Sunday, February 16, 2014

குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல்


ஒவ்வொரு ஊரிலும், வருடா வருடம் கோயில் திருவிழா நடைபெறும். அந்தத் திருவிழாவின் ஒரு நாளில், தேர்த்திருவிழா நடைபெறும். அதாவது, அந்த கோயிலில் இருக்கும் சாமியை தேரில் வைத்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி, அந்தத் தேரை ஊர்வலமாக ஊருக்குள் இழுத்துச்செல்வார்கள். இத்தேர்த்திருவிழா    மூலம், சில நல்ல காரணங்களை நாம் உணரலாம். முதல் காரணம்,   ஊருக்குள் ஒற்றுமை உண்டாகும். எப்படி என்றால், அந்தத் தேரை சில     பேரை மட்டும் வைத்து இழுக்க முடியாது. அதனால், ஊரில் உள்ள     எல்லோரும் இழுக்க வேண்டும். இனால் ஏழை, பணக்காரர் என்ற      வித்தியாசம் மறைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.   அடுத்து, ஊருக்குள் கோயில் இருக்கும் நிலையில், ஊரே கோவிலாவது தேர்த்திருவிழாவில் தான். எப்படி     என்றால், வயதானவர்கள், நடமாட முடியாதவர்களை எல்லாம் சாமியே      அவர்களைத் தேடி வருவது என்பது இந்நாளில் தான்.கோவிலின் சிறப்பையும், தேரின் சிறப்பையும் பார்த்தோம். இனி நாம், சிவலிங்கங்களில்,     “காலம் செய்யும் சிவலிங்கத்தைப்பற்றி   அடுத்த இறையடியார் வாழ்க்கையில் பார்க்கலாம்.

-புத்தகத்தில்படித்தது.சென்ற ஆண்டு இங்கு சிட்னி முருகன் கோவிலில் சைவ மன்றம் சார்பில் சேக்கிழார் விழா நடைபெற்றது. அப்போது, நண்பர்  அருச்சுனமணி அவர்கள் என்னை தொடர்புக்கொண்டு, நாயன்மார்கள் சம்பந்தமாக தமிழ் பள்ளிக் குழந்தைகளை வைத்து ஒரு நாடகம் போடுங்கள் என்று கூறினார். அதில் உருவானது தான் இந்த அப்பூதி அடிகள் வாழ்க்கை வரலாறு நாடகம். இதில் நடிப்பதற்கு நிறைய குழந்தைகள் ஆர்வமுடன் பங்குப்பெற்றமையால். வெறும் வாழ்க்கை வரலாறாக மட்டும் சொல்லாமல் வித்தியாசமாக ஒரு சமயவகுப்பில் அப்பூதியடிகளின் வாழ்க்கையை நாடகமாக நடிக்கச் செய்து, அதன்மூலம் அந்த சமயவகுப்பில் படிக்கும் மாணவர்கள் குரு வழிபாட்டின் மூலம் எவ்வாறு இறைவனை பிராத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளுமாறு இந்த நாடகத்தை அமைத்திருந்தேன். ,

குரு வழிபாட்டின் மூலம் இறை தேடல் - நாடகம் 

கதாப்பாத்திரங்கள்
ஆசிரியராக – சஞ்சய்
மாணவர்களாக – லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித்,ஸ்ரீவட்சன்
அப்பூதி அடிகளாராக – வருண்
மனைவியாக  - இலக்கியா
மகனாக – ஓவியா
திருநாவுக்கரசராக – தர்ஷன்
கிராமத்துக்காரர்களாக – தீக்க்ஷா, சாருண்யா, சவிதா

காட்சி – 1


இடம்: சமய வகுப்பு
கதாபாத்திரங்கள்: சஞ்சய், லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித்

(மாணவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். சஞ்சய் வருகிறார். எல்லோரும் வணக்கம் சொல்கிறார்கள்)

சஞ்சய்: வணக்கம். போன வகுப்புல, நாம காரைக்கால் அம்மையாரை பற்றி பார்த்தோம். அவரைப் பற்றி ஒரு கேள்வி. மற்ற நாயன்மார்களிடமிருந்து, அவர் எவ்வாறு சிறப்புடையவராக இருக்கிறார்?

