Monday, April 21, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-3





காசியின் மகிமை ஏட்டில் அடங்காது, எழுத்தில் அடங்காது என்று கூறுவர்.
திருவாரூர் பிறக்க முக்தி. காசி இறக்க முக்தி. காஞ்சி வசிக்க முக்தி. திருவண்ணாமலை - நினைக்க முக்தி”. எனும் ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, காசியில் இறப்போர்க்கு, ஆனந்தத்திலேயே, பேரானந்தமான அடுத்த பிறவி எடுக்காமல், ஈசனின் பாதகமலங்களில் முக்தி கிடைக்கும். ஆன்றோர்களும், பெரியோர்களும், தங்களது அந்திம காலத்தில் காசி ஷேத்திரத்தை அடைந்து, மூன்று நேரமும் கங்கை நீராடி, ஜபங்களை முடித்து, பிரணவ மந்திரம் சொல்லி, ஈசனின் சேவடி கமலங்களில் முக்தி பெறுவர்.

குபேரன் காசி ஸ்தலத்தில் தவமிருந்து ஈசானருளால் நவநிதிகளைப் பெற்றுத் திசைகவளருள் ஒருவராகும் பேரு பெற்றான். காமதேனு காசியில் ஈசனை லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்து பரமனின் பேரருளைப் பெற்றது. அந்த லிங்கம் கோப்பியேசுவரர் எனும் திருநாமாத்தைப் பெற்றது. பிரம்மதேவன் காசியில் கபிலாகராம் என்ற தடாகத்தின் அருகே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த லிங்கத்திற்கு ரிஷிபத்துவாசன் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் மேலும் சங்கமஈசுவரர் என்ற திருநாமத்துடன் கூடிய மற்றொரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒரு சமயம் பார்வதி தேவி காசி நந்தவனத்தில் பந்து விளையாடும்போது இரு அரக்கர்கள் வேங்கை உருவம் கொண்டு அவர் முன் வந்து, பயங்கரமாக கர்ஜித்து அச்சுறுத்தினர். அதனால் சீனம் கொண்ட பார்வதி தேவி அவர்கள் மீது அந்த பந்தை எறிந்து, இருவரையும் கொன்றார். அரக்கர்களை அழித்துக் கொன்ற அந்த பந்து லிங்கரூபத்தில் நிலைப்பெற்றது. அந்த லிங்கம் பந்துகேஸ்வரர் என்று பெயர் பெற்றது. பராசக்தியைத் திருமகளாக பெற்ற இமவான், காசியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஈசனை வழிபட்டார். அந்த லிங்கத்திற்கு சைலேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இதுபோல் தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும் காசி மாநகரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, வழிபாடுகள் புரிந்து ஈசனின் பேரருளைப் பரிபூர்ணமாக பெற்றனர். இதுவரை காசியின் பெருமையை அடியேன் சொன்னது வெறும் கடுகு அளவு தான். இன்னும் எவ்வளவோ காசியின் சொல்லிக் கொண்டு போகலாம். ஈசனை மூர்த்தி சொரூபமாக வழிபடுவோர்க்கு எல்லா வித சுகபோகங்களும் கிட்டும். ஈசனின் திருவுருவங்கள் என்ன என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- புத்தகத்தில் படித்தது.

தன் கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினர். தன்னுடைய இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான், அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்த புனிதவதியார், உடனே சிவபெருமானை நினைத்து, ஈசனே, இது வரை என் கணவருக்காக தாங்கி நின்ற இந்த அழகு உடல் இனிமேல் எனக்கு வேண்டாம். இந்த அழகு மிகுந்த உடலை யாரும் இனி பார்க்க கூடாது. அதனால், எனக்கு பேய் வடிவம் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டினார். அவருடைய வேண்டுதலை செவி சாய்த்த சிவபெருமானும், புனிதவதியாருக்கு, பேய் வடிவத்தைக் கொடுத்து அருள் புரிந்தார். புனிதவதியார் தன் அழகு மிகுந்த உடல் மறைந்து, எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். அங்கு கூடி நின்ற உறவினர்களுக்கு எல்லாம் அதிசியமாக போய் விட்டது. உடனே அவர்கள் எல்லோரும் அவரை வணங்கினார்கள். 




