Saturday, May 17, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)


போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம். மேலும்......

Thursday, May 15, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - சிறப்புப்பாயிரம்



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சிவமயம்
சிறப்புப்பாயிரம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத்
தமிழ் சொற் பொழிவாளர்
மகிபாலன்பட்டி

பண்டிதமணி. உயர் திரு. மு. கதிரேசச்
செட்டியாரவர்கள்
இயற்றியது.


பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் .

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னை
           யுணறுஞ் சைவ நெறி
சார்ந்து வாழ்ந்த பெருந்தகையான் தமிழ் நூல்
           பலவுந் தகவுணர்  ந்தோன்
செம்மை நலஞ்சால் காரைநகர்த் திருவார்
           தனவை சியமரபு
திகழத் தோன்றிச் சிவபதமே சிரத்திற்
           கணியாப் பூண்டவன்சீர்
மும்மை யுலகும் புகழ்ந்தேத்து முதியோன்
           எங்கள் சொக்கலிங்க
முனிவன் சரிதக் கடலினிறை முகந்து
           தெளித்தான் யாவனெனின்
மெய்ம்மை வழுவா நெறி நின்று விமலன்
           அடிக்கட் பத்திமிக
மேவும் இராம சாமியெனும் விநய
           குணஞ்சால் நல்லோனே.


  தேவகோட்டை, சிவாகம சங்கம்
திரு. பொ. முத்தைய பிள்ளை அவர்கள்
இயற்றியது.


பூவுலகில் மேலாந்தென் பாண்டி நாட்டில்
     பொருளோங்கு காரைமா நகரின் கண்ணே
மேவுதன வணிகர்குல விளக்காய்த் தோன்றி
     மிகுசைவ சித்தாந்த மெய்ம்மை தேறி
யாவுமாஞ் சிவனைமனத் திருத்திப் பூசித்
     தெப்பொழுதுந் தனையடுத்த அன்பர் யார்க்கும்
ஆவலுடன் நூல்கள் பல பாடஞ் சொல்லி
     அருந்தமிழுஞ் சைவமுமே லோங்கச் செய்த           (க)
சொக்கலிங்க அய்யாவின் சரிதந் தன்னைத்
     தோற்றமுதல் முறைப்படுத்தித் தூய வாக்கால்
மக்களெல்லாம் உய்யும்வணம் வசன மாக
     வழங்கினான் அய்யாவுக் கணுக்க ராகித்
தக்கமரி யாதையுடன் தொண்டு செய்து
     சாத்திரங்கள் பலகேட்டுச் சைவம் பேணி
மிக்கமகிழ் காரைவா ழிராம சாமி
     மேலவனாந் தனவணிக மரபு ளோனே.                     (உ)




காரைக்குடி
சித்தாந்த சைவப் பெருஞ்செல்வர்
ஸ்ரீமத். ராம. சொ. சொக்கலிங்கச்
செட்டியாரவர்கள்

மாணாக்கருள் ஒருவரும் தேவகோட்டை
சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியருமாகிய
சொ. வேலுச்சாமிக் கவிராயர் அவர்கள்
இயற்றியது.


சீராரும் பாண்டிவள நாட்டின் மேன்மை
     திகழ்காரை மாநகரின் வடபாலிற்சேர்
பேராரு நன்முத்துப் பட்ட ணத்திற்  
     பிறங்குமியாழ்ப் பாணத்தார் மனையின் முல்லைத்
தாராரும் வைசியர்தங் குலமெந் நாளுந்
     தாரணியி லோங்கவவ தரித்தோன் நல்லூர்க்
கேராரும் ஆறுமுக நாவ லர்கோ
     னிணையின்மகிழ் மீக்கூரப் பெருகுந் தொண்டன். 

அன்னவன்றன் மருமகன்பொன் னம்ப லப்பே
     ரறிஞனறந் திகழ்க்கூட றனைநீங் காது
மன்னுசுந்த ரேசனடி தொழுமெய் யப்ப
     சுவாமிவளர் வன்றெண்ட மணியன் னேர்பாற்
பன்னுதமிழ் நூல்பலவும் விளங்கக் கற்றேன்
     பகர்கல்வி யறிவொழுக்கச் சிறப்பு முற்றேன்
தன்னையடை மாணாக்க ருள்ளங் கொள்ளத்
     தக்கவகை நூல்பலபோ திக்குஞ் சான்றேன்.