அகிலன்: அவர் மட்டும் தான் உட்கார்ந்திருக்கிறார். மற்ற நாயன்மார்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

சஞ்சய்: சரியா சொன்னீங்க அகிலன். வேறு ஏதாவது சிறப்பு இருக்கா?

லக்ஷ்மி: ஆதியும் அந்தமும் இல்லாத அந்த ஈஸ்வரனே, அவரை பார்த்து “அம்மையே” என்று அழைத்தது மிக பெரிய சிறப்பு.  

சஞ்சய்: ஆஹா. மிக சரி. சரி, நாயன்மார்களில் எத்தனை பேர் பெண்கள். யாராவது சொல்ல முடியுமா?

அக்க்ஷித்: 63 நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள்.

சஞ்சய்: அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?
பிரணவ்: காரைக்கால் அம்மையார்

ஸ்ரீவட்சன்: மங்கையர்க்கரசியார்
லக்ஷ்மி: மற்றும் இசைஞானியார்.  

சஞ்சய்: ரொம்ப நல்லது. சரி, நாம இன்றைக்கு அப்பூதி அடிகள் நாயன்மாரை பற்றி படிக்க போறோம். கொஞ்சம் வித்தியாசமாக, நம் வகுப்பு மாணவர்களே, அவரின் வாழ்க்கையை நாடகமாக நடித்துக்காட்டப் போகிறார்கள். சரி, நாடகத்தை பார்ப்போமா?

(எல்லோரும் ஓரமாக உட்காருகிறார்கள். நாடகம் ஆரம்பாமாகிறது)காட்சி – 2
இடம்: சோழ நாட்டின் திங்களூரில் உள்ள ஒரு சாலை.

கதாபாத்திரங்கள்: பிரணவ், சாருண்யா, சவிதா மற்றும் தர்ஷன்

(சாருண்யாவும்,சவிதாவும் அந்த சாலையில் நடந்து கொண்டு வருகிறார்கள்)

சாருண்யா: அப்பப்பா, வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை.

சவிதா: ரொம்ப தாகமா வேற இருக்கு.

சாருண்யா: இந்த சாலையில், திருநாவுக்கரசர் நாயனார் தண்ணீர் பந்தல்  இருக்கும். அங்க தண்ணீர் குடித்து, நம்ம தாகத்தை போக்கிக்கலாம்.

சவிதா: அதோ தெரியுது. சீக்கிரம் வா.
(இருவரும் அங்கு போய், தண்ணீர் குடிக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பிரணவ் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிவனடியார் அங்கு வருகிறார்).

தர்ஷன்: (மூவரிடமும்), இந்த தண்ணீர் பந்தலை, இப்பெயரிட்டு செய்தவர் யார். உங்களுக்கு தெரியுமா?

தீக்க்ஷா: இந்த தண்ணீர் பந்தல் மட்டும் இல்லை, இந்த ஊரில் இருக்கும் அறச்சாலைகள், குளங்கள், எல்லாவற்றுக்கும் அப்பூதி அடிகள் என்பவர், திருநாவுக்கரசுநாயனார் என்னும் பேரிலேயே செய்திருக்கிறார்.

சவிதா: அவருடைய பிள்ளைகளுக்கும் திருநாவுக்கரசர் என்று தான் பெயர் வைத்திருக்கிறார்.

சாருண்யா: அது மட்டுமா, அவருடைய வீட்டில் உள்ள பசுக்களுக்கும்,கன்றுகளுக்கும் திருநாவுக்கரசர் என்று தான் பெயர் இட்டு அழைக்கிறார்.

தர்ஷன்: அவர் எவ்விடத்தில் இருக்கிறார். நான் அவரை சந்திக்க வேண்டுமே.