இந்த உருவத்துடன் அவர்கள் நல்ல தமிழ் புலமையும் பெற்றார்கள். நிறைய பாடல்களையும் பாடினார்கள். திருவந்தாதி”, “மூத்த திருப்பதிகம்”, “திருவிரட்டை மணிமாலை எனும் திருப்பிரபந்தத்தையும்ஆகிய நூல்களை இயற்றினார். இதனால் புனிதவதியார், காரைக்கால் அம்மையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இரவும், பகலும் எல்லா நேரங்களிலும் சிவனை நினைத்தும், பூசை செய்தும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள், அவருக்கு திரு கைலாய மலைக்குச் சென்று அந்த பரமசிவனை தரிசிக்க எண்ணினார். தான் இருக்கும் இடத்திலிருந்து, பாதயாத்திரையாக கைலாய மலைக்குச் சென்றார். அங்கு மலையின் மீது தன் காலால் நடந்தால், அந்த இடம் மாசுப் பட்டு விடும் என்று எண்ணி, தன் தலையால் மலையேறினார். (அதாவது தலை கீழாக நடந்தார்). புனிதவதியார் அங்கு தலை கீழாக வந்துக் கொண்டிருப்பதை பார்த்த பார்வதி தேவி, ஈஸ்வரனிடம், தலையினால் நடந்து வருகின்ற எலும்பும் தோலுமாய் உருவம் கொண்டவரின் அன்பை நாம் என்ன வென்று சொல்லுவது என்று கூறினார். அதற்கு இறைவன், தேவி! இவர் நம்மை வழிபடும் அம்மையார். இந்த உருவத்தை வேண்டும்மென்று தான் நம்மிடமிருந்து பெற்றார் என்றார். அதனைக் கேட்ட பார்வதி தேவியோ! எல்லோரும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், முதுமையிலும், இளமை வேண்டும் என்று தான் வேண்டுவர்கள். ஆனால் இவரோ, இளமையிலேயே, முதுமை வேண்டும் என்று விரும்பி இருக்கிறாரே, என்று அதிசியப்பட்டார். புனிதவதியாரும், சிவபெருமான் இருக்கிற இடத்திற்கு அருகில் வந்து விட்டார். இவரைப் பார்த்த சிவபெருமனோ! அம்மையேஎன்று அன்பாக அழைத்தார். தாய் தந்தை இல்லாத சிவபெருமானே, இவரைப் பார்த்து அம்மையே என்று அழைக்கிறார் என்றால், இவருடைய பக்தியை என்னவென்று சொல்வது. உடனே, புனிதவதியாரும் அப்பா! என்று கூறி, சிவபெருமானின் காலடியில் விழுந்து வணங்கினார். அம்மையே! உமக்கு என்ன வாரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அம்மையாரோ, ஈசனே! எனக்கு இன்பத்தில் எல்லாம் சிறந்த இன்பமான மோட்சம்வேண்டும் என்றார். நான் மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை, நான் மீண்டும் பிறக்க நேர்ந்தால், உங்களை மறக்காமல் இருக்க வேண்டும். அத்தோடு, தாங்கள் ஆனந்த தாண்டவம்ஆடும்போது, நான் தங்கள் திருவடிக்கீழ் இருந்து அதைப் பார்க்க வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும், தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில், நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுக்களிப்பாயாக என்று அருள் புரிந்தார். அம்மையாருக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. பிறகு அவர் திருவாலங்காட்டை அடைந்து, அந்த ஈசுவரனின் ஆனந்த நடனத்தை கண்டுக் களித்தார். அவ்வாறு கண்டு களிக்கும் போது, திருவாலங்காட்டுத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை ஆகிய பாடல் நூல்களை இயற்றினார். 



அடுத்து வேறு ஒரு இறையடியாரைப் பற்றி பார்க்கலாம். 


