Friday, November 1, 2013

தலை தீபாவளி - நாடகம்

அனைவருக்கும் என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.  போன வருட தீபாவளியை நான் தனிமையில கொண்டாடினேன். ஆனா இந்த வருடம் அதுக்கு நேர் மாறாக குடும்பத்தோட கொண்டாடப்போறேன்.  அதுவும் இந்த தீபாவளி எனக்கு கொஞ்சம் விஷேஷமானதும் கூட. ஏன்னா, 15 வருடத்துக்கு முன்னாடி  தலை தீபாவளியை மாமனார் வீட்டோட கொண்டாடினேன். அதற்கு பிறகு, இந்த வருடம் தான் மாமனாரும், மாமியாரும் எங்க வீட்டில எங்களோட தீபாவளியை கொண்டாட போறாங்க. தலை தீபாவளின்னு சொன்னவுடன் தான் போன வருடம் நான் எழுதி, இங்க சிட்னியில் மேடையேற்றிய "தலை தீபாவளி" நாடகம் நியாபகத்துக்கு வருது. அதனால அந்த நாடகத்தை நீங்கள் படிப்பதற்காக இங்கே பதியிறேன்.


தலை தீபாவளி

கதாபாத்திரங்கள்:

  1. ஈஸ்வரன் – மதுரையில் வசிப்பவர்
  2. பார்வதி   – ஈஸ்வரனின் மனைவி
  3. ஆதித்தன் – ஈஸ்வரனின் மருமகன்
  4. ஆராதனா – ஈஸ்வரனின் மகள்
  5. கபிலன்   – ஆதித்தனின் நண்பன்
  6.  முகிலன்  – ஆதித்தனின் மருமகன்
  7. கயல்விழி – ஆதித்தனின் மகள்

முன்னுரை:

இந்த நாடகம் ஒரு குடும்ப நாடகம். இரண்டு தலைமுறையினர் எப்படி தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர் என்பதை நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையில், ஈஸ்வரனும், பார்வதியும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் ஆராதனா. அவளுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் ஆதித்யனுக்கு திருமணம் செய்து, மெட்ராஸுக்கு அனுப்பிவைத்தார்கள். இனி நடப்பதை பாருங்கள்.

காட்சி – 1:

இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)
காலம் – 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.

கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி,

(ஈஸ்வரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்).
ஈஸ்வரன்: பாரு, பாரு, கொஞ்சம் காபி கிடைக்குமா?

பார்வதி: இந்த காப்பிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் காப்பி குடிப்பீங்களோ!. ஆமா, ரிட்டையர் ஆகி வீட்டுக்குள்ள, சும்மாதானே இருக்கீங்க. இந்த முறுக்கு மாவை கொஞ்சம் பிழிஞ்சு கொடுக்கிறதுக்கு என்னவாம்?
ஈஸ்வரன்: ஏண்டி, இவ்வளவு பெரிய உருவத்தை வச்சுக்கிட்டு உன்னாலையே பிழிய முடியலைன்னா, என்னால மட்டும் எப்படி பிழிய முடியும்.

பார்வதி: என்னைய மாதிரி உங்களால ஆக முடியலைன்னு, உங்களுக்கு பொறாமை. எப்பவுமே மனசுல வஞ்சனை இல்லாம இருந்தாதான் உடம்பு நல்லா வளரும்.
ஈஸ்வரன்: அப்ப, நான் என்ன கெட்டவன்னு சொல்றியா?

பார்வதி: உங்களை, அப்படி எல்லாம் நான் சொல்லுவேனா. பொம்பளை நானே, என்னைக்காவது உங்க அப்பா அம்மாவைப் பத்தி குறை சொல்லியிருக்கேனா? ஆனா, நீங்க எப்ப பாரு, எங்கப்பாவையே குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
ஈஸ்வரன்: ஏண்டி, உங்கப்பா சொன்ன சொல்லை காப்பாத்தி இருந்தாருன்னா, நான் ஏன் அவரை குறை சொல்லப் போறேன். தலை தீபாவளிக்கு போடுறேன்னு சொன்ன மோதிரத்தை, அடுத்த தீபாவளிக்கு போடுறேன்னு சொல்லி சொல்லியே, 24 தீபாவளி முடிஞ்சுடுச்சு. இதோ 25வது தீபாவளியும் வரப்போகுது. உங்கப்பா இன்னமும் எனக்கு அந்த மோதிரத்தை போடலை. அப்புறம் நான் உங்கப்பாவை குறை சொல்லாம எப்படி இருக்க முடியும்.

பார்வதி: ஏங்க!!, இன்னமுமா அதை நியாபகம் வச்சிருக்கீங்க? ஏதோ, எங்கப்பாவால போட முடியாம போயிடுச்சு. அதுக்காக நீங்க இப்படி சொல்லிக்காட்டுறது கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க.
ஈஸ்வரன்: செய்யுறேன்னு சொல்லிட்டு, செய்யலைன்னா, சொல்லித்தானே காட்டுவாங்க. இதுல நாங்க இப்படி பேசக்கூடாதாம். இது எந்த ஊரு நியாயம்.

பார்வதி: நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. எனக்கென்ன, நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுற போறேன். சரி, சரி, தலை தீபாவளின்னு சொன்னவுடனே தான் எனக்கு நியாபகம் வருது, வர்ற 17ஆம் தேதி தான் தீபாவளி. நம்ம மாப்பிள்ளைக்கு போடுறதுக்கு மோதிரம் வாங்கிட்டீங்களா?
ஈஸ்வரன்: எவடி, இவ. என்னைய என்ன இனா வாயன்னு நினைச்சுக்கிட்டியா, உங்கப்பாவே அவரோட மாப்பிளைக்கு ஒண்ணும் செய்யலையாம், நான் மட்டும் எப்படி என் மாப்பிளைக்கு செய்யுறது.

பார்வதி: அப்ப, மாப்பிளைக்கு மோதிரம் போட மாட்டீங்களா?
ஈஸ்வரன்: மாட்டேன். இத பாரு, துணிமணி எல்லாம் எடுத்துக் கொடுப்போம், போட்டுக்கட்டும். ஆனா, இந்த மோதிரம், அப்புறம் துணிமணி கொடுக்கும்போது, பணம் வச்சுக் கொடுக்கிறது, இதெல்லாம் கிடையவே கிடையாது.

பார்வதி: ஆண்டவா, இந்த மனுசனுக்கு புத்தி ஏன் தான் இப்படி போகுதோ? தீபாவளி அன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ? பிள்ளையாரப்பா, தீபாவளி நல்ல படியா முடிஞ்சா, உனக்கு ஒரு தேங்காய உடைக்கிறேன்.
ஈஸ்வரன்: அட!அட!, இதுக்கெல்லாம் போயி ஏன்டி கடவுளை கூப்பிடுற. அவருக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இதுல அவருக்கு லஞ்சம் வேறயா. மனுஷங்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுத்தது பத்தாதுன்னு, இப்ப கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? இங்கப் பாரு,தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. வந்தாலும் நான் சமாளிச்சுக்குறேன்.

பார்வதி: என்னமோ போங்க, தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அப்படி ஏதாவது வந்துச்சுன்னா, இதோ இந்த மோதிரத்தை கழட்டி, மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துடுவேன்.
ஈஸ்வரன்: அப்படி, எதுவும், பண்ணி கிண்ணி, வச்சுறாதேடி. ஆமா இந்த மோதிரத்தை உனக்கு நான் எப்ப போட்டேங்குறதை மறந்துட்டியா?. 

பார்வதி: அது எப்படிங்க மறப்பேன். நம்ம ஆராதனா பொறந்து, நான் ஆஸ்பத்திரில இருக்கும்போது, என்னையும், குழந்தையையும் பார்க்க வந்த நீங்க, ஆசை ஆசையா எனக்கு போட்ட மோதிரமாச்சே.
ஈஸ்வரன்: மறக்காம நியாபகம் வச்சிருக்க. அப்புறம் எப்படிடி அதை மாப்பிள்ளைக்கிட்ட கொடுப்பே?

பார்வதி: அன்னைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து, உங்களால சமாளிக்க முடியாலைன்னா, இது தான் அந்த பிரச்சனைக்கு தீர்வு. இதை நியாபகம் வச்சுக்கிட்டு நடந்துக்குங்க. (போகிறாள்)
ஈஸ்வரன்: இப்ப நான் கடவுளை கூப்பிடணும் போல இருக்கே. ஆண்டவா, தீபாவளி அன்னைக்கு மாப்பிள்ளை எந்த பிரச்சனையும் பண்ண கூடாது. எல்லாம் நல்ல படியா முடிச்சுக் கொடுப்பா.

 
காட்சி – 2:
 

இடம் - (சென்னை – ஆதித்தன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், கபிலன்,

(ஆதித்தன் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது கபிலன் உள்ளே வருகிறான்)
ஆதித்தன்: வா, கபிலா. எப்படி இருக்க? உட்காரு.

