Tuesday, September 25, 2012

நான் படித்து ரசித்த சிரிப்புத் துணுக்குகள்


ஆண்களுக்கு பிடித்தவை:

மனைவி: நம்ம பையனுக்கு வர்ற தையோட முப்பது முடியுதுங்க. அவன் கல்யாணமே வேணாம்னு சொல்றதை நினைச்சாதான் கவலையா இருக்கு. அவன் யாரையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றானோன்னு தோணுது.
 
கணவன்: ''கரெக்ட் மரகதம்! அவன் என்னைய மனசுல வெச்சுக்கிட்டுத் தான் அப்படி சொல்றான். உன்கிட்ட நான் தினம்தினம் படற அவஸ்தையை பார்த்த பிறகுமா நம்ம பையன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவான்"!



ராமு: ''மச்சி! உலகத்துலயே நம்பர் ஒன் சந்தேகப்பிராணி யார்னு கேட்டா அது என் வொய்ப்தாண்டா...''

சோமு: ''மாப்ள! அப்படி என்னடா அவங்களுக்கு உன்மேல சந்தேகம்?''

ராமு: ''புதுசா ஒரு வேலைக்காரிய சேர்த்திருக்கா. அவளை டெய்லி காலையில பத்து மணிக்கு நான் ஆபீஸ் போன பின்னாடி வரச்சொல்லிட்டு, ஈவ்னிங் ஆறு மணிக்கு நான் வீடு திரும்புறதுக்குள்ள போகச் சொல்லிடுறா... ஞாயித்துக்கிழமை வேலைக்கே வரவேணாம்னுட்டா. இப்ப சொல்லு"!.
 
 
ரமேஷ்: ''மச்சான், சிஸ்டர் போன்ல என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்றாங்கடா... டெய்லி நீ வீட்டுக்கு லேட்டா போறியாமே?''
 
சுரேஷ்: ''தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தாத்தான் தெரியும்!''
 
ரமேஷ்: ''என்னடா சொல்ற?''
 
சுரேஷ்: ''நீ புதுசா கல்யாணம் ஆனவன்தானே? மவனே, ஆறு மாசம் போகட்டும். அப்புறம் உன் வீட்டுலருந்து எனக்கும் இதே மாதிரியா புலம்பல் போன் வராட்டி என்னை செருப்பாலயே அடி"!
 
 
கணவன்: ''அடியே, அம்மா பாத்ரூமிவழுக்கி விழுந்துட்டாங்களாம்...''
 
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''
 
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
 
மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
 
 
சோமு: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்கே நிக்கிறா!
 
ராமு: பேசாம கார் ஓட்டிப் பாரேன்!!
 
 
மனைவி: டார்லிங்! இன்னைக்கு நம்மளோட கல்யாண நாள். நாம என்ன பண்ணலாம்?
 
கணவன்: எழுந்து நின்னு, ரெண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தலாம். 
 
 
 
பெண்களுக்கு பிடித்தவை:
 
அர்சனா: எதுக்கு உன் மாமியாரை திட்டுற?
ஆராதனா: பின்ன, நான் போன் பண்ணினா நாய் கொலைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வச்சிருக்காங்களே. அதுக்கு தான்.
 
மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.  
 
என்னடா! இதுல கூட ஆண்கள் ரசிப்பதற்கு நிறைய துணுக்குகளையும், பெண்கள் ரசிப்பதற்கு பேருக்கு ரெண்டே ரெண்டு துணுக்குகளை மட்டும் போட்டிருக்கானேன்னு யோசிக்காதீங்க. என்ன பண்றது, இந்த மாதிரி துணுக்குகள் எல்லாம் ஆண்கள் தான் எழுதுறாங்க போல, அதனால தான் நிறைய துணுக்குகள் ஆண்கள் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு, (அது தான் கண்லேயும் வேற படுது). ஆனா கண்டிப்பா பெண் வாசகர்களை திருப்தி படுத்துறதுக்காக, கண்ல விளக்கெண்ணையை விட்டாவது, பெண்கள் ரசிக்கக்கூடிய துணுக்குகளை தேடிக்கண்டுப்பிடிச்சு பதியுறேன்.
 
