Monday, February 20, 2012

சம்பந்தம் ஏன் சொக்கன் ஆனான்

ரொம்ப பேருக்கு ஒரு சந்தேகம், நான் ஏன் சொக்கன்னு பேரை மாத்திக்கிட்டேன்னு .  இப்பத்தான் கதையெல்லாம் எழுத ஆரம்பிசிருக்கீங்க, அதுக்குள்ள புனைப் பெயரான்னு நீங்க கேக்கிறது தெரியுது. புனைப் பெயர் எல்லாம் கிடையாதுங்க. என் அப்பா வழி கொள்ளுத் தாத்தாவோட பேரு சொக்கலிங்கம். அவர் அந்த காலத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டு புரிந்தவர். அதனாலேயே அவரை "திரு. சொக்கலிங்க ஐய்யான்னு" சைவ உலகத்துல கூப்பிட்டாங்க. தன் வாழ்நாளில் 108 நூல்களை படைத்து "சைவ சித்தாந்த வித்தகரா" வாழ்ந்தவர் .

 எனக்கு, சிட்னியில் கிடைக்கப் பெற்ற நல்ல தமிழ் நண்பர்கள் மூலம் ஏதோ இராமர் இலங்கை செல்ல  பாலம் கட்ட உதவிய அனிலைப் போல , புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் சமுதாயத்துக்கு மிகவும் சொற்ப அளவில் பங்களிப்பை அளிக்கிறேன்னு ஒரு மனத்திருப்தி.  இந்த மனத்திருப்தியோட நாம வாழ்ந்து விடக் கூடாது, அந்த பங்களிப்பை இன்னும் அதிகம் ஆக்கனும். அதுக்கு நம்ம கொள்ளுத்தாத்தாவோட பேரை வச்சுக்கிட்டா,அந்த பங்களிப்பு இன்னும் அதிகம் ஆகும்னு நினைச்சு தான் அந்த பேரை நான் வச்சுக்கிட்டேன். ஒவ்வொரு தடவையும் அந்த பேரை படிக்கும் போதும்,  மற்ற நெருங்கிய நண்பர்கள் கூப்பிடும் போதும், தமிழ் உலகுக்கு இன்னும் நிறைய செய்யணும்னு ஒரு உத்வேகம் வருது. அந்த பேர் எனக்கு ஒரு உற்சாக மருந்தா அமைஞ்சிருக்கு .
இது தாங்க சம்பந்தம் சொக்கனாக மாறின கதை.
பின் குறிப்பு: எனக்கும் என் பேருக்கும் ஒரு பெரிய ராசிங்க. நான் பிறந்தப்ப, எனக்கு வச்ச பெயர், என் தாத்தாவின் பேரான - திருநாவுக்கரசு. 6 வயதுக்கு பிறகு, என் தந்தையின் வேண்டுகோளின் படி, என் பெரியப்பா எனக்கு சம்பந்தம்னு பேரை மாத்துனாங்க. ரொம்ப வருஷம் அந்த பேரே நிலைச்சிருந்தது. நான் UKவுக்கு போன போது , என் பெயரை அங்கு இருந்த துரை மாருங்க எல்லாம் ரொம்பவே கொலை பண்ணுனதுனால,நானேஅவுங்க சுலபமா என்னை கூப்பிடுறதுக்கு,"SAM"னு மாத்திக்கிட்டேன். இப்போ அந்த "SAM" தான் அலுவலகத்தில் எனக்கான  பேர்.  என்னோட பேரு இவ்வளவு மாற்றம் அடைஞ்சதுனால, கடைசில எனக்கு எந்த பேரு நிலைக்கப் போகுதுன்னு எனக்கே தெரியலை.

Tuesday, February 14, 2012

காதலர் தின வாழ்த்து

திருமணத்துக்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்துக்கு பின் தன் துணையை காதலிப்பவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் என அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள். காதல்னு சொன்னா எப்பவும் எனக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு தான் நியாபகத்துக்கு வரும்.

ஆசிரியர், மாணவர்களிடம் காதலுக்கும், அன்புக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கிறார். அதற்கு ஒரு மாணவன், சார் நீங்க உங்க பெண்ணிடம் வைத்திருப்பது அன்பு. நான் உங்க பெண்ணிடம் வைத்திருப்பது காதல்னு சொல்றான்.

சரி, என்னுடைய முதல் கவிதையை இந்த காதலர் தினத்தில் பதிக்கிறேன். (அது கவிதை என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்)

     காதல் என்றால்
     என்னவென்று தெரியாமல்
     வாழ்ந்து வந்தேன்
     என்னவளை பார்க்கும் வரை.