மூவரும்: அவருடைய இல்லம் பக்கத்தில் தான் 
இருக்கிறது. வாருங்கள் நாங்கள் வழி காட்டுகிறோம்.காட்சி – 3
இடம்: அப்பூதி அடிகளின் இல்லம்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

வருண்: (கை எடுத்து கும்பிட்டுக்கொண்டு), திருநாவுக்கரசு” , “திருநாவுக்கரசு”, “திருநாவுக்கரசு” (என்று கும்பிடுகிறார்)

ஓவியா: தந்தையே, எனக்கு ஏன் திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தீர்கள்?

வருண்: திருநாவுக்கரசர் சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை பார்த்து, வியந்து அவரிடம் பக்தி கொண்டு, அவரையே குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் மேல் இருக்கும் பக்தியால் தான், உன் பெயரை மூத்த திருநாவுக்கரசர் என்றும், உன் தம்பியை இளைய திருநாவுக்கரசர் என்றும் பெயரிட்டு அழைக்கிறேன்.

ஓவியா: நல்லது தந்தையே.
(அப்போது சிவனடியார் வீட்டு வாயிலில் வந்து நிற்கிறார். இலக்கியா வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்பொழுது, அந்த சிவனடியாரை பார்க்கிறார்)

இலக்கியா: உள்ளே வாருங்கள் சுவாமி.

(சிவனடியார், இலக்கியாவை தொடர்ந்து உள்ளே வருகிறார்)

இலக்கியா: ஏங்க. சிவனடியார் ஒருவர் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார், நான் அவரை உள்ளே அழைத்து வந்தேன்.

(இலக்கியா மற்றும் ஓவியா உள்ளே சென்று விட்டார்கள்).

வருண்: (சிவனடியாரை பார்த்து) வர வேண்டும், வர வேண்டும் சுவாமி.

தர்ஷன்: நாம் வரும் வழியில், தண்ணீர் பந்தலைக் கண்டும், நீர் செய்துவரும் தருமங்களை கேட்டும், உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.

வருண்: மிக்க மகிழ்ச்சி சுவாமி. அடியேன் ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்.

தர்ஷன்: நீர் வைத்த தண்ணீர் பந்தலில், உம்முடைய பெயரை எழுதாது, வேறு ஒருவரின் பெயரை எழுதியதற்கு காரணம் யாது?

வருண்: (கோபமாக) பாதகர்களாகிய சமணர்களோடு சேர்ந்து பல்லவராஜன் செய்த அக்கிரமங்களை சிவபக்தி வலிமையினாலே ஜெயித்த தொண்டரது பெயரா, வேறு ஒருவர் பெயர். அப்பெருமானின் பெயர் கூட தெரியாமல், நீர் எப்படி சிவனடியாராக இருக்க முடியும். நீர் யார், எங்கே இருக்கிறீர் சொல்லும்.

தர்ஷன்: திருநாவுக்கரசர் மேல் நீர் வைத்திருக்கும் அன்பை பார்த்து, யாம் பூரிப்பு அடைகிறோம். அடியேன் தான் அந்த திருநாவுக்கரசர்.

வருண்: என்ன காரியம் செய்து விட்டேன். என் குருவிடமா நான் கோபப்பட்டேன். குருவே என்னை மன்னித்து பொருத்தருளும்.

(அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார். உள்ளே சென்று, மனைவியையும் மகனையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி , அவர்களையும் வணங்க சொல்கிறார்).

இலக்கியா: சுவாமி, தங்கள் இருந்து, அமுதுண்டு தான் செல்ல வேண்டும்.

தர்ஷன்: நல்லது. நான் அமுதுண்ட பிறகே விடைபெறுகிறேன்.

(இலக்கியா உள்ளே செல்கிறார்)

வருண்: மூத்த திருநாவுக்கரசு, சுவாமி அமுது உண்பதற்கு, தோட்டத்தில் போய், வாழைக் குருத்தை அரிந்து கொண்டு வா.

ஓவியா: என்ன பாக்கியம் செய்தேன் நான். சீக்கிரம் வாழைக் குருத்தை அரிந்துக்கொண்டு வருகிறேன் தந்தையே.காட்சி – 4
இடம்: அப்பூதி அடிகளின் இல்லம்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

(மூத்த திருநாவுக்கரசை, நாகம் தீண்டுகிறது. இலையை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு தாயாரிடம் கொடுத்துவிட்டு கீழே விழுகிறான்)

இலக்கியா: திருநாவுக்கரசு, என்னாச்சு, என்னாச்சு.