கபிலன்: நான் நல்லா தான் இருக்கேன் ஆதித்தா. ஆமா , என்ன பொன்னியின் செல்வனா படிச்சுக்கிட்டு இருக்க? எத்தனை தடவை தான் அதை படிப்ப?
ஆதித்தன்: எத்தனை தடவை படிச்சாலும், அலுக்காத ஒரு நாவல்னா, அது இது தான். நீ தான் ஒரு தடவை கூட இதை படிக்கலையே?

கபிலன்: நீயும் நிறைய தடவை சொல்லிட்ட, சரி, இன்னைக்கு கொடு, நான் படிச்சுப் பார்க்குறேன். ஆமா, எங்க தங்கச்சிய காணோம்?
ஆதித்தன்: நாம தான் பட்டாசு எல்லாம் வாங்கிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு போகனுமாமே. எனக்கு இந்த பட்டாசுன்னாலே அலெர்ஜி ஆச்சே, அதான், அவ வாங்க போயிருக்கா. ஆமா, எங்க உன் வீட்டில ஆள காணோம்?

கபிலன்: பக்கத்து வீட்டு மாமிக்கு, ஏதோ புடவை எடுக்கணுமாம், அதான் இவளையும் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.
ஆதித்தன்: சரி, இந்த வருஷம் நம்ம ரெண்டு பேருக்குமே தலை தீபாவளி. நீ எத்தனை நாள் லீவு போட்டிருக்க?

கபிலன்: நான் 4 நாளு லீவு போட்டிருக்கேன்.
ஆதித்தன்: என்னது 4 நாளா! அவ்வளவு நாள் எல்லாம் மாமனார் வீட்டில போய் இருக்க கூடாதுடா. அப்புறம் நம்ம prestige என்னாகுறது? நான் பாரு ரெண்டே நாள் தான் லீவு போட்டிருக்கேன்.

கபிலன்: இல்லடா, தலை தீபாவளிக்கு கூப்பிடுறதுக்காக மாமனார் வந்தபோது, “மாப்பிள்ளை நாலைந்து நாள் லீவு போட்டுக்கிட்டு வாங்க. தீபாவளி அன்னைக்கு ரிலீஸ் ஆகுற மைக்கேல் மதன காமராஜன் படம் போய் பார்க்கலாம். அப்புறம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போங்கன்னு சொன்னாருடா.
ஆதித்தன்: அடப்பாவி, படத்துக்கு எல்லாம் வேற போறீங்களா?

கபிலன்: ஆமாண்டா, அப்புறம் எனக்கு மோதிரம் போடுறதுக்கு விரல் அளவு எல்லாம் எடுத்துக்கிட்டு போனாங்க.
ஆதித்தன்: விரல் அளவு எல்லாம் எனக்கு எடுக்கவேயில்லையே!.

கபிலன்: உன் விரல் ரொம்ப சின்ன விரல் இல்ல, அதுனால அவுங்களுக்கே தெரியுமா இருக்கும். ஆமா, என்ன மோதிர விரல்ல பிளாஸ்திரி போட்டிருக்க?
ஆதித்தன்: அது வேற ஒண்ணும் இல்ல, நீ தான் சொன்னியே, என் விரல் ரொம்ப சின்னதா இருக்குதுன்னு. அதனால தேள் கடிச்சிடுச்சுன்னு சொல்லி, பிளாஸ்திரி போட்டிருக்கேன். அப்பதானே பெரிய மோதிரமா போட முடியும்.  

கபிலன்: அட பாவி, இப்படியெல்லாம் வேற யோசிக்கிறியா? பெரிய மோதிரம்னா உனக்கு ரொம்ப லுசா இருக்குமே?
ஆதித்தன்: மோதிரத்துல நூல் சுத்தி போட்டுக்க வேண்டியது தான்.

கபிலன்: ஏன்டா, உனக்கு இந்த வேண்டாத வேலை?
ஆதித்தன்: அதுக்கில்ல மாப்ள, நமக்கு தான் ஹிந்தி தெரியாது. எப்பவாது தேவைப்பட்டா, அந்த மோதிரமாவது போய் சேட்டு வீட்டில ஹிந்தி படிக்கட்டுமே. அப்ப மோதிரம் பெருசா இருந்தா தானே நமக்கு நல்லா இருக்கும்.

கபிலன்: கஷ்டம்டா சாமி. மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிற. ஆமா, போன வாரம் ஆபிஸுக்கு ஒரு நாள் லீவு போட்டியே, இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு தான் லீவு போட்டியா?
ஆதித்தன்: சும்மா, கிண்டல் பண்ணாதடா.

கபிலன்: சரி, உனக்கு, தலை தீபாவளின்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா?
ஆதித்தன்: அதான், நீ சொல்லிட்டியே, மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு. மாமனார் தலையை மொட்டை அடிக்கிறதுனால தான் , அதுக்கு தலை தீபாவளின்னு பேர் வந்திருக்கு.

கபிலன்: ச்சி! சும்மா காமெடி பண்ணாதே. கல்யாணம் ஆகி, முதல் தீபாவளியை கொண்டாடுறதுனால, அதுக்கு தலை தீபாவளின்னு பேரு.

ஆதித்தன்: அப்ப ஏன் தலை பொங்கல்ன்னு சொல்றதில்லை?
கபிலன்: டேய், நீ இப்படி எல்லாம் விதண்டாவாதமா கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது?

ஆதித்தன்: உனக்கு தெரியலைன்னு சொல்லு. பொதுவா நம்ம கலாச்சாரத்துல ஆண்களோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும்.
கபிலன்: ஆமா இல்ல! கல்யாணம் முடிஞ்சவுடனே, பெண்கள் தான் அவுங்க பிறந்த வீட்டை விட்டுட்டு, கணவனோட வீட்டுக்கு வராங்க. ஆண்கள் யாரும் அந்த மாதிரி போறதில்லை இல்லை.

ஆதித்தன்: ஆமா. பையன் வந்து எதுக்கும், பொண்ணு வீட்டில போய் தங்க மாட்டான். எல்லா விஷேசத்தையும், பையன் வீட்டுல தான் கொண்டாடுவாங்க. பொண்ணு வீட்டுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தான் கல்யாணம் முடிஞ்சு வர்ற முத தீபாவளியை தலை தீபவாளின்னு சொல்லி பொண்ணு வீட்டுக்கு போய் கொண்டாடுறோம்.
கபிலன்: அட, பரவாயில்லயே, உனக்கு மாமானரை எப்படி மொட்டை போடுறதுன்னு தான் தெரியும்னு நினைச்சேன். இதெல்லாம் கூட தெரிஞ்சிருக்கு.

ஆதித்தன்: நீ வேற, இதெல்லாம் நான் மத்தவங்ககிட்டேருந்து கேட்டு தெரிஞ்சுக்கிட்டது. ஆனா, இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது.
கபிலன்: உண்மையோ இல்லையோ, ஆனா காரணம் நல்லாதான் இருக்கு. சரிடா, நான் கிளம்புறேன். ரொம்பவும் உன் மாப்பிள்ளை முறுக்கு எல்லாம் காட்டாம ஒழுங்கா தலை தீபாவளியை முடிச்சுட்டு ஊர் வந்து சேரு.

ஆதித்தன்: உன்னுடைய அறிவுரைக்கு ரொம்ப நன்றி. இந்தா, இந்த புக் கேட்டியே. பொறுமையா படிச்சுட்டு, அடுத்த பாகத்தை வாங்கிக்கோ.  

காட்சி – 3:
 
இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி, ஆராதனா மற்றும் ஆதித்தன்

பார்வதி: ஏங்க, இன்னைக்கு 4 மணிக்கு, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல தான் பொண்ணும், மாப்பிளையும் வறேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை கூட்டிக்கிட்டு வந்துடுங்க.
ஈஸ்வரன்: ஒண்ணு பண்றேனே, ஒரு தட்டுல வெத்திலை, பாக்கு வச்சுக் கொடு, நான் துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை மரியாதையோடு அழைச்சுக்கிட்டு வரேன்.

பார்வதி: அட, இதுவும் நல்லா இருக்கே, (யோசித்துப் பார்த்து சிரிக்கிறாள்).
ஈஸ்வரன்: என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு.

பார்வதி: இல்ல, நீங்க துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு, கைல தாம்பூல தட்டை வச்சுக்கிட்டு பவ்யமா நிக்கிறதை கற்பனை பண்ணிப் பார்த்தேன், ரொம்ப காமெடியா இருந்துச்சா, அதான் என்னைய மீறி சிரிச்சுட்டேன். இருங்க நான் போய் தட்டு, வெத்திலை பாக்கு எல்லாம் ரெடி பண்றேன்.