Tuesday, February 7, 2012

டோக்கியோவில் நண்பருக்கு ஏற்பட்ட நிலநடுக்க அனுபவம்


ஜப்பான்னு சொன்னா எல்லாருக்கும் உடனே நியாபகத்துக்கு வருவது நிலநடுக்கமும், சுனாமியும் தான். அந்த அளவுக்கு இந்த ரெண்டும் அங்க மிகப் பிரபுலம். நாங்களும் டோக்கியோவில கிட்டதட்ட 5 வருடங்கள் குப்பை கொட்டினோம்.

ஒரு நாள் இந்திய உணவகத்தில், நானும் என் விட்டு அம்மணியும் ஒரு புது தமிழ் நண்பரை சந்திச்சோம். 6 மாச IT பிராஜக்ட்டுக்காக இந்தியாவிலிருந்து அங்கு வந்திருக்காரு. பார்த்தா அவரும் நாங்க இருக்கிற suburbல தான் குடியிருக்காருன்னு தெரிஞ்சுது, பேசிக்கிட்டு இருக்கும்போது, அவர் திடீர்னு, டோக்கியோவில எல்லாம் அடிக்கடி நிலநடுக்கம் வரும், பார்த்து பத்திரமா இருந்துக்கோன்னு ஊர்ல எல்லோரும் பயமுறுத்துனாங்க. இங்க நான் வந்து 1 மாசம் ஆகுது, ஆனா ஒரு நிலநடுக்கத்தையும் காணோம். அந்த நிலநடுக்க அனுபவத்தை அனுபவிக்கனும்னு எனக்கும் ஒரே   ஆசையா இருக்கு.  (ஆசைப்படுறதுக்கு ஒரு அளவு இல்லையா. என்னவெல்லாம் ஆசைப்படனும்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல) ஆனா அந்த நிலநடுக்கம் எப்ப தான் வருமோன்னு ஆதங்கப்பட்டாரு. ஏங்க, நாங்க இப்பத்தான் கொஞ்ச நாளா, அந்த பயம் இல்லாம சந்தோஷமா இருக்கோம். உங்களுக்கு ஏங்க இந்த விபரீத ஆசையெல்லாம்னு கேட்டேன். அதற்கு அவர், நிலநடுக்கத்தை அனுபவிச்சாதாங்க, ஊர்ல போயி அது எப்படி இருந்துச்சுன்னு அனுபவப்பூர்வமா சொல்ல முடியும்ன்னாரு.

