்போது, கெட்டவர்கள் அவன் மீது பழியை சுமத்தவேண்டும் என்பதும் சினிமா நியதி, அந்த நியதிப்படியே தெனாலிராமன் மீது மன்னனுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்து அவனை மன்னனிடம் இருந்து பிரிக்கிறார்கள் அந்த அமைச்சர்கள். 


இதற்கு நடுவில், தெனாலிராமனுக்கும், மன்னனின் மகளான மீனாட்சி தீக்ஷித்க்கும் காதல் மலறுகிறது. மகளும் தந்தையிடம், தெனாலிராமன் நல்லவன் என்று கூறி அவன் மனதை மாற்றி, தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் வருவதற்கு ஏற்பாடு செய்கிறாள். மறுப்பிரவேசம் செய்த தெனாலிராமன் எவ்வாறு மன்னனுக்கு நாட்டுநடப்பை புரியவைக்கிறான் என்பது தான் மீதிக்கதை.

இந்த படம் கிட்டதட்ட 23ஆம் புலிக்சேயின் சாயலை ஒட்டியே எடுத்த மாதிரி இருக்கிறது. அதில் அவர் இரட்டை வேடம் பூண்டிருப்பார். இதிலும் இரட்டை வேடம். அந்த படத்தில் மன்னராக ஒரு கதாப்பாத்திரத்திலும், மன்னனை திருத்தும் இன்னொரு கதாப்பத்திரத்திலும் தோன்றுவார். இந்த படத்திலும் மன்னராகவும், மன்னருக்கு நாட்டு நடப்பை புரிய வைக்கும் மந்திரியாகவும் நடித்திருப்பார். இரண்டு படங்களிலும் மீசை மேலே தூக்கிக்கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு காட்சியில் மன்னன் மந்திரியோடு வேட்டைக்கு செல்லுவான், அப்போது ஒரு கரடி அவன் மீது எச்சிலை துப்பிவிட்டு செல்லும். இந்த படத்திலும் மன்னன் தன் அமைச்சர் பரிவாரங்களோடு வேட்டைக்கு செல்லுவார். ஆனால் கரடியிடம் மாட்டிக்கொள்ளாமல், ஆதிவாசி மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளுவார்.


(மன்னார் வேட்டைக்கு போகிற காட்சியில், ஓவியா உடனே இப்ப கரடி வரப்போகுது பாருங்கள் என்று கூறினார்!!!).






இந்த படத்தில், அவருக்கு கதாநாயாகியாக நடித்தவரை எந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டமுடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்ட வைத்திருக்கிறார்கள். இவரைப் பற்றி பெரிதாக வேறு ஒன்றும் கூற இல்லை.

8 அமைச்சர்களில், மனோபாலாவின் நடிப்பு அருமை.


படத்தின் முக்கிய பலமே வடிவேல் தான். நகைச்சுவை காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும், தன்னுடைய உடமொழியை வைத்தே படத்தை நகர்த்துகிறார். படம் முழுக்க வசனங்கள் தான் அதிகமாக வருகின்றன. அதனால் இது வடிவேலுவின் படம் என்று சொல்லுவதற்கு கொஞ்சம் கடினம் தான். மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்.



Wednesday, April 23, 2014

நான் சொன்ன ஆருடம் உண்மையாகி விட்டது

தலைப்பைப் பார்த்தவுடனே, இவன் எப்பத்திலிருந்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அது வேற ஒண்ணும் இல்லைங்க, இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் பற்றிய செய்தியை தாங்க சொல்றேன்.



இந்த பதிவுல நான் -  கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

இயக்குனர் விஜய்யின் மீது அமலாபாலுக்கிருந்த பாசத்தை சொல்லியிருந்தேன். நம்ம நண்பர்கள் கூட "கிசு கிசுவைக்கூட உண்மை ஆக்கிட்டீங்க போலன்னு சொல்லியிருந்தாங்க. கடைசியில அது உண்மையாகவே ஆகி விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன், இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தங்களுக்கு ஜூன் 7ஆம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் என்றும் , ஜூன் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

நான் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை, இவர்களை பற்றி வந்த கிசுகிசு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஐந்து நாட்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, சரி இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.  இப்போது இவர்களின் அறிக்கை மூலம் அது கிசு கிசு இல்லை, உண்மை தான் என்று தெரிந்துவிட்டது.

