Sunday, May 11, 2014

தாய்மையை போற்றுவோம்


இன்று ஆண்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் பெண்கள் செய்கிறார்கள். ஆனால் பெண்களால் செய்ய முடிந்த ஒரு வேலையை ஆண்களால் செய்ய முடியவில்லை, அது தான் பிரசவம். அந்த மகத்தான பரிசை இறைவன் பெண்களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறான். வலி வந்தால், உயிர் போகிறதே என்று சொல்லுவோம். ஆனால் பிரசவ வலியில் மட்டும் புதிய உயிர் வருகிறது. பெண்கள் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தாலும் சரி, கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தாலும் சரி, அவர்கள் முழுமை அடைவதே, இந்த தாய்மையின் மூலமாகத்தான். ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து ஆணை பிறக்க வைத்து, உலகத்தின் மிகப் பெரிய சக்தி தாய் தான் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறான் இறைவன்.

இந்த நல்ல நாளில் நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த நம் தாயையும் மற்ற தாய்மார்களையும் போற்றி வணங்குவோம்.


நான் எழுதிய இந்த தாய்மை சிறுகதையை படிக்காதவர்கள் இங்கே வாசிக்கவும். 

தாய்மை -1
தாய்மை - 2
தாய்மை - 3
தாய்மை - 4

Friday, May 9, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை




அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

என் தந்தை வழி கொள்ளுத்தாத்தாவாகிய (நாங்கள் பாட்டையா என்று சொல்லுவோம்) சைவ சித்தாந்தச் செல்வர் பெருமைமிகு காரைக்குடி சொக்கலிங்க ஐயா அவர்கள், நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், சிதம்பரத்தில் "மெய்க்கண்ட  சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும் தமிழுக்கும், சைவத்துக்கும் பெருந்தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இயற்றிய ஒரு நூலான "தெய்வத் தமிழ்" மற்றும் அவருடைய மாணவர்களில் ஒருவர் எழுதிய ஐயா அவர்களின் "வாழ்க்கைச் சரித்திர" நூலும் அடியேனிடம் இருக்கிறது. மற்ற நூல்கள் அனைத்தும் சீடம்பரத்தில் இருக்கும் வித்தியாசாலையில் இருக்கிறது. 

நான் சென்ற முறை இந்தியா சென்ற பொழுது, காரைக்குடி கம்பன் கழகத்தின் நிர்வாகியான திரு. கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் ஐயா அவர்கள், சிதம்பரத்தில் சொக்கலிங்க ஐயா அவர்கள் எழுதிய நூல்களை பார்க்க நேர்ந்தது, நாம் அவைகளை புதுப்பிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். மேலும் மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் திரு. வினைத்தீர்த்தான் அண்ணன் அவர்களும், ஐயா அவர்களின் எழுதிய எல்லா நூல்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது எனக்கு கால அவகாசம் இல்லாததால், நான் அதைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்காமல் சிட்னி திரும்பிவிட்டேன். இங்கு வந்த பிறகு என்னிடம் இருந்த இரு நூல்களையும், உலக சைவப் பேரவையின் சிட்னி கிளையின் தலைவரான திரு. அருச்சுனமனி அவர்களிடம் படிக்க கொடுத்தேன். அவர்கள் அந்த இரு நூலையும் படித்துவிட்டு, நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் பாட்டையா எழுதிய அனைத்து நூல்களையும் கணினி மயமாக்க வேண்டும். அதுவே மிகப் பெரிய சிவத்தொண்டாகும் என்று கூறி, அவைகளை வெறும் ஸ்கேன் (scan) செய்தால் நன்றாக இருக்காது. அதனால் அந்த நூல்களை அப்படியே தட்டச்சு செய்ய வேண்டும், அதற்கு நானும் உதவி புரிகிறேன் என்று முன்வந்தார்கள். இந்த அரிய பணிக்கு திரு. அன்பு ஜெயா அவர்களும் என்னுடன் கைகோத்துக்கொள்வதற்கு முன் வந்தார்கள்.  