 
 

Saturday, September 22, 2012

அமெரிக்காவில் அடியேன் – 8

பகுதி-7

தோசா உணவகத்துல போயி உட்கார்ந்தோம். அப்பத்தான் எங்க பக்கத்து டேபிள்ல உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார குடும்பத்துக்கு தோசையை கொண்டாந்து வச்சுட்டு அந்த சர்வர் போயிட்டாரு. அந்த சர்வருக்கு பின்னாடியே வந்த இன்னொருத்தர் அந்த தோசையை எப்படி முள்கரண்டியும், தேக்கரண்டியையும் வச்சு சாப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்க  ஆரம்பிச்சார். அதாவது, முள்கரண்டியால பிச்ச தோசையை அந்த சாம்பார் கிண்ணத்துல போட்டு, அப்புறம் தேக்கரண்டியால அதை எடுத்து சாப்பிடணும்னு சொல்லிக் கொடுத்துட்டு அவர் போயிட்டாரு. நான் கூட அந்த வெள்ளைக்காரங்களுக்கு கையால எப்படி தோசையை பிச்சு சாப்பிடணும்னு சொல்லிக்கொடுப்பாங்களோண்ணு நினைச்சேன். அடப்பாவிகளா! எதை எதை தான் தேக்கரண்டி, முள்கரண்டியெல்லாம் வச்சு சாப்பிடறதுன்னு இல்லையா. என்னதான் தேக்கரண்டியால எடுத்து சாப்பிட்டாலும், சாம்பாரை எடுத்து தோசை மேல ஊத்தி, அதை நம்ம கையால பிச்சு சாப்பிடுற மாதிரி வருமா என்ன! இதெல்லாம் அந்த வெள்ளக்காரங்களுக்கு எங்க புரியப் போகுது. நாங்களும் சாப்பிட்டு முடிச்சு, அறைக்கு திரும்பின பிறகு, நண்பரும் அவர் மனைவியும் வேற ஊருக்கு போறதுக்கு கிளம்பி போனாங்க. மறு நாள் காலைல நான் அறையை காலி பண்ணிக்கிட்டு, மறுபடியும் ஒரு உள்ளூர் விமானத்துல லாஸ் ஏஞ்சல்ஸ் போனேன். சிட்னிலேருந்து போறதுக்கு முன்னாடி, என்னோட இன்னொரு நண்பர் நீங்க  லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஏன் தனியா தங்குறீங்க, நாங்க தங்குற அறையிலே தங்கிக்கலாம்னு சொன்னதுனால, நானும் அங்க தங்கிக்கலாம்னு முடிவெடுத்தேன்.  லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே போயி, எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு தெரியலை. ஏன்னா, அந்த ஹோட்டல் இருக்கிற இடமோ டிஸ்னி லாண்டுக்கு பக்கத்துல இருக்கு. நல்ல காலம் அந்த விமான நிலையத்துக்குள்ள ஒரு தகவல் மையம் இருந்துச்சு. அதுல, தன்னார்வலர்கள் தான் அங்க இருந்து உதவி கேக்குறவுங்களுக்கு, உதவுறாங்க. நான் அப்ப போனப்போ ஒரு வயசான தாத்தா தான் இருந்தாரு. அவரு என்னைய பார்த்து “வாங்கோ, வாங்கோன்னு” வாய் முழுக்க கூப்பிட்டு, எனக்கு எப்படி அந்த ஹோட்டலுக்கு போறதுன்னு சொன்னாரு. நானும் அவர் சொன்னபடி வெளியில வந்து டிஸ்னி லாண்ட் போற ஷட்டில் வேன் வருதான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அந்த வண்டி வந்துச்சு. நானும் அதுல ஏறி உட்கார்ந்தேன். என்னோட சேர்த்து 3 பேரு அந்த வண்டிக்குள்ள உட்கார்ந்திருந்தோம். அந்த வண்டியும் புறப்பட்டுச்சு. நானும் பட்டிக்காட்டான் வேலையை செய்ய ஆரம்பிச்சிட்டேன் (ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்து வாயை பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தேன்). ரொம்ப நேரமா அந்த வண்டி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த மாதிரி தெரியலை. நானும், இந்த விமான நிலையம் ரொம்ப பெருசு போல, அதான் இதை விட்டு வெளியே வர ரொம்ப நேரமாவதுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் தான் என் மரமண்டைக்கு உரைச்சுது, இந்த வண்டிக்காரன் விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருக்கான்னு. அந்த வண்டிக்குள்ள நாங்க 3 பேரு தான் இருந்கோம். அதனால இன்னும் 10 பேரையாவது வண்டிக்குள்ள ஏத்திடலாம்னு நினைச்சிருப்பான் போல. அதனால நவக்கிரகத்தை சுத்துற மாதிரி  அந்த விமான நிலையத்தையே சுத்திக்கிட்டு இருந்தான். அடப்பாவிகளா, சென்னைல தான், இந்த ஷேர் ஆட்டோக்காரனுங்க பண்ற தொல்லை பெருந் தொல்லையா இருக்கும்னு பார்த்தா, இங்க கூடவா இப்படின்னு கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் சரி, ஊர் எந்த ஊரா இருந்தா என்ன, எல்லா மனுசனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குதே, பாவம் இந்த டிரைவரும் என்ன பண்ணுவான்னு நினைச்சு, உடனே மனசு  அவன் மேல இரக்கப் பட ஆரம்பிச்சுது. ஒரு வழியா எப்படியோ டிஸ்னி லாண்ட்ல இருக்கிற ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.
அன்னைக்கு, தனியா மறுபடியும் பஸ் எடுத்து, அந்த ஊரை எப்படி சுத்தினேன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                  பகுதி-9