Friday, April 18, 2014

சிட்னியில் - சைவ நெறி மாநாடு - 2014

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,






சிட்னியில் சைவ மன்றமும், உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து ஆகஸ்ட் மாதம் 29,30,31 தேதிகளில் "சிட்னி முருகன் சைவநெறி மாநாடு - 2014" என்ற மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள்   - "சைவ ஆகமங்கள் மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்" ஆகும். இந்த மாநாட்டில் ஒரு முக்கிய சிறப்பு அம்சமே, இளைஞர்களின் பங்களிப்போடு நடத்தப்படுவது தான். மாநாட்டுக் கட்டுரைகளுக்கான தலைப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் . கட்டுரைகளின் தலைப்பு வெளிவந்தவுடன், தெரிவிக்கிறேன், தமிழிலும், சைவத்திலும் ஆர்வமுள்ள நண்பர்கள் கட்டுரைகளை படைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் கட்டுரையை எழுதி அனுப்பலாம். 


சிட்னி சைவ மன்றம்,  சைவசமய வகுப்புகளையும், பண்ணிசை வகுப்புகளையும் சிட்னி முருகன் கோவிலிலும், ஹோம்புஷ் பள்ளியிலும் என இரண்டு இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்  நடத்துகிறது. மேலும் வருடாவருடம் சைவ மன்றம்,சைவ சமய அறிவுத்திறன் போட்டிகளை குழந்தைகளுக்கு நடத்துகிறது.  


சிட்னியில் "உலக சைவப் பேரவை ஆஸ்திரேலியா" மாதந்தோரும் திருமுறை முற்றோதலை நடத்தி வருகிறது. இதுவரை வெற்றிக்கரமாக 94 திருமுறை முற்றோதலை  நடத்தியுள்ளது.  


ஆஸ்திரேலிய நண்பர்களே, ஆகஸ்ட் 29,30,31 (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை) தேதிகளை உங்களுடைய நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு, மறக்காமல் இந்த சைவநெறி மாநாட்டில் கலந்து கொண்டு, நம்முடைய அடுத்த தலைமுறையினரும் சைவ சமயத்தை வளர்ப்பதற்கு  உதவி புரியுங்கள். 

Tuesday, April 15, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1



இந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு  அவருக்கு  எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).  மேலும் படிக்க....


Sunday, April 13, 2014

வள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள்-காரைக்கால் அம்மையார்-2






(படங்கள் உதவி - கூகிள் ஆண்டவர்)

அமர்நாத் யாத்திரைக்கு, நாம் நினைத்தபடி, நினைத்த நாளில் எல்லாம் செல்ல முடியாது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் சில நாட்கள் வரை தான் அந்த யாத்திரை அனுமதிக்கபடும். இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தான் நடத்துகிறது. மற்ற கோவில் ஸ்தலங்களுக்கு செல்வதற்கு, அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. ஆனால் இந்த யாத்திரைக்கு, அரசாங்கத்தின் அனுமதியும், மருத்துவச் சான்றிதழும் தேவை. அமர்நாத்துக்கு பக்கத்தில் தான் பாகிஸ்தான் இருக்கிறது. யாத்ரீகள் என்னும் போர்வையில், தீவிரவாதிகள் நுழையக்கூடாது என்பதற்காகத்தான் அரசாங்கத்தின் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஒரு மருத்துவ சான்றிதழ் மற்றும் ஒரு பூர்த்தி செய்த விண்ணப்பம் ஆகியவற்றை ஜம்மு- காஷ்மீர் வங்கியில் தந்து, பணத்தைக் கட்டினால், ரெஜிஸ்டிரேசன் கம் ஐடென்டிடி ஸ்லிப்(Registration Cum Identity Slip) கிடைக்கும். இது இருந்தால் தான் நம்மை அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிப்பார்கள். 