நான் முதலில் அவர்களின் சரித்திர நூலை, அப்படியே தட்டச்சு செய்ய ஆரம்பித்துள்ளேன். வாரா வாரம் ஐந்து பக்கங்களை தட்டச்சு செய்ய எண்ணமிட்டிருக்கிறேன். முதலில் இந்த இரு நூல்களையும் தட்டச்சு செய்து, பிறகு இந்தியாவிற்கு செல்லும்போது, மற்ற நூல்களையும் கணினிமயமாக்க வேண்டும். இவையனைத்திருக்கும், அந்த ஈசனின் துணையும், சொக்கலிங்க ஐயா அவர்களின் ஆசியும்  என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என்று நம்புகிறேன். 

இதோ ஐயா அவர்களின் சரித்திர நூலில் முதலில் இருக்கும் முகவுரையும், பதிப்புரையும். 




சிவமயம்

ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள்
சரித்திரம்











       ஆக்கியோன்,
       ராம. உ. இராமசாமிச் செட்டியார்


கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்தச் செல்வராகிய
ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பதிப்பு

இஃது
ஸ்ரீமத் சொக்கலிங்க ஐயா அவர்கள் மாணக்கர்
காரைக்குடி
ராம.உ. இராமசாமிச் செட்டியார் அவர்களால்
எழுதப்பெற்றது

சிதம்பரம்
ஸ்ரீ மெய்கண்ட சித்தாந்த வித்தியாசாலைத்
தருமபரிபாலகர்களால்

காரைக்குடி
திருமகள் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது

குரோதி,ஆவணி.
1964


முதற்பதிப்பு:      1935, 1000.
இரண்டாம் பதிப்பு: 1964, 1000.


கணபதி துணை.
முகவுரை

ஸ்ரீமத். சொக்கலிங்க ஐயா அவர்கள் சுத்தாத்துவிதசைவ சித்தாந்தச் செந்நெறிச் செல்வராய், அந்நெறிக் கண் உறைத்து நின்றும், அந்நெறியே முத்திநெறி எனப் பிறர்க்குப் போதித்தும், அந்நெறி மேன்மேலும் ஓங்கிவளர்ந்து, இவ்வுலகம் உய்திபெற வேண்டும் என்னும்  நன்னேக்கத்தானே அது விருத்தியாதற்கு இன்றியமையாத “மெய்க்கண்ட  சித்தாந்த வித்தியாசாலை” அமைத்தும், மற்றுஞ் சிவபுண்ணியங்களைச் செவ்விது செய்தும், செய்வித்தும், உபகரித்த உத்தம சிவா புண்ணியசீலராவர்; ஆதலின் அவர்கள் சரித்திரம் உலகத்தில் விளங்கவேண்டுவது ஆவசியகமெனப் பல பெரியோர்களும், சிவநேசர் திருக்கூட்டத்தார்களும், பிற அன்பர்களும் மிக்க விருப்புடன் ஐயா அவர்களுடைய மாணாக்கர்களிடம் தெரிவித்தார்கள்.

அவ்வின்ப மொழியானது இயல்பாகவே ஐயா அவர்களின் சரித்திரத்தை எழுத வேண்டும் என்னுங் கருத்துக்கொண்டிருந்த மாணாக்கர்களின் எண்ணத்தை விரைந்து ஊக்க அவர்கள் யாவரும் ஒருங்கு கூடிச் சிற்றறிவினனாகிய என்னையுன் தம்முள் ஒருவனாக மதித்து “இப்பணியை நீயே செய்க” என்று கட்டளையிட, யாவரும் ஒருப்பட்டுக் கூறும் அக்கட்டளையை மறுக்க வொண்ணாமலும், குருவைத் துதித்தல் உத்தம சிவா புண்ணியமெனக் கருதியும் அதனை மேற்கொண்டு ஐயா அவர்கள் நேரில் சொல்லக் கேட்டவைகளையும், நேரில் அறிந்தவைகளையும், ஐயா அவர்களுடைய புத்திரர், மாணவர், நண்பர், முதலியோர் சொல்லக் கேட்டவைகளையும், ஒரு கோவைப்படுத்தி இச்சரித்திரம் எழுதலாயிற்று.