சரி, யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளட்டும், அதைப் பற்றி ஒரு பதிவு தேவையா என்று எனக்கே தோன்றியது. இருந்தாலும் நான் ஊகமாக சொன்ன ஒரு செய்தி உண்மையாகிவிட்டதை தெரிவிக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.


Tuesday, April 22, 2014

மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்ற சட்டம்










நான் என்னுடைய ஒரு நாடகத்தில் நகைச்சுவைக்காக மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சங்கம் என்று ஒரு காட்சியை அமைத்திருப்பேன். மேடையில் நாங்கள் நடித்த அந்த காட்சியை பார்த்துவிட்டு மக்கள் ரசித்து சிரித்தார்கள். இந்த மாதிரி காட்சியெல்லாம் வெறும் நகைச்சுவைக்காகத்தான் என்று நினைத்திருந்தேன். உண்மையில் மனைவியிடம் நிறைய கணவன்மார்கள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி அடி வாங்கும் அவர்களை காப்பாற்ற ஒரு சுயேட்சை வேட்பாளர் கிளம்பியிருக்கிறார் என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அந்த வேட்பாளரோ, மனைவியிடம் அடி வாங்கி ஏமாளியாக இருக்கும் கணவனை காப்பாற்ற “கணவன் பாதுகாப்பு சட்டம்” என்று ஒரு சட்டம் கொண்டு வருவேன், கணவர்களே உங்களை காப்பாற்ற நான் இருக்கிறேன். அதனால் எனக்கு ஓட்டளியுங்கள் என்று தெருத்தெருவாகச் சென்று ஓட்டு சேகரிக்கிறாராம். அவர் இப்படி பேசுவதை, பெண்கள் அவரை பார்த்து முறைத்து விட்டு போகிறார்களாம்.
 
இந்த காட்சியெல்லாம் நம் தமிழ் நாட்டில் இல்லை, குஜராத்தில் தான். இந்த மாதிரி நம் தமிழ்நாட்டில் யாராவது வாக்குறுதி கொடுத்தால்.................... ?
 
பின் குறிப்பு: இந்த சுயேட்சை வேட்பாளர், நம் மதுரைத் தமிழனின் வலைப்பூவை படிப்பவராக இருப்பாரோ????

Monday, April 21, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-3





காசியின் மகிமை ஏட்டில் அடங்காது, எழுத்தில் அடங்காது என்று கூறுவர்.
திருவாரூர் பிறக்க முக்தி. காசி இறக்க முக்தி. காஞ்சி வசிக்க முக்தி. திருவண்ணாமலை - நினைக்க முக்தி”. எனும் ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, காசியில் இறப்போர்க்கு, ஆனந்தத்திலேயே, பேரானந்தமான அடுத்த பிறவி எடுக்காமல், ஈசனின் பாதகமலங்களில் முக்தி கிடைக்கும். ஆன்றோர்களும், பெரியோர்களும், தங்களது அந்திம காலத்தில் காசி ஷேத்திரத்தை அடைந்து, மூன்று நேரமும் கங்கை நீராடி, ஜபங்களை முடித்து, பிரணவ மந்திரம் சொல்லி, ஈசனின் சேவடி கமலங்களில் முக்தி பெறுவர்.