அடங்கொக்காமொக்கா!!! நீ ஊர்ல போயி பீலா உடுறதுக்கு இங்க நிலநடுக்கம் வரனுமா, எல்லாம் நேரம் தான்னு மனசுல நினைச்சுக்கிட்டு, உங்க ஆசையை கண்டிப்பா கடவுள் நிறைவேற்றி வைப்பாருப்பான்னு சொல்லி, நாங்க வீட்டுக்கு போனோம்.  
அவரை சந்திச்சு இரண்டு வாரம் கழிச்சு, ஒரு நாள் நாங்க ஷாப்பிங் மால்ல இருக்கும் போது, நிலநடுக்கம் ஏற்பட்டுச்சு. உடனே அங்கிருந்த பெருசுங்க, சிறுசுங்க எல்லோரும் மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டாங்க. நாங்களும் எங்களுக்கு ஒண்ணும் ஆக கூடாதுன்னு ஜாதி, மத வித்தியாசம் இல்லாம எல்லா தெய்வத்தையும் வேண்டிக்கிட்டு ஒரு மேஜைக்கு அடியில போயி மறைஞ்சுக்கிட்டோம். ஒரு நிமிஷத்துக்குள்ள அந்த நிலநடுக்கம் நின்னுடுச்சு. நிறைய வாங்கணும்னு போயி, கடைசில ஒண்ணுமே வாங்காம வீட்டுக்கு திரும்பிப் போனோம். அப்பத்தான், எனக்கு அந்த புது நண்பர் நியாபகத்துல வந்தாரு. சரி அவரை போயி பார்த்து, இந்த அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேக்கலாம், அப்படின்னு அவர் வீட்டுக்கு போனோம். அங்க பார்த்தா, அவர் பேய் அறைஞ்ச மாதிரி வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாரு. அவர் கண்ணுக்கு நாங்க வந்ததே தெரியலை. அப்புறம் தான் எங்களை பார்த்தாரு. என்னங்க நிலநடுக்கம் அனுபவம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டோம். உடனே , ஐயோ சாமி, நான் இந்தியா போற வரைக்கும் நிலநடுக்கமே வரக்கூடாதுன்னு கை எடுத்துக் கும்பிட்டாரு. ஏங்க அந்த அளவுக்கு பயந்துட்டீங்களா? நீங்க பேசாம தெருவுல வந்து நின்னிருக்க வேண்டியது தானே என்றேன். நான் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலமைல இருந்தேன் என்றார். பிறகு அவரே தொடர்ந்து, எப்பவுமே காக்கா குளியல் தானே குளிக்கிறோம், அதனால இன்னைக்கு, நிதானமா வீட்டுக்குள்ள இருக்கிற டப்ல(tub) குளிக்கலாம்னு குளிக்கும் போது தான் இந்த நிலநடுக்கம் வந்துச்சு. எனக்கு என்னப் பண்றதுன்னே தெரியலை,ரொம்பவே பயந்துட்டேன். சரி, நிலநடுக்கம் போய்டுச்சுன்னு பார்த்தா, இப்ப, ஒரு பெரிய சுனாமியே வந்துடுச்சு என்றார். என்னது, சுனாமியா, சரி தான் நம்மாளுக்கு மறை கழண்டுடுச்சு போலன்னு நினைச்சு, என்னங்க சுனாமி, கினாமின்னு பேசுறீங்க என்றோம். ஆமாங்க. நிலநடுக்கம் நின்ன உடனே, நான் ஊருல இருக்கிற என் ஆளுக்கு(அவருக்கு நிச்சயித்தப் பெண்ணாம்) போன் பண்ணி சொன்னேன். உடனே அவள் ரொம்ப பயந்து போயி, பேசாம நீங்க எதையாவது சொல்லி இந்தியாவுக்கு வந்துடுங்கன்னு சொன்னாள். நான் அப்படி எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அவள், சரி நான் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற காளியாத்தா கோயில்ல நீங்க நல்ல படியா ஊருக்கு வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்கணும்னு வேண்டிக்கிறேன்னு சொன்னாள் என்றார். அடாடா உங்க மேல அவுங்களுக்கு என்ன ஒரு பாசம் என்றேன் நான். அட நீங்க வேற அதுக்கப்புறம் தான் அவள் ரொம்ப சர்வ சாதாரணமா, நம்ம கல்யாணம் முடிஞ்சவுடனே நீங்க அந்த கோயில்ல நடக்குற தீ மிதி விழாவில கலந்துக்கிட்டு மொட்டைப் போட்டுக்குங்கோன்னு சொன்னாள் என்றார். அடடா, உங்க வாழ்க்கையில இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்திடிச்சுன்னு சொல்லி நாங்க வீட்டுக்கு போனோம்.
அதுக்கப்புறம் நான் எங்க நிலநடுக்கம்ன்னு பேப்பர்ல படிச்சாலும் உடனே எனக்கு அந்த நண்பர் தான் நியாபகத்துக்கு வருவாரு.


Tuesday, January 31, 2012

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது

சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில்  படித்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். 
கணவன் மனைவியிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறான் என்று பார்ப்போம்.

  • அலுவலகத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லச் சொல்லி நச்சரிக்க கூடாது.
  • என்னைக்காவது(?) லேட்டாக வந்தால், தான் சொல்லுகின்ற காரணங்களை நம்ப வேண்டும்.
  • ஆலோசனை தருகிறேன் என்ற பெயரில் எதையும் உளறக்கூடாது.
  • அடிக்கடி ஷாப்பிங் போகணும்னு கூப்பிடக் கூடாது.
  • அலுவலகம் முடித்து களைப்போடு(?) தான் வரும்போது, வீட்டு வாசலில், சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.

மனைவி கணவனிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது

அடுத்து,  மனைவி தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாள்  என்பதை பார்ப்போம்.

  • தன்னிடம் கலந்துக் கொண்டு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க         வேண்டும்.
  • மற்றவர்கள் முன்னிலையில் தப்பு கண்டுப் பிடிக்க கூடாது. 
  • சாப்பாடு எப்படி இருந்தாலும் (வாய்க்கு விளங்கலை என்றாலும்)  பாராட்ட  வேண்டும்.  
  •  வீட்டை விட்டு வெளியே போன நொடி முதல், வீட்டிற்கு திரும்பி வரும்     வரை நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும்.  
  •   இருவருக்குள் சண்டை வந்தால், விட்டுக் கொடுத்து கணவன் தான்        முதலில் பேச வேண்டும்.  
  • அடிக்கடி வெளியே ஷாப்பிங்குக்கு கூட்டிச் சென்று, எவ்வளவு        நேரமானாலும் பொறுமையாக ஷாப்பிங் முடிகிற வரை ஒன்றும்        சொல்லாமல் கூட வர வேண்டும்.  

