தலைவா
திரைப்படத்தில் நான் தோன்றுவதற்கு காரணமாயிருந்த இயக்குனர் விஜய்யிடமிருந்து
வந்திருக்கும் படம் தான் சைவம். இந்த படத்தை அவருடைய தந்தை தயாரித்திருக்கிறார். பொதுவாக
செட்டிநாடு என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது அசைவ உணவு தான். நாட்டுக்கோட்டை
நகரத்தார்களில் ஏறக்குறைய 90 சதவீத மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அவ்வாறு அசைவம்
சாப்பிடும் ஒரு நகரத்தார் குடும்பம் சைவமாக மாறுவது தான் இந்த படத்தின் ஒரு
வரிக்கதை. ஒரு குறும்படத்துக்கான கருவை எடுத்துக்கொண்டு இரண்டு மணி நேர
திரைப்படமாக நமக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர். இன்றைக்கு வரும் அனைத்து
திரைப்படங்களும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று
விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய
படமாக இருப்பது தான் சைவத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் எந்த ஒரு இடத்திலும்
இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுழிக்கக்கூடிய நடனங்களோ
என்று எதுவுமே இல்லை. நகைச்சுவை காட்சிகளும்,
திணிக்கப்படாமல், படத்தோடு ஒன்றி வருவது இயல்பாக இருக்கிறது.
ஆனால் அதே சமயம் திரைக்கதை பலமாக
இல்லாததால், ஒரு தொய்வு ஏற்படுவதை உணர முடிகிறது.
கதை
என்னவென்று பார்த்தால், செட்டிநாட்டு ஊரான
கோட்டையூரில் வசிக்கும் பெரியவர் நாசருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகள் துபாயிலும்,
இரு மகன்கள் வெளியூரிலும் வசிக்க , ஒரு மகன் மட்டும்
பெற்றோர்களோடு கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறார். மூன்று ஆண்டுகள் கழித்து
திருவிழாவிற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அச்சமயத்தில், பேத்தி சாராவிற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக, தாங்கள் குலதெய்வத்துக்கு செலுத்தவேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாதது
நியாபகத்துக்கு வருகிறது. அதன்படி சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை திருவிழாவில் பலி
கொடுப்பதாக முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு அந்த சேவல் காணாமல் போய்விடுகிறது. இறுதியில்
அந்த சேவலை கண்டுபிடித்து சாமிக்கு பலி கொடுத்தார்களா என்பது தான் படத்தின்
மீதிக்கதை.
சேவலை
தேடுகிறோம் என்ற பெயரில், குடும்பத்தில் உள்ளவர்கள்
அடிக்கும் கூத்தும், மகளின் பேரனாக வரும் அந்த
குட்டிப்பையனும் ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவன் “wifi” இருக்கிறதா என்று ஆயாவிடம் கேட்பதும், அதற்கு
நாசரின் மனைவி, அவனிடம், “இது
சாக்குப்பை, கூடைப்பை”
என்று கூறுவதும், பிறகு வீட்டு வேலைக்காரனும், தன் பங்குக்கு, “இவ என்னோட wife, இவுங்க இராமநாத ஐயாவோட wife, இவுங்க உங்க மாமாவோட wife
என்று கூறுவதும்” இதற்கெல்லாம் பதிலாக அந்த
குட்டிப்பையன் கடுப்பாகி, முகத்தில் கோபத்தை காட்டுவதும்
சரியான நகைச்சுவை கலாட்டா. அந்த வீட்டிற்குள்ளேயே மாமன் மகன், அத்தை மகள் இருவரிடமும் நடக்கும் விடலைக்கதால் சுவாரசியம். வருஷம் 16
படத்தில் மற்றவர் முன்னிலையில் கார்த்திக்கும்,
குஷ்புவுக்கும் இருக்கும் காதல் வெளிப்பட்டு விடுவதுமாதிரியான காட்சி இருக்கும்.
அதுமாதிரியே இந்தப்படத்திலும் அவர்கள் இருவரின் காதலும்
வெளிபட்டுவிடும். இதனால் தானோ என்னவோ வருஷம் 16 படத்தை,
இவ்விருவரின் காதல் அத்தியாயம் நியாபகப்படுத்திகிறது போல. நாசரின் பேரனாக
இக்கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் நாசரின் மகனான லுப்துபுதீனாம்.