இச்சரித்திரத்திற் குறைபாடுகளிருப்பினும் பெரியார் சரித்திரமானபடியால் நீரைப்பிரித்துப் பாலைக் கொள்ளும் அன்னம்போல் குற்றங்களைந்து குணமளைத்து பாராட்டும் வண்ணம் உத்தமர்களைப் பிராத்திக்கிறேன். .

சுபம்!
காரைக்குடி                                        இங்ஙணம்,
யுவவரு ஐப்பசி மீ                               ராம. உ. இராமாசாமி.



சிவமயம்
உலகம்பட்டி
சித்தாந்த சைவ நிலையம்
ஸ்ரீலஸ்ரீ   இலக்குமண சுவாமி அவர்கள்

மதிப்புரை

நீர்வளம், நிலவளம், பொருள்வளம் நிறைந்த காரையம்பதியில் தனவைசிய மரபில் இற்றைக்கு எழுபத்தெட்டு ஆண்டுகட்குமுன் திருவவதாரம் செய்து தமது இளம்பருவத்திற்றனே இலக்கணவிலக்கியம், சித்தாந்த சாத்திர முதலிய கருவிநூல், அறிவு நூல்களை உத்தமாசிரியர் முன் ஐயம் திரிபறக்கற்றுத் தெளிந்து புலவர் திலகமென யாவரானும் மதிக்கப்பெற்று திருப்புத்தூர்த் தலபுராணம் ஆதிய பல தலபுராணங்களையும், இறைவன்மீதும், இறைவன் அடியார் மீதும் பலபிரபந்தங்களையும் பாடியும், பலகட்டுரை நூல்களியற்றியும், சிவாகம விதிப்படி பெருமைமிக்க சிவாசாரியாரிடத்தில் சமயவிசேட நிருவாண தீக்கைகள் பெற்று சிவபூசை சிவாலய சேவைகளையிடையிறாது செய்தும், தம்மை வந்தடைந்த நன்மாணாக்கர்களுக்கு அவரவர் மதி நுட்பம் நோக்கி கருவிநூல், அறிவு நூல்களை மனத்தெளிவுறப்போதித்தும், பெரிய அவைக்களங்களில் அரியேறு போன்று வீற்றிருந்து சைவ வீரத்துடன் பிரசங்கமாரி பொழிந்து உலகாயதம், பாஞ்சராத்திரம், ஏகான்மவாதம் முதலிய புறச்சமயங்களைக்கண்டித்து சிவமே பரம்பொருள் என நாட்டியும், சமய அரசாய் விளங்கும் நம் சைவத்தை யாங்கணும் பரவச்செய்தற் பொருட்டு சிதம்பரத்தில் பொய் கண்ட கன்ற மெய்கண்டார் பெயரால் ஓர் வித்தியாசாலை நிறுவியும், என்றும் மாறாத சிவ வேடப் பொலிவுடன்,  சித்தாந்த ஞானச் சிவானுபூதிச்செல்வராய் நிலவியிருந்து பிரமோ தூ தவவருடத்தில் சுத்த சாட்குண்ணிய பரமபதியாகிய சிவபரஞ்சுடரின், திருவடிப் பேறெய்திய தவப் பெரியாராகிய ஸ்ரீலஸ்ரீ, சொக்கலிங்க ஐயா அவர்களின் மாணாக்கருள் தலைசிறந்து விளங்குபவராயும், கல்விச்செல்வம்,பொருட்செல்வம் நிறையப்பெற்றவராயும், அதிவிரைவில் செய்யுளியற்றும் புலமைத் திறம்வாய்க்கப் பெற்றவராயும், சிவபத்தி, அடியார்பத்தி, குருபத்தியிற் சிறந்து விளங்குபவராயும், காரையம்பதிவாசராயும் உள்ள திருவாளர் ராம. உ. இராமாசமிச்செட்டியாரவர்கள் இனிய செந்தமிழ் வசன நடையில் எழுதியுள்ளார்கள். இச்சரித்திரத்திற்கண்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றேனும் புனைன்துரையன்று. இத்தவப்பெரியார் பெருமையை இச்சரிதத்தானும் இதன் பிற்பகுயிலுள்ள இரங்கற்பாக்கள், அனுதாப உரைகளானும் நன்குணரலாகும்.