Sunday, January 22, 2012

தை – 1: நான் வைத்த (கன்னிப்) பொங்கல்

பொங்கல் அன்று நான் விடியற்காலை(?) 8.30 மணிக்கெல்லாம் எந்திரிச்சுட்டேன். வீட்டில யாரும் இல்லாதனால, மதியமும், இரவும்   சாப்பிட  வாங்கன்னு  நண்பர்கள்  சொல்லி இருந்தாங்க.  மதியம் வரைக்கும் என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தான், ஏன் நாளே பொங்கல் வைக்க கூடாதுன்னு ஒரு விபரீத எண்ணம் வந்துச்சு.
உடனே போயி குளிச்சு, நல்லா சுறுசுறுப்பா வந்தேன். யாருக்காவது  போன் பண்ணி, பொங்கல் எப்படி செய்யுறதுன்னு கேக்கலாம்னு தோனிச்சு.     ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல். என்னன்னா, நான் தனியா பொங்கல் செய்யுற விஷயம் ஊர் பூரா பரவிடும். எனக்கு தான் புகழ்ச்சியே பிடிக்காதே. அதனால அந்த போன் பண்ணி கேக்குற எண்ணத்தை விட்டுட்டேன்.
எங்க விட்டு அம்மணி வச்சிருக்காத ரெசிபியா. அதனால ரெசிபி பீரோவிலிருந்து எடுத்துக்கலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க அதுலையும் ஒரு கஷ்டம். என்னன்னா, அவுங்க கிட்ட நீங்க எந்த ஒரு சமயலுக்கும் ரெசிபி கேக்கலாம். அவுங்க சொல்லுவாங்க. என்ன!! அவுங்க கிட்ட இருக்குற ரெசிபி கடல்லேருந்து, உங்க ரெசிபிய தேடி கண்டுப்பிடிச்சு சொல்றதுக்குள்ள, உங்களுக்கு பசி வந்து, அந்த பசி உங்க வயித்த கிள்ளி, கடைசில அந்த பசி வெறுத்துப் போயி உங்களை விட்டு போயிடும். ஒரு ரெசிபியையும் கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு அவுங்க மலை மாதிரி ஏகப்பட்ட ரெசிபியை பிரிண்ட் பண்ணி ஃபைல் போட்டு வச்சுருக்காங்க. அவுங்களாலயே, ஒரு ரெசிபிய கண்டுப் பிடிக்கிறதுக்கு அவ்வளவு நேரம் ஆகும்னா, என்னைய கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
சரி, நம்மளால அந்த கடலுக்குள்ள மூழ்கி முத்து எடுக்க முடியாது. நாமளே, சக்கரை பொங்கலுக்கு புதுசா ஒரு ரெசிபிய கண்டுப் பிடிச்சிட வேண்டியது தான். இந்த சக்கரை பொங்கல் செய்யுறது என்ன பெரிய கம்பா சூத்திரமான்னு முடிவு பண்ணி, த்தில இறங்கினேன்.
ஒரு சில்வர் பானைய தேடி கண்டுப் பிடிச்சு, அதுல நிறைய தண்ணிய புடிச்சு அடுப்புல வச்சேன். நம்ம ஒரு ஆளுக்கு நிறைய செய்ய வேண்டாம்னு, அரை ஒழக்கு அரிசியும்,  அரை ஒழக்கு பருப்பையும் அந்த கொதிக்கிற தண்ணில போட்டு, அது எப்படா பொங்கி வரும்னு அதையே வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் தான் நியாபகம் வந்துச்சு, வெல்லத்தை போட மறந்துட்டோமேன்னு, உடனே வீட்டுல இருந்த மண்டை வெல்லத்தை ரொம்ப கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சு, அதை தூளா நச்சு பொடியாக்கி, பானையில போட்டேன். பார்த்தா வெள்ளம் பத்தாத மாதிரியே இருந்துச்சா, அடாடா, பொங்கல் நல்லா இனிச்சாதானே, சாப்பிட முடியும்னு, இன்னும் நிறைய வெல்லத்தை பொடியாக்கி போட்டேன். அப்ப அப்ப கரண்டியை போட்டு கிண்டிக்கிட்டு, அடுப்புக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு, எப்படா பொங்கல் ரெடி ஆகும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் கழிச்சு, ஒரு குத்து மதிப்பா, சரி பொங்கல் ரெடி ஆகியிருக்கும்னு நினைச்சு(?)முந்திரி பருப்பை நெய்யில வறுத்து, நிறைய நெய்யையும் சேர்த்து அந்த சக்கரை பொங்கல போட்டு நல்லா கிண்டி, அந்த பானையை கீழே இறக்கி வச்சேன். சாமிக்கு வச்சு கும்பிடலாம்னு, ஒரு சின்ன கிண்ணத்தில சக்கரை பொங்கல எடுத்து வச்சா, சாதத்தையே காணோம், வெறும் வெல்லமா இருக்கு, நாம போட்ட வெல்லத்துல, சாதம் எல்லாம் கரைஞ்சு போச்சோன்னு, சந்தேகம் வந்துடுச்சு. என்னடா இது, “பிள்ளையார் பிடிக்க போயி குரங்கு பிடிச்ச கதையா ஆயிடுச்சுன்னு, மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. சரி, இதை சாமிக்கு வச்சு கும்புடாம, முதல்ல இது எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணி பத்துடுவோம்னு, ஒரு ஸ்பூன் எடுத்து வாய் கிட்ட கொண்டு போனேன். அப்ப தான் என் மண்டைல ஒரு எச்சரிக்கை மணி அடிச்சுது, வீட்டுல வேற யாரும் இல்ல, நாம இத சாப்பிட்டு, நமக்கு ஏதாவது ஆச்சுன்னா, உடனே வாயிக்கிட்ட கொண்டு போன கை தன்னால இறங்கிடிச்சு. இவ்வளவு வேற செஞ்சாச்சு, என்ன பண்றதுன்னு புரியலை. இதுவே நம்ம ஊரா இருந்தா, மாடு, பூனை, நாய்க்கு எல்லாம் கொடுத்திருக்கலாம்னு தோணுச்சு. ஆஹா நம்ம வீட்டுக்கு ரெண்டு பக்கத்துலையும்      இருக்குற வீட்டில தான் பூனையும், நாயையும் வளக்குறாங்களே, பேசாம அதுங்களுக்கு போயி குடுத்துலாம்னு முடிவு பண்னினேன். அதுக்கப்புறம் தான் தோணுச்சு, இந்த பொங்கலை சாப்பிட்டு அதுங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, அப்புறம் நம்மள கோர்ட், கேசுன்னு  இல்ல அலைய விடுவானுங்க. நாமளே, அத்திப் பூத்த மாதிரி, பொங்கலை செஞ்சிருக்கோம், இதுக்கு பரிசா, கோர்ட், கேசுன்னா போறது. சரி, இந்த பொங்கலுக்கு கொடுப்பினை அவ்வளவு தான்னு மனசை தேத்திக்கிட்டு அவ்வளவு பொங்கலையும் குப்பைல கொட்டிட்டேன்.
இதுலேருந்து, நான் என்ன சொல்ல வரேன்னா, பிரதம மந்திரியை ஊருக்கு அனுப்பிட்டு னியா இருக்கும் ஜனாதிபதிகளே, நீங்களா எதுவும் புதுசா செய்யுறேன்னு மாட்டிக்காதீங்க, அப்புறம் எனக்கு ஏற்பட்ட நிலமை தான் உங்களுக்கும்.