குபேரன் காசி ஸ்தலத்தில் தவமிருந்து ஈசானருளால் நவநிதிகளைப் பெற்றுத் திசைகவளருள் ஒருவராகும் பேரு பெற்றான். காமதேனு காசியில் ஈசனை லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்து பரமனின் பேரருளைப் பெற்றது. அந்த லிங்கம் கோப்பியேசுவரர் எனும் திருநாமாத்தைப் பெற்றது. பிரம்மதேவன் காசியில் கபிலாகராம் என்ற தடாகத்தின் அருகே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த லிங்கத்திற்கு ரிஷிபத்துவாசன் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் மேலும் சங்கமஈசுவரர் என்ற திருநாமத்துடன் கூடிய மற்றொரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒரு சமயம் பார்வதி தேவி காசி நந்தவனத்தில் பந்து விளையாடும்போது இரு அரக்கர்கள் வேங்கை உருவம் கொண்டு அவர் முன் வந்து, பயங்கரமாக கர்ஜித்து அச்சுறுத்தினர். அதனால் சீனம் கொண்ட பார்வதி தேவி அவர்கள் மீது அந்த பந்தை எறிந்து, இருவரையும் கொன்றார். அரக்கர்களை அழித்துக் கொன்ற அந்த பந்து லிங்கரூபத்தில் நிலைப்பெற்றது. அந்த லிங்கம் பந்துகேஸ்வரர் என்று பெயர் பெற்றது. பராசக்தியைத் திருமகளாக பெற்ற இமவான், காசியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஈசனை வழிபட்டார். அந்த லிங்கத்திற்கு சைலேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இதுபோல் தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும் காசி மாநகரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வழிபாடுகள் புரிந்து ஈசனின் பேரருளைப் பரிபூர்ணமாக பெற்றனர். இதுவரை காசியின் பெருமையை அடியேன் சொன்னது வெறும் கடுகு அளவு தான். இன்னும் எவ்வளவோ காசியின் சொல்லிக் கொண்டு போகலாம். ஈசனை மூர்த்தி சொரூபமாக வழிபடுவோர்க்கு எல்லா வித சுகபோகங்களும் கிட்டும். ஈசனின் திருவுருவங்கள் என்ன என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- புத்தகத்தில் படித்தது.

தன் கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினர். தன்னுடைய இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான், அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்த புனிதவதியார், உடனே சிவபெருமானை நினைத்து, ஈசனே, இது வரை என் கணவருக்காக தாங்கி நின்ற இந்த அழகு உடல் இனிமேல் எனக்கு வேண்டாம். இந்த அழகு மிகுந்த உடலை யாரும் இனி பார்க்க கூடாது. அதனால், எனக்கு பேய் வடிவம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டினார். அவருடைய வேண்டுதலை செவி சாய்த்த சிவபெருமானும், புனிதவதியாருக்கு, பேய் வடிவத்தைக் கொடுத்து அருள் புரிந்தார். புனிதவதியார் தன் அழகு மிகுந்த உடல் மறைந்து, எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். அங்கு கூடி நின்ற உறவினர்களுக்கு எல்லாம் அதிசியமாக போய் விட்டது. உடனே அவர்கள் எல்லோரும் அவரை வணங்கினார்கள். 




