என்னடா, இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்குதுன்னு நீங்க நினைக்கலாம். "நான்
அவனில்லை" திரைப்படத்திற்கு போட்டியா இந்த தலைப்பில் ஒரு திரைப்படம்
வந்தாலும் வரலாம். ஏன்னா விஷயம் அந்த மாதிரி. அந்த படத்துல கதாநாயகன், பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, அவர்களிடமிருந்து
பணத்தையும், நகையையும் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவான்.
இந்தப் படத்தை நியாபகப் படுத்துற மாதிரி அடிக்கடி தமிழக செய்தித் தாள்களில்
செய்திகள் வந்து கொண்டிருக்கும். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால், செய்தித்
தாள்களில் இந்த விஷயத்திற்கு நேர் மாறாக ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதாவது ஒரு பெண்
50 அப்பாவி ஆண்களை மணந்து, அவர்களிடம் இருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு
மறைந்து விட்டாள். அந்த பெண்ணை போலீஸும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று.
ஒவ்வொருவரிடமும் நான் வக்கீலுக்கு படிக்கிறேன், ஐ. ஏ.
எஸ்சுக்கு படிக்கிறேன் என்று கூறி பணத்தைப் பறித்திருக்கிறார் அந்த பலே பெண்மணி. இந்த அப்பாவி கணவர்களில் சிலர் கொடுத்த பேட்டியை
படித்தபோது, இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட வேண்டி
இருக்கிறது. இவர்கள் வீட்டிற்கு தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு
பின்னர், எப்படியோ பெற்றோரை சம்மதிக்க வைத்து மீண்டும்
அந்தப் பெண்ணிற்கு தாலியை கட்டியுள்ளனர். இப்படி திருமணத்தை கேலிக்
கூத்தாக்கியவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களை உட்கார வைத்து "திருமணம்
ஒரு ஆயிரங்காலத்து பயிர்" என்று பாடம் எடுத்தால் கூட இவர்கள் திருந்தவா
போகிறார்கள். ஆக மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருந்து
கொண்டே தான் இருப்பார்கள்.
Friday, August 24, 2012
Monday, August 20, 2012
அமெரிக்காவில் அடியேன் – 5
நானும்
ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரும், அது தான் கடைசி ஸ்டாப்பிங்கா இருக்கும், நாம இறங்கிக்கலாம்னு
நினைச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு பார்த்தா மறுபடியும் மெயின் ரோட் வந்துடுச்சு.
வண்டி வந்த வழியா திரும்பி போக ஆரம்பிச்சது.
முதல்ல எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் என் மரமண்டைக்கு ஒரச்சது, நாம வந்த வழியா திரும்பி போறோம்னு. “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்னு பேரு தானே ஒழியே, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
எல்லாம் இல்லை. நல்ல காலம் “ஒரு நாள் பயணச் சீட்டு” எடுத்ததுனால டிக்கெட்டைப் பத்தி
கவலைப்படலை. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வண்டி நின்னுச்சு. சூப்பர் மார்கெட்டுக்குள்ள
போயி பார்க்கலாம்னு நினைச்சு அங்க இறங்கி அந்த சூப்பர் மார்கெட்டுக்குள்ள போனேன். அது
ஒரு சீன தேசத்து சூப்பர் மார்க்கெட். ஒண்ணும் வேலைக்கு ஆவாதுன்னு உடனே வெளிய வந்தேன்.
பக்கத்துலேயே டெலிஃபோன் கார்டு எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்த கடைக்கார அம்மாக்கிட்ட, ஆஸ்திரேலியாவுக்கு பேசுறதுக்கு எந்த கார்டு நல்ல கார்டுன்னு கேட்டேன். அதுக்கு
அவுங்க ஒரு கார்டை காமிச்சு ரொம்ப புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க. போதாக்குறைக்கு, ஐந்து டாலர் கார்டை நாலு டாலருக்கு தரேன்னாங்க. உடனே, எனக்குள்ள இருக்கிற முன் ஜாக்கிரதை முத்தன்னா முழிச்சுக்கிட்டான். ஆஹா, இந்த அம்மா விக்காத ஒரு கார்டை நம்ம தலைல கட்டப் பாற்குறாங்கன்னு முடிவு பண்ணிட்டேன்.