     "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையும்
     ஈசனெனவே உளத்துளெண் "

எனச் சைவசமய நெறியிற் கூறியாங்கு சிவனடியவரைச் சிவனெனவே கண்டு வழிபட வேண்டுவது மரபாகலின் இப்பெரியார் சரிதத்தைச் சிவசரிதமாகவேயெண்ணி சிவநேசச் செல்வரனை வரும் ஏற்று அன்போடுபடித்துப் பாராட்டி இறைவன் அருட்பேற்றிற்குரியவராகி இன்புற்று வாழ்வாராக.



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பதிப்புரை

இந்நூலின் முதற்பதிப்பு நீண்டகாலத்திற்கு முன்பே முற்றும் செலவாகிவிட்டமையாலும், சைவ சமயத்தின் உண்மை நெறியைத் தம் வாழ்வில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றை முறையாகக் கைக்கொண்டு வாழ்ந்த பெருமானாரின் வரலாறு கற்றுணந்தார்க்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகும் என்ற கருத்தாலும் இவ் விரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதற் பதிப்பின் விரிவான அனுபந்தத்தின் சிற்சில பகுதிகள் மட்டும் இப்பதிப்பில் சேர்க்கபெற்றுள்ளன.

அன்பர்களுக்கு ஐயா அவர்களின் வரலாறு சிறந்த வழிகாட்டியாக விளங்கிச் சைவமும் தமிழும் தழைத்தினி தோங்கத் தில்லை வெளியில் எல்லையில் நடம்புரியும் நடராஜப்பெருமான் நல்லருள் துணைபுரிவதாக.
இப்பதிப்பைச் சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த காரைக்குடி திருமகள் அச்சகத்தாருக்கு எங்கள் நன்றி உரியதாகுக.

சிதம்பரம்                                       மெ. சி. வி.
27-8-1964                                         தருமபரிபாலகர்கள்


 (அடுத்த பகுதி - சிறப்புப்பாயிரம்)






Tuesday, May 6, 2014

திருடி நாடு கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் அதன் சொந்த ஊருக்கு வருகிறது



நாங்கள் சிட்னிக்கு வந்த புதிதில், மூன்று நாட்கள் சேர்ந்தார் போல் வந்த ஒரு விடுமுறையின் போது, ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பராவிற்கு சென்றோம். சிட்னியிலிருந்து கான்பரா ஏறக்குறைய 290 கிலோமீட்டர். அப்போது என்னிடம் கார் இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு முன்பே பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்வதால், பயணச்சீட்டின் விலை ஒரு நபருக்கு போக வர வெறும் 30 டாலர் மட்டுமே. இப்படி முன்பதிவு செய்யவில்லை என்றால் பயணச்சீட்டின் விலை $60 ஆக இருக்கும். அப்போது எங்களுடைய மகாராணிகள் பிறக்கவில்லை. அதனால் நாங்கள் இருவர் மட்டுமே கான்பரா சென்று அங்குள்ள பாராளுமன்றம், தேசிய அருங்காட்சியகம் எல்லாம் சென்று பார்த்து விட்டு வந்தோம்.