Tuesday, September 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 7

 
என்னடா ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டாங்களான்னு ரொம்பவும் யோசிக்காதீங்க. அந்த உணவகத்தோட பேரு “சினேகா உணவகம்”. இதுக்குத்தான்(!) போன பதிவுல ஒரு சின்ன பில்டப். ஆனா இந்த உணவகத்துக்கும், நடிகை சினேகாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமான்னா, அது எனக்கு தெரியாது. சாப்பாடும் சும்மா சொல்லக்கூடாது, சினேகா மாதிரியே ரொம்ப நல்லா இருந்துச்சு. மறு நாள் காலையில  ஒன்பது மணிக்கு அறையை காலி செஞ்சுட்டு, ஒரு வாடகை வண்டில, நாங்க மூணு பேரும் சான்பிரான்சிஸ்கோ போனோம். நல்ல காலம் அங்க முன்பதிவு செஞ்சு வச்சிருந்த ஹோட்டல்லேயும் உடனே ஒரு அறையை கொடுத்துட்டாங்க. இல்லன்னா, எல்லாப் பெட்டி, மூட்டையெல்லாம் வரவேற்பறையிலேயே வச்சிருந்திருக்கணும். அப்புறம் அங்கேருந்து மூணு பஸ் மாறி, “தங்க கதவு பாலம்” அதாங்க “Golden Gate Bridge”க்கு போனோம். 1935ஆம் ஆண்டு, திறந்த பாலமாம் அது.

 எல்லா ஊருலேயும் ஒரு பாலத்தை கட்டி, அதுக்கு ஒரு பேரை வச்சு பிரபுலமாக்கிடுறாங்க. நம்ம ஊருலேயும் பாம்பன் பாலம்னு ஒண்ணு இருக்குதுன்னு நாம சொன்னாத்தான் மத்தவுங்களுக்குத் தெரியுது. இத்தனைக்கும் பாம்பன் பாலம் 1914லேயே கட்டப்பட்ட பாலமாக்கும். இந்தியாவோட முதல் கடல் பாலம் அது தான். இப்படி பாம்பன் பாலத்துக்கு இன்னும் நிறைய சிறப்புகள் இருந்தும், நம்ம ஆளுங்க அதை பிரபுலப்படுத்தாம விட்டுட்டாங்க. எங்களுக்கு நேரம் இல்லாததுனால, அந்த பாலத்தை கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு, அங்கேருந்து ஒரு வாடகை வண்டியை பிடிச்சு “fisherman wharf Pier 33”க்கு வந்தோம். அங்கேயிருந்து கப்பல்ல 20 நிமிஷம் பிரயாணம் செஞ்சு “Alcatraz islandல” இருக்கிற ஒரு சிறைச்சாலைக்கு போனோம்.