ஆனாலும் துணிஞ்சு வேற ஒரு கார்டை எடுக்க மனசு வரலை. ஏதாவது ஒரு கார்டை எடுத்துடலாம், அந்த கார்டு சரியா வேலை செய்யலைன்னா தான் பிரச்சனையே, நான் தங்கி இருக்கிற ஹோட்டலுக்கு பக்கத்துல ஒரு கடையும் கிடையாது. அதனால ரொம்பவும்
யோசிச்சு அவுங்க காமிச்ச கார்டுலேயே இரண்டு டாலருக்கு உள்ள ஒரு கார்டை வாங்கிட்டு, அவுங்ககிட்டேயே அந்த “McCarthy Ranch”க்கு போற பஸ் எங்க
நிக்கும்னு கேட்டு, அங்க போயி நின்னேன். கால் மணி நேரத்துல அந்த
பஸ் வந்துச்சு. வண்டிக்குள்ள யாருமே இல்லை. வண்டியை பஞ்சாபி அண்ணாத்தை தான் ஓட்டிக்கிட்டு
வந்தாரு. இந்த தடவை ஒழுங்கா இறங்கணும்னு டிரைவர் கிட்டே, கொஞ்சம்
வால் மார்ட் கிட்ட இறக்கி விடுங்கன்னு சொன்னேன். அவரும் அந்த “McCarthy
Ranch” வளைவுக்குள்ள போனவுடனே, ஒரு நிறுத்தத்துல
இறங்கிக்குங்கன்னு சொன்னாரு. வால் மார்ட் அதுக்கு பக்கத்துலேயே தான் இருக்குது. இதை
முத தடவை வரும்போது நான் கவனிக்காம விட்டுட்டேன். அந்தக் கடைக்குள்ள போனா, சிட்னில இருக்கிற K-mart, target மாதிரிதான் தான் அதுவும் இருந்துச்சு. ஆனா விலை எல்லாம் ரொம்ப கம்மியா இருந்துச்சு.
நானும் முதல்ல வீட்டு மகாரணிகளுக்கு துணிமணி எடுக்கலாம்னு பார்த்தா, எதை எடுக்கிறது, எதை விடுறதுன்னு தெரியலை. அந்த அளவுக்கு
அங்க எல்லாம் வெறும் நாலு டாலர், ஐந்து டாலர்னு இருந்துச்சு.
மிஞ்சிப் போனா, பத்து, பதினைந்து டாலர்குள்ள
தான் எல்லாம் இருக்குது. ஆனா என்ன! எல்லாமே வீட்டுக்குள்ள போட்டுக்குற மாதிரி தான்
இருந்துச்சே தவிர வெளியே போறதுக்கு போட்டுக்குறது மாதிரி இல்லை (அப்புறம் கொடுக்கிற
நாலு,ஐந்து டாலருக்கு partywear துனியா
கிடைக்கும்). எப்படியோ ஒரு வழியா தெளிஞ்சு, ரெண்டுப் பேருக்கும்
குத்து மதிப்பா அவுங்க அளவுக்கு நாலைந்து துணிமணிகளை வாங்கினேன். அப்புறம் எனக்கு ஏதாவது
ஒரு டி-ஷர்ட் வாங்கலாம்னு பார்த்தா, எல்லா டி-ஷர்ட்டும் எனக்கு
சின்னதா தான் இருக்கு(!),அப்படி சொல்லனும்னு தான் ஆசை. ஆனா அதுக்கு
நேர் மாறா தான் இருந்துச்சு. அதாவது அங்க இருக்கிற ஒரு சின்ன அளவு டி-ஷர்ட் கூட எனக்கு
பெருசாதான் இருந்துச்சு. அப்படியும் ஒரு டி-ஷர்ட்டை போட்டுப் பார்த்தேன். என் ரெண்டு
கையும் அந்த டி-ஷர்ட்குள்ள மறைஞ்சு போச்சு.கையை ஆட்டினா, யானையோட
தும்பிக்கை ஆடுற மாதிரி, கை இல்லாம வெறும் டி-ஷர்ட் மட்டும் ஆடுச்சு.