(அப்பூதி அடிகள் வருகிறார்)

வருண்: திருநாவுக்கரசு, என்னாச்சு, என்னாச்சு.

இலக்கியா: நம்ம மகனை நாகம் தீண்டி விட்டது. இது தெரிந்தால், திருநாவுக்கரசர் நாயனார், திருவமுது  உண்ணமாட்டாரே.

வருண்: நாம் இதை பற்றி அவரிடம் சொல்ல வேண்டாம்.

(இருவரும் சேர்ந்து மகனை பாயில் படுக்க வைத்துவிட்டு, இலையை எடுத்துக்கொண்டு திநாவுக்கரசரிடம் செல்கிறார்கள். அவருக்கு இலையை வைத்து, அமுதை பரிமாறுகிறார்கள். அப்போது திருநாவுக்கரசர் விபூதியை எடுத்து தானும் பூசிக்கொண்டு, எல்லோருக்கும் பூசி விடுகிறார்)

தர்ஷன்: எங்கே, தங்களுடைய மூத்த மகன். அவனையும் கூப்பிடுங்கள், நான் திருநீற்றை பூசுகிறேன்.

(இருவரும் மௌனமாக இருக்கிறார்கள்)

தர்ஷன்: சீக்கிரம் கூப்பிடுங்கள்.

வருண்: இப்போது அவன் இங்கு உதவான்.

தர்ஷன்: (திடுக்கிற்று), என்ன சொன்னீர்? இதை கேட்டு என் உள்ளம் நடுங்குகிறது. உண்மையை சொல்லுங்கள், என்ன ஆயிற்று.

வருண்: (அழுதுக்கொண்டே) ஐயனே! வாழைக்குருத்து அரிகின்ற பொழுது, நாகம் தீண்டி இறந்து விட்டான். தங்களுக்கு, திருவமுது படைக்கும் பேறு தடைபடக்  கூடாதென்று, அவனை பாயில் சுற்றி வைத்துள்ளோம்.

தர்ஷன்: எம்மேல் கொண்ட பக்தியால், உம்மால் இப்படி செய்ய முடிந்தது. அவ்வுடலை, சிவபெருமான் கோவிலுக்கு கொண்டு வருக.

காட்சி – 5
இடம்: சிவபெருமான் திருக்கோவில்.
கதாபாத்திரங்கள்: வருண், இலக்கியா,ஓவியா மற்றும் தர்ஷன்

தர்ஷன்:  ஒன்றுகொ லாமவர் சிந்தை யுவர்வரை
             ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
             ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது 
             ஒன்றுகொ லாமவ  ரூர்வது  தானே.
          
       பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் 
          பத்துக்கொ லாமெயி றுந்நெரின் துக்கன 
         பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை 
        பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.

(மூத்த திருநாவுக்கரசு உயிர் பெற்று எழுகிறான். திருநாவுக்கரசர் அவனுக்கு திருநீற்றை பூசுகிறார்).

(எல்லோரும் தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கூறிவிட்டு செல்கிறார்கள்)காட்சி – 6
இடம்: சமய வகுப்பு
கதாபாத்திரங்கள்: சஞ்சய், லக்ஷ்மி,அகிலன், பிரணவ்,அக்க்ஷித், ஸ்ரீவட்சன்

சஞ்சய்: என்ன, நாடகம் நல்லா இருந்ததா?

எல்லோரும் நன்றாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

சஞ்சய்: அப்பூதி அடிகளின் வாழ்க்கையிலிருந்து நாம என்ன தெரிஞ்சுக்கணும்?

பிரணவ்: நாம தான தர்மங்கள் செய்யும்போது, நம்ம பேரை வெளி உலகத்துக்கு தெரிய படுத்தி செய்ய கூடாது.

அக்க்ஷித்: சிவனடியார்களை நல்லா உபசரிக்கணும்.