வேதசிவா கமவழிச்சித் தாந்த மெய்ந்நூல்
     விதிமுறையோர்த் துளங்கொண்டு மேலாஞ்ச் சைவ
போதநிலை தரப்பெறீஇ மனித யாக்கை
     கிடைத்ததரன் பூசனையைப் புரிதற் கென்றே
காதலுறு சமயமுதற் றீக்கை மூன்றுங்
     கனிந்தவுளத் தொடும்பெற்றுப் பெரும்பே றென்றே
போதுமுத லானபொருள் பலவுங் கொண்டு
     புனிதசிவ பூசைமுறை புரியுஞ் சீலன்.

சிவபெருமா னெருவுனையே பரமாக் கொண்டு
     திகழுள்ளக் கருத்தினிலைச் சீர்மை யாலே
யவனருளே பெருகுபுரா ணங்கண் முன்னா
     அமைதருநூற் றெட்டுநூல் இயற்று மான்றேன்
தவநிறையுந் தில்லைநகர் தனின்மெய் கண்ட
     சித்தாந்த வித்தியா சாலை தாபித்
துவமையிலா ஞானநூ லோது வோர்கள்
     உணவுமுதற் பெறமூலப் பொருளும் வைத்தோன்.


ஆரியநற் றமிழ்வேத பாட சாலை
     யரன்கோவிற் பணிதிருநந் தனமும் வைத்தல்
சீரியவாங் குளந்தோண்டல் கட்டு வித்தல்
     சிறந்தகுரு பூசைபசு மடந்தா பித்தல்
பாரியக லாசாலை பலதா பித்தல்
     பகருமிவை முதலறந்தன் னினத்தாரைக் கொண்
டேருறவே யியற்றுசொக்க லிங்க வாசான்
     ஈசனடி நிழற்கலந்தான் சின்னாண் முன்னர்.

இத்தகையோ னுயர்சரிதம் பேறாம் பூமிக்
     கியலுநல்லோர் குணங்களுரைப் பதுவு நன்றே
இத்தரணி தனிலென்ன ஔவை யாரும்
     இசைத்தனரா லெனவன்னேன் சரிதம் யாரும்
சித்தசிர மஞ்சிறிது மின்றி யோரத்
     தெள்ளியசெந் தமிழ்வசன முறையிற் செய்தான்
உத்தமனாம் ஒருவனவன் யாவ னென்னில்
     உயற்காரை மாநகரி லென்றும் வாழ்வோன்.

துன்னுபுகழ் வைசியர்தங் குலத்தில் வந்து
     தோன்றினேன் சூரைநகர்க் கோயில் கொண்டோன்
மன்னுமர பினிற்கேற்ப வர்த்த கத்தின்
     வளம்பலவுந் தருமநெறி யீட்டும் வல்லோன்
தன்னனைய சொக்கலிங்க தேசி கன்பாற்
     சார்தருமா ணாக்கர்பல ருள்ளும் பத்தி
தன்னருவ மாயமைந்து தமிழி னூல்கள்
     சங்கையின்றி மாயமைந்து சாலக் கற்றேன்.

வருசைவ சித்தாந்த ஞான நூல்கள்
     வளரவன்பா லாராய்ச்சி புரியு மாண்போன்
தருவனப்பு நிறைச்சந்தச் செய்யுண் முன்னாச்
     சார்ந்தபல பாக்கிளினி தியற்றுந் தக்கோன்
பெருகுமவை தனிற்கேட்போ  ருள்ளங் கொள்ளப்
     பிறங்கியிடு கரதலா மலகம் போலத்
தெருள்பெறவே பிரசங்கம் புரியு நல்லோன்
     சிறந்தகுணக் குன்றமாய்த் திகழ்ந்து நின்றேன்.