நமக்கு எல்லாம் சிறைச்சாலைக்குள்ள போற கொடுப்பினையே கிடைக்காது, ஏன்னா, நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே(!). அந்த அல்ப ஆசையை போக்கிக்கிறதுக்காக, வெள்ளக்காரங்க, ஒரு சிறைச்சாலையையே சுற்றுலாத்தலமா மாத்தியிருக்காங்க. நகரத்தை விட்டு, ஒரு நட்ட நடுக் கடல்ல தனித் தீவா, அந்த சிறைச்சாலையை அமைச்சிருக்காங்க. நானும் அந்த சிறைச்சாலைக்குள்ள வலது காலை எடுத்து வச்சு நடக்க ஆரம்பிச்சேன். “cell house”குள்ள போனா!, நம்ம தமிழ் சினிமாவில காட்டுற மாதிரி ஒரு பெரிய வராந்தாவோட ரெண்டு பக்கமும், கைதிங்க தங்குற அறை இருக்கு. ஒவ்வொரு அறைக்குள்ளேயும், ஒரு சின்ன கட்டில் இருக்கு, அந்த கட்டிலுக்கு அப்புறம் காலைக் கடன்கள் போறதுக்கு வசதி பண்ணி வச்சிருக்காங்க. தமிழ் சினிமாலையாவது, கைதிங்க அறையை கொஞ்சம் பெருசா காட்டுவாங்க. ஆனா, இங்க அந்த அறைக்குள்ள, ஒரு ஆள் மட்டும் தான் உள்ள இருக்க முடியும். என்னடா, இவன் எப்பப் பார்த்தாலும் தமிழ் சினேமாவையே உதாரணமா சொல்றானேன்னு நினைக்காதீங்க, ஏன்னா, எனக்கு தான் உண்மையான சிறைக்கு போன அனுபவம் இல்லையே, அதனால சினிமாவையே உதாரணம் காட்ட வேண்டியிருக்குது.
நாமளும் வேணுன்னா, அந்த அறைக்குள்ள போயி நின்னு புகைப்படம் எடுத்துக்கலாம். நண்பர் ரொம்ப பெருந்தன்மையா(?), நீங்க உள்ள போயி, கம்பிக்கு பின்னாடி நில்லுங்க, என்னோட “photography” திறமை எல்லாம் பயன்படுத்தி, உங்களை தத்ரூபமா எடுக்கிறேன்னு சொன்னாரு. ஆஹா, “இவரு போதைக்கு நாம ஊருகாவான்னு” நினைச்சுக்கிட்டு, ஐயா! சாமி, அது எல்லாம் ஒண்ணும் வேணாம்னு நழுவிட்டேன். ஆனாலும், சில பேரு அந்த அறைக்குள்ள போயி நின்னு போஸ் கொடுத்தாங்க பாருங்க, உண்மையான கைதியே தோத்துருவான் போங்க. அப்புறம் ஒரு வழியா அந்த சிறைச்சாலை சுற்றுலாவை முடிச்சு, வந்த கப்பல்லேயே திரும்பி போனோம். சான்ப்ரான்சிஸ்கோவில ஒரு “குறுக்குத் தெரு” ரொம்பவும் புகழ் பெற்ற தெருவாம். அதனால கப்பல விட்டு இறங்கி நேரா, அந்த குறுக்குத்தெருவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு வாடகை வண்டில அந்த தெருவுக்கு போனோம். இந்த குறுக்குத்தெருவை, ஆங்கிலத்துல “crooked street”ன்னு சொல்றாங்க. அதாவது இந்த தெரு தான் உலகத்துலேயே மிகவும் குறுகலான தெருவாம். இந்த தெரு எப்படி இருக்குதுன்னு பார்த்தீங்கன்னா, ரொம்ப குறுகலான தெருவுக்குள்ள, ரெண்டு பக்கமும் வீடு, அதை ஒட்டி ரெண்டு பக்கமும் நடக்கறதுக்கு படிகள், அந்த நடைபாதை படியை ஒட்டி பூங்கா மாதிரி பூச்செடிகளை நட்டுவச்சிருக்காங்க. அதுக்கப்புறம் வண்டிகள் போறதுக்கு சாலை.



 
அந்த தெருவைப் பார்த்தீங்கன்னா, “ஊட்டி கொண்டை ஊசி வளைவுகள்” மாதிரி இருக்கும். இந்த தெரு 400மீட்டர் தான் நீளம் கொண்டது. ஆனா வண்டிங்களுக்கு ஒரு வழிப் பாதை தான். அதாவது மேலேருந்து கீழே இறங்க தான் முடியுமே தவிர, கீழேருந்து மேல ஏற முடியாது. அதுவும் 8கிலோமீட்டர் வேகத்துல தான் வண்டியை ஓட்டணும்,அதுவும் ரொம்ப ரொம்ப குறுகலான எட்டு வளைவுகளை கடக்கணும். இப்படி இருக்கிற ஒரு குறுகலான தெருல தான், வீட்டோட விலை ரொம்ப அதிகமாக இருக்குமாம்.(என்ன கொடுமை சார் இது!!!)    400 மீட்டர் துரத்துக்குள்ளேயே, ஏகப்பட்ட புகைப்படத்தை எடுத்துக்கிட்டு, கையில இருக்கிற வழிக்காட்டியை வச்சு ஹோட்டலுக்கு நடந்து போயிடலாம்னு ஒரு தப்பான முடிவு எடுத்துட்டோம். நடந்தோம், நடந்தோம், நடந்தோம், நடந்துக்கிட்டேயிருந்தோம், ஆனா ஹோட்டல் தான் வந்த பாடில்லை. எப்படியோ ஒரு முக்கால் மணி நேரம் நடந்து ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறைல இருக்கிறவுங்க கிட்ட, பக்கத்துல எங்க இந்திய உணவகம் இருக்கும்னு கேட்டோம். அதுக்கு அவுங்க கொஞ்ச தூரத்துல, தோசா உணவகம்” ஒண்ணு இருக்கு, அங்க தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. என்னாது! தோசை சாப்பிடறதுக்கு சொல்லிக்கொடுப்பாங்களா!!! எங்களுக்கு ஒரே ஆச்சிரியமா போச்சு. அங்க அப்படி எப்படிதான் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு போயி பார்போமேன்னு, அந்த உணவகத்துகு போனோம். அவுங்க எப்படி சொல்லிக் கொடுத்தாங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.  
                                                                                                                 பகுதி-8  