சரி, இது நமக்கு ஒத்து வராதுன்னு, ஒண்ணும்
வாங்கிக்கலை. வீட்டு அம்மணிக்கு ஏதாவது எடுக்கலாம்னு பார்த்தா, அவுங்க போட்டுக்க கூடிய துணிமணி எல்லாம், அண்டா அளவுக்கு
பெருசா இருக்குது. சரி, நம்ம பாடு ஏதாவது
வாங்கிக்கிட்டு போயி, அது அவுங்களுக்கு தொள தொள இருந்தா, உடனே கல்யாணம் ஆகி, இத்தனை வருஷம் ஆச்சு, ஒழுங்கா ஒரு துணிமணி வாங்கிக்கிட்டுவர துப்பில்லைன்னு சொல்லி, உபதேசம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, இது நமக்கு தேவையா(!), அதனால அவுங்களுக்கு அப்புறம் வேற ஏதாவது வாங்கிக்கிட்டு போலாம்னு முடிவு பண்ணி, கடையை விட்டு வெளியே வந்தேன். மணியோ 2.30 ஆச்சு. மூணு மணிக்கு மாநாடு நடத்துறவுங்க
ஹோட்டல்ல ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தாங்க. நானும் லேட்டாயிடுச்சேன்னு பயந்துக்கிட்டு
திருப்பியும் பஸ் பிடிச்சு, ரெண்டு train மாறி, ஹோட்டலுக்கு வந்தா சரியா 4.00 மணியாச்சு. எல்லாரையும்
கருத்தரங்கு நடக்கிற இடத்துக்கு கூட்டிக்கிட்டு போயிருப்பாங்க. நாம எப்படி போகப் போறோம்னு
தெரியலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்புறம் நடந்ததை அடுத்த பதிவுல சொல்றேன்.
பகுதி-6
பகுதி-6
Saturday, August 11, 2012
அமெரிக்காவில் அடியேன் – 4
மறு
நாள் காலைல எந்திரிச்சு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்(இதை தான் ரூம் போட்டு
யோசிக்கிறதன்னு சொல்லுவாங்க போலயிருக்கு). ஏன்னா எனக்கு எப்பவுமே தனியா போயி ஊர் சுத்திப்
பார்க்க பிடிக்காது. மதியம் மூன்று மணிக்கு தான் அந்த கல்வி மாநாடு ஆரம்பமாகும். சரி
அதுவரைக்கும் ஷாப்பிங்காவது பண்ணலாம்னு முடிவு
செஞ்சேன். நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி எல்லோரும் வால் மார்ட்ன்னு ஒரு கடை
இருக்கும். அங்க எல்லா பொருளும் ரொம்ப மலிவா கிடைக்கும், அதனால கண்டிப்பா அங்க போயிட்டு
வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சாங்க. இந்த தகவலை சொன்னவுங்க என்கிட்ட தனியா சொல்லியிருந்தாலும்
பரவாயில்லை, வீட்டு அம்மணியை வச்சுக்கிட்டு வேற சொல்லிட்டாங்களா, அதனால வீட்டு அம்மணி, நான் அமெரிக்கா வருவதற்கு முன்னாடி
மூச்சுக்கு முன்னூறு தடவை, நீங்க கண்டிப்பா வால் மார்டுக்கு போயிட்டு
வாங்கன்னு என் காதுல மந்திரம் ஓதி, மனசுல பதிய வச்சுட்டாங்க.
அதனால இன்னைக்கு வால் மார்ட்டுக்கு போயிடணும்னு முடிவு பண்ணி, ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்ககிட்ட வால் மார்ட்டுக்கு எப்படி போறதுன்னு கேட்டேன்.
அதுக்கு அவுங்க அந்த கடை “McCarthy Ranch” ஷாப்பிங் சென்டர்ல
இருக்குது. இங்கேருந்து நீங்க போகனும்னா, இரண்டு train
மாறி, ஒரு பஸ் பிடிச்சு போகனும். உங்களால போக முடியுமான்னு
கேட்டாங்க. நானும் ஜப்பான்ல மொழி தெரியாத போதே, இந்த மாதிரி நிறைய
இடத்துக்கு போயிருக்கோம், இது வெறும் ஜூஜிப்பின்னு நினைச்சு, போக முடியும்னு சொன்னேன். உடனே அவுங்க ஒரு மேப்பை கையில கொடுத்து, எந்த trainனை எடுக்கனும், எங்க
மாறனும், அப்புறம் எந்த பஸ்ஸை எடுக்கனும்னு சொன்னாங்க. நானும்
அதே மாதிரி இரண்டு train மாறி, பஸ் எடுத்தேன்.