நித்தியமு மநுட்டான முடிந்த பின்னர்
     நீடியதே வாரமுதன் முறைக ளோதிச்
சித்தமகிழ் வுடன்சிவனைத் தரிச னஞ்செய்
     செந்நெறிக்க ணிலை நிற்குந் திண்மை வாய்ந்தோன்
உத்தமமா குங்காசி விசுவ நாத
     மேலோனைக் கனிட்டசகோ தரனா வுற்றேன்
இத்தலமெ லாம்புகழ் மேன்மை பெற்ற
     இராமசா மிப்பெயர்கொள் எழிற் சீரேரனே.


சிதம்பரம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியசாலைத்
தருமபரிபாலகருள் ஒருவராகிய
காரைக்குடி
ராம. உ. காசிவிஸ்வநாதான் செட்டியார்
அவர்கள்
இயற்றியது.

செம்பொனுயர் மணிமாடக் காரை தன்னில்
     சிவவர்க்க மானிடனா யவத ரித்து
நம்புபல நூல்கள் சிவ பரமாச் செய்து
     நாட்டுசொக்க லிங்கதே சிகர்க்குக் காதை
இம்பரன்னார் மாணாக்க னிராம சாமி
     யியம்பியுயர் தில்லைவித்தியா சாலை தன்னில்
பம்புநகர்க் காரையனு கூல வைங்கைப்
     பரமர்சன்னி தியினிலரங் கேற்றி னானே.


Tuesday, May 13, 2014

சிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014 - மேலும் செய்திகள்

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,




சைவ நெறி மாநாடு - 2014

நான் அந்த பதிவில் சிட்னியில் சைவ நெறி மாநாடு பற்றி சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக கட்டுரைகளைப் பற்றிய செய்தி தான் இந்த பதிவு.

ஆகமங்கள், திருமுறைகள், சைவ சித்தாந்தம், புராணங்கள், சமயம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், சமயம் கற்பித்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற தலைப்புகளிலிருந்து கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

கட்டுரைகளை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் ஆங்கிலத்திலோ இல்லை தமிழிலோ நான்கு A4 பக்கத்துக்கு மிகாமல் 12 இன்ச்சில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி - saivaneri@gmail.com 

கட்டுரையை படைத்து, நம்மால் முடிந்த சிவத்தொண்டை ஆற்றுவோம். 


Sunday, May 11, 2014

ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்





இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். மேலும்........

தாய்மையை போற்றுவோம்


இன்று ஆண்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் பெண்கள் செய்கிறார்கள். ஆனால் பெண்களால் செய்ய முடிந்த ஒரு வேலையை ஆண்களால் செய்ய முடியவில்லை, அது தான் பிரசவம். அந்த மகத்தான பரிசை இறைவன் பெண்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறான். வலி வந்தால், உயிர் போகிறதே என்று சொல்லுவோம். ஆனால் பிரசவ வலியில் மட்டும் புதிய உயிர் வருகிறது. பெண்கள் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தாலும் சரி, கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தாலும் சரி, அவர்கள் முழுமை அடைவதே, இந்த தாய்மையின் மூலமாகத்தான். ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து ஆணை பிறக்க வைத்து, உலகத்தின் மிகப் பெரிய சக்தி தாய் தான் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறான் இறைவன்.

இந்த நல்ல நாளில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த நம் தாயையும் மற்ற தாய்மார்களையும் போற்றி வணங்குவோம்.


நான் எழுதிய இந்த தாய்மை சிறுகதையை படிக்காதவர்கள் இங்கே வாசிக்கவும். 

தாய்மை -1
தாய்மை - 2
தாய்மை - 3
தாய்மை - 4

Friday, May 9, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை




அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

என் தந்தை வழி கொள்ளுத்தாத்தாவாகிய (நாங்கள் பாட்டையா என்று சொல்லுவோம்) சைவ சித்தாந்தச் செல்வர் பெருமைமிகு காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்கள், நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், சிதம்பரத்தில் "மெய்க்கண்ட  சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இயற்றிய ஒரு நூலான "தெய்வத் தமிழ்" மற்றும் அவருடைய மாணவர்களில் ஒருவர் எழுதிய ஐயா அவர்களின் "வாழ்க்கைச் சரித்திர" நூலும் அடியேனிடம் இருக்கிறது. மற்ற நூல்கள் அனைத்தும் சீடம்பரத்தில் இருக்கும் வித்தியாசாலையில் இருக்கிறது. 