அகிலன்: சிவனடியார்களை உபசரிக்கும்போது,நமக்கு துன்பம் வந்தா கூட, அதை பொருட்படுத்தாம, முதல்ல அவுங்களை கவனிக்கணும்.

லக்ஷ்மி: நாம இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு, முதல்ல நல்ல குருவை நாம தெரிவு செய்ய வேண்டும்.  பிறகு அவர்களின் வழிகாட்டுதலோடு, நாம இறைவனை பிராத்திக்கலாம்.

சஞ்சய்: எல்லோரும் சரியா சொன்னீங்க, இன்னைக்கு இது போதும், அடுத்த சமய வகுப்புல, நாம வேற ஒரு நயான்மாரை பத்தி பார்க்கலாம்.

முற்றும்

14 comments:

 1. அயல்நாடு சென்றும் தமிழை மறக்காமல் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் உங்களுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழா.

   Delete
 2. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரா இது குழந்தைகளின் மனதில் ஆர்வமும் வளரும் ஆழவும்பதியும் என்பதில் ஐயம் இல்லை அயல் நாட்டிலும் வசித்துக்கொண்டு இப்படி நிகழ்த்துவது பெருமையே என்னுடைய மனமுவந்த பாராட்டுகள்!பங்கு பற்றிய அனைவருக்கும் நிகழ்ச்சியை நடத்தியவர்களும் தங்களுக்கும் உரித்தாகட்டும் ....!
  ஓவியாவும் பங்கு பற்றியதை இட்டும் மகிழ்ச்சியே.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களை மாதிரி நண்பர்கள் பாராட்டும்போது, இங்கு வாழும் தமிழ் குழந்தைகளுக்கு இதுபோன்று இன்னும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

   Delete
 3. சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி... உங்களின் எண்ணங்களுக்கு... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 5. அயல் மண்ணில் தமிழ் உடையில் குழந்தைகளை பார்க்கவே
  கண்கொள்ளாக் காட்சி !! வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் ஓவியாவிற்கும்!
  அவங்க காலில் இருக்கும் சாக்ஸ் எனது இந்த கவிதையை நினைவு படுத்துகிறது!
  http://makizhnirai.blogspot.in/2013/10/blog-post_26.html . நேரம் கிடைக்கையில் படித்துபாருங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   அந்த கவிதையை படித்துவிட்டேன்.

   இந்த நிகழ்ச்சி நடந்த மாதம் சென்ற ஆண்டு ஜூன் மாதம். இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்கள் தான் சரியான குளிர் காலம். வெறும் காலை தரையில் வைக்க முடியாது. பெரியவர்கள் எல்லோரும் வேட்டிக் கட்டிக்கொண்டு, காலில் காலுறையை அணிந்துக்கொள்வோம்.

   Delete
 6. வணக்கம் சகோ !
  ஒரு நாடகத்தை நடத்தி அதன் மூலம் நாம் நினைவில் கொள்ள
  வேண்டிய அத்தனை சம்பவங்களையும் நாயன்மார்களையும்
  மிகச் சிறப்பாக மனதில் பதிய வைத்துள்ளீர்கள் .படங்களும் பகுத்த
  விதமும் மனத்தைக் கொள்ளை கொண்டு போகிறது .வாழ்த்துக்கள்
  இதில் பங்குபற்றிய அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   தங்களுடைய கருத்துக்களால், நான் தமிழுக்கும், சைவத்துக்கும் இன்னும் நிறைய தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

   Delete
 7. அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் தங்கள் பணி போற்றுதற்குரியது! சிறப்பான நாடகம்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்.

  தாங்களும் அல்லவா, என்னை மாதிரி ஆட்களுக்கு தமிழ் இலக்கணத்தை சொல்லிக்கொடுத்து, தமிழ் வளர்க்கும் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. அயல் மண்ணிலும் நம் மண்ணின் பெருமைகளை விளக்கும் நாடகம் நடத்தியது மகிழ்ச்சி தருகிறது.

  உங்களுக்கும் நாடகத்தில் நடித்த குழந்தைகளுக்கும் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வெங்கட்.

   Delete