ஈஸ்வரன்: ஏய், இரு, இரு, நான் ஒரு நக்கலுக்கு சொன்னா, அதுக்கு கண்ணு, காது எல்லாம் வச்சு பாக்குற. அதெல்லாம் நான் போகணும்னு ஒண்ணும் இல்ல. அவுங்களே வந்துடுவாங்க.
(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் உள்ளே வருகிறார்கள்)

ஈஸ்வரன்,பார்வதி: வாங்க, வாங்க மாப்ள, வாம்மா ஆராதனா.
(ஆதித்தன் தலையை மட்டும் ஆட்டுகிறான். இந்தாங்க இதுல பட்டாசு இருக்கு. (ஆராதனா பையை பார்வதியிடம் கொடுக்கிறாள்)

ஈஸ்வரன்: மாப்பிள்ளை, பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?.
ஆதித்தன்: எல்லாம் நல்லா இருந்துச்சு மாமா.

(அப்போது பார்வதி சோம்பில் தண்ணி கொண்டுவந்து ஆராதனாவிடம் கொடுக்கிறாள். ஆராதனாவும் அதை ஆதித்தனிடம் தருகிறாள். ஆதித்தனும் குடித்துவிட்டு சொம்பை கீழே வைக்கிறான்)
ஈஸ்வரன் சரி மாப்பிள்ளை, நீங்க டையர்டா இருப்பிங்க. ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க.

(ஆதித்தன் போகிறான்)
பார்வதி: என்னம்மா ஆராதனா, எப்படி இருக்க? மாப்பிள்ளை உன்னைய நல்ல கவனிச்சுக்கிறாரா?

ஆராதனா: ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்மா. என்ன, கொஞ்சம் கோபம் ஜாஸ்தி. வாய்க்கு ருசியா செஞ்சா, நல்லா வெளுத்துக் கட்டுவார்மா.
பார்வதி: அப்படியெல்லாம் சொல்லக் கூடாதாம்மா. அப்புறம் உன் கண்ணே பட்டுடும்.

ஆராதனா: சரிம்மா, நான் இனிமே அந்த மாதிரி சொல்லலை. அப்பா அப்புறம், நாளைக்கு அவர் போட்டுக்கிறதுக்கு துணிமணி எல்லாம் வாங்கிட்டீங்களா? முக்கியமா மோதிரம் வாங்கிட்டீங்களா?
பார்வதி: உம், நல்லா கேளு.

ஈஸ்வரன்: துணிமணி எல்லாம் எடுத்தாச்சு கண்ணு, இந்த மோதிரம் தான் வாங்கலை.
ஆராதனா: என்னது வங்கலையா. நாளைக்கு அவருக்கு மோதிரம் கிடையாதா? அவருக்கு ஏறக்கனவே கோபம் ஜாஸ்தி. இப்ப மோதிரம் இல்லன்னு சொன்னா, அவர் தாம் தூம்னு குதிப்பாரே?

ஈஸ்வரன்: ஆமாடா குட்டி. மோதிரம் வாங்க முடியாம போயிடுச்சு. நீ தான் மாப்பிள்ளையை ஏதாவது சொல்லி சமாதானப் படுத்தணும்.
ஆராதனா: என்னப்பா, இப்படி திடீர்னு ஒரு குண்டை போடுறீங்க. சரி, நான் எப்படியாவது சொல்லி சமாளிக்கிறேன்.

(மறு நாள் காலை. ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு,காபியோடு வருகிறாள்)
ஆராதனா: அதுக்குள்ளா எந்திரிச்சு பல் விளக்கிட்டீங்களா! இந்தாங்க காபி. பாத்ரூம்ல வெந்நீர் ரெடியா இருக்கு. அப்புறம் தலைக்கு தேச்சுக்கிறதுக்கு எண்ணையும் இருக்க. நீங்க காபி குடிச்சிட்டு, சீக்கிரம் கங்கா ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுங்க.

ஆதித்தன்: கங்கா ஸ்நானம் பண்ணணும்னா, நான் காசிக்கில்ல போகணும்.
ஆராதனா: சும்மா விளையாடாதீங்க. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. அப்பா துணிமணி குடுப்பாங்க. அதை போட்டுக்குங்க.

ஆதித்தன்: ஆமா மோதிரத்தை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலை. உங்கப்பா வேற , மோதிரத்துக்கு அளவு எடுக்கலை. உம். கொஞ்சம் பெருசா தானே மோதிரம் செஞ்சிருக்காங்க. சின்னதா பண்ணியிருந்தா இந்த விரலுக்குள்ள போகாது.(பிளாஸ்திரி போட்டா விரலை பார்த்துக்கொள்கிறான் ).
ஆராதனா: (தரையைப் பார்த்து, கட்டை விரலால கோலம் போட்டுக்கொண்டு), ஏங்க நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?

ஆதித்தன்: என்னது! பீடிகை, பலமா இருக்கு. மோதிரத்தை சின்னதா செஞ்சுட்டாங்களா? பரவாயில்லை, நான் சுண்டு விரல்ல போட்டுக்குறேன்.
ஆராதனா:(மெல்லமாக இந்த மனுஷன் மோதிரத்தை விட்டு வெளியே வர மாட்டேங்குறாரே). இல்ல, இல்ல, அப்பா இந்த வருஷம் மோதிரம் போடலையாம், அடுத்த வருஷம் போடுறாங்களாம்.

ஆதித்தன்: (சத்தமாக) என்னது! மோதிரம் இல்லையா. அப்புறம் எதுக்கு என்னைய தலை தீபாவளிக்கு வாங்கன்னு கூப்பிட்டீங்களாம்?
ஆராதனா: மெல்லாமா பேசுங்க, அம்மா, அப்பா காதுல விழுந்துட போகுது.

ஆதித்தன்: (இன்னும் சத்தமாக), நல்லா விழட்டும். இதப் பாரு, மோதிரம் போட்டா, நான் இங்க இருக்கேன். இல்லையா, இதோ இப்பவே நான் கிளம்புறேன். உங்க அப்பா அம்மாக்கிட்ட போய் சொல்லு.
(அதற்குள் சத்தம் கேட்டு, ஈஸ்வரனும், பார்வதியும் வருகிறார்கள்)

ஆராதனா: ஏம்பா, ஒரு மோதிரத்தை செஞ்சிருந்தீங்கன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதில்லை.
ஈஸ்வரன்: மாப்பிள்ளை, கொஞ்சம் பொருத்துக்குங்க. நான் அடுத்த வருஷம் பெரிய மோதிரமா செஞ்சு குடுக்கிறேன்.

(ஆதித்தன் உம்மென்று இருக்கிறான்).
பார்வதி: (ஈஸ்வரனிடம்), ஏங்க, இந்த மோதிரத்தை மாப்பிள்ளைக்கு கொடுங்க. (மோதிரத்தை கழட்டி கொடுக்கிறாள். ஈஸ்வரனோ அதை வாங்காமல் நிற்கிறார்)

ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), அந்த மோதிரத்தை எனக்கு தர்மம் பண்ணி, என்னைய அசிங்கப் படுத்துறீங்களா? இது சரி வராது. நான் இப்பவே கிளம்புறேன்.
ஈஸ்வரன்: (பார்வதியிடம்)நீ மடத்தனமா செஞ்சு, மாப்பிள்ளையோட கோபத்தை இன்னமும் அதிகமாக்கிட்ட. மாப்பிள்ளை, அடுத்த வருஷம் கண்டிப்பா மோதிரம் போடுறேன்.

ஆராதனா: ஏங்க, எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்குளேன். பிளீஸ்.
ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), உன் முகத்துக்காக, நான் பொருத்துக்குறேன். ஆனா, உங்கப்பா கொடுக்குற புது துணியை எல்லாம் போட்டுக்க மாட்டேன். சரி, நான் குளிச்சுட்டு வரேன்.

ஈஸ்வரன்: மாப்பிள்ளை, நீங்க இவ்வவளவு தூரம் இறங்கி வந்ததே போதும்.
(எல்லோரும் போகிறார்கள்)

(ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தட்டில் பலகாரங்களோடு வருகிறாள்)
ஆராதனா: இந்தாங்க, எங்க அம்மா செஞ்ச பலகாரம்.



ஆதித்தன்: ஆ! வாசனை மூக்கைத் துளைக்குதே. கொடு, கொடு.
(எல்லாத்தையும் நல்லா சாப்பிடுகிறான். அப்போது பார்வதியும்,ஈஸ்வரனும் வருகிறார்கள்)

ஆதித்தன்: இந்த மைசூர்பாகும்,லட்டும் இன்னும் கொஞ்சம் வை.
(உடனே, பார்வதி வேக வேகமா ஓடி, ஆராதனாவிடம் கொடுக்கிறாள்).