நான் சென்ற முறை இந்தியா சென்ற பொழுது, காரைக்குடி கம்பன் கழகத்தின் நிர்வாகியான திரு. கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் ஐயா அவர்கள், சிதம்பரத்தில் சொக்கலிங்க ஐயா அவர்கள் எழுதிய நூல்களை பார்க்க நேர்ந்தது, நாம் அவைகளை புதுப்பிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். மேலும் மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் திரு. வினைத்தீர்த்தான் அண்ணன் அவர்களும், ஐயா அவர்களின் எழுதிய எல்லா நூல்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது எனக்கு கால அவகாசம் இல்லாததால், நான் அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் சிட்னி திரும்பிவிட்டேன். இங்கு வந்த பிறகு என்னிடம் இருந்த இரு நூல்களையும், உலக சைவப் பேரவையின் சிட்னி கிளையின் தலைவரான திரு. அருச்சுனமனி அவர்களிடம் படிக்க கொடுத்தேன். அவர்கள் அந்த இரு நூலையும் படித்துவிட்டு, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பாட்டையா எழுதிய அனைத்து நூல்களையும் கணினி மயமாக்க வேண்டும். அதுவே மிகப் பெரிய சிவத்தொண்டாகும் என்று கூறி, அவைகளை வெறும் ஸ்கேன் (scan) செய்தால் நன்றாக இருக்காது. அதனால் அந்த நூல்களை அப்படியே தட்டச்சு செய்ய வேண்டும், அதற்கு நானும் உதவி புரிகிறேன் என்று முன்வந்தார்கள். இந்த அரிய பணிக்கு திரு. அன்பு ஜெயா அவர்களும் என்னுடன் கைகோத்துக்கொள்வதற்கு முன் வந்தார்கள்.  


நான் முதலில் அவர்களின் சரித்திர நூலை, அப்படியே தட்டச்சு செய்ய ஆரம்பித்துள்ளேன். வாரா வாரம் ஐந்து பக்கங்களை தட்டச்சு செய்ய எண்ணமிட்டிருக்கிறேன். முதலில் இந்த இரு நூல்களையும் தட்டச்சு செய்து, பிறகு இந்தியாவிற்கு செல்லும்போது, மற்ற நூல்களையும் கணினிமயமாக்க வேண்டும். இவையனைத்திருக்கும், அந்த ஈசனின் துணையும், சொக்கலிங்க ஐயா அவர்களின் ஆசியும்  என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என்று நம்புகிறேன். 

இதோ ஐயா அவர்களின் சரித்திர நூலில் முதலில் இருக்கும் முகவுரையும், பதிப்புரையும். 




சிவமயம்

ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்











       ஆக்கியோன்,
       ராம. உ. இராமசாமிச் செட்டியார்


கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்தச் செல்வராகிய
ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பதிப்பு

இஃது
ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள் மாணக்கர்
காரைக்குடி
ராம.உ. இராமசாமிச் செட்டியார் அவர்களால்
எழுதப்பெற்றது

சிதம்பரம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்களால்

காரைக்குடி
திருமகள் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது

குரோதி,ஆவணி.
1964


முதற்பதிப்பு:      1935, 1000.
இரண்டாம் பதிப்பு: 1964, 1000.