நாசர்
தான் இதில் நாயகன், ஆனால் அவருக்கு அதிகப்படியான
வசனங்கள் கிடையாது. நாயகி என்று பார்த்தால், பேத்தியாக வரும்
சாரா தான் நாயகி. நிறைய இடங்களில் தன் கண்களாலே பேசி பாராட்டை அள்ளிக்கொள்கிறார். மற்றபடி
இப்படத்தில் நடைத்த அனைவரும் தங்களின் பங்கை உணர்ந்து மிகச் சரியாக
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செட்டிநாட்டு வீதிகளையும், வீடுகளையும் அழகாக காட்டியிருக்கிறது.
நான்
ஏற்கனவே தலைவா படத்தில், எங்களின் நகைச்சுவைப்
பகுதியின் கவனக்குறைவை சுட்டிக்காட்டியிருந்தேன். தலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்ட ஆள் மாறாட்டங்கள்
இந்த படத்திலும் இயக்குனர் சில
இடங்களில் அதே தவறை செய்திருக்கிறார். செட்டிநாட்டு வழக்கப்படி தாத்தாவை, ஐயா என்று தான் சொல்லுவார்கள். இதில் ஆரம்பத்தில் மகன் வயிற்றுப்
பேரன்கள் இருவரும் , நாசரைப் பார்த்தவுடன் "எப்படியிருக்கீங்க
ஐயா" என்று சரியாக சொல்லுவார்கள். பிறகு இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளும்போது, தாத்தா என்று சொல்லிக்கொள்ளுவார்கள். இதனை நாட்டுக்கோட்டை செட்டியாரான
இயக்குனர் எப்படி கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. மற்றொரு இடத்தில், சேவலை காணோம் என்று புகார் கொடுப்பதற்கு காவல் நிலையம் செல்லுவார்கள்.
காவல் நிலைய பலகையில் “காவல் நிலையம் மதகுப்பட்டி” என்றிருக்கும்
(இயக்குனரின் சொந்த ஊர் மதகுப்பட்டியாகும்). உள்ளே போலீஸ் காவலாளி அவர்களிடம், நீங்கள் எந்த ஊர் என்று கேட்பார், அதற்கு அவர்கள்
நாங்கள் கோட்டையூர் என்று சொல்லுவார்கள். கோட்டையூருக்கும்,
மதகுப்பட்டிக்கும் ஏறக்குறைய 40கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் தள்ளி, இவர்கள் இந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்களாம்.
கொஞ்சமாவது லாஜிக் வேண்டும். ஆனால், இயக்குனரும்
சரி, அவருக்கு கீழ் இணை மற்றும் உதவி இயக்குனர்கள் யாரும்
இந்த மாதிரி சின்ன சின்ன தவறுகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தான் கொடுமை.
இறுதியாக
இந்த படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒரு முறை பார்க்கலாம்.
நண்பருக்கு,
ReplyDeleteவணக்கம். தங்களுக்கு இடும் பின்னூட்டம் நேரடியாகப் பதிவாகி விடுகிறது.
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை என்னும் தங்களின் பதிவிற்கு நானிட்ட பின்னூட்டத்தையும் இதனையும் படித்தபின் நீக்கிட வேண்டுகிறேன். மின்னஞ்சல் இல்லாமையால் இதில் பதிகிறேன்.
இப்பதிவிற்குப் பின்னூட்டமிட மீண்டும் வருவேன்.
நன்றி.
நான் அந்த பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன் நண்பரே. தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.
Deleteகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் தான். சற்று நீண்டும் சில இடங்கள் தொய்வாகவும் இருக்கிறது தான். யதார்த்தமாக இருக்கிறது. நன்றாக விமர்சித்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று தான் படிக்கும் எல்லா விமர்சனங்களிலும். பார்க்க முயல்கிறேன் நண்பரே.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteவிமர்சனம் மிக அருமை! உங்கள் விமர்சனம் உடனேயே படத்தைப்பார்க்கத்தூண்டுகிறது.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
Deleteபடம் பரர்க்க தூண்டும் விதமாக அமைந்தது விமர்சனம். எவ்வளவு நுணுக்கமாக பார்திருக்கிறீர்கள். பிழையை கண்டு பிடிக்கவே வேண்டும் என்றா பார்த்தீர்கள். ஹா ஹா அவங்க இதை எடுக்க எவ்வளவு நொந்து நூலாய் போய் இருப்பாங்க. அதை நீங்க இப்படியா போட்டு உடைப்பீங்க சகோ.ம் ...ம்... வாழ்த்துக்கள் .சகோ..!
ReplyDeleteபிழையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாம் பார்க்கவில்லை சகோ.
Deleteகண்ணில் தென்பட்டது. அவ்வளவுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
நான் இதை படித்தேன் ஆனால் பின்னூட்டம் இடவிரும்பவில்லை நண்பரே.... காரணத்தை தாங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.
ReplyDeleteஅன்புடன்
Killergee
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteகாரணத்தை மின்னஞ்சலில் கூறுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
எனக்கு நாடு நகரம், தூரம் எல்லாம் தெரியாது. அதனால், லாஜிக் இடிபாடாக இருந்தாலும் புரியாது. கதை நன்றாக இருந்து பார்க்கவும் நன்றாக இருந்தால் போதும். ஏற்கனவே அந்த 'wifi' தொலைக் காட்சியில் கண்ணில் படுகிறது. இப்போது உங்கள் விமர்சனமும் சேர்ந்து படத்தைப் பார்க்கத் தூண்டி இருக்கிறது. பார்க்கிறேன்.
ReplyDeleteஎனக்கும் நகரம் தூரம் எல்லாம் தெரியாது சகோதரி. ஆனால் இந்த படம் எங்கள் ஊர்களில் எடுக்கப்பட்டமையால் தான், அந்த லாஜிக் பற்றி சொன்னேன்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
இக்காலத்தில் இப்படி ஒரு படமா
ReplyDeleteஅவசியம் பார்க்கின்றேன் நண்பரே
நன்றி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.
Deleteநேற்று தான் இந்தப்படத்தை குடும்பத்துடன் பார்த்தேன். குத்துப்பாட்டு இல்லை, விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. Clean Family Entertainer....
ReplyDeleteநேற்று போய் பார்த்திட்டீங்களா...
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை
கண்டிப்பாக இந்த வாரம் பார்க்கப் போகிறோம்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteநல்லதொரு விமர்சனம். விரைவில் பார்க்க முயல்கிறேன்.
ReplyDelete”அழகே அழகே” பாடல் எங்கள் மகளுக்கு மிகவும் பிடித்தது. உன்னிகிருஷ்ணன் அவர்களின் மகள் உத்தரா பாடியது.
நான் பொதுவாக பாட்டு, சண்டை எல்லாம் ஒட்டிவிட்டு தான் பார்ப்பேன். ஆனால் இந்த பாட்டை மட்டும் முழுதாக பார்த்தேன். அருமையான பாட்டு.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
அருமையான விமரிசனம்
ReplyDeleteஅந்த சின்ன பெண் வைத்திருக்கும் சேவலை பார்க்கும் போது எனக்கும் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது :)..சின்ன வயசு நினைவுகள் தான் .. ...
நெகடிவ் முடிவு இருக்காது என்ற நம்பிக்கையில் பார்க்கபோகிறேன் இன்று ....
ஆஹா, மலரும் நினைவுகளா சகோதரி...
Deleteபோய் பாருங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
விமரிசனம் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! அவசியம் பார்க்க நினைக்கும் ஒரு படம்! பார்க்கலாம்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteநல்ல விதத்தில் எழுதப்பட்ட ஒரு நடுநிலையான விமர்சனம். உங்கள் விமர்சனம் பார்த்து சைவம் திரைப்படத்தை பார்க்க வேண்டும் எண்ணம் வந்துள்ளது. நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சொக்கன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Deleteபடத்தில் எந்த ஒரு இடத்திலும் இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுழிக்கக்கூடிய நடனங்களோ என்று எதுவுமே இல்லை. நகைச்சுவை காட்சிகளும், திணிக்கப்படாமல், படத்தோடு ஒன்றி வருவது இயல்பாக இருக்கிறது.//
ReplyDeleteஅதனால்தான் சைவமோ?!!!! நல்ல விமர்சனம்! எல்லா விமர்சனங்களும் சொல்லுவது குடும்பத்தோடு பார்க்கலாம் என்பதுதான்! பார்க்க வேண்டும்! பகிர்வுக்கு மிக்க நன்றி! நண்பரே!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Delete