என்னடா, தலைப்புக்கும், இது வரை நான் சொன்னதுக்கும் ஒரு தொடர்பே இல்லையே என்று பார்க்கிறீர்களா, இதோ தலைப்புக்கு வந்துட்டேன். அந்த தேசிய அருங்காட்சியகத்தில் வெவ்வேறு நாடுகளின் அரிய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த சேகரிப்பில் நம் நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து நந்தி, திருஞானசம்பந்தர், முருகர், நடராஜர், துவாரபாலகர் போன்ற சிலைகளும் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிலைகளுக்கும் கீழே அதனைப் பற்றிய குறிப்புகளும் இருந்தன. 


(நந்தி)


(திருஞான சம்பந்தர்)


(திருஞான சம்பந்தர்)


(முருகர்)


(துவாரபாலகர்)


இதையெல்லாம் பார்த்தபோது ,நம் நாட்டிலிருக்கும் கலைப் பொருட்களை இங்கே பார்வைக்கு வைத்திருக்கிறார்களே என்று எனக்கு பெருமையாக இருந்தது.

சமீபத்தில், பத்திரிக்கையில் ஒரு செய்தியை படித்தேன். அதாகப்பட்டது இந்த தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கின்ற வெண்கலத்தாலான நடராஜர் சிலையை இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் என்ற பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்பவரிடமிருந்து, 56 லட்சம் டாலர் கொடுத்து அந்த அருங்காட்சியகம் வாங்கி இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட சுபாஷ்கபூர், ஆஸ்திரேலியாவிற்கு விற்ற நடராஜர் சிலையையும் கடத்தி தான் விற்றேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்காக இவர் மீதான வழக்கொன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டு வருகிறது. கடத்தப்பட்ட இந்த சிலையை இந்திய அரசாங்கம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் திருப்பிக்கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் திருப்பித்தர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். (யுனெஸ்கோ உடன்பாட்டின்படி, ஒரு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களை அந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் ) உடனடியாக அந்த சிலையை காட்சிப் பொருளிலிருந்து எடுத்து விட்டார்கள்.

இந்த நடராஜர் சிலையானது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சோழர்களால்  கட்டப்பட்ட ஸ்ரீ புரந்தான் ஏரிக்கரை கோவில் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்ட சிவன் கோவிலில் இருந்த வெண்கல சிலையாகும். இங்கிருந்து தான் இந்த சிலை கடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஊரில் வசித்து வந்த ஒருவரிடம், இந்த சிலையின் புகைப்படம் இருந்ததைக்கொண்டு போலீசார் ஆஸ்திரேலியாவில் இந்த சிலை இருப்பதை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இந்த சிலை அந்த கிராமத்திற்கு வந்தபிறகு, அதை மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய அந்த ஊர் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.


இந்த ஒரு சிலையை கண்டுப்பிடித்து விட்டார்கள். இன்னும் எத்தனை எத்தனை ஐம்பொன் சிலைகள் எல்லாம் இப்படி நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறதோ!!! இந்த அருங்காட்சியகத்திலும், மற்ற நாடுகளின் அருங்காட்சியகத்திலும் இருக்கின்ற நம் தெய்வச் சிலைகள் எல்லாம் சட்டப்பூர்வமாகத்தான் வாங்கப்பட்டிருக்கிறதா என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்!!!!. 

பின் குறிப்பு: அந்த அருங்காட்சியகத்தில், புகைப்படம் எடுப்பதற்கு அனுமதியில்லை. மேலே உள்ள புகைபடங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. 