கணபதி துணை.
முகவுரை

ஸ்ரீமத். சொக்கலிங்க ஐயா அவர்கள் சுத்தாத்துவிதசைவ சித்தாந்தச் செந்நெறிச் செல்வராய், அந்நெறிக் கண் உறைத்து நின்றும், அந்நெறியே முத்திநெறி எனப் பிறர்க்குப் போதித்தும், அந்நெறி மேன்மேலும் ஓங்கிவளர்ந்து, இவ்வுலகம் உய்திபெற வேண்டும் என்னும்  நன்னேக்கத்தானே அது விருத்தியாதற்கு இன்றியமையாத “மெய்க்கண்ட  சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும், மற்றுஞ் சிவபுண்ணியங்களைச் செவ்விது செய்தும், செய்வித்தும், உபகரித்த உத்தம சிவா புண்ணியசீலராவர்; ஆதலின் அவர்கள் சரித்திரம் உலகத்தில் விளங்கவேண்டுவது ஆவசியகமெனப் பல பெரியோர்களும், சிவநேசர் திருக்கூட்டத்தார்களும், பிற அன்பர்களும் மிக்க விருப்புடன் ஐயா அவர்களுடைய மாணாக்கர்களிடம் தெரிவித்தார்கள்.

அவ்வின்ப மொழியானது இயல்பாகவே ஐயா அவர்களின் சரித்திரத்தை எழுத வேண்டும் என்னுங் கருத்துக்கொண்டிருந்த மாணாக்கர்களின் எண்ணத்தை விரைந்து ஊக்க அவர்கள் யாவரும் ஒருங்கு கூடிச் சிற்றறிவினனாகிய என்னையுன் தம்முள் ஒருவனாக மதித்து “இப்பணியை நீயே செய்க” என்று கட்டளையிட, யாவரும் ஒருப்பட்டுக் கூறும் அக்கட்டளையை மறுக்க வொண்ணாமலும், குருவைத் துதித்தல் உத்தம சிவா புண்ணியமெனக் கருதியும் அதனை மேற்கொண்டு ஐயா அவர்கள் நேரில் சொல்லக் கேட்டவைகளையும், நேரில் அறிந்தவைகளையும், ஐயா அவர்களுடைய புத்திரர், மாணவர், நண்பர், முதலியோர் சொல்லக் கேட்டவைகளையும், ஒரு கோவைப்படுத்தி இச்சரித்திரம் எழுதலாயிற்று.

இச்சரித்திரத்திற் குறைபாடுகளிருப்பினும் பெரியார் சரித்திரமானபடியால் நீரைப்பிரித்துப் பாலைக் கொள்ளும் அன்னம்போல் குற்றங்களைந்து குணமளைத்து பாராட்டும் வண்ணம் உத்தமர்களைப் பிராத்திக்கிறேன். .

சுபம்!
காரைக்குடி                                        இங்ஙணம்,
யுவவரு ஐப்பசி மீ                               ராம. உ. இராமாசாமி.