நான் போக வேண்டிய இடம் தான் கடைசி நிறுத்தம். அதனால நிம்மதியா நான் பாட்டுக்கு வேடிக்கை
பார்த்துக்கீட்டு போனேன். ஆனா சும்மா சொல்லக் கூடாது, இரண்டு
டாலருக்கு நல்லாவே ஊரை சுத்திக் காட்டுனாரு அந்த டிரைவர் அண்ணாத்தே. ரொம்ப நேரத்துக்கு
அப்புறம் “McCarthy Ranch”ன்னு ஒரு நுழைவு வாயிலுக்குள்ள பஸ்
போனுச்சு. நானும் இதுக்குள்ள தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கும் போலன்னு நினைச்சு
இறங்குறதுக்கு தயாரா இருந்தேன். ஆனா, நான் நினைச்சது ஒண்ணு, அங்க நடந்தது ஒண்ணு. அது என்னன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
பகுதி-5
பகுதி-5
Wednesday, July 18, 2012
நண்பரின் தன்னம்பிக்கையூட்டும் கவிதை
என்னோட மனப்பாரத்துக்கு அந்த "நிம்மதி" கவிதை ஒரு வடிகாலாக அமைந்தது. ஆனால் அந்த கவிதையை படித்துவிட்டு நண்பர்கள் வருத்தம் அடைந்ததினால், நண்பர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள் தன்னோட தன்னம்பிக்கையூட்டும் கவிதையை பதியுமாறு கேட்டுக் கொண்டார்.
நண்பர்களே! வாழ்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. திரு. அண்ணா சுந்தரத்தின் இந்த கவிதை உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அந்த கவிதையை பதிக்கிறேன்.
நிம்மதியே! நீ என்னுள்
நீண்ட நாள் இருக்க
இறைவன் எனக்கு
தந்துவிட்டான் தெம்பினை!
இந்த உலகில் நீ
எங்கும் ஒளிய முடியாது
முடிந்தால் நிலவில்
ஒளிந்து பார்
உன்னை நான்
சந்திக்கிறேன்.
- அண்ணா சுந்தரம்
நண்பர்களே! வாழ்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. திரு. அண்ணா சுந்தரத்தின் இந்த கவிதை உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அந்த கவிதையை பதிக்கிறேன்.
நிம்மதியே! நீ என்னுள்
நீண்ட நாள் இருக்க
இறைவன் எனக்கு
தந்துவிட்டான் தெம்பினை!
இந்த உலகில் நீ
எங்கும் ஒளிய முடியாது
முடிந்தால் நிலவில்
ஒளிந்து பார்
உன்னை நான்
சந்திக்கிறேன்.
- அண்ணா சுந்தரம்
Monday, July 16, 2012
நிம்மதி
விடலைப் பருவத்தில்
நண்பனாக இருந்த
தந்தையை இழந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!
வாலிப வயதில்
குடும்பத்தின் பாரத்தை
தோள்களில் சுமந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!
திருமண வயதில்
திருமணத்தை முடித்து
குழந்தை செல்வத்துக்காக
பத்து வருடங்கள் காத்திருந்ததினால்
நிம்மதியைத் தொலைத்தேன்!
நடுத்தர வயதில்
நிம்மதியை கண்டுப்பிடித்து
விட்டேன் என்று நினைக்கையில்
என்னை செதுக்கி இந்த
நிலமைக்கு கொண்டுவந்து விட்ட
என் தெய்வம் என்னை
விட்டு நீங்கியதினால்
கிடைத்த அந்த நிம்மதியை
மீண்டும் தொலைத்தேன்!
இன்று என்னில்
சரிபாதியாக இருப்பவளுக்கு
கண்ணில் பிரச்சனை என்றால்
என்னோடு கூடப் பிறந்தவனுக்கோ
உடம்பில் பிரச்சனை
இப்படி பிரச்சனைகளையே
வாழ்கையில் பார்த்து
மரத்துப் போன மனது
கேட்கிறது,
உன்னால் நிம்மதியை
கண்டுப்பிடித்து வைத்துக்
கொள்ள முடியாதா
என்று!
அதற்கு புத்தி பதில்
கூறியது,
நிம்மதி ஆடும் கண்ணாம்பூச்சி
ஆட்டத்தில், உன்னால்
நிம்மதியை கண்டுப் பிடிக்க
முடிந்தாலும், அது உன்னை
விட்டு சீக்கிரம் மறைந்து விடும்
என்றாவது ஒரு நாள் அது
தன் தோல்வியை ஒப்புக்கொண்டு
உன்னிடம் தானாகவே அடைக்கலமாகும்
ஆனால் அப்போது உன்னால்
அதை அனுபவிக்க முடியாது
என்று!.