Wednesday, April 30, 2014

மனைவிக்கு மரியாதை



என்னடா, ஒரு வாரம் முன்னாடி தான், “மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சட்டம்னு” ஒரு பதிவை போட்டான் படிக்க... , அதுக்குள்ள இப்ப மனைவிக்கு மரியாதைன்னு ஒரு பதிவை போடுறானே, அப்ப இவன் வீட்டுக்குள்ளேயே அடி வாங்கிட்டு,அம்மணியோட கோபத்தை தனிக்கிறதுக்காக இப்படி ஒரு பதிவை போடுறானோன்னு நீங்க சந்தேகப்படுவது புரியுது. அந்த சட்டத்தை கொண்டு வருவோம்னு சொன்னவரு ஒரு வடநாட்டுக்காரு. அதை வட இந்தியாவில சொன்னாரு. ஆனா தமிழ்நாட்டுல இந்த மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வரவே வேண்டாம். ஏன்னா நம்ம சகோதரிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்களாச்சே(?). பாருங்க, அதனால தான் சில மாதங்களுக்கு முன், ராஜபாலயத்துல மனவளக்கலை மன்றம் வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல தின வேள்வி நடந்திருக்கு. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டிருந்திருக்காங்க. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்மார்கள், தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வதித்து, மலர்களை கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அது போல மனைவிகளும் கணவன்மார்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் கொடுத்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கும் சகோதரிகள் எல்லோரும், ஆஹா, நமக்கும் நம்மளோட கணவர், இந்த மாதிரி ஆசீர்வதித்தால் நல்லாயிருக்குமேன்னு உள்ளுக்குள்ள ஒரு ஏக்கம் வரலாம். உடனே ரொம்ப ஏங்கிடாதீங்க. மறுபடியும் முதல் பத்தியை நல்லா படிச்சுப் பாருங்க, உங்களுக்கு ஒண்ணு புரியும். அதாவது, கணவன்மார்கள் ஆசீர்வதித்து பூக்களைத் தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மனைவிமார்களோ, தங்கள் கணவனை வாழ்த்தி பரிசு கொடுத்திருக்காங்களாம்(!!!). பார்த்தீங்களா, உங்கக்கிட்டேயிருந்து பரிசு வாங்குறதுக்கு நாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்குது.

பின் குறிப்பு: நான் நகைச்சுவைக்காகத்தான் அந்த கடைசி பத்தியை எழுதினேன். உண்மையிலேயே, அந்த புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள். பார்பதற்கே கண் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு

வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்" என அறிவுரைகள் வழங்கப்பட்டதாம்.


இந்த அறிவுரைகளை நாமும் ஏற்று நல்ல தம்பதிகளாக வாழ்ந்து, நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குவோம். 

Sunday, April 27, 2014

தெனாலிராமன் – விமர்சனம்



நான்  இந்த பதிவில் சொன்னமாதிரி - வந்துட்டான்யா... வந்துட்டான்!!!

வடிவேலு மூன்றாண்டு வனவாசத்தை முடித்து தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். இம்முறை நகைச்சுவை நடிகனாக இல்லாமல், கதாநாயகனாக வந்திருக்கிறார்.




கதை என்னன்னு பார்த்தால், விகட நகரத்தை ஆண்டு வரும் மன்னனுக்கு 36 மனைவிகள் மற்றும் 52 குழந்தைகள். எப்பொழுதும் தன் குடும்பத்தையே பற்றியே சிந்திப்பதால், தன் நவரத்தின அமைச்சர்கள் (அதாவது 9 அமைச்சர்கள்) சொல்லுவதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு நாட்டை ஆண்டு வருகிறார். இந்த 9 அமைச்சர்களில் ஒரு அமைச்சரைத் தவிர மற்ற 8 அமைச்சர்களும் ஊழலுக்கு பெயர் போனவர்கள். பணத்துக்காக தங்கள் நாட்டை சீன தேசத்திடம் அடகு வைக்க முயல்கிறார்கள். அதற்கு நேர்மையான அமைச்சர் முட்டுக்கட்டையாக இருப்பதால், சினிமா தர்மப்படி அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். இந்த இடத்திற்கு இன்னொரு வடிவேலான தெனாலி ராமன் சில பல போராட்டங்களுக்கிடையில் அமைச்சராக உள்ளே நுழைகிறார். 