Tuesday, January 17, 2012

உச்சிதனை முகர்ந்தால் - விமர்சனம்

ஈழத்தில் நம் ரத்த பந்தங்கள் பட்ட கஷ்டங்களை, அப்படியே தத்ரூபமாக, எந்த வித மசாலாக்களையும் சேர்க்காமல் தைரியமாக எடுத்ததற்காக இயக்குனர் புகழேந்திக்கு ஒரு மிகப் பெரிய நன்றி.  மட்டக்களப்பு பகுதியில், ஈவு இரக்கம் இல்லாத மிருகங்களின் காமப் பசிக்கு இரையாகி, கருகி போன ஒரு இளம் மொட்டுவின் கதையே இந்த படம்.  இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்கும், இதயம் கனத்து போகும். இந்த அளவுக்கா நம் தமிழ் இனத்தவர்கள் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எண்ணி மனது கலங்கும்.  இன்னும் இந்த மொட்டு போல் எத்தனை, எத்தனை ஆயிரம் மொட்டுக்கள், மலர்ந்த உடனே கருகிப் போயிருக்குமோ என்று என்னும் போது, நம் மனது பாறாங்கல்லாகி விடுகிறது. அந்த மொட்டுக்கள் பெண்மையை உணர ஆரம்பிக்கும் பொழுதே, அந்த பாவிகள் அவர்களின் பெண்மையை கசக்கி எறிந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனது அப்படியே பதறுகிறது. 