அமெரிக்காவில் அடியேன் – 3
நானும்
நடந்து போயி விமானத்துக்கிட்ட போனேன். விமானம் இருக்கும்னு பார்த்தா, அங்க ஏதோ ஒரு வேன்
மாதிரி சின்னதா ஒண்ணு நின்னுக்கிட்டு இருந்துச்சு. ஓ! இப்படியெல்லாம் கூட விமானம்
இருக்கும்மான்னு ஒரே ஆச்சிரியமா போச்சு. இந்த டப்பா விமானத்தை பார்த்தவுடன், விமானத்து மேல இருந்த மதிப்பே போச்சு. அதுக்குள்ள ஏறுனவுடனே, இடது பக்கம் திரும்பி பார்த்தா வண்டிய ஓட்டுற டிரைவர் அண்ணாத்தை
கண்ணுக்கு தெரிஞ்சாரு. என்னதான் வண்டி டப்பாவா இருந்தாக்கூட,
இப்படி வண்டி ஒட்டுறவரை எல்லாம் பார்க்க முடியுதேன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன
சந்தோஷம். ஆனாலும், விமானத்துக்குள்ள ஒரு வசதியும் இல்லை.
பார்க்குறதுக்கு ஒரு வேன் மாதிரி இருந்தாலும்,நம்ம ஊர் வேன்ல
இருக்கக்கூடிய வசதி கூட இல்லை. சீட்டை சாச்சுக்க கூட முடியலை. குத்த வச்ச
பிள்ளையாராட்டம் உட்கார்ந்துக்கிட்டே போனேன். விமானத்தை எடுத்ததிலிருந்து, இறக்குற வரைக்கும் ஒரே “கொர்ருன்னு” சத்தம் வேற.
அமெரிக்காவில, உள்ளூர் விமானம் எல்லாம்
இப்படித்தான் இருக்கும் போல. எப்படியோ ஒரு வழியா “san Jose” வந்து சேர்ந்தேன். விமானத்தை
விட்டு இறங்கினவுடனே சிட்னிலேருந்து வந்த இன்னொரு நண்பரை முதன் முதலா பார்த்தேன்.
ரெண்டு பேருமா பொட்டி எடுக்கிற இடத்துக்கு வந்தோம். பார்த்தா பொட்டி வந்த மாதிரியே
தெரியலை. எனக்கு திருப்பியும் பயம் வந்துடுச்சு. ஆஹா! நம்ம பெட்டியை மாத்தி வேற
விமானத்துல போட்டுட்டானுங்க போல இருக்கேன்னு நினைச்சேன். இப்படி ஏதாவது ஆகும்னு
தெரிஞ்சு தான் சிட்னிலேருந்து கிளம்பும்போதே இன்சூரன்ஸ்க்கு தேவையான பேப்பர்
எல்லாம் எடுத்து கைப்பொட்டில வச்சிருந்தேன். . நண்பர் அதுக்குள்ள அங்கிருந்த தகவல்
மையத்துல போய் கேட்டாரு. அவுங்க நீங்க பெட்டி வர்றதுக்குள்ள வந்து பெட்டி எங்கன்னு
கேட்டா நாங்க என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டாங்க. என்னடாது,
நம்மலே ஆடி அசைஞ்சு அந்த விமான நிலையத்தை அனு அனுவா பார்த்துகிட்டு இவ்வளவு லேட்டா
வரோம், இன்னமுமா பெட்டி வராம இருக்குன்னு ஒரே ஆச்சிரியமா
இருந்துச்சு. கடைசில, நான் பயந்த மாதிரி எல்லாம் ஆகாம, என்னோட பெட்டி ரொம்ப சமர்த்தா என்கிட்ட வந்து சேர்ந்துச்சு. அப்புறம்
நானும் அந்த நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து ஹில்டன் ஹோட்டலுக்கு போனோம். நாங்க
போனபோது மணி 11.30 தான் ஆச்சு. Check-in 3 மணிக்கு தான்
போட்டிருந்துச்சு. 3 மணி வரைக்கும் ஹோட்டல் வாசல்ல உட்கார்ந்து கூர்கா வேலை தான்
பார்க்க போறோம் நினைச்சோம். நல்ல வேளை, எங்களுக்கு எங்க
அறையோட சாவியை கொடுத்துட்டாங்க. உடனே நண்பருக்க ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு, இந்த ஹோட்டல் சுமாரான ஹோட்டல்லா இருக்கும் போலன்னு சொன்னாரு. நான் உடனே, இது பெரிய ஸ்டார் ஹோட்டலுங்க, ஏன் உங்களுக்கு
இப்படி ஒரு சந்தேகம் வந்துச்சுன்னு கேட்டேன். அதுக்கு அவரு 3மணி check-inனுக்கு, 11.30 மணிக்கெல்லாம் சாவியை
கொடுத்துட்டாங்களே, கூட்டம் இல்லாததுனால தானே முடிஞ்சுது
அப்ப இது சுமாரான ஹோட்டல் தானே அப்படின்னாரு. ஆஹா! ஒரு பெரிய கண்டுபிடிப்பை இல்ல
கண்டுப்பிடிச்சிருக்காருன்னு நினைச்சுக்கிட்டு, ஏங்க நமக்கு
வந்தவுடனே ரூம் கிடைச்சுதேன்னு சந்தோசப்படுவீங்களா,
அதைவிட்டுட்டு இப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களேனேன்னு சொல்லி அவுங்க
அவுங்க ரூமுக்கு போனோம். போயி நல்லா அசதி போக குளிச்சுட்டு கீழே வரவேற்பறைக்கு
வந்தோம். பசி வேற வயித்தைக் கிள்ள ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல எங்க ஹோட்டல்னு கேட்டோம்.