Wednesday, September 5, 2012

அமெரிக்காவில் அடியேன் – 6

பகுதி-5

நான் பயந்த மாதிரியே, அங்க மாநாட்டுக்கு வந்தவுங்க எல்லோரும் போயிட்டாங்க. என்னைய மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருப்பாங்கன்னு மாநாடு நடத்துறவங்களுக்கும் தெரியும் போல, அதனால, ஊரை சுத்திட்டு லேட்டா வருகிறவர்களையும் கூப்பிட்டுகிட்டு போறதுக்காக இரண்டு பேர் காத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களும் என்னைய கருத்தருங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. அது ஒரு இந்திய உணவகம். அங்க போனவுடனே, நல்லா சூடா ஒரு காபியை குடிச்சேன். அப்புறம் முதல் நாள் நிகழ்ச்சியா, “வெளி நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள் இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பது” என்பதை பற்றியெல்லாம் பேசினோம். ஒரு அருமையான கலந்துரையாடலா அமைஞ்சது. செவிக்கு ஒரு நல்ல உணவாகவும் அது அமைஞ்சதுல எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. செவிக்கு நல்ல உணவு கிடைச்ச மாதிரி, வயிற்றுக்கும் நல்ல உணவு கிடக்குமான்னு ஒரு சந்தேகம். பொதுவா, வெளி நாடுகள்ள இருக்கிற பெரும்பாலான உணவகங்கள் வடக்கத்திய உணவகமா தான் இருக்கும். நானும் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் தென்னிந்திய உணவகங்கள் இருக்கும். இந்த வடக்குக்கு வேலையே, நம்ம தமிழை போட்டு அமுக்குறது தான். சாப்பாட்டுலேயும் சரி, சினிமாலேயும் சரி, வெளிநாடுகளில் வடக்கோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும். அதனால தான் எனக்கு அப்படி ஒரு சந்தேகம். சரி, இங்கேயும் இந்த “naanu”, லொட்டு லொசுக்குன்னு தான் இருக்கபோதுன்னு நினைச்சேன். ஆனா, அது ஒரு பக்கா தென்னிந்திய உணவகம். வாயிக்கு நல்லா ருசியா, நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கேருந்து கிளம்பி எங்க ஹோட்டலுக்கு வந்தோம். மறு நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் (பின்ன, முதல் முதலா ஒரு சர்வதேச கருத்தரங்கில் பேசுன நாளாச்சே!). அன்னைக்கு காலைல எந்திரிச்சு, மனசுக்குள்ளேயே சாமி எல்லாம் கும்பிட்டுக்கிட்டு, வீட்டு அம்மணி சொன்ன மாதிரியே அந்த புது சட்டையும் பேண்ட்டையும் போட்டுக்கிட்டு, எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வரோடு ஹோட்டலுக்கு வெளியே வந்தேன். முதல் நாளே அந்த மாநாடு நடக்கிற இடம் எங்கேன்னு போய்ப் பார்த்துட்டு வந்ததுனால, அந்த வழியாகவே போகலாம்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்லேருந்து இரண்டு பேர் வேக வேகமா எங்களை தாண்டி போனாங்க. சரி, இவுங்க போற வேகத்தைப் பார்த்தா, ஏதோ குறுக்கு வழி இருக்கும் போலன்னு நினைச்சுக்கிட்டு நூல் பிடிச்ச மாதிரி, நாங்களும் அவுங்களை தொடர்ந்துக்கிட்டே போனோம். நாங்க தங்கி இருக்கிற ஹோட்டலை ஒட்டி சைடுல ,ஒரு ரோடு போகும் அந்த ரோட்டுலேயே ஒரு ஐந்து நிமிஷம் நடந்து எதிர் பக்கம் போனா அந்த மாநாடு நடக்கிற “convention centre” வரும். ஆனா எங்களுக்கு முன்னாடி நடந்தவுங்க, அந்த மாதிரி போகாம, பக்கத்துல இருக்கிற “hyatt” ஹோட்டலுக்கு பின் பக்கமா போயி, அதோட கார் பார்க்கிங்கை ஒரு சுத்து சுத்தி, அந்த பார்க்கிங்கோட படிக்கட்டெல்லாம் ஏறி இறங்கி (ஏழு கடல், ஏழு மலையை தாண்டி!!!) அந்த convention centreக்கு நேர் வழியா வராம எப்படியோ உள்ள போனாங்க. எங்களுக்கோ, இவுங்க பின்னாடி வராம ஒழுங்கா தெரிஞ்ச வழியில வந்திருந்தா கூட, இவ்வளவு சுத்து சுத்தியிருக்க வேண்டாமேன்னு தோனிச்சு (இதுக்குத்தான் சொந்த புத்தியை உபயோகப் படுத்தனுங்கிறது!!). சரி, இங்க பக்கத்துல எந்த கோவிலும் இல்லையா, அதனால அந்த “hyattயை சுத்துனதை, பிள்ளையாரப்பா, உன்னைய சுத்தினதா நினைச்சு, எங்க புண்ணியக் கணக்குல சேர்த்துக்கோன்னு வேண்டிக்க வேண்டியதாப்போச்சு. அங்க போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டு மணி நேரம், அங்க படிக்கிற குழந்தைங்க வித்தியாசமா சிந்திச்சு, ரொம்ப அருமையா கலை நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணினாங்க. மதிய உணவுக்கு பிறகு எங்களோட ஆய்வரங்கம் இருந்துச்சு. நானும் உள்ளுக்குள்ள இருக்கிற பயத்தை எல்லாம் வெளியே காட்டாம, ஒரு வழியா என்னோட ஆய்வுக் கட்டுரையை படிச்சு முடிச்சேன்.