இதில் ஒரு முக்கிய ட்விஸ்ட் என்னவென்றால், தெனாலிராமான் புரட்சிப்படையை சேர்ந்தவன். மன்னனைப் பிடிக்காமல், அவனை கொல்ல வேண்டும் என்று வாழ்பவன். இதற்கிடையில் சீன தேசத்தோடு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு, அந்த நாட்டின் வர்த்தக ஸ்தலமே, சீன தேசத்து வர்த்தக ஸ்தலம் போல் காட்சியளிக்கிறது. இதையெல்லாம் பார்த்து ஆத்திரப்பட்டு மன்னனை கொல்வதற்காக சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில், மன்னன் ஒரு அப்பிராணி, இதற்கு முழுப்பொறுப்பும் அந்த 8 அமைச்சர்கள் தான் என்று கண்டுப்பிடிக்கிறான் தெனாலிராமன். இப்படி ஒரு நல்லவன் இருக்கும்போது, கெட்டவர்கள் அவன் மீது பழியை சுமத்தவேண்டும் என்பதும் சினிமா நியதி, அந்த நியதிப்படியே தெனாலிராமன் மீது மன்னனுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்து அவனை மன்னனிடம் இருந்து பிரிக்கிறார்கள் அந்த அமைச்சர்கள். 


இதற்கு நடுவில், தெனாலிராமனுக்கும், மன்னனின் மகளான மீனாட்சி தீக்ஷித்க்கும் காதல் மலறுகிறது. மகளும் தந்தையிடம், தெனாலிராமன் நல்லவன் என்று கூறி அவன் மனதை மாற்றி, தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் வருவதற்கு ஏற்பாடு செய்கிறாள். மறுப்பிரவேசம் செய்த தெனாலிராமன் எவ்வாறு மன்னனுக்கு நாட்டுநடப்பை புரியவைக்கிறான் என்பது தான் மீதிக்கதை.

இந்த படம் கிட்டதட்ட 23ஆம் புலிக்சேயின் சாயலை ஒட்டியே எடுத்த மாதிரி இருக்கிறது. அதில் அவர் இரட்டை வேடம் பூண்டிருப்பார். இதிலும் இரட்டை வேடம். அந்த படத்தில் மன்னராக ஒரு கதாப்பாத்திரத்திலும், மன்னனை திருத்தும் இன்னொரு கதாப்பத்திரத்திலும் தோன்றுவார். இந்த படத்திலும் மன்னராகவும், மன்னருக்கு நாட்டு நடப்பை புரிய வைக்கும் மந்திரியாகவும் நடித்திருப்பார். இரண்டு படங்களிலும் மீசை மேலே தூக்கிக்கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு காட்சியில் மன்னன் மந்திரியோடு வேட்டைக்கு செல்லுவான், அப்போது ஒரு கரடி அவன் மீது எச்சிலை துப்பிவிட்டு செல்லும். இந்த படத்திலும் மன்னன் தன் அமைச்சர் பரிவாரங்களோடு வேட்டைக்கு செல்லுவார். ஆனால் கரடியிடம் மாட்டிக்கொள்ளாமல், ஆதிவாசி மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளுவார்.


(மன்னார் வேட்டைக்கு போகிற காட்சியில், ஓவியா உடனே இப்ப கரடி வரப்போகுது பாருங்கள் என்று கூறினார்!!!).






இந்த படத்தில், அவருக்கு கதாநாயாகியாக நடித்தவரை எந்த அளவிற்கு கவர்ச்சியை காட்டமுடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சியை காட்ட வைத்திருக்கிறார்கள். இவரைப் பற்றி பெரிதாக வேறு ஒன்றும் கூற இல்லை.

8 அமைச்சர்களில், மனோபாலாவின் நடிப்பு அருமை.


