Monday, February 24, 2014

ஸ்மார்ட் போர்டு - interactive white board


நான் முன்பே சொல்லியிருந்தத மாதிரி, சிட்னியில் தமிழ் பள்ளிக்கூடங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமையன்று அரசாங்கப் பள்ளிகளில் இயங்கும். அதற்கு இங்குள்ள அரசாங்கம் அனுமதியளித்திருக்கிறது. அந்த அரசாங்கப் பள்ளியின் வகுப்பறைகளில் இருக்கும் மேசை, நாற்காலி, வெண் பலகை (white board) போன்றவற்றவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் வகுப்பு முடிந்தவுடன், அந்த வகுப்பறை முன்பு எவ்வாறு இருந்ததோ, அதே மாதிரி வைத்துவிட்டு செல்லவேண்டும். அந்த வகுப்பறையில் வெண்பலகையோடு, வேறொரு வெண்பலகையும் இருக்கும். அந்த வெண்பலகைக்கு "ஸ்மார்ட் பலகை" அதாவது " interactive white board" என்று பெயராம். நாங்கள் அந்த பலகையை பயன்படுத்த அனுமதியில்லை. (அனுமதித்தாலும், எங்களுக்கு அதை பயன்படுத்த தெரியாது என்பது வேற விஷயம்). நானும் பட்டிக்காட்டான், நகரத்தை சுத்திப்பார்த்த கதையா அடிக்கடி அந்த பலகையை நோட்டம் விட்டத்துண்டு. நான் படித்தது எல்லாம் கரும்பலகையில் தான். எனக்கு வெண்பலகையே, வெளிநாடுகளில் வேலைக்கு வந்த பிறகு தான் தெரியும். அப்படியிருக்க இந்த ஸ்மார்ட் பலகையை உபயோகப்படுத்தி எப்படி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். நாங்கள் தமிழ் சொல்லிக்கொடுக்கும் அந்த அரசாங்கப் பள்ளியோ ஆரம்பப் பள்ளிக்கூடம் அதாவது ஆறாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம்(இங்கு ஆரம்பப் பள்ளியானது பாலர் பிரிவிலிருந்து(Kinder) ஆறாம் வகுப்பு வரை இருக்கும்) . எல்லா வகுப்பு அறைகளிலும் இந்த ஸ்மார்ட் போர்டு இருக்கும்.
 
இந்த ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்துக்கொண்டு, பிறகு அதனை உபயோகிப்பதற்கு அந்த அரசாங்கப்பள்ளியின் அனுமதியை கோரலாம் என்று நினைத்த எங்கள் தமிழ் பள்ளியின் முதல்வர்,  அரசாங்கத்தின் பிற மொழிகளுக்கான கல்வியியல் துறையின், கல்வி அதிகாரியை தொடர்புக்கொண்டு, ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதைப் பற்றி ஆசிரியர்களுக்கான ஒரு பயிலரங்கை(Teachers workshop on smart board training)  ஏற்பாடு செய்தார். அந்த கல்வி அதிகாரி ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதற்கு, 30நாட்கள் மட்டும் கட்டணம் இல்லாமல் பயன்படுத்துவதற்கான மென்பொருளை (software) மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துக்கொண்டு வரச்சொன்னார். அந்த பயிலரங்கோ சென்ற வாரம் நடந்தது. சரியாக 5மணிக்கு அந்த பயிலரங்கு நடக்கும் இடத்துக்கு வரச்சொன்னார்கள்.  அன்று தான் மாலை 3மணிக்கு எங்கள் கம்பெனியின்  மீட்டிங் இருந்தது. நானும் 4மணி வரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, கிளம்பி 5மணிக்கெல்லாம் அந்த இடத்துக்கு போய் சேர்ந்தேன். என்னைப்போல் இன்னும் நான்கு ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஸ்மார்ட் போர்டை பயன்படுத்துவதற்கான அடிப்படைகளை மட்டும் கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார். எங்கள் மடிக்கணினியில் இருந்த அந்த மென்பொருளைக்கொண்டு, மடிக்கணினியை அந்த ஸ்மார்ட் பலகையாக பாவிக்கவைத்து அவர் சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் அருமையாகவும், எளிதாகவும் இருந்தது. ஸ்மார்ட் பலகையை கைகளாலும், அதற்குரிய பேனாவாலும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் பலகையை பயன்படுத்துவது எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையும், பயிற்சிகளையும் ஸ்மார்ட் பலகையைக்கொண்டு உருவாக்குவது தான் சற்று கடினம். அதுகூட நாம் நேரத்தை ஒதுக்கினால் எளிது தான்.

நான் இதை கற்றுக்கொண்டு வந்து கிட்டதட்ட இரண்டு வாரம் ஆகிவிட்டது. அதற்குப்பிறகு நான் அந்த மடிக்கணினியில் இருக்கும் அந்த மென்பொருளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இப்படியிருந்தால் அந்த ஸ்மார்ட் பலகையை இயக்குவது மிகவும் கடினம் தான்.