 மறு நாளும் எங்களுக்கு தேவைப்படுகிற ஆய்வரங்கத்துல எல்லாம் போயி உட்கார்ந்து, நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு வந்தோம். இரண்டு நாள் மாநாடும் முடிஞ்சது. அன்னைக்கு இரவு உணவுக்கு, நானும் சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரும்(எங்கள் தமிழ் பள்ளியின் முன்னாள் முதல்வர்),அவர் துணைவியாரும் ஒரு தமிழ் நடிகையின் உணவகத்துல போயி சாப்பிட்டோம். அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                 பகுதி-7
 

Friday, August 24, 2012

நான் அவளில்லை


என்னடா, இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்குதுன்னு நீங்க நினைக்கலாம். "நான் அவனில்லை" திரைப்படத்திற்கு போட்டியா இந்த தலைப்பில் ஒரு திரைப்படம் வந்தாலும் வரலாம். ஏன்னா விஷயம் அந்த மாதிரி. அந்த படத்துல கதாநாயகன், பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அவர்களிடமிருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவான். இந்தப் படத்தை நியாபகப் படுத்துற மாதிரி அடிக்கடி தமிழக செய்தித் தாள்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால், செய்தித் தாள்களில் இந்த விஷயத்திற்கு நேர் மாறாக ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதாவது ஒரு பெண் 50 அப்பாவி ஆண்களை மணந்து, அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு மறைந்து விட்டாள். அந்த பெண்ணை போலீஸும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஒவ்வொருவரிடமும் நான் வக்கீலுக்கு படிக்கிறேன், ஐ. ஏ. எஸ்சுக்கு படிக்கிறேன் என்று கூறி பணத்தைப் பறித்திருக்கிறார் அந்த  பலே பெண்மணி.  இந்த அப்பாவி கணவர்களில் சிலர் கொடுத்த பேட்டியை படித்தபோது, இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட வேண்டி இருக்கிறது. இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு பின்னர், எப்படியோ பெற்றோரை சம்மதிக்க வைத்து மீண்டும் அந்தப் பெண்ணிற்கு தாலியை கட்டியுள்ளனர். இப்படி திருமணத்தை கேலிக் கூத்தாக்கியவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களை உட்கார வைத்து "திருமணம் ஒரு ஆயிரங்காலத்து பயிர்" என்று பாடம் எடுத்தால் கூட இவர்கள் திருந்தவா போகிறார்கள். ஆக மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

 

