Thursday, March 14, 2013

காதல் கீதம் - 10


பகுதி- 9
அடைக்கப்பனும், ஜானகியை முதன் முதலில் பார்த்ததிலிருந்து, அவளை விரும்புவது வரைக்கும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான்.


“ஏண்டா இவ்வளவு விஷயம் நடந்திருக்கா. எல்லா விஷயத்தையும் என்கிட்ட மறைக்காமல் சொல்லுவ, இதை மட்டும் எப்படிடா மறைச்ச” என்று கேட்டாள்.

“இல்லம்மா, நான் காதலிக்கிறேன்னு சொன்னா, நீ என்ன சொல்லுவியோன்னு பயந்து தான் உன்கிட்ட மறைச்சேன்” என்றான்.

“இப்ப நான் என்ன சொல்லனும்னு நீ எதிர் பார்க்கிற?” என்று கேட்டாள்.

“நீங்க எப்படியும் நம்ம இனத்துல ஒரு பொண்ணை பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணப்போறீங்க. ஜானகியும் நம்ம இனம் தான். பேசாம அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்களேன்” என்று மென்று முழுங்கினான் அடைக்கப்பன்.

“உம். அந்த பொண்ணு,அவுங்க குடும்பமும் நல்லவங்களாக தான் தெரியிராங்க. ஆனா, அப்பா இதுக்கு ஒத்துக்கணுமே. உங்கப்பாவுக்கு காதல்னாலே பிடிக்காதே” என்று கவலைப்பட்டாள் அவன் அம்மா.

“அம்மா, அம்மா பிளீஸ்மா, நீ தான்மா அப்பாக்கிட்ட, அவுங்க குடும்பத்தை பற்றி எடுத்துச் சொல்லணும். நான் காதலிக்கிறதை அப்படியே மறைச்சிடுமா” என்றான்.

“என்னால எல்லாம் உங்கப்பாக்கிட மறைக்க முடியாது. பார்ப்போம் நான் நேரம் காலம் பார்த்து சொல்றேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி. அந்த பொண்ணுக்கும் இது கடைசி செமெஸ்டெர், நீ பாட்டுக்கு அவளோட அடிக்கடி பேசி, அவ படிப்பை கெடுத்திடாதே” என்றாள்.

“ரொம்ப தாங்க்ஸ்மா. இல்லம்மா, நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

அன்று இரவு அடைக்கப்பனும் படமாத்தூருக்கு கிளம்பி போனான். ஒரு மாதம் கழித்து, சிதம்பரத்தின் கலியாணத்திற்கு, அவர்கள் ஃபேக்டரியிலிருந்து எல்லோரும் காலையிலேயே போய் தலையை காமித்து விட்டு வந்தார்கள். அடைக்கப்பன் மட்டும் காலையில் போனால் கூட்டமாக இருக்கும், ஜானகியை பக்கத்தில் ஈடுந்து பார்க்க முடியாது என்று நினைத்து, மதியமாக நேராக சிதம்பரத்தின் சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தான் மாலை பெண் அழைப்பு நடைபெறும். இவனை பார்த்த மாமா மாகன் மணி,

“என்னடா, இப்ப வர? ஏன் காலையிலே வரலை” என்று கேட்டான்.

“காலையில எங்க கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுன்ல இருந்துச்சு. அதை சரி பண்ணிட்டு இப்ப தான் வரேன்” என்று பதிலுரைத்தான் அடைக்கப்பன்.

அப்போது, ஜானகியும் அவள் தாயாரும் “வாங்க” என்று அவனை கேட்டுவிட்டு போனார்கள். போகும்போது ஜானகி மட்டும் இவனை திரும்பி பார்த்து, புன்னகைத்து விட்டு போனாள். பெண் அழைப்பு சடங்குகள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கும்போது, அடைக்கப்பனும், ஜானகியும் மட்டும் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள். நடு, நடுவில் ஜானகி தன் அத்தை பெண் உண்ணா அருகில் உட்கார்ந்திருக்கும்போது, அடைக்கப்பனும், உண்ணாவிடம் சென்று பேசுகிற மாதிரி, ஜானகியிடமும் பேசிவிட்டு வந்தான். அங்கு ஜானகியின் இன்னொரு அத்தை பெண், வள்ளியும், இவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது  நேரத்தில் வள்ளி, ஜானகியை இழுத்துக்கொண்டு போய்,

“எப்படி உங்க வீட்டுல சொல்லப் போற” என்று ஜானகியிடம் கேட்டாள்.