ஆராதனா: (அவன் தட்டில் வைத்துக் கொண்டே, ஆமா, அப்படி கோபம் வந்துச்சு, இப்ப என்னடான்னா, வெளுத்துக் கட்டுறீங்க?
ஆதித்தன்: சண்டை வேற, சாப்பாடு வேற. உங்கம்மா செஞ்ச பலகாரம் எல்லாம், எங்கம்மா செஞ்ச மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. நாம திரும்பி ஊருக்கு போறதுக்குள்ள, இதெல்லாம் உங்கம்மாக்கிட்டேருந்து கத்துக்கோ.

ஆராதனா: சரிங்க. (அம்மாவிடம் கிட்ட போய்) பாரும்மா, இப்படி சாப்பிடுவாரு, ஆனா உடம்பு மட்டும் வராது. பார்க்கிறவங்களுக்கு, நான் என்னமோ ஒழுங்கா சமைச்சு போடாத மாதிரி தோணும்.
(பார்வதி, ஈஸ்வரனை பார்த்து, நக்கலாக சிரிக்கிறாள். அதற்குள் ஆதித்தனும் சாப்பிட்டு எந்திரிக்கிறான்).

ஆதித்தன்:(ஆராதனாவிடம்), சரி நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன், நாளைக்கு ஒரு மணிக்கு நமக்கு train இருக்கு. நியாபகம் இருக்கட்டும்.
பார்வதி: என்னடி, நாளைக்கே கிளம்பனுமா?

ஆராதனா: ஆமாம்மா, அவருக்கு ஆபிஸ்ல லீவு கிடையாதும்மா.
(எல்லோரும் போகிறார்கள்).

(22 வருடம் கழித்து)

காட்சி – 4:

இடம் - (சென்னை– ஆதித்தன் வீடு)
கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், ஆராதனா, முகிலன், கயல்விழி, ஈஸ்வரன், பார்வதி மற்றும் கபிலன்)

(ஆராதனா அங்கும் இங்கும் போய் கொண்டும், வந்துக் கொண்டும் இருக்கிறாள்.)
ஆதித்தன்: ஆமா, என்ன கால்ல, சக்கரத்தை கட்டிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருக்கிற?நாளைக்கு தானே தீபாவளி. என்னமோ இன்னைக்கு தான் தீபாவளி மாதிரி திரியிற?

ஆராதனா: நம்ம பொண்ணும், மாப்பிள்ளையும் தலை தீபாவளிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வராங்க. நான் எல்லாம் செஞ்சு வைக்க வேண்டாமா? ஆமா நீங்க இன்னும் ஏர்போர்ட் போகலையா?
ஆதித்தன்: ஃப்ளைட் 11மணிக்கு தான் லாண்ட் ஆகுது. அவுங்க வெளியே வரதுக்கு எப்படியும் 12வது ஆயிடும். மணி இப்ப 11.30 தான் ஆகுது. நான் கார் எடுத்துக்கிட்டு இப்ப போறேன். சரியா இருக்கும்.

(அப்போது முகிலனும், கயல்விழியும் வருகிறார்கள்)

ஆதித்தனும், ஆராதனாவும்: வாங்க வாங்க. நீங்களே வந்துட்டீங்க?
முகிலன்: Flight one hour earlierஆ லாண்ட் ஆயிடுச்சு. அதான் நாங்களே கால் டாக்ஸி எடுத்து வந்துட்டோம்.

ஆதித்தன்: மாப்பிள்ளை, விமானப் பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா?
முகிலன்: எல்லாம் நல்லா இருந்துச்சு அங்கிள். ஆமா, நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?

ஆராதனா: புடவையை இழுத்துப் போர்த்திக்கிட்டு, (மெல்லமாக) நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை.
முகிலன்: அட, எதுக்கு இப்படி கூச்சப்படுறீங்க. நானும் உங்களுக்கு ஒரு மகன் தான். அதனால தான் மாபிள்ளையை மருமகன்ன்னு சொல்றோம்.

ஆதித்தன்: அட! அட! பார்த்தியா என் மாப்பிள்ளையை, என்ன அருமையா மருமகனுக்கு விளக்கம் கொடுக்கிறதை. சரிம்மா, கயல்விழி, மாப்பிள்ளையும், நீயும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, குளிச்சுட்டு வாங்க. எல்லோரும் சாப்பிடலாம்.
முகிலன்: நோ அங்கிள். இப்ப ரெஸ்ட் எடுத்தா, jetlog அதிகமாயிடும். அதனால நாங்க குளிச்சிடுறோம். கயல், முதல்ல நீ குளிக்கிறியா, இல்ல நான் குளிக்கட்டுமா?

கயல்விழி: நீங்களே, முதல்ல குளிச்சிட்டு வாங்க.
(முகிலன் போகிறான்)

ஆராதனா: என்னமா கயல், ஆஸ்திரேலியா எல்லாம் எப்படி இருக்கு.
ஆதித்தன்: ஏம்மா, நீங்க இருக்கிற இடத்துல நம்ம தமிழ் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா?

கயல்விழி: ஆஸ்திரேலியா ரொம்ப சூப்பர்ரா இருக்கு. நாங்க சிட்னில இருக்கோம். அங்க நம்ம ஊர்க்காரங்க நிறைய பேர் இருக்காங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே தமிழ் பேசுறவங்க இருக்காங்க. அப்புறம் தமிழ் ஸ்கூல் வேற இருக்கு. போன வாரம் தான் நான் அதுல டீச்சரா சேர்ந்திருக்கேன். அதான் உங்களுக்கு போன்ல சொல்ல முடியலை.

ஆதித்தன்: நீ தமிழ் வேற சொல்லிக்கொடுக்கிறியா! பலே! பலே! சரிம்மா, மாப்பிள்ளை உன்னைய எப்படி பார்த்துகிறாரு?
கயல்விழி: அவர் ரொம்ப நல்ல டைப்பா. எதுக்குமே கோபப் படமாட்டாரு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

ஆதித்தன்: இதை கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்புறம் நாளைக்கு மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்கு, வைர மோதிரம் செஞ்சு வச்சிருக்கேன். போட்டு பார்க்கட்டும். பெருசா இருந்தா நூல் சுத்தி போட்டுக்கட்டும்.
ஆராதனா: என்னது, வைர மோதிரமா. என்கிட்ட கூட சொல்லவே இல்ல.

ஆதித்தன்:உண்கிட்ட சொன்னா? நீ உடனே உங்கப்பாம்மாக்கிட்டே சொல்லுவ. எனக்கு அது பிடிக்கலை. அதனால தான் உன்கிட்ட சொல்லலை.
ஆராதனா: ஏங்க, இன்னமுமா உங்களுக்கு அந்த கோபம் தீரலை.

கயல்விழி: என்ன கோபம்மா?
ஆராதனா: அது ஒண்ணும் இல்லடா, எல்லாம் பழைய கதை.

கயல்விழி: ஏம்பா, மாப்பிள்ளைக்கு மட்டும் தான் மோதிரமா? எனக்கில்லையா?
ஆதித்தன்: உனக்கு தான் கல்யாணத்தன்னைக்கே நிறைய கொடுத்தாச்சே. அதுவும் இல்லாம, மாப்பிள்ளைக்கு தலைதீபாவளி அன்னைக்கு மோதிரம் போடுறது ஒரு சம்பிரதாயம்மா.

கயல்விழி: நான் சும்மா தான்பா கேட்டேன். சரி, அவர் குளிச்சுட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன். நான் போய் குளிக்கிறேன்.
(எல்லோரும் போகிறார்கள். மறு நாள் காலை)

ஆதித்தன்: கயல்விழி,அம்மாக்கிட்ட காப்பி வாங்கிக்கிட்டு, மாப்பிளையை போய் எழுப்பும்மா. அப்புறம் அவர் கங்கா ஸ்நானம் வேற பண்ணனும். நேரம் ஆகுது பாரு.
(அப்போது முகிலன், குளித்து விட்டு துண்டை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான்)

ஆதித்தன்: அடடா! மாப்பிள்ளை அதுக்குள்ள கங்கா ஸ்நானம் பண்ணிட்டிங்கீளா?
முகிலன்: ஆச்சு அங்கிள்.

ஆதித்தன்: ஆராதனா, கயல்விழி எல்லோரும் வாங்க. வரும்போது, மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்காக நான் தனியா எடுத்து வச்சிருந்ததை எடுத்துக்கிட்டு வாங்க.
(ஆராதனா, அந்த டிரஸ்ஸை ஆதித்தனிடம் கொடுக்கிறாள்)

ஆதித்தன்: இந்தாங்க மாப்பிள்ளை, தலை தீபாவளிக்காக நாங்க உங்களுக்கு செய்ய வேண்டிய சீர்.
முகிலன்: இந்த formalities எல்லாம் எதுக்கு அங்கிள். சரி, பெரியவங்க நீங்க ஆசைப்பட்டு செய்யுறீங்க, நான் வாங்கிக்கிறேன். அதே மாதிரி நான் சொல்றதை இப்ப நீங்க கேக்கணும். கயல் நாம முடிவு எடுத்ததை சொல்லு.