படத்தின் முக்கிய பலமே வடிவேல் தான். நகைச்சுவை காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும், தன்னுடைய உடமொழியை வைத்தே படத்தை நகர்த்துகிறார். படம் முழுக்க வசனங்கள் தான் அதிகமாக வருகின்றன. அதனால் இது வடிவேலுவின் படம் என்று சொல்லுவதற்கு கொஞ்சம் கடினம் தான். மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்.



Wednesday, April 23, 2014

நான் சொன்ன ஆருடம் உண்மையாகி விட்டது

தலைப்பைப் பார்த்தவுடனே, இவன் எப்பத்திலிருந்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அது வேற ஒண்ணும் இல்லைங்க, இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் பற்றிய செய்தியை தாங்க சொல்றேன்.



இந்த பதிவுல நான் -  கதாநாயகிக்கு இயக்குனரின் மேல் உள்ள பாசம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது

இயக்குனர் விஜய்யின் மீது அமலாபாலுக்கிருந்த பாசத்தை சொல்லியிருந்தேன். நம்ம நண்பர்கள் கூட "கிசு கிசுவைக்கூட உண்மை ஆக்கிட்டீங்க போலன்னு சொல்லியிருந்தாங்க. கடைசியில அது உண்மையாகவே ஆகி விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன், இயக்குனர் விஜய்யும், அமாலாபாலும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தங்களுக்கு ஜூன் 7ஆம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் என்றும் , ஜூன் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

நான் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை, இவர்களை பற்றி வந்த கிசுகிசு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஐந்து நாட்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது, சரி இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது.  இப்போது இவர்களின் அறிக்கை மூலம் அது கிசு கிசு இல்லை, உண்மை தான் என்று தெரிந்துவிட்டது.

சரி, யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளட்டும், அதைப் பற்றி ஒரு பதிவு தேவையா என்று எனக்கே தோன்றியது. இருந்தாலும் நான் ஊகமாக சொன்ன ஒரு செய்தி உண்மையாகிவிட்டதை தெரிவிக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.


Tuesday, April 22, 2014

மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்ற சட்டம்










நான் என்னுடைய ஒரு நாடகத்தில் நகைச்சுவைக்காக மனைவியிடம் அடி வாங்கும் கணவனை காப்பாற்றும் சங்கம் என்று ஒரு காட்சியை அமைத்திருப்பேன். மேடையில் நாங்கள் நடித்த அந்த காட்சியை பார்த்துவிட்டு மக்கள் ரசித்து சிரித்தார்கள். இந்த மாதிரி காட்சியெல்லாம் வெறும் நகைச்சுவைக்காகத்தான் என்று நினைத்திருந்தேன். உண்மையில் மனைவியிடம் நிறைய கணவன்மார்கள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி அடி வாங்கும் அவர்களை காப்பாற்ற ஒரு சுயேட்சை வேட்பாளர் கிளம்பியிருக்கிறார் என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அந்த வேட்பாளரோ, மனைவியிடம் அடி வாங்கி ஏமாளியாக இருக்கும் கணவனை காப்பாற்ற “கணவன் பாதுகாப்பு சட்டம்” என்று ஒரு சட்டம் கொண்டு வருவேன், கணவர்களே உங்களை காப்பாற்ற நான் இருக்கிறேன். அதனால் எனக்கு ஓட்டளியுங்கள் என்று தெருத்தெருவாகச் சென்று ஓட்டு சேகரிக்கிறாராம். அவர் இப்படி பேசுவதை, பெண்கள் அவரை பார்த்து முறைத்து விட்டு போகிறார்களாம்.
 
இந்த காட்சியெல்லாம் நம் தமிழ் நாட்டில் இல்லை, குஜராத்தில் தான். இந்த மாதிரி நம் தமிழ்நாட்டில் யாராவது வாக்குறுதி கொடுத்தால்.................... ?
 
பின் குறிப்பு: இந்த சுயேட்சை வேட்பாளர், நம் மதுரைத் தமிழனின் வலைப்பூவை படிப்பவராக இருப்பாரோ????