Monday, August 20, 2012

அமெரிக்காவில் அடியேன் – 5

 
நானும் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அது தான் கடைசி ஸ்டாப்பிங்கா இருக்கும், நாம இறங்கிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா மறுபடியும் மெயின் ரோட் வந்துடுச்சு.  வண்டி வந்த வழியா திரும்பி போக ஆரம்பிச்சது. முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் என் மரமண்டைக்கு ஒரச்சது, நாம வந்த வழியா திரும்பி போறோம்னு. “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்னு பேரு தானே ஒழியே, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லாம் இல்லை. நல்ல காலம் “ஒரு நாள் பயணச் சீட்டு” எடுத்ததுனால டிக்கெட்டைப் பத்தி கவலைப்படலை. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வண்டி நின்னுச்சு. சூப்பர் மார்கெட்டுக்குள்ள போயி பார்க்கலாம்னு நினைச்சு அங்க இறங்கி அந்த சூப்பர் மார்கெட்டுக்குள்ள போனேன். அது ஒரு சீன தேசத்து சூப்பர் மார்க்கெட். ஒண்ணும் வேலைக்கு ஆவாதுன்னு உடனே வெளிய வந்தேன். பக்கத்துலேயே டெலிஃபோன் கார்டு எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த கடைக்கார அம்மாக்கிட்ட, ஆஸ்திரேலியாவுக்கு பேசுறதுக்கு எந்த கார்டு நல்ல கார்டுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ஒரு கார்டை காமிச்சு ரொம்ப புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. போதாக்குறைக்கு, ஐந்து டாலர் கார்டை நாலு டாலருக்கு தரேன்னாங்க. உடனே, எனக்குள்ள இருக்கிற முன் ஜாக்கிரதை முத்தன்னா முழிச்சுக்கிட்டான். ஆஹா, இந்த அம்மா விக்காத ஒரு கார்டை நம்ம தலைல கட்டப் பாற்குறாங்கன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் துணிஞ்சு வேற ஒரு கார்டை எடுக்க மனசு வரலை. ஏதாவது ஒரு கார்டை எடுத்துடலாம், அந்த கார்டு சரியா வேலை செய்யலைன்னா தான் பிரச்சனையே, நான் தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு பக்கத்துல ஒரு கடையும் கிடையாது. அதனால ரொம்பவும் யோசிச்சு அவுங்க காமிச்ச கார்டுலேயே இரண்டு டாலருக்கு உள்ள ஒரு கார்டை வாங்கிட்டு, அவுங்ககிட்டேயே அந்த “McCarthy Ranch”க்கு போற பஸ் எங்க நிக்கும்னு கேட்டு, அங்க போயி நின்னேன். கால் மணி நேரத்துல அந்த பஸ் வந்துச்சு. வண்டிக்குள்ள யாருமே இல்லை. வண்டியை பஞ்சாபி அண்ணாத்தை தான் ஓட்டிக்கிட்டு வந்தாரு. இந்த தடவை ஒழுங்கா இறங்கணும்னு டிரைவர் கிட்டே, கொஞ்சம் வால் மார்ட் கிட்ட இறக்கி விடுங்கன்னு சொன்னேன். அவரும் அந்த “McCarthy Ranch” வளைவுக்குள்ள போனவுடனே, ஒரு நிறுத்தத்துல இறங்கிக்குங்கன்னு சொன்னாரு. வால் மார்ட் அதுக்கு பக்கத்துலேயே தான் இருக்குது. இதை முத தடவை வரும்போது நான் கவனிக்காம விட்டுட்டேன். அந்தக் கடைக்குள்ள போனா, சிட்னில இருக்கிற K-mart, target மாதிரிதான் தான் அதுவும் இருந்துச்சு. ஆனா விலை எல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு. நானும் முதல்ல வீட்டு மகாரணிகளுக்கு துணிமணி எடுக்கலாம்னு பார்த்தா, எதை எடுக்கிறது, எதை விடுறதுன்னு தெரியலை. அந்த அளவுக்கு அங்க எல்லாம் வெறும் நாலு டாலர், ஐந்து டாலர்னு இருந்துச்சு. மிஞ்சிப் போனா, பத்து, பதினைந்து டாலர்குள்ள தான் எல்லாம் இருக்குது. ஆனா என்ன! எல்லாமே வீட்டுக்குள்ள போட்டுக்குற மாதிரி தான் இருந்துச்சே தவிர வெளியே போறதுக்கு போட்டுக்குறது மாதிரி இல்லை (அப்புறம் கொடுக்கிற நாலு,ஐந்து டாலருக்கு partywear துனியா கிடைக்கும்). எப்படியோ  ஒரு  வழியா தெளிஞ்சு, ரெண்டுப் பேருக்கும் குத்து மதிப்பா அவுங்க அளவுக்கு நாலைந்து துணிமணிகளை வாங்கினேன். அப்புறம் எனக்கு ஏதாவது ஒரு டி-ஷர்ட் வாங்கலாம்னு பார்த்தா, எல்லா டி-ஷர்ட்டும் எனக்கு சின்னதா தான் இருக்கு(!),அப்படி சொல்லனும்னு தான் ஆசை. ஆனா அதுக்கு நேர் மாறா தான் இருந்துச்சு. அதாவது அங்க இருக்கிற ஒரு சின்ன அளவு டி-ஷர்ட் கூட எனக்கு பெருசாதான் இருந்துச்சு. அப்படியும் ஒரு டி-ஷர்ட்டை போட்டுப் பார்த்தேன். என் ரெண்டு கையும் அந்த டி-ஷர்ட்குள்ள மறைஞ்சு போச்சு.கையை ஆட்டினா, யானையோட தும்பிக்கை ஆடுற மாதிரி, கை இல்லாம வெறும் டி-ஷர்ட் மட்டும் ஆடுச்சு. சரி, இது நமக்கு ஒத்து வராதுன்னு, ஒண்ணும் வாங்கிக்கலை. வீட்டு அம்மணிக்கு ஏதாவது எடுக்கலாம்னு பார்த்தா, அவுங்க போட்டுக்க கூடிய துணிமணி எல்லாம், அண்டா அளவுக்கு பெருசா இருக்குது. சரி, நம்ம பாடு ஏதாவது வாங்கிக்கிட்டு போயி, அது அவுங்களுக்கு தொள தொள இருந்தா, உடனே கல்யாணம் ஆகி, இத்தனை வருஷம் ஆச்சு, ஒழுங்கா ஒரு துணிமணி வாங்கிக்கிட்டுவர துப்பில்லைன்னு சொல்லி, உபதேசம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, இது நமக்கு தேவையா(!), அதனால அவுங்களுக்கு அப்புறம் வேற ஏதாவது வாங்கிக்கிட்டு போலாம்னு முடிவு பண்ணி, கடையை விட்டு வெளியே வந்தேன். மணியோ 2.30 ஆச்சு. மூணு மணிக்கு மாநாடு நடத்துறவுங்க ஹோட்டல்ல ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தாங்க. நானும் லேட்டாயிடுச்சேன்னு பயந்துக்கிட்டு திருப்பியும் பஸ் பிடிச்சு, ரெண்டு train மாறி, ஹோட்டலுக்கு வந்தா சரியா 4.00 மணியாச்சு. எல்லாரையும் கருத்தரங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பாங்க. நாம எப்படி போகப் போறோம்னு தெரியலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் நடந்ததை அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                                              பகுதி-6