இந்த உருவத்துடன் அவர்கள் நல்ல தமிழ் புலமையும் பெற்றார்கள். நிறைய பாடல்களையும் பாடினார்கள். திருவந்தாதி”, “மூத்த திருப்பதிகம்”, “திருவிரட்டை மணிமாலை எனும் திருப்பிரபந்தத்தையும்ஆகிய நூல்களை இயற்றினார். இதனால் புனிதவதியார், காரைக்கால் அம்மையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இரவும், பகலும் எல்லா நேரங்களிலும் சிவனை நினைத்தும், பூசை செய்தும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள், அவருக்கு திரு கைலாய மலைக்குச் சென்று அந்த பரமசிவனை தரிசிக்க எண்ணினார். தான் இருக்கும் இடத்திலிருந்து, பாதயாத்திரையாக கைலாய மலைக்குச் சென்றார். அங்கு மலையின் மீது தன் காலால் நடந்தால், அந்த இடம் மாசுப் பட்டு விடும் என்று எண்ணி, தன் தலையால் மலையேறினார். (அதாவது தலை கீழாக நடந்தார்). புனிதவதியார் அங்கு தலை கீழாக வந்துக் கொண்டிருப்பதை பார்த்த பார்வதி தேவி, ஈஸ்வரனிடம், தலையினால் நடந்து வருகின்ற எலும்பும் தோலுமாய் உருவம் கொண்டவரின் அன்பை நாம் என்ன வென்று சொல்லுவது என்று கூறினார். அதற்கு இறைவன், தேவி! இவர் நம்மை வழிபடும் அம்மையார். இந்த உருவத்தை வேண்டும்மென்று தான் நம்மிடமிருந்து பெற்றார் என்றார். அதனைக் கேட்ட பார்வதி தேவியோ! எல்லோரும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், முதுமையிலும், இளமை வேண்டும் என்று தான் வேண்டுவர்கள். ஆனால் இவரோ, இளமையிலேயே, முதுமை வேண்டும் என்று விரும்பி இருக்கிறாரே, என்று அதிசியப்பட்டார். புனிதவதியாரும், சிவபெருமான் இருக்கிற இடத்திற்கு அருகில் வந்து விட்டார். இவரைப் பார்த்த சிவபெருமனோ! அம்மையேஎன்று அன்பாக அழைத்தார். தாய் தந்தை இல்லாத சிவபெருமானே, இவரைப் பார்த்து அம்மையே என்று அழைக்கிறார் என்றால், இவருடைய பக்தியை என்னவென்று சொல்வது. உடனே, புனிதவதியாரும் அப்பா! என்று கூறி, சிவபெருமானின் காலடியில் விழுந்து வணங்கினார். அம்மையே! உமக்கு என்ன வாரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையாரோ, ஈசனே! எனக்கு இன்பத்தில் எல்லாம் சிறந்த இன்பமான மோட்சம்வேண்டும் என்றார். நான் மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை, நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், உங்களை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, தாங்கள் ஆனந்த தாண்டவம்ஆடும்போது, நான் தங்கள் திருவடிக்கீழ் இருந்து அதைப் பார்க்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும், தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில், நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுக்களிப்பாயாக என்று அருள் புரிந்தார். அம்மையாருக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிறகு அவர் திருவாலங்காட்டை அடைந்து, அந்த ஈசுவரனின் ஆனந்த நடனத்தை கண்டுக் களித்தார். அவ்வாறு கண்டு களிக்கும் போது, திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை ஆகிய பாடல் நூல்களை இயற்றினார். 



அடுத்து வேறு ஒரு இறையடியாரைப் பற்றி பார்க்கலாம். 


Friday, April 18, 2014

சிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,






சிட்னியில் சைவ மன்றமும், உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து ஆகஸ்ட் மாதம் 29,30,31 தேதிகளில் "சிட்னி முருகன் சைவநெறி மாநாடு - 2014" என்ற மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்   - "சைவ ஆகமங்கள் மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்" ஆகும். இந்த மாநாட்டில் ஒரு முக்கிய சிறப்பு அம்சமே, இளைஞர்களின் பங்களிப்போடு நடத்தப்படுவது தான். மாநாட்டுக் கட்டுரைகளுக்கான தலைப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் . கட்டுரைகளின் தலைப்பு வெளிவந்தவுடன், தெரிவிக்கிறேன், தமிழிலும், சைவத்திலும் ஆர்வமுள்ள நண்பர்கள் கட்டுரைகளை படைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் கட்டுரையை எழுதி அனுப்பலாம். 


சிட்னி சைவ மன்றம்,  சைவசமய வகுப்புகளையும், பண்ணிசை வகுப்புகளையும் சிட்னி முருகன் கோவிலிலும், ஹோம்புஷ் பள்ளியிலும் என இரண்டு இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்  நடத்துகிறது. மேலும் வருடாவருடம் சைவ மன்றம்,சைவ சமய அறிவுத்திறன் போட்டிகளை குழந்தைகளுக்கு நடத்துகிறது.  


சிட்னியில் "உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியா" மாதந்தோரும் திருமுறை முற்றோதலை நடத்தி வருகிறது. இதுவரை வெற்றிக்கரமாக 94 திருமுறை முற்றோதலை  நடத்தியுள்ளது.  


ஆஸ்திரேலிய நண்பர்களே, ஆகஸ்ட் 29,30,31 (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை) தேதிகளை உங்களுடைய நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு, மறக்காமல் இந்த சைவநெறி மாநாட்டில் கலந்து கொண்டு, நம்முடைய அடுத்த தலைமுறையினரும் சைவ சமயத்தை வளர்ப்பதற்கு  உதவி புரியுங்கள். 

Tuesday, April 15, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1



இந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு  அவருக்கு  எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).  மேலும் படிக்க....