சரி அமர்நாத் யாத்திரையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொண்டோம். இனி காசியின் பெருமையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
  
 -    புத்தகத்தில் படித்தது. 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”

அதாவது, வீட்டிலுள்ள பொருட்களை காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். இந்த திருக்குறளின் படி, காரைக்கால் அம்மையார் வாழ்ந்து வந்திருக்கிறார், அதனால் தான் சிவபெருமானும், தன்னுடைய அடியாருக்கு விருந்தோம்புதல் புரிந்த புனிதவதியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவருக்கு முதலில் ஒரு மாங்கனியை வழங்கினார். அதை உண்ட பரமதத்தனும் அதன் சுவையில் மயங்கி, அந்த மாங்கனி வந்த விதத்தை அறிந்தான். இருப்பினும் காரணத்தை நம்பாமல், மீண்டும் இதே மாதிரி ஒரு சுவையான கனியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறினான். புனிதவதியாரும் உள்ளே சென்று, இன்னொரு பழம் தந்தருள வேண்டும், இல்லையேல் என் உரை பொய்யாகும் என்று சிவபெருமானை மனமுருக பிராத்தித்தார்.


புனிதவதியாரின் வாக்கு பொய்க்கக்கூடாது என்று எண்ணி, அவர் கையில் இன்னொரு மாங்கனியை வைத்து அருளினார். அதைக் கண்டவுடன் புனிதவதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தார். பரமதத்தனுக்கு மிகவும் ஆச்சிரியமாகி விட்டது. அவன் அதை தன் வாயிக்கு கொண்டு போனபோது, அது அப்படியே மறைந்து விட்டது. இதைத்தான், “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லைஎன்று பெரியவர்கள் கூறுவார்கள் போலும். முதலில் கனியைப் பார்தவுடன், ஆச்சிரியமடைந்த பரமதத்தன், அந்த கனி மறைந்தவுடன், மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தன் மனைவியினுடைய சிவ பக்தியால் தான், இந்த அதிசியம் எல்லாம் நடக்கிறது என்று புரிந்து கொண்டான். இந்த உண்மையை புரிந்துக்கொண்டதால், அவன் தன் மனைவியை தெய்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். உடனே புனிதவதியாரைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டான். தன் மனைவி தெய்வத்தன்மை உடையவர் என்று நம்ப ஆரம்பித்து விட்டான். இறைவனுடைய பூரண அருளைப் பெற்ற உன்னை என்னால் இனிமேல் மனைவியாக பார்க்க முடியாது. உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு தகுதி கிடையாது. அதனால் வெளி உலகுக்கு கணவன் மனைவியாக வாழ்வோம், வீட்டில் தனி தனியாக வாழ்வோம் என்றான். கணவனின் இந்த பேச்சைக் கேட்டவுடன் புனிதவதியார் மிகவும் மனம் வருந்தினார். கடைசியில், கணவனின் சொல்லை மீறக்கூடாது என்பதற்காக, அவனுடைய விருப்பத்திற்கு இணங்கி, இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனி தனியே வாழ்ந்தனர். உறவினர்கள் யாருக்கும் தெரியாதபடி இந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது, புனிதவதியாரும் உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையை பெற ஆரம்பித்தார். பரமதத்தனோ, இரு விதமான இந்த வாழ்க்கையை வாழ விரும்பாமல், தன் உறவினர்களிடம் வெளியூர் சென்று பொருள் ஈட்டப்போவதாக கூறினான். அவர்களும் அவனுடைய முடிவிற்கு சம்மதம் அளித்தனர். அந்த காலங்களில், வணிகர்கள் வெளியுருக்குச் சென்று பொருள் ஈட்டுவது* வழக்கம். அதன்படி, ஒரு நாள் , தன் மனைவியிடமும், உறவினர்களிடமும் விடைப்பெற்று வெளியூருக்குப் புறப்பட்டான், ஆனால் எந்த ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லவில்லை. அவன் பாண்டிய நாட்டிற்கு சென்று வாணிபம் செய்ய ஆரம்பித்தான். சிறிது காலத்திற்கெல்லாம் தன் திறமையால் அவன் அங்கு பெரிய செல்வந்தன் ஆனான். அந்த ஊரில் இருக்கும் ஒரு வணிகர் அவனுடைய செல்வச் சிறப்பையும், அழகையும் உணர்ந்து, தன் மகளை அவனுக்கு திருமணம் செய்துக் கொடுத்தார். 