(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் ஒண்ணும் புரியாமல் தங்களுக்குள் பார்த்துக் கொள்கிறார்கள்)
ஆதித்தன்: (பயந்துக்கொண்டே) என்னம்மா, முடிவு கிடிவுன்னு என்னமோ சொல்றீங்க. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு.

கயல்விழி: அப்பா, எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க? ஒண்ணும் பயப்பிட வேண்டாம். இந்த தலைதீபாவளியை நாம எல்லோருமா சேர்ந்து ஒரு அநாதை ஆசிரமத்தில போய் கொண்டாடலாம்னு முடிவு எடுத்திருந்தோம். அதை தான் அவர் சொல்றாரு.
ஆதித்தன்: அப்பாடி, இவ்வளவு தானா, நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன். இது ரொம்ப நல்லா விஷயமா இருக்கே. (முகிலனையே பார்க்கிறார்)

முகிலன்: என்ன அங்கிள், என்னையே பார்க்கிறீங்க?
ஆதித்தன்: இல்ல, என்னோட தலைதீபாவளில இந்த மாதிரி எல்லாம் எனக்கு ஏன் தோனலைன்னு யோசிக்கிறேன்.

ஆராதனா: உக்கும். அப்ப உங்களுக்கு, எங்கப்பா தலையை எப்படி மொட்டை அடிக்கலாம்னு இல்ல யோசிச்சீங்க.

ஆதித்தன்: சரி, சரி, அந்த பழைய கதை எல்லாம் பேசாம நீ சும்மா இரு. ஆமாம், எந்த அநாதை ஆசிரமத்துக்கு நாம போறோம்?
கயல்விழி: தாம்பரத்தில “சிவானந்தா சரஸ்வதி சேவாஷ்ரம்” இருக்குதில்ல. அங்க தான் போய் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தியா வரதுக்கு முன்னாடியே, அந்த ஆஸ்ரமத்தோட பேசிட்டோம்.

ஆதித்தன்: நீங்க பேசுறதை கேக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குதும்மா. கண்டிப்பா நாம அங்கேயே உங்களோட தலைதீபாவளியை கொண்டாடுவோம்.
நன்றி வணக்கம்
பின் குறிப்பு: நான் இங்கு மேடையேற்றிய நாடகங்களை எல்லாம் காணொளியாக இந்த வலைப்பூவில் பதிவேற்ற முயன்று வருகிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் அவைகளையெல்லாம் நீங்கள் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

Wednesday, October 30, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – ஜாக்கிங் காட்சி

தலைவா திரைப்பட அனுபவம் – படப்பிடிப்பிற்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றது

ஏப்ரல் 17ஆம் தேதி நாங்க காத்திருந்து, எங்களோட காட்சியையும் சூட்
பண்ணாம  நாங்களும் எல்லார் கூடவும் போட்டோவும் எடுத்துக்காம வீட்டுக்கு திரும்பி வந்தோம். அன்றைக்கு இரவு 10 மணிக்கு ஒரு sms, மறு நாள் மதியம் 2.30 மணிக்கு பொட்டானிக்கல் கார்டனுக்கு ஜாக்கிங் துணிமணியோட வந்துடுங்க அப்படின்னு. மறு நாளாவது நம்மளை வச்சு படம் எடுப்பானுங்களான்னு எனக்கு சந்தேகம். ஏற்கனவே ஒரு நாள் லீவு வெட்டியா போயிடுச்சு. மறு நாளும் லீவு வேஸ்டா போக கூடாதேன்னு பயம். சரி, முழுக்க நனஞ்சாச்சு, இனி முக்காடு போட்டு என்ன பிரயோஜனம்னு மனசை தேத்திக்கிட்டேன். மறு நாள் மற்ற மூன்று நண்பர்களோடையும் பேசி, அந்த இடத்துக்கு போறதுக்கு train தான் வசதின்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு பெரிய படையோடு கிளம்பி போனோம். மற்ற இரண்டு நண்பர்களோட குடும்பம் மட்டும் வரலை. நான் என் குடும்பத்தையும், மற்ற நண்பர் அவரோட  குடும்பத்தையும், மற்றும் எங்களின் பொதுவான நண்பரின் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போனோம். trainல போற வழியில பார்த்தா, அப்படி ஒரு மழை பெய்ய ஆரம்பிச்சுது. ஆஹா, ஜாக்கிங் காட்சியை எடுக்கிறேன்னு சொன்னாங்க, இப்படி மழை பெய்யுதே, இன்னைக்கும் கோவிந்தா தான்னு நினைச்சோம். நல்ல வேளை நாங்க அங்க 2.15 மணிக்கு “circular quay” என்ற இடத்துக்கு போய் இறங்கும்போது, மழை விட்டிருந்துச்சு. அங்கேருந்து ஒரு ஐந்து நிமிடம் நடந்தால், அந்த பொட்டானிக்கல் கார்டன் வந்துடும். ஆனா அவ்வளவு பெரிய பார்க்ல, இவுங்க எங்க சூட்டிங் வச்சிருக்காங்கன்னு எங்களுக்கு தெரியலை. அந்த பார்க்குக்கு உள்ள நடந்து போய் பார்க்கலாம், எப்படியும் அவ்வளவு பெரிய கூட்டம் கண்ல பட்டுடும்னு ஒரு நம்பிக்கைல நடக்க ஆரம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம் சூட்டிங் நடக்கிற அறிகுறியே காணோம். நாங்க ராகேஷுக்கும், கிருஷ்ணாவுக்கும் போன் மேல போன் போட்டோம். அவுங்களுக்கும் சரியான இடத்தை சொல்ல தெரியலை. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்துக்கும் மேல நடந்து அவுங்க இருக்கிற இடத்தை கண்டுப்பிடிச்சு போனோம். அங்க அவுங்களோட பஸ் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அடப்பாவிகளா! ஒழுங்கான அட்ரஸ் சொல்லியிருந்தா, நாங்களும் கார் எடுத்துக்கிட்டு வந்திருப்போமே, இவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டாமேன்னு நினைச்சோம். கிருஷ்ணா வந்து எங்களையெல்லாம் ஜாக்கிங் டிரஸ் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. நாங்க எங்க மாத்துறதுன்னு கேட்டோம். அவர் உடனே அந்த பஸ்ல போய் மாத்திக்கிட்டு வாங்கன்னு சொன்னாரு. உடனே எங்க நண்பர்கள்ல ஒருத்தர், ஏங்க, இந்த கேரவன் எல்லாம் கிடையாதான்னு கேட்டாரு. கிருஷ்ணா அப்படியே அந்த நண்பரை ஒரு பார்வை பார்த்துட்டு, ஹீரோவுக்கே இங்க அந்த வசதி எல்லாம் கிடையாதுன்னு சொன்னாரு. அந்த நண்பரும் பரவாயில்லை, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். ஆனா எங்களை ஜாக்கிங் பண்ண சொல்லி ரொம்ப தூரம் ஓட சொல்லாதீங்க, ஏற்கனவே, நாங்க 7 கடல், 7 மலையை தாண்டி வந்த மாதிரி ஒரு மணிநேரம் நடந்து வந்திருக்கோம்னு சொன்னாரு. கிருஷ்ணாவும் அப்படி எல்லாம் ஒரேடியா ஓட சொல்லமாட்டோம். ஷாட், ஷாட் தான் எடுப்போம்னு சொல்லிட்டு போயிட்டாரு. நாங்களும் ஜாக்கிங் டிரஸ் எல்லாம் பஸ்ஸுக்குள்ளேயே மாத்திக்கிட்டு வெளியே வந்தோம். அப்ப தான் இந்த படத்துக்கான ஸ்டில் போட்டோகிராபர் எங்க கிட்ட வந்து, “என்னங்க நீங்க நேத்து காணாம போயிட்டீங்க, விஜய் சார் சூட்டிங் முடிஞ்சவுடனே, போட்டோ எடுத்துக்கிறதுக்கு உங்களை கூட்டிக்கிட்டு வர சொன்னாரு. நானும் வந்து பார்த்தா, ஒருத்தரையும் காணோமேன்னு” சொன்னாரு. நாங்களும் அவரிடம், நீங்க எல்லாரும் தான் சூட்டிங் முடிய 6.30 மணி ஆகும்னு சொன்னீங்க, அதனால காபி குடிக்க போயிட்டோம்னு சொன்னோம். இன்னைக்கு முடிஞ்சா போட்டோ எடுத்துக்க பாருங்கன்னு சொல்லிட்டு அவர் போயிட்டாரு. நாங்களும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தோம். அசோசியட் டைரக்டர் பிரசன்னா, எங்களையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்து, “எங்க இன்னும் மூணு பேரை காணோம்னு கேட்டாரு. எங்களுக்கு தெரியாதுன்னு சொன்னவுடனே, அவர் இயக்குனர் கிட்ட போய் சொன்னவுடனே, இயக்குனரும் பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிலாம்னு சொல்லிட்டு, எங்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்க சொன்னாரு. அப்ப புதுசா ஒரு ரெண்டு பேர் வந்தாங்க. அவுங்க இதுக்கு முன்னாடி எடுத்த ரெண்டு காட்சியிலும் இல்லை. அவுங்களையும் இந்த காட்சியில சேர்த்துக்கிட்டு அவுங்களுக்கும் ஒரு வரி டையலாக் சொல்லிக்கொடுத்தாரு பிரசன்னா. ஒரு தடவை மட்டும் எல்லாருக்கும் சொல்லி கொடுத்துட்டு அவரும் போயிட்டாரு. இந்த காட்சிக்கு தேவையான லைட்டிங்க்ஸ் எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கு நடுவுல, நடிகர் விஜய் வந்து ஒரு சேரை, கடலைப் பார்த்து போட்டு ஒரு குடையை புடிச்சு உட்கார்ந்துகிட்டு, தனிமையில இனிமை காண ஆரம்பிச்சுட்டாரு. யாரும் அவர் பக்கத்துல போக கூட இல்லை. இந்த காட்சிக்கு, உள்ளூர் வெள்ளைக்கார கலைஞர்கள் சில பேர் பக்காவான ஜாக்கிங் காஸ்ட்யூம்ல வந்திருந்தாங்க. (அவுங்களுக்கு தான் ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்ச சம்பளம் 100 டாலர்ன்னு தெரிஞ்சுது). மணியோ 4மணியாயிடுச்சு. இன்னும் ஒரு ஷாட்டும் எடுக்கலை. இருட்டு வேற தலை காட்ட ஆரம்பிச்சுது. ஆகா, இன்னைக்கும் நம்ம பொழப்பு, நாய் பொழப்பாகிடும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டோம். எங்க நண்பர்களுக்கு எல்லாம் ஒரே கோபம். இன்னைக்கு மட்டும் நம்ம காட்சியை எடுக்காம விடட்டும், அதுக்கப்புறம் இவுங்க கூப்பிடுற அன்னைக்கு நாம வரவே கூடாதுன்னு ஒரு தீர்மானம் வேற போட்டாங்க. இப்படி நாங்க தீர்மானம் போட்டுக்கிட்டு இருக்கும்போதே, அங்க விஜய்யும், அமலாபாலும் ஜாக்கிங்ல சந்திச்சிக்குற மாதிரியான காட்சியை ஒரு 4/5 டேக்ல எடுத்து முடிச்சாங்க. அதாவது விஜய் வந்து ஒரு பத்தடி ஒடுற மாதிரியும் அமாலாபால் சைட்லேருந்து ஓடி வர மாதிரியும் எடுத்தாங்க. அப்ப அந்த வெள்ளைக்காரங்க ஓடனும். அவ்வளவு தான். அதற்கு அப்புறம் இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் மேட்டு மேல ஏறி போய் நிக்க சொல்லிட்டு, எங்களை எல்லாம் மேடு ஆரம்பமாகிற இடத்துல நின்னுக்கிட்டே மூச்சு வாங்குற மாதிரி ஜாக்கிங் பண்ண சொன்னாரு. நாங்களும் நின்னுக்கிட்டே மூச்சுவாங்கி ஜாக்கிங் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்ப அமலாபால் மேலேயிருந்து கீழே எங்க கிட்ட வந்து பேசுற மாதிரியும், நாங்க அவுங்க கிட்ட பேசுற மாதிரியும் ஒரு மூணு நாலு டேக்ல அந்த காட்சியை எடுத்தாங்க. நாங்களும், அப்பாடா, இந்த காட்சியும் முடிஞ்சிடுச்சு,இன்னும் அந்த டான்ஸ் கிளாஸ் காட்சி தான் இருக்குன்னு நினைச்சோம். ஆனா, அப்புறம் தான் சொன்னாங்க, இந்த காட்சியோட continuity காட்சி எடுக்கணும். நாங்க அப்புறம் சொல்றோம்னு சொன்னாங்க.

