Thursday, September 19, 2013

பாரதியார் மற்றும் டொரத்தி மெக்கெல்லர்

பாரதியார் மற்றும் டொரத்தி மெக்கெல்லர்
தீக்க்ஷா ஜெகதீசன், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ் பள்ளி,ஹோல்ஸ்வோர்தி
இந்தக் கட்டுரையில் நான் பாரதியார் மற்றும் டோரோதி மெக்கெல்லரைப் பற்றியும், அவர்களுடைய சில கவிதைகளின் விளக்கங்கள் பற்றியும் மற்றும் நான் அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டேன் என்பதைப் பற்றியும் விளக்கப்போகிறேன்.

பாரதியார்

பாரதியார் ஒரு பெருமைமிக்க கவிஞர். அவர் எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார்(1). அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் எட்டையபுர மன்னர் வியந்து அளித்த பட்டம் 'பாரதி(2). பாரதியார் 1894-1897 வரை திருநெல்வேலி இந்துக்கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும்  அவருக்கு 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி  ஏழு வயது நிரம்பிய செல்லம்மாவுடன் திருமணம் நடந்தது. அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியராகப் பொறுப்பேற்றார். பின்பு 'சக்கரவர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1905ம் ஆண்டில் இருந்து பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தனது நாடான இந்தியாவிற்காகத் தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார். அப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். இதனால் அவருக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு போராட்டமாகவே இருந்தது.

மக்களுக்காகப் பாரதியார் நிறையச் செய்து இருக்கிறார். வாழ்க்கை  நடைமுறைகளைத் தனது கவிதையால் விளக்கினார். பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களை எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார். பாரதியாரின் புகழ் உலகெங்கும் பரவியது.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டார். அதனால் அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.  யானை எப்போது அவரை மிதித்ததோ அன்றே தமிழும் இறந்தது என்று பல மக்கள் கூறினார்கள். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார்.  வாழ்க மகாகவி பாரதியார் மற்றும் அவரால் உயர்ந்த தமிழின் இனிமை.

டொரத்தி மெக்கெல்லர்

 டொரத்தி மெக்கெல்லர் சிட்னியில் 1885ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி சார்லஸ்–மரியோன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் (3). அவர் பள்ளிக்கூடம் போகவில்லை. அப்பாவும் அம்மாவும் அவருக்கு எல்லாமே வீட்டிலேயே சொல்லித் தந்தார்கள்.  வீட்டில் மட்டுமே கற்றிருந்தாலும் French, Spanish, German மற்றும் Italian ஆகிய பல மொழிகளைக்  கற்றுக்கொண்டார். டோரோதிக்கு நடிப்பிலும், அரசியலிலும் நிறைய ஆர்வம் இருந்தது.

அவர் பாரதியார் மாதிரி நிறையக் கவிதைகள் எழுதினார். அவர் இயற்றிய கவிதைகளில் மிக புகழ்பெற்ற கவிதைகள்: Colour, The dreamer , My country மற்றும் The waiting life(3). அவருக்கு ஆஸ்திரேலியாவின் மேல் நிறையப் பற்று இருந்தது. டொரோத்தியால் ஆஸ்திரேலியா நாட்டிற்கு ஒரு பெருமை.  

 The waiting life என்ற கவிதையின் மூலம் மனிதன் பொறுப்புடன் இருந்தால் அவனது வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று கூறி உள்ளார். அவருடைய கவிதை இன்றும் பலரால் வாசிக்கப்பட்டு வருகிறது.  

டொரத்தியின் Waiting Life கவிதை:

Since it befell, with work and strife
I had not time to live my life
I turned away from it until
Work should be done and strife be still.

My hands and head for use are free,
Nor does my own life worry me,
But docile as a spaniel waits
Until this present stress abates.

Tranquil it breathes, and waits, I know,
With all its joy contained. But oh
I hope when I have time to play
My life will not have run away!

-      Dorothea Mackellar


இந்த Waiting Life கவிதையில் அவர் என்ன சொல்கிறார் என்றால் நாம் நம் பொறுப்புகளை எல்லாம் முடித்த பிறகுதான் விளையாடி மகிழ்ச்சி  கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நிம்மதியாகவும் நன்றாகவும் இருக்கும் என்று கூறுகிறார்.  இந்தக் கவிதையால் நான் வாழ்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று  கற்றுக்கொண்டேன்.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

எனக்குப் பிடித்த பாரதியாரின் கவிதைகளில் இதுவும் ஒன்று.

அச்சமில்லை அச்சமில்லை பாடலைப் படித்ததால் நான் இனிமேல் வாழ்க்கையில் எதற்கும் பயப்பட மாட்டேன். எந்தப் பயத்தையும்  எதிர்த்துப் போராடுவேன்.

சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - இந்தக் கவிதையும் எனக்குப் பிடிக்கும். இந்தக் கவிதையில் அவர் கூறுவது என்னவென்றால் உண்மையில் யார் அறிவார்ந்த கல்வி மற்றும் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களே உயர்ந்த சாதியைச் சார்ந்தோர்கள். அதைவிட்டால் வேறு சாதி எல்லாம் இல்லை என்று கூறுகிறார். சாதி பார்த்து மக்களைப் பிரித்தல் பாவம் என்று சொல்கிறார்.

பாரதியார் மற்றும்  டொரத்தி இருவரும் சிறந்த  கவிஞர்கள். பாரதியார் பெண்கள் சுதந்திரத்திற்காகவும் போராடியவர். டொரத்தி வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும்  பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். இருவரும் தேசப் பற்றுடன் வாழ்ந்தவர்கள், வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்தவர்கள், நிறையக் கற்றவர்கள். இவர்கள் இயற்றிய கவிதைகளைப் படித்து நானும் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறேன். எனக்கும் என் நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை வருகிறது. இவர்கள் சொல்வது படி நாம் நம் வாழ்க்கையில் நடக்க வேண்டும்.


பாரதியார் புகழ் உலகறியச் செய்வோம், தமிழை வளர்ப்போம், நம் நாட்டின் மக்களின் நலனுக்காகப் போராடுவோம்!


  1. http://ta.wikipedia.org/s/15j
  2. http://tamil.culturalindia.net/subramanya-bharathi.html
  3. http://www.dorotheamackellar.com.au/archive.html

No comments:

Post a Comment