அவனும், தன் இரண்டாவது மனைவியோடு, இன்பமாக வாழ்ந்து வந்தான். அப்படி வாழ்ந்து வந்த போதும், தன் முதல் மனைவியை எப்போதும் மறக்காமல், மனதில் அவளை வணங்கி வந்தான். ஒரு நன்னாளில், அவனுடைய இரண்டாவது மனைவி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றடுத்தாள். அந்த குழந்தைக்கு, புனிதவதி என்று தன் முதல் மனைவியின் பெயரை வைத்தான். இப்படி அவனுடைய வாழ்க்கையோ இன்பமாக அமைந்தது. ஆனால், புனிதவதியாரின் வாழ்க்கையோ, அறவழியில் அமைந்தது. எப்போதும் சிவபெருமானை நினைத்துக்கொண்டும், பூஜை செய்துக்கொண்டும் வாழ்ந்து வந்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, புனிதவதியாருக்கும் அவருடைய உறவினர்களுக்கும், மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. உறவினர்களோ, புனிதவதியாரை எப்படியும் பரமதத்தனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்து, புனிதவதியாரையும் அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, புனிதவதியார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். புனிதவதியாரின் இந்த திடீர் வருகையை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பரமதத்தன்னோ, என்ன செய்வது என்று அஞ்சினான். பிறகு தன் இரண்டாவது மனைவியோடும், குழந்தையோடும் புனிதவதியாரைப் போய் பார்த்தான். பார்த்த உடனே மனைவி, மகளுடன் புனிதவதியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான்.




பிறகு புனிதவதியாரைப் பார்த்து, நான் உங்களுடைய திருவருளால், நலமாக வாழ்கிறேன். இந்தக் குழந்தைக்கு, தங்களின் பெயரையே சூட்டியுள்ளேன். தாங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கூறினான். தன் கணவனின் செயலைக் கண்டு புனிதவதியார் அஞ்சி ஒதுங்கி நின்றார். பரமதத்தன் புனிதவதியாரின் காலில் விழுந்ததைப் பார்த்த உறவினர்களுக்கோ, பெரிய அதிர்ச்சியாகி விட்டது. பரமதத்தனிடம், மனைவியின் காலடியில் விழலாமா? அப்படி விழக் காரணம் என்ன என்று கேட்டனர். அதற்கு பரமதத்தனோ, பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள். அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட அனைவரும் திகைத்து நின்றனர். புனிதவதியாரோ மிகவும் மன வேதனை அடைந்தார். அழகுத் திருமகளாய், இளமை குன்றாத வடிவழகு பெண்ணாய் காட்சி அளித்த புனிதவதியார், தன் இளமையையும், அழகையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும் தான் அழகோடும், இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மையின் இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதியார், அந்த நொடியே, சிவபெருமானை நினைத்து, மனம் உருக ஒரு வேண்டுதலை வேண்டினார். 

புனிதவதியார் அப்படி என்ன பிராத்தனை செய்தார்? அந்த ஈசுவரன் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினாரா?

-   

Friday, April 11, 2014

தலைவா திரைப்பட அனுபவம் (இறுதி பகுதி) - அமலாபால் சில்க்ஸ்மிதா மாதிரி இருக்கிறார் என்று நான் சொன்னது

தலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

எங்களோட அந்த கன்டினிட்டி காட்சியை எடுக்கிறதுக்காக காமிரா எல்லாம் செட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் இயக்குனர் விஜய் கீழே உட்கார்ந்து எங்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. “நான் இந்தியா போனவுடனே, என்னோட மற்ற நண்பர்கள் கிட்டயெல்லாம் ஆஸ்திரேலியால போய் படம் எடுக்காதீங்க, அங்க பர்மிஷன் வாங்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதுக்கும் மேல அங்க செலவு ரொம்ப அதிமாகுதுன்னு சொல்லப்போறேன்ன்னு” சொன்னாரு. எங்க எல்லாருக்கும் என்னடா, இவரு இப்படி சொல்றாருன்னு ஒரு மாதிரியாயிடுச்சு. உடனே, எங்க கூட்டத்தில இருந்த ஒரு நண்பர், நீங்க இப்படி சொல்றீங்க, ஆனா பத்து வருசத்துக்கு முன்னாடி, “நள தமயந்தி” படத்தை முழுக்க ஆஸ்திரேலியாவில் தானே எடுத்தாங்கன்னு ஒரு கொக்கியைப் போட்டாரு. இயக்குனருக்கோ என்ன சொல்றதுன்னு தெரியலை. அதுக்குள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இயக்குனரிடம் சார், ரெடியாயிடுச்சுன்னு சொன்னாரு. இயக்குனரும் எங்களிடம் நாம முன்னாடி எடுத்த அந்த ஜாக்கிங் காட்சியோட கன்டினிட்டி காட்சியைத்தான் எடுக்கப்போறோம்ன்னு சொல்லி, அந்த காட்சியை விவரிச்சாரு. முதல்ல எடுத்த அந்த ஜாகிங் காட்சியில, நடிகர் விஜய், அமலாபால் கிட்ட, திரும்பி பாருங்கன்னு சொல்லுவாரு, அப்ப நாங்களும் ஜாகிங் பண்ணிக்கிட்டு அங்க நிப்போம். உடனே அமலாபால் எங்களிடம் வந்து எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லுவாரு, நாங்களும் முகத்தை தொங்கப்போட்டுக்கிட்டு திரும்பி போய்விடுவோம். அமலாபால் திரும்பி வந்தவுடனே,விஜய் “நீங்க என்ன சொன்னீங்க, எல்லோரும் போயிட்டாங்கன்னு” கேப்பாரு, அதுக்கு அமலாபால் விளக்கமா சொல்ற காட்சியை தான் எடுக்கப்போறோம்ன்னு இயக்குனர் சொன்னாரு. இதுல ஆளாளுக்கு ஒவ்வொரு வசனம், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, நீங்க தமிழ் கலாச்சாரம் தெரிஞ்ச பொண்ணு, உங்க அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்காருன்னு” இப்படியெல்லாம் சொல்லனும். 

அப்ப ஒளிப்பதிவாளர் என்னிடம், சார், நீங்க அமலாபாலைப் பார்த்து, “நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்கன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு (யாரை, யாரோடு ஒப்பிடுறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போச்சு!!!). இயக்குனர் உடனே எங்களிடம், சில்க் ஸ்மிதா யாருன்னு தெரியுமான்னு கேட்டாரு. நாங்க எல்லோரும் அவுங்களை தெரியாம இருக்க முடியுமான்னு திருப்பி கேட்டோம். நான் இன்னும் ஒரு படி மேல போய், “சார் ஒரு காலத்துல அவுங்க என்னோட கனவுக்கன்னி. அவுங்க இறந்த அன்னைக்கு, கருப்பு துணியை சின்னதா வெட்டி, பேட்ச் மாதிரி சட்டையில குத்திக்கிட்டு, வேலை பார்க்கிற இடத்துல நானும் என்னோட நண்பர்களும் துக்கம் அனுசரிச்சோம்ன்னு” சொன்னேன். நீரவ் ஷா, இயக்குனர் கிட்ட, இவுங்க கிட்ட போய் சில்க் ஸ்மிதா யாருன்னு கேட்டீங்களேன்னு கேட்டு சிரிச்சாரு. முதல்ல ஒரு ரெண்டு ஷாட் எடுத்தாங்க. அப்புறம் இயக்குனர் என்ன நினைச்சாரோ, என்னிடம் நீங்க சில்க் ஸ்மிதா வசனத்தை சொல்ல வேண்டாம், அதுக்கு பதில் “நீங்க ரொம்ப உயரமா இருக்கீங்கன்னு” சொல்லுங்கன்னு சொன்னாரு. (அமலாபால் ரொம்ப உயரமாமா....) நாலைந்து டேக்குக்கு அப்புறம் அந்த ஷாட்டை எடுத்து முடிச்சாங்க. மணியோ மதியம் ஒரு மணியை தாண்டிடுச்சு. எங்களோட காட்சியெல்லாம் எடுத்து முடிச்சாச்சுன்னு சொன்னாங்க. அவுங்களுக்கும் அன்றைக்கு தான் கடைசி நாள். மறு நாள் காலையில இந்தியா போறாங்க. நாங்க இயக்குனர் கிட்ட, எல்லோரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்தாக்கலாம்னு சொன்னோம். அதுக்கு, நடிகர் விஜய் இப்ப ரெஸ்ட் எடுக்கிறாரு, அதனால அவரை கூப்பிட முடியாதுன்னு இயக்குனர் சொல்லிட்டதுனால, இயக்குனர், அமலாபால் ரெண்டு பேரோட சேர்த்து புகைப்படம் எடுத்துக்கிட்டோம். என்ன! ஒளிப்பதிவாளரையும்,இணை,துணை இயக்குனர்களையும் புகைப்படம் எடுக்காம விட்டுட்டோம்.