சிவமயம்
உலகம்பட்டி
சித்தாந்த சைவ நிலையம்
ஸ்ரீலஸ்ரீ   இலக்குமண சுவாமி அவர்கள்

மதிப்புரை

நீர்வளம், நிலவளம், பொருள்வளம் நிறைந்த காரையம்பதியில் தனவைசிய மரபில் இற்றைக்கு எழுபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திருவவதாரம் செய்து தமது இளம்பருவத்திற்றனே இலக்கணவிலக்கியம், சித்தாந்த சாத்திர முதலிய கருவிநூல், அறிவு நூல்களை உத்தமாசிரியர் முன் ஐயம் திரிபறக்கற்றுத் தெளிந்து புலவர் திலகமென யாவரானும் மதிக்கப்பெற்று திருப்புத்தூர்த் தலபுராணம் ஆதிய பல தலபுராணங்களையும், இறைவன்மீதும், இறைவன் அடியார் மீதும் பலபிரபந்தங்களையும் பாடியும், பலகட்டுரை நூல்களியற்றியும், சிவாகம விதிப்படி பெருமைமிக்க சிவாசாரியாரிடத்தில் சமயவிசேட நிருவாண தீக்கைகள் பெற்று சிவபூசை சிவாலய சேவைகளையிடையிறாது செய்தும், தம்மை வந்தடைந்த நன்மாணாக்கர்களுக்கு அவரவர் மதி நுட்பம் நோக்கி கருவிநூல், அறிவு நூல்களை மனத்தெளிவுறப்போதித்தும், பெரிய அவைக்களங்களில் அரியேறு போன்று வீற்றிருந்து சைவ வீரத்துடன் பிரசங்கமாரி பொழிந்து உலகாயதம், பாஞ்சராத்திரம், ஏகான்மவாதம் முதலிய புறச்சமயங்களைக்கண்டித்து சிவமே பரம்பொருள் என நாட்டியும், சமய அரசாய் விளங்கும் நம் சைவத்தை யாங்கணும் பரவச்செய்தற் பொருட்டு சிதம்பரத்தில் பொய் கண்ட கன்ற மெய்கண்டார் பெயரால் ஓர் வித்தியாசாலை நிறுவியும், என்றும் மாறாத சிவ வேடப் பொலிவுடன்,  சித்தாந்த ஞானச் சிவானுபூதிச்செல்வராய் நிலவியிருந்து பிரமோ தூ தவவருடத்தில் சுத்த சாட்குண்ணிய பரமபதியாகிய சிவபரஞ்சுடரின், திருவடிப் பேறெய்திய தவப் பெரியாராகிய ஸ்ரீலஸ்ரீ, சொக்கலிங்க ஐயா அவர்களின் மாணாக்கருள் தலைசிறந்து விளங்குபவராயும், கல்விச்செல்வம்,பொருட்செல்வம் நிறையப்பெற்றவராயும், அதிவிரைவில் செய்யுளியற்றும் புலமைத் திறம்வாய்க்கப் பெற்றவராயும், சிவபத்தி, அடியார்பத்தி, குருபத்தியிற் சிறந்து விளங்குபவராயும், காரையம்பதிவாசராயும் உள்ள திருவாளர் ராம. உ. இராமாசமிச்செட்டியாரவர்கள் இனிய செந்தமிழ் வசன நடையில் எழுதியுள்ளார்கள். இச்சரித்திரத்திற்கண்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றேனும் புனைன்துரையன்று. இத்தவப்பெரியார் பெருமையை இச்சரிதத்தானும் இதன் பிற்பகுயிலுள்ள இரங்கற்பாக்கள், அனுதாப உரைகளானும் நன்குணரலாகும்.

     "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையும்
     ஈசனெனவே உளத்துளெண் "

எனச் சைவசமய நெறியிற் கூறியாங்கு சிவனடியவரைச் சிவனெனவே கண்டு வழிபட வேண்டுவது மரபாகலின் இப்பெரியார் சரிதத்தைச் சிவசரிதமாகவேயெண்ணி சிவநேசச் செல்வரனை வரும் ஏற்று அன்போடுபடித்துப் பாராட்டி இறைவன் அருட்பேற்றிற்குரியவராகி இன்புற்று வாழ்வாராக.



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பதிப்புரை

இந்நூலின் முதற்பதிப்பு நீண்டகாலத்திற்கு முன்பே முற்றும் செலவாகிவிட்டமையாலும், சைவ சமயத்தின் உண்மை நெறியைத் தம் வாழ்வில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றை முறையாகக் கைக்கொண்டு வாழ்ந்த பெருமானாரின் வரலாறு கற்றுணந்தார்க்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகும் என்ற கருத்தாலும் இவ் விரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதற் பதிப்பின் விரிவான அனுபந்தத்தின் சிற்சில பகுதிகள் மட்டும் இப்பதிப்பில் சேர்க்கபெற்றுள்ளன.

அன்பர்களுக்கு ஐயா அவர்களின் வரலாறு சிறந்த வழிகாட்டியாக விளங்கிச் சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கத் தில்லை வெளியில் எல்லையில் நடம்புரியும் நடராஜப்பெருமான் நல்லருள் துணைபுரிவதாக.
இப்பதிப்பைச் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த காரைக்குடி திருமகள் அச்சகத்தாருக்கு எங்கள் நன்றி உரியதாகுக.

