Tuesday, October 15, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

நாங்கள் நடித்த இரண்டு காட்சிகளை மார்ச் மாதம் 30 ஆம் தேதியும், ஏப்ரல் 1 ஆம் தேதியும் ஷூட் பண்ணினார்கள். பிறகு 10 நாள் கழித்து கூப்பிடுகிறோம் என்று சொன்னவர்கள், ஏப்ரல் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு போன் செய்து 16,17,18 தேதிகளில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருக்கும் அதனால் அந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக படப்பிடிப்புக்கு வந்து விடுங்கள் என்று கூறினார்கள்.  தொடர்ச்சியாக மூன்று நாட்கள் லீவு எடுக்க முடியுமா என்று எங்களுக்கு ஒரே குழப்பம். தெரியாத்தனமாக மாட்டிக்கிட்டோமா என்று நானும் என் நண்பர்களும்  பேசி கொண்டோம். அதில் ஒரு நண்பர், ராகேஷுக்கு “குறுகிய காலத்துக்குள் எங்களால் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாது” என்று ஒரு SMS அனுப்பி, எங்களையும் அனுப்ப சொன்னார். மற்ற மூன்று பேரும் அதே மாதிரி அனுப்பினோம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ராகேஷிடமிருந்து 17ஆம் தேதியும், 18ஆம் தேதியும் மட்டும் வந்தால் போதும் என்று ஒரு SMS வந்தது. மூன்று நாட்களுக்கு இரண்டு நாட்கள் பரவாயில்லை என்று முடிவு எடுத்து, நான் அலுவலகத்தில் இரண்டு நாள் விடுமுறை சொல்லிவிட்டேன். 16 ஆம் தேதி இரவு 10 மணிக்கு போன் செய்து, மறு நாள் marrickville என்ற இடத்தில் 2 மணிக்கு சூட்டிங் என்று சொன்னார்கள். அடப் பாவிகளா! இதை மின்னாடியே சொல்லியிருந்தா, ஒன்றரை நாள் மட்டும் லீவு போட்டியிருக்கலாமேன்னு நினைக்க தான் முடிஞ்சுது. விஜய் கூட போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வீட்டு அம்மணியும் மற்ற இரண்டு நண்பர்களின் துணைவியரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதனால மறு நாள் சூட்டிங்க்கு  மறுபடியும் குடும்பத்தை கூட்டிக்கொண்டு போனேன். அந்த இடம் ஷூட்டிங்க்கு தேவையான சாமான்களை(settings) வாடகைக்கு விடுகிற இடமாம். அந்த இடத்தின் கீழ்தளம் வெறும் சாமான்களாக நிரப்பப்பட்டு இருக்கும். மேல் தளத்தில் ஒரு பெரிய வரவேற்பறையும் உள்ளுக்குள் ஒரு சின்ன அறையும் இருக்கும். (அந்த இடத்தில் தான் நாங்கள் நடனம் கத்துக்கிற காட்சியும், விஜய்யும் அமலாபாலும் நடனம் ஆடுகிற காட்சியும் இடம்பெறும்). நான் அந்த இடத்துக்கு போய் சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மற்ற நான்கு நண்பர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது மேல் தளத்தில் அந்த நடனக் காட்சியை ஷூட்டிங் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அதனால், எங்களையெல்லாம் (நடிகர்களான நாங்கள் நால்வர் தவிர எங்களின் நான்கு குடும்பங்களும், வேறொரு நண்பரும் அவரின் குடும்பமும் பெரிய கூட்டமாக போயிருந்தோம்) மேலே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோரும் கீழே நின்று கொண்டிருந்தோம். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அதாவது நான்கு மணியளவில் கிருஷ்ணா கீழே வந்து, “ரொம்பவும் சாரிங்க, இன்னும் அந்த ஸீன் முடியலைங்க, அதனால உங்களோட ஸீன் இன்றைக்கு எடுக்க முடியாது, நாளைக்கு எடுக்கிறோம் என்று ரொம்பவும் வருத்தப்பட்டுக்கிட்டு சொன்னார். எங்களுக்கு வந்ததே கோபம். நாங்க எல்லோரும், “நீங்க சொன்னீங்கன்னு தான் லீவு போட்டுட்டு வந்தோம். இப்ப என்னடான்னா, எங்களோட ஸீன் எடுக்க முடியாதுன்னு சொல்றீங்க. என்னங்க இப்படி பண்றீங்கன்னு” ரொம்பவும் கோபமாக கேட்டோம். அவரும் ரொம்ப சாரிங்க, சாரிங்கன்னு சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தாரு. கடைசில எப்படியோ சமாதானமாகிட்டோம்(வேற வழி!!!!). குடும்பத்தையே கூட்டிக்கிட்டு வந்த நண்பர்கள் ரெண்டு பேரும், கிருஷ்ணாவிடம், “சரிங்க ஷூட்டிங் தான் இல்லாம போயிடுச்சு. நாங்க எல்லோரும் விஜய் கூட ஒரு போட்டோவது எடுத்துக்கிட்டு போறோம், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொன்னாங்க. உடனே அவரும், நான் விஜய் சார் கிட்ட சொல்றேன். கண்டிப்பா நீங்க போட்டோ எடுத்துக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன். ஆனா, அந்த காட்சி எடுத்து முடிச்சவுடனே தான் எடுக்க முடியும்னு சொல்லிட்டு போயிட்டாரு. நாங்களும் சரி வந்தது வந்தாச்சு, போட்டோவையாவது குடும்பத்தோட விஜய் கூட, அமலாபால் கூட எல்லாம் எடுத்துக்கலாம்னு காத்துக்கிட்டு இருந்தோம். மணியோ ஐந்தரை ஆயிடுச்சு. அப்ப இன்னொரு உதவி இயக்குனர் ராகேஷ் கீழே இறங்கி வந்தாரு, அவரிடம் அந்த காட்சி எனுத்து முடிச்சாச்சா, இன்னும் எவ்வளவு நேரமாகும் அப்படின்னு கேட்டோம். அவரும் இன்னும் எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்னு சொன்னாரு. சரி, நாங்களும் அதுக்குள்ள ஒரு காப்பியை குடிச்சுட்டு வந்துடலாம்னு, கொஞ்சம் பக்கத்துல இருக்கிற mcdonaldsக்கு போய், காப்பியெல்லாம் குடிச்சுட்டு சரியா 6.30 மணிக்கெல்லாம் வந்தோம். பார்த்தா அந்த இடமே காலியாக இருந்துச்சு, ஷூட்டிங்குக்கு வந்த பஸ் எல்லாம் காணோம். சரி, நாம வரதுக்குள்ள போயிட்டாங்க போல. அட கடவுளே, லீவு போட்டு, வெட்டியா ரெண்டு மணியிலிருந்து கால் கடுக்க நின்னுக்கிட்டு இருந்து ஒரு பிரயஜோனமே  இல்லாமே போயிடுச்சேன்னு, நொந்து நூடுல்ஸ் ஆயிட்டோம். இதுல என்ன ஒரு கொடுமைன்னா, நாங்களாவது நடிக்கிறதுக்காக லீவு போட்டு வந்தோம். ஆனா அந்த ரெண்டு நண்பர்களோட துணைவியாரும், எங்களோட ஷூட்டிங்கை பார்க்கிறதுக்கும், விஜய் கூட போட்டோ எடுத்துக்கிறதுக்காகவும், லீவு போட்டு வந்திருந்தாங்க. கடைசில ஒரு காப்பியினால போட்டோ எடுக்கிறது கெட்டுப் போச்சு.

அப்புறம், எப்ப எங்களோட ஷூட்டிங் நடந்துச்சு, நாங்க எப்படி அவுங்க கூட எல்லாம் போட்டோ  எடுத்தோம், இதுல அமாலாபால் வேற என்னைய “அண்ணான்னு” சொன்னது எல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.
 

                                        -    இன்னும் சொல்கிறேன்


No comments:

Post a Comment