Sunday, April 13, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-2






(படங்கள் உதவி - கூகிள் ஆண்டவர்)

அமர்நாத் யாத்திரைக்கு, நாம் நினைத்தபடி, நினைத்த நாளில் எல்லாம் செல்ல முடியாது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்கள் வரை தான் அந்த யாத்திரை அனுமதிக்கபடும். இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தான் நடத்துகிறது. மற்ற கோவில் ஸ்தலங்களுக்கு செல்வதற்கு, அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. ஆனால் இந்த யாத்திரைக்கு, அரசாங்கத்தின் அனுமதியும், மருத்துவச் சான்றிதழும் தேவை. அமர்நாத்துக்கு பக்கத்தில் தான் பாகிஸ்தான் இருக்கிறது. யாத்ரீகள் என்னும் போர்வையில், தீவிரவாதிகள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் அரசாங்கத்தின் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஒரு மருத்துவ சான்றிதழ் மற்றும் ஒரு பூர்த்தி செய்த விண்ணப்பம் ஆகியவற்றை ஜம்மு- காஷ்மீர் வங்கியில் தந்து, பணத்தைக் கட்டினால், ரெஜிஸ்டிரேசன் கம் ஐடென்டிடி ஸ்லிப்(Registration Cum Identity Slip) கிடைக்கும். இது இருந்தால் தான் நம்மை அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிப்பார்கள். 

சரி அமர்நாத் யாத்திரையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொண்டோம். இனி காசியின் பெருமையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
  
 -    புத்தகத்தில் படித்தது. 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”

அதாவது, வீட்டிலுள்ள பொருட்களை காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். இந்த திருக்குறளின் படி, காரைக்கால் அம்மையார் வாழ்ந்து வந்திருக்கிறார், அதனால் தான் சிவபெருமானும், தன்னுடைய அடியாருக்கு விருந்தோம்புதல் புரிந்த புனிதவதியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவருக்கு முதலில் ஒரு மாங்கனியை வழங்கினார். அதை உண்ட பரமதத்தனும் அதன் சுவையில் மயங்கி, அந்த மாங்கனி வந்த விதத்தை அறிந்தான். இருப்பினும் காரணத்தை நம்பாமல், மீண்டும் இதே மாதிரி ஒரு சுவையான கனியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினான். புனிதவதியாரும் உள்ளே சென்று, இன்னொரு பழம் தந்தருள வேண்டும், இல்லையேல் என் உரை பொய்யாகும் என்று சிவபெருமானை மனமுருக பிராத்தித்தார்.


புனிதவதியாரின் வாக்கு பொய்க்கக்கூடாது என்று எண்ணி, அவர் கையில் இன்னொரு மாங்கனியை வைத்து அருளினார். அதைக் கண்டவுடன் புனிதவதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தார். பரமதத்தனுக்கு மிகவும் ஆச்சிரியமாகி விட்டது. அவன் அதை தன் வாயிக்கு கொண்டு போனபோது, அது அப்படியே மறைந்து விட்டது. இதைத்தான், “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைஎன்று பெரியவர்கள் கூறுவார்கள் போலும். முதலில் கனியைப் பார்தவுடன், ஆச்சிரியமடைந்த பரமதத்தன், அந்த கனி மறைந்தவுடன், மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தன் மனைவியினுடைய சிவ பக்தியால் தான், இந்த அதிசியம் எல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொண்டான். இந்த உண்மையை புரிந்துக்கொண்டதால், அவன் தன் மனைவியை தெய்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். உடனே புனிதவதியாரைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டான். தன் மனைவி தெய்வத்தன்மை உடையவர் என்று நம்ப ஆரம்பித்து விட்டான். இறைவனுடைய பூரண அருளைப் பெற்ற உன்னை என்னால் இனிமேல் மனைவியாக பார்க்க முடியாது. உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு தகுதி கிடையாது. அதனால் வெளி உலகுக்கு கணவன் மனைவியாக வாழ்வோம், வீட்டில் தனி தனியாக வாழ்வோம் என்றான். கணவனின் இந்த பேச்சைக் கேட்டவுடன் புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினார். கடைசியில், கணவனின் சொல்லை மீறக்கூடாது என்பதற்காக, அவனுடைய விருப்பத்திற்கு இணங்கி, இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனி தனியே வாழ்ந்தனர். உறவினர்கள் யாருக்கும் தெரியாதபடி இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது, புனிதவதியாரும் உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையை பெற ஆரம்பித்தார். பரமதத்தனோ, இரு விதமான இந்த வாழ்க்கையை வாழ விரும்பாமல், தன் உறவினர்களிடம் வெளியூர் சென்று பொருள் ஈட்டப்போவதாக கூறினான். அவர்களும் அவனுடைய முடிவிற்கு சம்மதம் அளித்தனர். அந்த காலங்களில், வணிகர்கள் வெளியுருக்குச் சென்று பொருள் ஈட்டுவது* வழக்கம். அதன்படி, ஒரு நாள் , தன் மனைவியிடமும், உறவினர்களிடமும் விடைப்பெற்று வெளியூருக்குப் புறப்பட்டான், ஆனால் எந்த ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லவில்லை. அவன் பாண்டிய நாட்டிற்கு சென்று வாணிபம் செய்ய ஆரம்பித்தான். சிறிது காலத்திற்கெல்லாம் தன் திறமையால் அவன் அங்கு பெரிய செல்வந்தன் ஆனான். அந்த ஊரில் இருக்கும் ஒரு வணிகர் அவனுடைய செல்வச் சிறப்பையும், அழகையும் உணர்ந்து, தன் மகளை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுத்தார். 


