Friday, March 22, 2019

மறக்க முடியாத ஆசிரியர்




எல்லோருக்கும் பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் தங்களுக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எனக்கும் என்னுடைய கல்லூரி காலத்தில் ஆசிரியர் மாணிக்கம் மிகவும் பிடித்தமான ஒரு ஆசிரியர். இன்றைக்கும் நினைவில் இருந்து நீங்காத ஒரு ஆசிரியரும் கூட. 

மாணிக்கம் ஆசிரியர் இவ்வாண்டு ஓய்வு பெறுகிறார் அவரைப் பற்றி எழுதிக்கொடுங்கள் என்று நான் படித்த கல்லூரியிலிருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. ஓய்வு பெறுகிற அளவிற்கு அவருக்கு வயதாகி விட்டதா என்று நினைக்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் 1990ஆம் ஆண்டு நான் கல்லூரியில் அடிஎடுத்து வைத்த முதல் நாள், கணினித் துறை தலைவர் என்று அவர் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டபோது, ஒரு முதுகலை படிப்பு பயிலும் மாணவரைப்போல் தான் அவருடைய தோற்றம் இருந்தது. அப்படி ஒரு மாணவர் போல் அன்று தோற்றமளித்த அவர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்று நினைக்கும்போது, எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.

அவரைப் பற்றி சில வரிகள் உங்களின் பார்வைக்காக....

மிகவும் கடினமான பாடங்களைக்கூட அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக அவர் வகுப்பு எடுக்கிற விதமே தனி அழகு தான். எனக்குத் தெரிந்து அந்த மூன்று ஆண்டுகளில் அவர் யாரையும் மிகவும் கோபமாக திட்டியது கூட கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லாவற்றையும் (எங்களின் குறும்புகள் உட்பட)அனைத்தையும் சுலபமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக எங்களுக்கு புரிகிற மாதிரி அறிவுரை வழங்குவார். எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. 

இரண்டாம் ஆண்டு விடுமுறையில் நானும், நண்பன் ரமேஷும் “சக்தி சுகர்ஸ்” கரும்பு ஆலையில் குறுகிய கால பயிற்ச்சிக்காக (Inplant Training) கல்லூரியிலிருந்து முன் அனுமதி பெறாமல் சென்றிருந்தோம். அந்த பயிற்சியானது, கல்லூரி தொடங்கிய பின்பும், இருபது நாட்களுக்கு தொடர்ந்ததனால் கல்லூரியின் வருகைப்பதிவிற்கு பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்து நாங்கள் இருவரும் மாணிக்கம் ஆசிரியரிடம் சென்று சூழ்நிலையை விளக்கினோம். அப்போது அவர் எனக்குத் தெரியாமல் நீங்கள் எவ்வாறு இந்த மாதிரி செயலில் இறங்கலாம் என்று கோபிக்காமல், எந்த ஒரு ஈகோவையும் பார்க்காமல், நான் முதல்வரிடம் சொல்லி உங்களின் வருகைப்பதிவிற்கு ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் ஆரம்பித்த பயிற்சியை செவ்வனே முடித்துவிட்டு கல்லூரிக்கு வாருங்கள் என்று கூறி தான் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உயர்வுக்கு என்றும் காரணமாக இருப்பவர் என்று நிருபித்தார். 

ஒவ்வொரு முறையும் கோபால் செய்முறை வகுப்பில் (cobol programming) நான் தடுமாறியபொழுது எல்லாம், என்னுடன் அமர்ந்து, பொறுமையாக நான் செய்கின்ற தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, தவறுகள் வராமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பலமுறை எனக்கு விளக்கி வகுப்பு எடுத்தார். அவருடைய அந்த அடித்தளம் தான், பிற்காலத்தில் கோபால் ப்ரோக்ராம்மிங்கில் (cobol programming) கிட்டதட்ட 23 ஆண்டு காலம் என்னால் கோலோச்ச முடிந்தது.
  
அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த இரண்டு விஷயங்களே போதுமானது அவர் எப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு.

அவரை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை. அதனால் இறைவனிடம் அவருடைய ஓய்வு காலம் மிகவும் ஒரு சிறந்த காலமாக விளங்க வேண்டும், மேலும் அவர் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடும், மிகவும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


பின் குறிப்பு: சென்ற ஆண்டு தான் எங்களின் 25ஆம் ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. வேறொரு பதிவில் அதனை பற்றி  எழுதுகிறேன். அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் மேல உள்ள புகைப்படம் 

21 comments:

  1. ஆசிரியருக்கான இலக்கணம் அவர் என்று புரிகிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    உங்கள் குரு பக்திக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. தங்களது ஆசிரியருக்கு எனது வணக்கங்களும், பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், வணக்கத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  3. போற்றுதலுக்கு உரிய ஆசிரியர்
    போற்றுவோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  4. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

      Delete
  5. ஆசிரியர்கள் மாணவர்களை மறந்தாலும் மாணவர்கள் ஆசிரியர்களை மறப்பதில்லை என்பதை நிரூபித்துவிட்டீர்கள். தங்கள் ஆசிரியருக்கு ஒருவர் செலுத்தும் நன்றி அவரை மறக்காமல் நினைவில் வைத்து போற்றுவதுதான். அதைத்தான் தற்போது செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. மிக அருமையான ஆசிரியர். இவரைப் போன்று ஈகோ பார்க்காமல் மாணவர்களின் நண்பனாக அவர்களின் உயர்வில் கருத்துள்ளவராக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்!! மிகச் சிறந்த ஆசிரியர்!!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் நண்பனாக இருந்து விட்டால் அருமையாக இருக்கும்.
      தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கீதாஜி.

      Delete
  7. // எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. //
    இப்படிப்பட்ட நல்லாசிரியர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் .நல்லதொரு பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோ.

      Delete
  8. என்ன கோபலை 23 வருடமாக கட்டி கொண்டு இருக்கிறீர்களா? நான் அதை டைவோர் ஸ் பண்ணி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன

    ReplyDelete
    Replies
    1. நானும் வெற்றிக்கரமாக அந்த கோபாலையும், கணினி வேலையையும் டைவோர்ஸ் பண்ணிவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  9. சிறப்பான ஆசிரியர். நல்ல ஆசிரியர் அமைவதும் ஒரு வரம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  10. நல்லதொரு அருமையான ஆசிரியரை கிடைக்கப்பெற்றிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. போற்றுதலுக்கு உரிய ஆசிரியர்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. ஒரு ஆசிரியனாக உங்கள் ஆசிரியருக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்!

    நல்ல முன்மாதிரி.

    துளசிதரன்

    ReplyDelete