விஜய் கூட போட்டோ எடுக்கறதுக்காக நாங்க எல்லாரும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணிப்பார்த்தோம். ஆனா, அதுக்குள்ள மறுபடியும் விஜய்யும் அமலாபாலும் டான்ஸ் ஆடுற மாதிரியான காட்சியை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மணியோ 6.30 ஆயிடுச்சு. நல்லா இருட்டவும் ஆரம்பிச்சுடுச்சு. ஒரு சில நண்பர்கள் எல்லாம் கிளம்பி போயிட்டாங்க. நானும், குடும்பத்தை கூட்டிக்கிட்டு வந்த இன்னொரு நண்பரும், கிளம்பலாம்னு நினைச்சு, வீட்டு அம்மணியை கூப்பிட போனா, அவுங்க எங்களை விட ரொம்ப பிசியா இருந்தாங்க.

அப்படியென்ன பிசியா இருந்தாங்கன்னு, நான் அடுத்த பதிவுல சொல்றேன்.
- இன்னும் சொல்கிறேன்


Wednesday, October 23, 2013

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது - தொடர்ச்சி

சென்ற வருட ஆரம்பத்தில் “கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது” என்ற ஒரு பதிவை பதித்திருந்தேன் -

கணவன் மனைவியிடம் மிக முக்கியமாக எதிர்ப்பார்ப்பது 

அதனோட தொடர்ச்சியாக இந்த பதிவை பதிகிறேன். வேலை வெட்டி இல்லாதவங்க, மனைவி எப்படியெல்லாம் இருந்தால் கணவனின் நெஞ்சில் நீங்க இடம்பிடிக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. அதை நானும் வேற வேலை இல்லாம படிச்சு(!) இங்க பதிவு செய்திருக்கிறேன்.

1. பேச்சை குறையுங்கள்:  கணவன்மார்கள் கூறும் பெரிய புகார் இது தான். என் மனைவி வாயைத் திறந்தா பேசிக்கிட்டே இருப்பாள் என்பது தான். அதனால் தேவையில்லாத பேச்சைக் குறைப்பது நல்லது பெண்களே

2. ஷாப்பிங்:  ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல கணவன்மார்கள்  தெறித்து ஓடுகிறார்கள். காரணம் கடை
,  கடையாக ஏறி இறங்க வேண்டுமே. பெண்களே ஷாப்பிங் போகும் போது சக பெண்களுடன் செல்லுங்கள் இல்லை என்றால் கணவரை அழைத்துச் சென்றால் அவரை அலைக்கழிக்காதீர்கள்.

3. சீரியல் மோகம் டிவி சீரியலே கதி என்று கிடக்காதீர்கள். சீரியல் விளம்பரத்திற்கு நடுவே கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சீரியலை பார்த்து அழுவது கணவன்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் விஷயம் என்று தெரியுமா
?

4. புரணி வேண்டாமே கணவரிடம் பிற பெண்களைப் பற்றியும்
, அவர்கள் வீட்டில் நடப்பவை பற்றியும் புரணி பேசாதீர்கள். ஆண்களுக்கு பிடிக்காத விஷயம் இந்த புரணி.
5. நண்பர்களுடன் கணவன்மார்களை அவர்களின் நண்பர்களுடன் நேரம் செலிவட அனுமதியுங்கள். நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்ன நீங்க நண்பர்களோட வெளியே போகிறது என்று கேட்காதீர்கள்.


பின் குறிப்பு: பத்திரிக்கையில் படித்ததை தான் நான் இதில் பதித்திருக்கிறேன். என்னோட சொந்த கற்பனை இல்லை என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.(எல்லாம் ஒரு தற்காப்புக்காகத் தான்)

கண்டிப்பாக அடுத்த பதிவு திரைப்பட அனுபவ பதிவு தான்.

Thursday, October 17, 2013

கண்ணம்மாப்பேட்டை - மேடை நகைச்சுவை நிகழ்ச்சி

இதுவரை சிட்னியில், ஐந்து  நகைச்சுவை குறு நாடகங்களையும்  ஒரு மேடை நகைச்சுவை நிகழ்ச்சியையும் எழுதி அரங்கேற்றியிருக்கிறேன். இது தவிர குழந்தைகளுக்கான குறு நாடகங்கள் தனி.

அதில் "கண்ணம்மாபேட்டை" என்ற இந்த நகைச்சுவை மேடை நிகழ்ச்சியை உங்களின் பார்வைக்கு பதிகிறேன்.