பக்கத்துல தான் இருக்குனு சொன்னாங்க. சரின்னு நாங்களும் நடக்க ஆர்ம்பிச்சோம். நடந்தோம்,நடந்தோம், நடந்துக்கிட்டே இருந்தோம், ஹோட்டல் தான் வந்த பாடு இல்லை. நடக்கும்போது தான் தெரிஞ்சுது, அந்த இடம் ஒரு இண்டஸ்டிரியல் இடம்னு. நாங்களும் கிட்டதட்ட
ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்திருப்போம், ஒரு
ஹோட்டல் கூட கண்ணுக்கு தென்படவேயில்லை. இங்க வேலை பார்க்கிறவுங்க எல்லாம் நம்மளை மாதிரி
தினமும் சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுவாங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன்.
கடைசியா ஒரு ஹோட்டலை கண்டுப்பிடிச்சோம். நாங்க போன நேரம் பஃப்பே நேரமாம், அதனால பீட்ஸா, பாஸ்தா இதெல்லாம் ஏழரை டாலருக்கு எவ்வளவு
வேனாலும் சாப்பிடலாம்னு சொன்னாங்க. ஆஹா! புண்ணியவானுங்க, நம்ம
பசி அறிஞ்சு நமக்கு ரொம்ப செலவில்லாம சாப்பாடு போடுறானுங்கன்னு நினைச்சுக்கிட்டு, எல்லாத்தையும் வெளுத்துக் கட்டினோம். கடைசில பில்லு போடுற எடத்துல பார்த்தா
எட்டரை டாலர்னு சொன்னாங்க. ஏழரைன்னு சொன்னிங்க, சாப்பிட்டதுக்கப்புறம் விலையை கூட்டி சொல்றீங்கன்னு கேட்டா, நாங்க எல்லாத்துலையும் வெளிப்படையா இருப்போம். விலைல கூட, விலை தனியா, வரி தனியான்னு போடுவோம்ன்னு சொன்னாங்க.
அடப்பாவிகளா! எல்லாத்தையும் ஒரே விலையா பார்த்து பழகிப் போன எங்களுக்கு இது ரொம்ப பெரிய
கஷ்டமா இருக்குமேன்னு நினைச்சு, பில்லை கட்டிட்டு, திருப்பியும் சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் செறிச்சிடுற அளவுக்கு திரும்பி ஹோட்டலுக்கு
நடந்தோம்.
எங்களுக்கு
மறு நாள் மாலையிலிருந்து தான் கல்வி மாநாடு. மறு நாள் என்ன பண்னினேன்ன்னு அடுத்த பதிவுல
சொல்றேன்.