 
 

விஞ்ஞானம் இன்றைக்கு கல்வித்துறையில் இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது. சரி, இங்கே எல்லாப்பள்ளிகளிலும் இந்த ஸ்மார்ட் பலகை இருக்கிறது, அதேமாதிரி நம் தமிழ்நாட்டில் இந்த பலகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. உடனே கூகிள் ஆண்டவரிடம் இதற்கான பதியளிக் கேட்டேன். அங்கும் ஒரு சில கல்லூரிகளிலும், சில பள்ளிகளிலும் அதுவும் மாநகராட்சி பள்ளிகளிலும் இது அறிமுகப்படுத்தப்பிட்டிருக்கு என்று தெரிந்தவுடன் எனக்கு மிகுந்த ஆச்சிரியத்தையும் சந்தோசத்தையும் அளித்தது. பொதுவாக திருமணமான பெண்கள், பிறந்த வீட்டைக் காட்டிலும் புகுந்த வீடு வசதியாக இருந்தாலும், பிறந்தவீட்டின் பெருமைகளைத்தான் பேச விரும்புவார்கள். அதே மாதிரியான மன ஓட்டத்தைத் தான் எனக்கு கூகிள் ஆண்டவரின் பதில் தந்தது.
 
தமிழ் நாட்டில் ஸ்மார்ட் பலகையை பயன்படுத்தும் கல்லூரிகளைப் பற்றிய செய்தியை இங்கு சென்று பாருங்கள் - ஹிந்து பத்திரிக்கையின் செய்தி

 

17 comments:

 1. எங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில் உள்ளது... ஆனால் எல்லா வகுப்புகளிலும் இல்லை... அனைத்து பள்ளிக் கூடங்களிலும் வரலாம்...

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் போல் முதலில் வந்து கருத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி தனபாலன்.

   உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியிலும் இருக்கிறதா!!. நம் நாட்டிலும் கல்வியை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தெரியும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

   Delete
 2. எவ்வளவு தான் முன்னேறினாலும் தொழில் நுட்பம் வந்தாலும் மணலில்,சிலேட்டில் அ ஆ எழுதி பழகுவது போல் வருமா நானும் உங்க காட்சி தான், கூட்டுக் குடும்பமும் வாழ்க்கையை நிறைய கற்றுக் கொடுக்கும் என்றும் சில சமயம் தோன்றும் தொழில் நுட்பம் தனிமைப் படுத்துகிறது என்றும் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நான் மணலில் எழுதி படித்ததில்லை. ஆனால் சிலேட்டில் எழுதியிருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை தான். என்ன இருந்தாலும் அதில் எழுதி பழகுவது போல் வராது.

   Delete
 3. விஞ்ஞானம் இன்றைக்கு கல்வித்துறையில் இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.

   Delete
 4. நிறை படிக்கும் பள்ளியிலும் இருக்கிறது !

  விரைவில் எல்லா அரசுபள்ளிகளுக்கும் தரப்படும் என அறிகிறோம் சகோ!!

  ReplyDelete
  Replies
  1. அட! பரவாயில்லையே, உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் இருக்கிறதா.
   ஒரு ஆசிரியராக நீங்கள் அதை பயன்படுத்தியிருக்கிறார்களா சகோ?

   எல்லாப் பள்ளிகளிலும் வந்தால் சந்தோஷம் தான்.

   Delete
  2. இல்லை சகோ! ஆர்வமிருக்கிறது. அரசு வழங்கட்டும்!
   அப்புறம் கலக்கலாம்.

   Delete
 5. ஸ்மார்ட் போர்ட் எனக்கு புதிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 6. இப்ப தெரியுது என் நம்ம குழந்தைகள் எல்லாம் மிக ஸ்மார்ட் என்று...நம்ம காலத்தில் பள்ளிக் கூடத்தில் ஸ்மார்ட் போர்டு இருந்தாலும் படித்திருக்கமாட்டோம் காரணம் பள்ளிக் கூடம் ஒழுங்கா போனால்தானே..

  பவர்பாயிண்ட் ஐடியாவை உபயோகித்து பயன்படுத்துபவையே ஸ்மார்ட் போர்டு என நினைக்கிறேன் சரிதானோ??

  ReplyDelete
  Replies
  1. அது சரி!!!

   அதில் பவர்பாயிண்ட்டும் ஒரு விஷயம். ஆனால் அதற்கு மேலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நாங்கள் வெறும் அடிப்படைகளை மட்டும் தான் கற்றோம்.

   Delete
 7. நல்ல பயனுள்ள பதிவு..
  நன்றி...
  இப்போ சி சி ஆர் எல் என்று ஒரு திட்டம் வந்திருக்கிறது
  காணொளி காட்சி மூலம் வகுப்பு எடுப்பதை மையமாக கொண்டு..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
   இப்பொழுது தமிழ்நாட்டிலும் இந்த மாதிரியான திட்டங்கள் வருகிறது என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது

   Delete
 8. நல்ல பகிர்வு.....

  திருச்சியிலுள்ள சில பள்ளிகளில் இந்த Smart Board இருக்கிறது. Smart Class எனச் சொல்கிறார்கள்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

   Delete