தமிழ் நாட்டில், ஈழச் சகோதரர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து வரும் சத்யராஜ் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடமும்,  ஆதரவு நாடி, கள்ளத் தோனியில் வருகிறார்கள் 13 வயது புனிதவதியும் , அவரது தாயாரும். இதில் புனிதவதி, வெறி பிடித்த ராணுவத்தினரால் கேங்க் ரேப் செய்யப்பட்டு 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவரைப் பெற்ற தாயோ, தன் மகளுக்கு அந்த வெறியர்களின் மூலம் ஏற்பட்ட அவமான சின்னத்தை கலைக்க வேண்டும் , அதனால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து என்றாலும் பரவாயில்லை என்று சொல்கிறார். ஆனால் சத்யராஜ் மற்றும் சங்கீதாவின் பிடிவாதத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். ஒரு பக்கம் தன் மகளின் இந்த நிலமையை எண்ணி அழுவதும், மறு பக்கம் தன் கணவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கவலைப் படுவதுமாக இருக்கிறாள் அந்த தாய். இந்நிலையில், புனிதவதியின் தந்தையை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் அந்த தாய், புனிதவதியை சத்யராஜின் பாதுகாப்பில் விட்டு விட்டு மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி செல்கிறார். புனிதவதியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவருக்கு, புனிதவதிக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வருகிறது. கடைசியில் எய்ட்ஸின் வீரியம் தாங்காமல், புனிதவதி இந்த மண்ணுலகை விட்டு மறைகிறாள்.

இந்த படத்தில் புனிதவதியாக நடித்திருக்கும் நீநிகா, உண்மையிலேயே புனிதவதியாக வாழ்ந்திருக்கிறார். இதில் நடித்த சத்யராஜ், சங்கீதா,நாசர், லக்ஷ்மி, சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் என அனைவரும் மிக நேர்த்தியாக நடித்துள்ளனர். குறிப்பாக தமிழருவி மானியனின் வசனம், மிக எதார்த்தமாக, அவர்களின் வலிகள் நம் மனதிற்குள் ஊடுருவி செல்லுமாறு எழுதியிருக்கும் பாங்கை பாராட்டப் பட வேண்டும். உதாரணத்துக்கு சங்கீதா கூறும் இந்த வசனம், நம் உள்ளத்தை அப்படியே நொறுங்கச் செய்யும். 

"13 வயசுக் குழந்தை, அவளுக்கு ஒண்ணுமே தெரியலை, அவ பாடு
ஓடுறா, குதிக்கிறா, நமக்கு தான் பயமாக இருக்குது. அந்த குழந்தைக்கு 
போயி இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கும் போது அழுகையா வருது.  
ஆனா, அவ அன்னைக்கு தான் வலிச்சுதுன்னு ரொம்ப சாதாரணமா 
சொன்னபோது மனசெல்லாம் ஒடைஞ்சு போயிடுச்சு. "

எல்லோரும் "happy birthday" என்று ஆங்கிலத்தில் பாடும் போது, புனிதவதி மட்டும் "பிறந்த நாள், இன்று பிறந்த நாள்" என்று தமிழில் பாடுவது இருக்கே,  உண்மையாக சாட்டையில் அடித்த மாதிரி இருந்தது. 

பின்னணி இசை மிகவும் அழகாக கையாளப் பட்டிருக்கிறது. டி. இமானின இசையில் "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடல் நம்மையும் உணர்ச்சிப் பொங்க வைக்கும். 

   "இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ!
    இழிவாய் கிடக்க செருப்பா நீ!
    ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
    ஒரு தீபம் அணையுமுன்னே துடிக்கிறதே
     தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே
     எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்
     அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்!!!!"

இறுதியாக, இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். நம் தமிழ் சகோதரர்களின் கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெறும் உதட்டளவு மட்டும் உணராமல், இந்த படத்தை பார்க்கும் இரண்டு மணிநேரமாவது உள்ளத்தளவில் உணருங்கள்.