Wednesday, July 4, 2012
அமெரிக்காவில் அடியேன் - 2
நானும்
லாஸ் எஞ்செல்ஸ் போற விமானத்துல ஏறி உட்கார்ந்தேன். இந்த விமானத்துல சைவ சாப்பாடு
வாய்க்கே விளங்கலை.ஒரு சின்ன கரண்டி அளவு வெள்ளை சாதமும், இல்ல! இல்ல! பொங்க சாதமும்!! (அந்த
அளவுக்கு குழஞ்சு இருந்துச்சு), வேகவச்ச இரண்டு,மூன்று மஷ்ரூமும்,கொஞ்சம் கீரையும்
கொடுத்தாங்க.எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிட்டேன். இன்னும் இரண்டு நேரத்துக்கு, இதையேத்தான் கொடுக்கப் போறாங்களோன்னு பயம் வந்துடுச்சு. ஆனா, இதையே கொடுக்காம, ஏதோ தம்மாத்துண்டு பர்கர்
கொடுத்தாங்க(எப்படித்தான் அவ்வளவு சின்னதா பர்கர் செய்வாங்களோ!!). அதை மட்டும்
கொஞ்சம் திருப்தியா சாப்பிட்டு, எப்படியோ 13 மணி நேரத்தை
அந்த விமானத்துல ஒப்பேத்தி லாஸ் எஞ்செல்ஸ் விமான நிலயத்துக்கு வந்து
சேர்ந்தேன்.அங்கேயும் குடியுரிமைத் துறையில இருக்கிற ஒரு அம்மா தான்,எனக்கு அமெரிக்காவில 6 மாசம் வரைக்கும் தங்குறதுக்கு அனுமதி
தந்தாங்க.அதுக்கப்புறம் என்னோட ஒரே ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கிட்டு, வலது பக்கம் திரும்பினவுடனே, என் பெட்டில
ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்து, இங்கேயே அந்த பெட்டிய
போடுங்கன்னு சொன்னாங்க. என்னை மாதிரியே மற்ற ஊர்களுக்கு போறவங்களையும் அங்கேயே
அவுங்க பெட்டியை எல்லாம் போடச் சொன்னாங்க. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துடுச்சு., இவுங்க நம்ம பெட்டியை “san jose” போற விமானத்துல ஏத்தாம வேற விமானத்துல ஏத்திட்டா என்ன பண்றது. சரி, பெட்டி போனா போகட்டும், அதுக்குள்ள தங்கமும்,வெள்ளியுமா இருக்குது!!!. அந்த பெட்டிக்குள்ள இன்னொரு சின்ன பெட்டியும்(hand
baggage பெட்டி) அந்த சின்ன பெட்டிக்குள்ள ஏழெட்டு சட்டை, பேன்ட் தான் இருக்குது. இதுக்கு போயி நாம ஏன் கவலை படனும்னு மனசை
தேத்திக்கிட்ட போதுதான், மூளைக்குள்ள ஒரு அலாரம்
அடிச்சுது.என்னன்னா!அந்த பெட்டிக்குள்ள இரண்டு சட்டை பேன்ட் புதுசா வச்சிருந்தேன்
அந்த இரண்டும் மாமனார் வீட்டுல கொடுத்தது. அதுல ஒரு சட்டை பேன்டைத்தான் நான்
கட்டுரையை வாசிக்கிற அன்னைக்கு போட்டுக்கனும்னு வீட்டு அம்மணியோட உத்தரவு. பெட்டி
மட்டும் வராம போகட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் கச்சேரியைன்னு மனசுக்குள்ள அந்த
உத்தரவு மிருதங்கம் வாசிச்சது. கண்டிப்பா பெட்டி கிடைச்சிடுங்கிற நம்பிக்கைல
அடுத்த விமானம் எங்க நிக்கும்னு போர்டிங் பாஸ்ல பார்த்து 65A கேட்டுக்கு வழியை தேடிக்கிட்டு போனேன்.சரி, எதுக்கும்
மேல இருக்கிற டிவி பொட்டில ஒரு தடவை பார்த்துடலாம்னு பார்த்தா, அதுல கேட் –66ன்னு காட்டுனுச்சு. திருப்பியும்
66கேட்டை தேடி கண்டுப் பிடிச்சு போனேன். அப்பவே காலைல 8மணியாயிடுச்சு. 9.20க்கு
அந்த விமானம்,அதனால 8.50க்கு எல்லாம் போர்டிங் பண்ணனும்னு
சொல்லியிருந்தாங்க.நானும் கேட்-66ல போயி உட்கார்ந்து, எனக்கு
ரொம்ப பிடிச்ச இளையராஜா பாடல்களை கேட்டுக்கிட்டு இருந்தேன். மணியோ 9மணியாயிடுச்சு,அந்த கேட்ல கூட்டத்தையும் காணோம், அந்த விமானத்துல