கன்டினிட்டி காட்சின்னு சொல்றாங்களே, இந்த ரெண்டு படத்தையும் பாருங்க, இதுல ஏதாவது கன்டினிட்டி தெரியுதா உங்களுக்கு.  

இது முதல் படம் – ஜாகிங் காட்சி.




இது அடுத்த படம் அந்த கன்டினிட்டி காட்சி.


முதல் படத்துல கடல் பின்னாடி இருக்கும். அடுத்த படத்துல இரும்பு கம்பிகள் போட்ட தடுப்பு தான் இருக்கும். இன்னும் நல்லா பார்த்தீங்கன்னா, இன்னொரு வித்தியாசம் தெரியும். அதாவது முதல் படத்துல நாங்க மொத்தம் ஒன்பது பேர் இருப்போம். ரெண்டாவது படத்துல எட்டுப் பேர் தான் இருப்போம். இதுக்குத்தான் கன்டினிட்டி காட்சி எடுக்கிறோம், அதனால அன்னைக்கு போட்ட காஸ்ட்யூமோட வாங்கன்னு சொன்னாங்க போல இருக்கு.

ஆனா, எது எப்படியோ, நான் நடிச்ச 4 காட்சிகளும் வந்துடுச்சு. என்ன!! அந்த உணவகக் காட்சியிலும்,நடனக் காட்சியிலும் கொஞ்சம் கத்திரி போட்டுட்டாங்க. அப்புறம் இந்த ஜாகிங் காட்சியில வசனத்துக்கு கத்திரி போட்டுட்டாங்க. ஆனாலும் அந்த ஐந்து நாளும் ஒரு திரைப்படத்தில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதுவும் இங்க சிட்னியில படம் வெளியான மறு நாள் திரையரங்குக்குச் சென்று, அந்த வெள்ளித் திரையில் நான் தோன்றுவதை பார்த்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

இந்த படத்தை ஓவியா பார்த்த பிறகு, என்னுடைய மிகப்பெரிய ரசிகையாகி விட்டார். அடிக்கடி, “அப்பா நீங்க நடிச்ச படத்தை போடுங்கன்னு” சொல்லி ஒரே அன்புத்தொல்லை தான். இதுல இன்னும் ஒரு படி மேல போய், விஜய் நடித்த பாட்டு ஏதாவது பார்த்தால், உடனே “நீங்க நடிச்ச படத்துல தானே, இந்த அங்கிள் நடிச்சிருக்காருன்னு” ஒரு பிட்டை போடுவார். நான் உடனே, அப்படியில்லம்மா, அவர் நடிச்ச படத்துலத்தான் நான் நடிச்சேன்ன்னு சொல்லுவேன். ஓவியா இப்படியென்றால், இனியா தலைவா படத்தை பார்த்தாலோ, இல்லை நான் வரும் நகைச்சுவை காட்சியை பார்த்தாலோ, ஐ அப்பா, அப்பா” என்று குதிக்க ஆரம்பித்துவிடுவார். இன்னொரு நண்பரின் மகள், நண்பரிடம்”ஏம்பா சாம் அங்கிள், படத்துல கடைசி வரைக்கும் வரலைன்னு கேள்வி கேட்டிருக்காங்க”. எங்கையாவது ஒரு பொது இடத்துக்கு போனால், எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத நபர்கள் கூட, என்னைப் பார்த்து நீங்க தலைவா படத்துல நடிச்சவர் தானேன்னு கேட்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அலுவலகத்துக்கு விடுமுறை எல்லாம் எடுத்து, சம்பளம் இல்லாமல் நடித்ததது எல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. 