நம் எல்லோருக்கும் சிங்காரச் சென்னையில் கண்ணம்மாப்பேட்டை என்றால் "ஒரு சுடுகாடு" என்று தான் நியாபகத்துக்கு வரும்.  ஆனால் அதுவும் ஒரு ஏரியா. அந்த ஏரியாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன்.



இடம் - (கண்ணம்மாப்பேட்டை, அம்பேத்கார் தெரு, முனியம்மா கையேந்திபவன் இட்லி கடை)

(முனியம்மா உட்கார்ந்து கொண்டு இட்லி அவிக்கிறார். அப்போது பிளேடு பக்கிரி வருகிறார்)
முனியம்மா – என்னா! அரை பிளேடு, எப்படி கீறே?

பக்கிரி – முனிமா, உனக்கு கொய்ப்பு ரொம்ப ஜாஸ்தியா பூச்சு. இன்னொரு தபா அரை பிளேடுன்னு, கூப்பிட்டாங்காட்டியும், பொம்பளைன்னு பாக்க மாட்டேன்,செவுளு எகிறிடும்.

முனியம்மா – மன்சுக்கோ அண்ணாத்தே, இதுக்கு போய் கோச்சுக்கினுகிரீயே. ஆமா எப்படி கீறே?

பக்கிரி – நான் நல்லா கீரேன் தங்காச்சி. சரி, உன் வாவாரம் எப்டி போயிக்கினுகீது ?

முனியம்மா – அதை ஏன் கேக்குற? இந்த புறம்போக்கு பேமானிங்க எல்லாம் கடன்ல துன்னுட்டு போகுதுங்க. அதுங்ககிட்ட காசை வாங்குறதுக்குள்ள பேஜாரா கீது.

பக்கிரி – நீ, கரார சொல்லு தங்காச்சி, கடன் சொன்னா கட்டைல அடிப்பேன்னு.

முனியம்மா – ஆமா அண்ணாத்தே, இனிமேங்காட்டி, அப்படி தான் சொல்லப் போறேன்.
பக்கிரி – சரி, முனிமா, எனக்கு ஒரு 10 இட்லியை கொடு, நான் துன்றேன், ரொம்ப வவுத்தை பசிக்குது.

முனியம்மா – உனக்கு எல்லாம் இட்லி கொடுக்க முடியாது.
பக்கிரி – நான் கடன்ல துன்னாமாட்டேன் தங்காச்சி. இந்தா 10 இட்லிக்கு காசு.

முனியம்மா – அதுக்கில்லை அண்ணாத்தே! நீ பாட்டுக்குன்னு, இங்க இட்லியை தின்னுட்டு உன் ஊட்ல போய் ஒண்ணும் துன்ன மாட்டேங்கிரியா, உன் சம்சாரம் இங்க வந்து என்னாண்ட சண்டை போடுது. பெரிய ரௌசா கீதுபா.

பக்கிரி – ஐயே, அவ செய்ற இட்லியை மனுஷன் துண்ணூவானா. ஒண்ணு தெரிமா, அவளுக்கு கோவம் வந்தா, அவ செஞ்ச இட்லியால தான் என்னைய அடிப்பா. முனிமா, இன்னொரு தபா, அவ உன்கிட்ட ராங்கு பண்ணா, பேசாம நீ ரெண்டு போடு போட்டு அவளை ஊட்டுக்கு அனுப்பு.

முனியம்மா – என்னய்யா நீ, பொண்டாட்டிய அடக்க தெரில. சரி, சரி, இந்தா இட்லியை நல்லா துண்ணு (இட்லி தருகிறார்). ஆமா, எங்க உன் கூட்டாளி பாக்ஸர் பாலு, ரொம்ப நாலா, கடையாண்ட காணோம்.
பக்கிரி – ஐய, உனக்கு மேட்டர் தெரியாதா, அவன் சினிமால நடிச்சிக்கிணுக்கிறான்.

முனியம்மா – மெய்யாலுமா, அண்ணாத்தே, அண்ணாத்தே, அவருக்கிட்ட சொல்லி, எனக்கு ஒரு சான்ஸ் வங்கி கொடேன்.
பக்கிரி – அட போம்மே. அந்த பொறம்போக்கு, எனக்கே ஒரு சான்ஸ் வங்கி தர மாட்டேண்கிறான்.  

(அப்போது பாக்சர் பாலு வருகிறார்)
பாலு – ஹலோவ், ஹௌவு ஆரு யூ?

பக்கிரி – என்னா, பாக்சரு, பெரிய, பெரிய இங்கிலிசு எல்லாம் பேசிக்கினு கீற?
பாலு – வாட் ஐ யாம் ஒன்லி இசுமாலு இங்கிலீஷ்.

பக்கிரி – அட்ரா! அட்ரா, பெரிய ஹீரோ ஆவுரியோ இல்லையோ, இங்கிலிசு வெளுத்துக் கட்டுற. ஆமா, உன் கைல எத்துன படம் வச்சுக்கினுகீற?
பாலு – டூ ஃபிலிம் அப்புரங்காட்டி ஒரு ஆடு ஃபிலிம்.

பக்கிரி – அடப் பாவமே, உனக்கு ஏண்டா இந்த பொய்ப்பு?
பாலு – வாட் பாவம், ஐ நாட் understood,

பக்கிரி – ஏண்டா, போயும், போயும் ஆடு கூடவா நடிச்சிக்கினுகீற?, நான் கூட நீ அஞ்சலி , அப்புறம் ஏன் தங்காச்சி, இந்த நெடு நெடுன்னு ஓசரமா ஒரு பொண்ணு இருக்குமே அது யாரு?

முனியம்மா – ஆங்! அந்த பொண்ணா, அது அனுஷ்கா அண்ணாத்தே.
பக்கிரி – ஆமா, அனுஷ்கா கூட எல்லாம் நடிக்கிரியாக்கும்னு பார்த்தா, கஸ்மாலம், ஏண்டா ஆடு கூட எல்லாம் நடிக்கிற?

பாலு – நோ நோ, யூ mistakifying மி. யூ நாட் know ஆடு பிலிம்ஸ்.ஆதான்பா இந்த சோப்பு, பவுடர், காம்ப்ளான், இந்த மாதிரி பபிலிம்ஸ்.
பக்கிரி – ஓ! விளம்பரப் படமா, என்னா படம்டா? அப்புறம், உன் பைய தொழிலை மறக்காம இந்த சோப்பு, பவுடர் எல்லாம் தள்ளிக்கிட்டு வந்துடு என்னா!

பாலு – யூ, ஆல்வேஸ் selfinished.
பக்கிரி – என்னாது, self எல்லாம் சுட்டுக்கினு வந்துட்டியா. என்னாப்பா, உன் தோஸ்து நானு, எனக்கு ஒரு செல்ஃபை சுட்டுக்கிட்டு வந்துக் கொடேன்.

பாலு – யூ. Are ரொம்ப புவர் இங்க்லிஷ்.
பக்கிரி – ஏய், ஆரைப் பார்த்து புவர்ன்னு சொல்ற, நானா புவரு. இங்க பாரு எத்தனை மோதிரம் போட்டுக்கிணுக்கிறேன், செயினு போட்டுக்கிணுக்கிறேன்.

பாலு – நோ, நோ யூ நாட் knowing மி இங்கிலீஷ். மை ஆல்சோ நாட் knowing before பட் after after supririor.
பக்கிரி – ஓ! இதான் மேட்டரா, அப்போ, இங்கிலிசு தெரிஞ்சா சூப்பர்வைசர் ஆயிடலாங்கிற. சரிப்பா, நானும் என் தொழிலலை விட்டு இங்கிலிசு கத்துக்கிறேன். இந்த போலீஸ் மாமா நாயிங்களுக்கு மாமூல் வெட்டியே தாவு தீருது.

பாலு – சொன்னா, ஆங்கர் படுற. இங்கிலீஷ் படிச்சா ஹை ஆயிடுவ, மீ மாதிரி.
பக்கிரி – என்னா நைனா, கொயப்புற. அப்ப என்னடான்னா, இங்கிலிசு படிச்சா, சூப்பர்வைசர் ஆலான்னு  சொன்ன, இப்பங்காடியும் என்னாடான்னா உயரமா ஆலங்குற?

பாலு – again, again யூ are mistaking, அதான் புவர்ன்னு சொன்னேன்.

பக்கிரி – டேய் மாப்ள, புவர்ன்னு மட்டும் சொல்லாதே,எனக்கு கெட்ட கோவம் வரும். நான் அடுத்தவன் பர்ஸை லவட்டுனாலும், சொந்த வூட்டுல இருக்கேன். தெரிஞ்சுக்கோ .
பாலு – (தலையில் அடித்துக்கொண்டு) டேய், போடாங்க, உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க, இங்க புவர்னா ஏழை இல்லை. உனக்கு இங்கிலீஷ் knowing avvalvau satisfy இல்ல. இதெல்லாம் இங்க்லிஷ்ல ஃப்ரேஸ்.  
பக்கிரி – ஃப்ரேஸ்னா, ஓ! பிரேஸ்லெட்டா. போன வாரம் தான் ஒருத்தண்ட பிரேஸ்லெட்டை ஆட்டைய போட்டேண்டா.