வேலை பார்க்குறவங்களையும் காணோம். எனக்கு ஒரே குழப்பமா போச்சு. மறுபடியும் அங்கேயே
இருக்கிற டிவி பொட்டில போயி பார்த்தேன். அது கேட்-66ன்னு தான் காட்டிக்கிட்டு
இருந்துச்சு. என்னடா இது ஒண்ணுமே புரியலையேன்னு யோசிச்சு,அங்க
இருக்கிற தகவல் நிலையத்துல போயி ஏங்க, இந்த மாதிரி “san
jose” போற விமானம் எந்த கேட்ல நிக்குதுன்னு கேட்டேன். கவுண்ட்டர்ல
இருக்கிற அம்மாவுக்கு நான் பேசுன ஆங்கிலம் புரியல போல இருக்கு, அவுங்க திருப்பி என்ன கேட்டீங்கன்னு,
கேட்டாங்க.மறுபடியும் நான் கேட்டதையே திருப்பி சொன்னேன். அவுங்க “san joseஆ”, அந்த மாதிரி எந்த
ஊரும் இல்லையேன்னு சொன்னாங்க.நானும் “san joseயை” வேற விதமா எல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகலை. மணியோ
9.05ஆயிடுச்சு. இனிமே இவுங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாதுன்னு முடிவு பண்ணி, நான் என்னோட போர்டிங் பாஸை எடுத்துக் காமிச்சு சைகை பாஷைல எப்படி
போகனும்னு கேட்டேன்.உடனே, அந்த அம்மாவும், ஓ! “சேன் உஸேவா” அது கேட்-64Aன்னு சொன்னாங்க. எனக்கு ஒரே சந்தேகம் “san joseன்னு”
எழுதுறாங்க, ஆனா சொல்றதை மட்டும் என்னமோ“சேன் உஸேன்னு” சொல்றாங்களேன்னு. (அந்த ஊருக்கு
போனப்புறம் தான் ஏன் அப்படி சொல்றாங்கன்னு தெரிஞ்சுது). திருப்பியும் அந்த
சந்தேகத்தை கேட்டு, அவுங்களுக்கு அதை புரிய வச்சு
முடிக்கிறதுக்குள்ள, விமானம் போயிடும்னு முடிவு பண்ணி, அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ற வேலையை விட்டுட்டேன்.ஆனா ஏன் இப்படி
தாப்பா டிவி பொட்டில காட்டுறாங்கன்னு அவுங்க கிட்ட கேட்டேன். அந்த அம்மாவும்
ஓ!அதை மாத்தலை போல இருக்குன்னு ரொம்பவும் அசால்டா சொன்னாங்க. அட!கஷ்டமே, இதை நம்பி இருந்தா, நாம அந்த விமானத்தை
விட்டிருப்போமேன்னு வேக வேகமா கேட்-64A எங்க இருக்குதுன்னு
தேடிக்கிட்டே போனேன், போனேன்,போயிக்கிட்டே
இருந்தேன். ஒரு பெரிய சுத்து சுத்தி, ஒரு வழியா அந்த
கேட்டுக்கு வந்து சேர்ந்தேன். நல்ல வேளையா, அப்பத்தான் எல்லோரும்
வரிசைல நின்னு போர்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் போயி அந்த வரிசைல
நின்னேன். அப்ப ஒரு அறிவிப்பு செஞ்சாங்க. அதாவது,கைப் பெட்டி
பெருசா இருந்தா, அதை விமானத்துக்குள்ள வைக்க முடியாது, அதனால விமானம் ஏறுவதற்கு முன்னாடி அங்க நிக்கிறவங்ககிட்ட கொடுத்துடுங்க, அவுங்க ஒரு ரசீது கொடுப்பங்க. இறங்கும்போது, நீங்க
உங்க பெட்டியை வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. நான் வெறும் கம்ப்யூட்டர் பையை
வச்சிருந்ததுனால, எனக்கு அந்த பிரிச்சனை இல்லாம போச்சு. என்னோட
போர்டிங் பாசை சரி பார்த்த பிறகு, நடந்து போயி
விமானத்துக்குள்ள ஏறச் சொன்னாங்க. நடந்து போயி விமானத்துக்கிட்ட போனவுடனே, எனக்கு ஒரே ஆச்சிரியமாகவும்,அதிர்ச்சியாகவும்
போயிடுச்சு. ஏன் எனக்கு அப்படி ஆச்சுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
பகுதி-3
பகுதி-3
Subscribe to:
Posts (Atom)