-முற்றும்

Saturday, April 5, 2014

சிட்னியில் சித்திரைத் திருவிழா




சித்திரைத் திருவிழா என்றாலே நமக்கெல்லாம் உடனடியாக நியாபகத்துக்கு வரக்கூடியது மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா தான். சிட்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த இரண்டு வருடங்களாக சிட்னியில் மிகப் பிரமாண்டமான சித்திரைத்  திருவிழாவை நடத்தி இருக்கிறது இந்த வருடமும் சிட்னியில் அவர்கள் சித்திரைத் திருவிழாவை வருகிற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ரோஸ்ஹில்  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்துகிறது. சென்ற ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் காலை 10மணி முதல் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடக்க இருக்கிறது. மேலும் குழந்தைகளின் திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளின் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில்  முதன்முறையாக  திரை இசை  கிராமிய  பின்னணி  பாடகி  தஞ்சை  செல்வி  குழுவினரின் சிறப்பு இசை  நிகழ்ச்சியோடு  தமிழ் பாரம்பரிய கலையான  இந்திய  புகழ்  பூத்த  காவடி மற்றும்  கரகாட்ட கலைஞர்களின் நடன  நிகழ்ச்சியும்  இடம்பெற  இருக்கிறது. சென்ற ஆண்டுகளுக்கும், இந்த ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால்சென்ற ஆண்டுகளில் காசில்ஹில்  லோயர்   ஷோ கிரௌண்டில் இந்த விழா நடைபெற்றது. ஆனால் இவ்வாண்டில் சிட்னிரோஸ்ஹில்  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இவ்விழா நடைபெற உள்ளது. இந்த இடம் அனைவரும் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கிறது. மேலும் இந்த இடம் முழுவதும் அதிமேற்கூரையால் மூடப்பட்டிருப்பதால், மழைக்கும் வெய்யிலுக்கும் கவலைப் படத் தேவையில்லை. அனுமதி கட்டணம் சென்ற ஆண்டுகளைப் போலவே பத்து டாலர்கள் தான். 


2012ல் முதன் முதலாக சித்திரைத் திருவிழாவிற்கு, "கலைமாமணி" டாக்டர். புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருவாட்டி. அனிதா குப்புசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக அடியேன் அவர்கள் இருவரையும் இங்குள்ள தமிழ் முழக்கம் வானொலிக்காக தொலைபேசியில் பேட்டி எடுத்தேன். 


சென்ற ஆண்டு  "கலைமாமணி" திருவாட்டி. சின்னபொண்ணு மற்றும் கிராமிய பின்னணி பாடகர். திரு. வேல்முருகன் அவர்களும் வந்து சிறப்பித்தார்கள். 

 தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தார்கள் நடத்திய இந்த சித்திரைத் திருவிழாவிலும், தீபாவளி நிகழ்ச்சியிலும் முதன் முதலில் என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடைய நாடகங்களை மேடையேற்ற வாய்ப்பு தந்தார்கள். அதற்காக அவர்களுக்கு என்னுடைய நன்றியை இந்த பதிவில் தெரிவித்துக்கொள்கிறேன். 







இந்த வருடமும் அவர்கள் என்னை ஒரு குறு நாடகம் போடுமாறு கேட்டார்கள், ஆனால் நான் இந்தியா சென்று திரும்புவதால் நாடகம் எழுதி பயிற்சி செய்வதற்கு கால அவகாசம் இருக்காது என்று கூறி மறுத்துவிட்டேன். அடுத்த வருடம் கண்டிப்பாக பெரியவர்கள் நாடகம் ஒன்றும், குழந்தைகள் நாடகம் ஒன்றும் போட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். 

Wednesday, April 2, 2014

ஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)


இந்த படம் நான் இந்தியாவில் இருக்கும்போது, இங்கு வீட்டில் அவராக யோசித்து செய்தது. படங்களை தாளில் வரைந்து அதனை வெட்டி மற்றொரு வெள்ளைத்தாளில் ஒட்டியிருக்கிறார். 

இந்த படத்திற்கான அவரது விளக்கம்: மேலும் படிக்க ...