Saturday, August 11, 2012

அமெரிக்காவில் அடியேன் – 4

 
மறு நாள் காலைல எந்திரிச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்(இதை தான் ரூம் போட்டு யோசிக்கிறதன்னு சொல்லுவாங்க போலயிருக்கு). ஏன்னா எனக்கு எப்பவுமே தனியா போயி ஊர் சுத்திப் பார்க்க பிடிக்காது. மதியம் மூன்று மணிக்கு தான் அந்த கல்வி மாநாடு ஆரம்பமாகும். சரி    அதுவரைக்கும் ஷாப்பிங்காவது பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி எல்லோரும் வால் மார்ட்ன்னு ஒரு கடை இருக்கும். அங்க எல்லா பொருளும் ரொம்ப மலிவா கிடைக்கும், அதனால கண்டிப்பா அங்க போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க. இந்த தகவலை சொன்னவுங்க என்கிட்ட தனியா சொல்லியிருந்தாலும் பரவாயில்லை, வீட்டு அம்மணியை வச்சுக்கிட்டு வேற சொல்லிட்டாங்களா, அதனால வீட்டு அம்மணி, நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடி மூச்சுக்கு முன்னூறு தடவை, நீங்க கண்டிப்பா வால் மார்டுக்கு போயிட்டு வாங்கன்னு என் காதுல மந்திரம் ஓதி, மனசுல பதிய வச்சுட்டாங்க. அதனால இன்னைக்கு வால் மார்ட்டுக்கு போயிடணும்னு முடிவு பண்ணி, ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்ககிட்ட வால் மார்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க அந்த கடை “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்ல இருக்குது. இங்கேருந்து நீங்க போகனும்னா, இரண்டு train மாறி, ஒரு பஸ் பிடிச்சு போகனும். உங்களால போக முடியுமான்னு கேட்டாங்க. நானும் ஜப்பான்ல மொழி தெரியாத போதே, இந்த மாதிரி நிறைய இடத்துக்கு போயிருக்கோம், இது வெறும் ஜூஜிப்பின்னு நினைச்சு, போக முடியும்னு சொன்னேன். உடனே அவுங்க ஒரு மேப்பை கையில கொடுத்து, எந்த trainனை எடுக்கனும், எங்க மாறனும், அப்புறம் எந்த பஸ்ஸை எடுக்கனும்னு சொன்னாங்க. நானும் அதே மாதிரி இரண்டு train மாறி, பஸ் எடுத்தேன். நான் போக வேண்டிய இடம் தான் கடைசி நிறுத்தம். அதனால நிம்மதியா நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கீட்டு போனேன். ஆனா சும்மா சொல்லக் கூடாது, இரண்டு டாலருக்கு நல்லாவே ஊரை சுத்திக் காட்டுனாரு அந்த டிரைவர் அண்ணாத்தே. ரொம்ப நேரத்துக்கு அப்புறம் “McCarthy Ranch”ன்னு ஒரு நுழைவு வாயிலுக்குள்ள பஸ் போனுச்சு. நானும் இதுக்குள்ள தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கும் போலன்னு நினைச்சு இறங்குறதுக்கு தயாரா இருந்தேன். ஆனா, நான் நினைச்சது ஒண்ணு, அங்க நடந்தது ஒண்ணு. அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
                                                                                                                           பகுதி-5