பாலு – oh! My God, save myself. டேய் அந்த பிரசேலேட் இல்லடா, இது different. யுவர் ஹெட் இஸ் having kalisand
பக்கிரி – இங்கிலிசு வாத்தியாரே, எனக்கு சினிமா சான்ஸ் எல்லாம் வேண்டாம். கொஞ்சம் உன் இங்கிலிசை கத்துக் கொடேன்பா,

முனியம்மா – நீ அப்புறம் இங்கிலிசை கத்துக்கோ, பாலு அண்ணாத்தே, ரொம்ப நாள் கைச்சு கடையாண்ட வந்துகிற, இங்க குந்திக்கினு, இட்லியை துண்ணு.
(அப்போது “சவுண்ட்” சரசு வருகிறாள்)

சரசு – இந்தாம்மே, இட்லி கொடு.
(முனியம்மா தட்டில் இட்லி வைத்துக் கொடுக்கிறார்)

பக்கிரி – டேய், உன் இங்கிலிபிசை, எனக்கு கொஞ்சுண்டு கத்துக் கொடேன். நானும் என் சம்சாராத்தாண்டை போயி, படம் காட்டுறேன்.
பாலு – I have time no. Each day morning வேற சூட்டிங். Evening வேற சூட்டிங். Sorry, I very very busy.

பக்கிரி – இப்ப, என்னா சொல்ல வர்ற, இங்கிலிபீசு கத்துக்கொடுக்க முடியாதுங்கிறியா?
பாலு – yes. yes you சரியா understood.

பக்கிரி – டேய் மவனே, இன்னொரு தபா, என்னாண்ட நீ இங்கிலிபீசு பேசுன, அப்புறம் உனக்கும் எனக்கும் ராங்கா பூடும்.
(அப்போது சரசு சாப்பிட்டு எழுந்து போகிறாள்)

முனியம்மா – ஏய், ஏய், இந்தாம்மே துன்னுட்டு, துட்டு கொடுக்காம நீ பாட்டுக்கு போயிக்கினுக்கீற?
சரசு – ஆங்! என்னாத்துக்கு துட்டு கொடுக்கோனும்.

முனியம்மா – என்னாத்துக்கா, இட்லியை துன்னயில்ல, அதுக்கு தான்.
சரசு – யாரண்ட துட்டு கேக்குற, நான் யாரு தெரிமா?

முனியம்மா – ச்சீ கஸ்மாலம், நீ யாரா வேணா இரு. துட்டை வச்சுட்டு, அந்தாண்டை நகரு.
சரசு – ஏய் கைதை, ஆரப்பாத்து  கஸ்மாலாம்னு சொல்ற, நீ தான் கஸ்மாலம். புளியந்தோப்பாண்ட வந்து பாரு, இந்த “சவுண்ட்” சரசுஆருன்னு தெரியும்.

முனியம்மா – ஐயே! நீ ஓசில துன்ற கேசா! அதான் உடம்பு இப்படி கீது.
சரசு – இன்னொரு வாட்டி, என்னையப் பத்தி தப்பா பேசுன,செவுலு பிகிலாயிடும். (மெல்லமாக) இந்த தடிப் பசங்க, அதுக்குள்ள போயித் தொலஞ்சுட்டாணுங்க. இல்லைன்னா இதை இங்கேயே பாடை கட்டியிருக்கலாம்.

பக்கிரி – புளியந்தோப்பு சவுண்ட் சரசுன்னா பெரிய கொம்பா, துட்டு கொடுக்காம துன்னுட்டு, ஆருக்கிட்ட சவுண்ட் விடுற?
பாலு – I will police call.

பக்கிரி – டேய், டமிலு, டமிலு.
பாலு – இப்ப துட்டை வைக்கப்போறியா இல்லாங்காட்டி போலீசை இட்டாரட்டுமா.

பக்கிரி – மாமு, நீ என்ன போலீசை இட்டாந்துக்கினு, இதோ நம்ம ஏட்டு கனகாம்பரமே வந்துகிணு கீது.
(அப்போது ஏட்டு ஏகாம்பரம் வருகிறார்)

பாலு – என்னா, ஏட்டு கனகாம்பரம் எப்படி கிற? மாமுலு ஜாஸ்தியா வந்துகிணு கீது போல.
ஏட்டு – டேய், என் பேரு கனகாம்பரம் இல்ல, ஏகாம்பரம்னு எத்தன தபா சொல்லிக்கிறேன். ச்சை, நீ தொழிலை வுட்டுபுட்டு நடிக்க போயிட்ட. எப்பவாச்சும் ஒரு தபா என்னாண்ட மாட்டாமலா பூடுவே, அன்னைக்கு வச்சுக்கிறேன் கச்சேரியை.

முனியம்மா – முதல்ல இந்த கச்சேரியை கவனி ஏட்டு. இதோ இது துன்னுட்டு, துட்டு கொடுக்காம போது.
(ஏட்டு அந்தப் பக்கம் நகர்கிறார். அப்போது பக்கிரி அவரின் மணிப்பர்சை லவட்டிக்கொள்கிறான்)

ஏட்டு – என்னாம்மே! துன்னுட்டு துட்டுக் கொடுக்காம போறியா?
சரசு – நீ தான் ஏட்டா!, என்ன மப்டில வந்துக்கினியா. ஆமா எந்த டேஷனு. (யோசிக்கிறார்) கண்ணம்மாப்பேட்டைல K2 டேஷன் தான் இருக்கு. (உடனே போன் எடுத்து டயல் பண்ணுகிறார்)

ஏட்டு – (குழப்பமாக) ஏய், ஏய், ஆரு நீ? ஆருக்கு போன் போடுற?
சரசு – ஊம், உன் கமிஷனருக்கு. நான் ஆருன்னா கேட்ட? நான் தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசு.

ஏட்டு – நீங்க தான் புளியந்தோப்பு சவுண்ட் சரசா, அதை முன்னாலே சொல்லா கூடாதா, ஆமா நீங்க இங்க எப்படி?
சரசு – எனக்கு பயந்துக்குனு, அந்த முட்டை ரவி இங்க வந்து ஒளிஞ்சுக்கினு இருந்தான். வுடுவாளா இந்த சரசு, அதான் பசங்களை கூட்டிக்கிட்டு வந்து அவன் ஜோலியை முடிச்சேன். பசங்க அவன் கூட்டாளியை ஸ்கெட்ச் போடுறதுக்கு பூட்டாணுங்க, எனக்கு பசிச்சிதா அதான் இந்த கஸ்மாலத்தாண்ட வந்து இட்லியை துன்னேன். இது என்னடான்னா துட்டு கேக்குது.

ஏட்டு – நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்
சரசு – நான் ஆருங்குறதை, இதுக்கிட்டேயும், அந்த பேமானிங்க கிட்டேயும் சொல்லு.

(சரசு போகிறாள்)
ஏட்டு – (மெல்லமாக) ச்சை, இவளுக்கு மேட்டர் முடிக்க, நம்மா ஏரியா தான் கிடச்சுதா, ஐயோ, இனி அந்த இன்ஸ்பெக்டரு நம்ம கழுத்தை அறுப்பானே.

முனியம்மா – என்னா ஏட்டு, எனக்கு பஞ்சாயத்தை பண்ணுவன்னு பாத்தா, அதை போகவிட்டுட்டே.
ஏட்டு – (கோபமாக) அவ என்ன சொன்னான்னு கேட்ட இல்ல, அது புளியந்தோப்பு தாதா. உன் நல்ல நேரம் அது உன்னைய ஒண்ணும் பண்ணலை . இனிமேங்காட்டி அதுக்கிட்ட வச்சுக்காதே. சரி, நான் வரேன்.

(ஏட்டு போகிறார், முனியம்மா தலையில் கையை வைத்துக் கொள்கிறாள்)
பக்கிரி – தங்ச்சி, இந்த உன் துட்டு, ஏட்டுக்கிட்டேருந்து லவட்டுனது.

முனியம்மா – எட்டுக்கிட்டையே, உன் கைவரிசையை காட்டிட்டியா அண்ணாத்தே.
பக்கிரி – தொழிலின்னு வந்தா ஏட்டு என்னா, பெண்டாட்டி என்னா, எல்லார்க்கிட்டேயும் கைவரிசையை காட்டிடுவான் இந்த பக்கிரி.

பாலு – ஏய், பக்கிரி, பர்சு கனமா இருக்கு. வா வா டாஸ்மார்க்குக்கு போலாம்.
(இருவரும் போகிறார்கள்)