அவனும், தன் இரண்டாவது மனைவியோடு, இன்பமாக வாழ்ந்து வந்தான். அப்படி வாழ்ந்து வந்த போதும், தன் முதல் மனைவியை எப்போதும் மறக்காமல், மனதில் அவளை வணங்கி வந்தான். ஒரு நன்னாளில், அவனுடைய இரண்டாவது மனைவி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றடுத்தாள். அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று தன் முதல் மனைவியின் பெயரை வைத்தான். இப்படி அவனுடைய வாழ்க்கையோ இன்பமாக அமைந்தது. ஆனால், புனிதவதியாரின் வாழ்க்கையோ, அறவழியில் அமைந்தது. எப்போதும் சிவபெருமானை நினைத்துக்கொண்டும், பூஜை செய்துக்கொண்டும் வாழ்ந்து வந்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, புனிதவதியாருக்கும் அவருடைய உறவினர்களுக்கும், மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. உறவினர்களோ, புனிதவதியாரை எப்படியும் பரமதத்தனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து, புனிதவதியாரையும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, புனிதவதியார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். புனிதவதியாரின் இந்த திடீர் வருகையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பரமதத்தன்னோ, என்ன செய்வது என்று அஞ்சினான். பிறகு தன் இரண்டாவது மனைவியோடும், குழந்தையோடும் புனிதவதியாரைப் போய் பார்த்தான். பார்த்த உடனே மனைவி, மகளுடன் புனிதவதியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான்.




பிறகு புனிதவதியாரைப் பார்த்து, நான் உங்களுடைய திருவருளால், நலமாக வாழ்கிறேன். இந்தக் குழந்தைக்கு, தங்களின் பெயரையே சூட்டியுள்ளேன். தாங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கூறினான். தன் கணவனின் செயலைக் கண்டு புனிதவதியார் அஞ்சி ஒதுங்கி நின்றார். பரமதத்தன் புனிதவதியாரின் காலில் விழுந்ததைப் பார்த்த உறவினர்களுக்கோ, பெரிய அதிர்ச்சியாகி விட்டது. பரமதத்தனிடம், மனைவியின் காலடியில் விழலாமா? அப்படி விழக் காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு பரமதத்தனோ, பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள். அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர். புனிதவதியாரோ மிகவும் மன வேதனை அடைந்தார். அழகுத் திருமகளாய், இளமை குன்றாத வடிவழகு பெண்ணாய் காட்சி அளித்த புனிதவதியார், தன் இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான் அழகோடும், இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதியார், அந்த நொடியே, சிவபெருமானை நினைத்து, மனம் உருக ஒரு வேண்டுதலை வேண்டினார். 

புனிதவதியார் அப்படி என்ன பிராத்தனை செய்தார்? அந்த ஈசுவரன் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினாரா?

-