அதற்கு ஜானகி,”இன்னொரு ரெண்டு மாசத்துல எனக்கு பரீட்சை முடிந்துடும். அப்புறம் சமயம் பார்த்து சொல்லணும்” என்றாள்.

அப்போது அந்த பக்கமாக நடந்த உண்ணா,

“என்னடி சமயம் பார்த்து சொல்லணும்” என்று கேட்டாள்.

உடனே ஜானகி, மழுப்பும் விதமாக”அது ஒண்ணும் இல்ல உண்ணா” என்று இழுத்தாள்.

வள்ளியோ, “உண்ணாவோட உதவி தான் இப்ப தேவை, அதனால மறைக்காம அவட்ட சொல்லு” என்று ஜானகியிடம் கூறினாள்.

“உங்களுக்குள்ள எண்ணங்கடி நடக்குது” என்று கேட்டாள் உண்ணா.

“இல்ல, நா வந்து உன் செட்டியாரோட அத்தை பையனை விரும்புறேன்” என்று கூறினாள் ஜானகி.

“யாரு, அடைக்கப்பனையா” என்று வாயைப் பிளந்து கேட்டாள் உண்ணா.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஜானகி.

“இந்த கூத்து எவ்வளவு நாளா நடக்குது” என்று கேட்டாள்.

“உன் கல்யாணத்திலிருந்து தான்” என்று பதிலுரைத்தாள் ஜானகி.

“என்னது!! என் கல்யாணத்திலிருந்தா?” என்று ஆச்சிரியமாக கேட்டாள் உண்ணா.

“ஆமாம் உண்ணா, விளக்கமா இன்னொரு நாள் சொல்றேன். நீ தான் எங்கப்பாக்கிட்டேயும்,அம்மாக்கிட்டேயும், அவரைப் பற்றியும், அவுங்க குடும்பத்தை பற்றியும் நல்ல விதமா சொல்லணும்” என்றாள் ஜானகி.

“நீ கவலையே படாதே ஜானு, உங்கப்பாம்மாக்கிட்ட அவுங்களைப் பற்றி நான் நல்லா சொல்றேன். இன்னும் நீ, அவுங்க வீட்டூக்கு மருமகளா போக ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். அவுங்க அம்மா ரொம்ப நல்ல டைப். உன்னைய தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க. சரி வா பந்தி பரிமாற” என்று இருவரையும் அழைத்தாள் உண்ணா.

வள்ளியும், ஜானகியும் சாப்பாடு பரிமாறும் இடத்துக்கு போனார்கள். அங்கு அடைக்கப்பன் உட்கார்ந்துக்கொண்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.

உடனே, வள்ளி ஜானகியிடம் “என்னடி அதுக்குள்ள அவன் சாப்பிட வந்துட்டான். பாரு என்னமா வெழுத்துக்கட்டிக்கிட்டு இருக்கிறதை என்று சொன்னாள்.

“ஏய், மரியாதையா பேசு, அவனிவன்னு சொல்லாதே. அப்புறம் அவர் சாப்பிடுறதை கண்ணு வைக்காதே” என்று கோபப்பட்டாள் ஜானகி.

“அம்மா தாயே, மன்னிச்சுக்கோடி, தெரியாம சொல்லிட்டேன். சரி, நாம போய் அவர் இலைக்கு பரிமாறாம, அடுத்த இலைக்கு பரிமாறுவோமா” என்று நக்கலாக கேட்டாள்.

“ச்சீ போடி, பாவம். சரி, நீ போய் அந்த வரிசையை கவனிச்சுக்கோ, நான் அவரை கவனிச்சுட்டு வரேன்” என்று கூறி அடைக்கப்பன் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

அடைக்கப்பனை போதும் போதும் என்று சொல்லசொல்ல,அவனுடைய இலையில் எல்லாவற்றையும் இரண்டு மூன்று தடவை வைத்து, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்து பிறகு அங்கிருந்து சென்றாள்.

சிதம்பரத்திடமும், அவனுடைய தந்தையிடமும், சென்று வருவதாக கூறி, அடைக்கப்பன் கிளம்பினான். அவர்கள் இருவரும் அவனை அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவனோ, கிடையவே கிடையாது என்று அன்றிரவே அங்கிருந்து கிளம்பி படமாத்தூருக்கு வந்து சேர்ந்தான்.

மறு நாள் காலையில், அவன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, உடனே மெட்ராஸுக்கு வருமாறு அவன் தந்தையிடமிருந்து போன் வந்தது.      பகுதி - 11

-    அடுத்த பாகத்தோடு முடிவு பெறுகிறது

No comments:

Post a Comment