சிதம்பரம்                                       மெ. சி. வி.
27-8-1964                                         தருமபரிபாலகர்கள்


 (அடுத்த பகுதி - சிறப்புப்பாயிரம்)






Tuesday, May 6, 2014

திருடி நாடு கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் அதன் சொந்த ஊருக்கு வருகிறது



நாங்கள் சிட்னிக்கு வந்த புதிதில், மூன்று நாட்கள் சேர்ந்தார் போல் வந்த ஒரு விடுமுறையின் போது, ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவிற்கு சென்றோம். சிட்னியிலிருந்து கான்பரா ஏறக்குறைய 290 கிலோமீட்டர். அப்போது என்னிடம் கார் இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு முன்பே பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்வதால், பயணச்சீட்டின் விலை ஒரு நபருக்கு போக வர வெறும் 30 டாலர் மட்டுமே. இப்படி முன்பதிவு செய்யவில்லை என்றால் பயணச்சீட்டின் விலை $60 ஆக இருக்கும். அப்போது எங்களுடைய மகாராணிகள் பிறக்கவில்லை. அதனால் நாங்கள் இருவர் மட்டுமே கான்பரா சென்று அங்குள்ள பாராளுமன்றம், தேசிய அருங்காட்சியகம் எல்லாம் சென்று பார்த்து விட்டு வந்தோம்.

என்னடா, தலைப்புக்கும், இது வரை நான் சொன்னதுக்கும் ஒரு தொடர்பே இல்லையே என்று பார்க்கிறீர்களா, இதோ தலைப்புக்கு வந்துட்டேன். அந்த தேசிய அருங்காட்சியகத்தில் வெவ்வேறு நாடுகளின் அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த சேகரிப்பில் நம் நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து நந்தி, திருஞானசம்பந்தர், முருகர், நடராஜர், துவாரபாலகர் போன்ற சிலைகளும் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிலைகளுக்கும் கீழே அதனைப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. 


(நந்தி)


(திருஞான சம்பந்தர்)


(திருஞான சம்பந்தர்)


(முருகர்)


(துவாரபாலகர்)


இதையெல்லாம் பார்த்தபோது ,நம் நாட்டிலிருக்கும் கலைப் பொருட்களை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்களே என்று எனக்கு பெருமையாக இருந்தது.

சமீபத்தில், பத்திரிக்கையில் ஒரு செய்தியை படித்தேன். அதாகப்பட்டது இந்த தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கின்ற வெண்கலத்தாலான நடராஜர் சிலையை இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்பவரிடமிருந்து, 56 லட்சம் டாலர் கொடுத்து அந்த அருங்காட்சியகம் வாங்கி இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட சுபாஷ்கபூர், ஆஸ்திரேலியாவிற்கு விற்ற நடராஜர் சிலையையும் கடத்தி தான் விற்றேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக இவர் மீதான வழக்கொன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டு வருகிறது. கடத்தப்பட்ட இந்த சிலையை இந்திய அரசாங்கம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் திருப்பிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் திருப்பித்தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். (யுனெஸ்கோ உடன்பாட்டின்படி, ஒரு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களை அந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் ) உடனடியாக அந்த சிலையை காட்சிப் பொருளிலிருந்து எடுத்து விட்டார்கள்.

இந்த நடராஜர் சிலையானது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சோழர்களால்  கட்டப்பட்ட ஸ்ரீ புரந்தான் ஏரிக்கரை கோவில் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்ட சிவன் கோவிலில் இருந்த வெண்கல சிலையாகும். இங்கிருந்து தான் இந்த சிலை கடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஊரில் வசித்து வந்த ஒருவரிடம், இந்த சிலையின் புகைப்படம் இருந்ததைக்கொண்டு போலீசார் ஆஸ்திரேலியாவில் இந்த சிலை இருப்பதை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இந்த சிலை அந்த கிராமத்திற்கு வந்தபிறகு, அதை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய அந்த ஊர் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.


இந்த ஒரு சிலையை கண்டுப்பிடித்து விட்டார்கள். இன்னும் எத்தனை எத்தனை ஐம்பொன் சிலைகள் எல்லாம் இப்படி நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறதோ!!! இந்த அருங்காட்சியகத்திலும், மற்ற நாடுகளின் அருங்காட்சியகத்திலும் இருக்கின்ற நம் தெய்வச் சிலைகள் எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான் வாங்கப்பட்டிருக்கிறதா என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்!!!!. 

பின் குறிப்பு: அந்த அருங்காட்சியகத்தில், புகைப்படம் எடுப்பதற்கு அனுமதியில்லை. மேலே உள்ள புகைபடங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.