Sunday, March 3, 2019

எங்கள் வீட்டில் குடியிருந்த Blue Tongue Lizard - அரணை




நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் (backyard) இந்த அரணை இருக்கிறது, இது ஒன்றும் பண்ணாது, மேலும் இது இருந்தால் பூச்சிகள் எல்லாம் வராது என்று கூறியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் அதனை ஆச்சிரியமாக கேட்டிருக்கோமேயொழிய பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் நான்கைந்து நாட்களுக்கு முன்பு, இந்த அரணை எங்கள் வீட்டு பின்புறத்தில் காற்றுவாங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். இது என்னடா நம்ம வீட்டுக்கும் வந்துவிட்டதே என்று ஒரு நிமிடம் பயந்து போனேன். நான் அதை பார்த்து பயந்ததை விட, இந்த அரணை தன்னுடைய திருமுகத்தை அம்மணிக்கு  காட்டினால் என்ன பண்றதுன்னு தான் எனக்கு பெரிய பயமே. ஏன்னா அம்மணி ஒரு சின்ன பல்லியை பார்த்தாக்கூட பத்து வீட்டுக்கும் கேக்கிற மாதிரி ஒரு கத்து கத்துவாங்க. பல்லின்னா அப்படி ஒரு அலர்ஜி. அப்படியிருக்கும்போது இந்த அரணையை பார்த்துட்டா, அதனால எல்லா சாமிக்கிட்டேயும், அம்மணி இதை பார்த்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். என்னோட வேண்டுதல்  வெறும் ரெண்டு நாளைக்கு மட்டும் தான் பலிச்சுது. அந்த ரெண்டு நாளும் அவுங்க கண்ணுக்கு அது தட்டுப்படவே இல்லை. நானும் நிம்மதியா இருந்தேன். 


மூன்றாவது நாள்,  நான் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன். அம்மணி காயப்போட்ட துண்டை எடுப்பதற்காக பின் பக்கம் போயிருக்கிறார்கள்.  திடீரென்று  "என்னங்க இங்க வாங்க" என்று ஒரு பெரிய சத்தம். நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு போய் பார்த்தா, அவுங்க நின்ற  இடத்துலேயே நின்றுகிட்டு இருந்தாங்க . என்னைய பார்த்தவுடன், ஏங்க அந்த "blue tongue" நம்ம வீட்டுக்கும் வந்துடுச்சுங்கன்னு ஒரே புலம்பல். சரி உள்ள வா பார்த்துக்கலாம்னு சொன்னா, நான் உள்ள வரமாட்டேன்னு ஒரே அடம். அப்புறம் அவுங்களை கையை பிடிச்சு உள்ள கூட்டிக்கிட்டு வந்தா, இனிமே நான் பின் பக்கம் போக மாட்டேன், காயப்போட்ட துண்டு துணிங்க எல்லாம் நீங்களே போய் எடுத்துக்கிட்டு வாங்கன்னு ஒரே அழிச்சாட்டியம். நானும் உள்ளுக்குள்ள பயத்தை வச்சுக்கிட்டு வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டு, போய் காயப்போட்டிருந்த துணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன். 

இதுக்குத்தான் பேசாம ஒரு யூனிட்டை (அபார்ட்மெண்ட்டை) வங்கியிருக்கலாம். நீங்க தான் வீடா வாங்கணும் அப்பத்தான் நல்லதுன்னு சொல்லி இந்த வீட்டை வாங்குனீங்கன்னு ஒரே புலம்பல். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, அந்த ஜந்து வீட்டை விட்டு சீக்கிரம் போயிடனும்னு வேற ஒரு ஆர்டர். 

நானும் மறு நாள் எங்கள் கடையில் இருந்துக்கிட்டு, blue tongue rescue நிறுவனத்தை கூப்பிட்டு, இந்த மாதிரி, இந்த மாதிரி எங்கள் வீட்டில அந்த ஜந்து வந்துடுச்சு, என் மனைவி வீட்டு பின் பக்கத்துக்கே போக மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ரொம்ப கூலா, அது ஒரு அப்பிராணிங்க. யாரையும் ஒண்ணும் பண்ணாது. உங்க வீட்டுல அது இருக்குதுன்னா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்.  நீங்க சொல்றதை பார்த்தா, அது ஒரு குழந்தை தான். பேசாம நீங்க உங்க வேலையை பாருங்க. அது ஒரு தொந்தரவும் கொடுக்காது. இன்னும் சொல்ல போனா, அது இருக்கிறதுனால உங்கள் வீட்டுக்கு பூச்சி, சிலந்தி எல்லாம் வராதுன்னு சொன்னாங்க. நான் உடனே, நீங்கள் சொல்றது எல்லாம் எனக்கு புரியுதுங்க, ஆனா என் மனைவி அதை பார்த்து ரொம்ப பயப்பிடுறாங்களே, அதனால  நீங்கள் யாரையாவது அனுப்பி அதை பிடிச்சுக்கிட்டு போயிடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவுங்க நோ, நோ, நாங்கள் எல்லாம் யாரையும் அனுப்ப முடியாது. நீங்களே  ஒரு பெரிய டப்பாவிலோ இல்ல பிளாஸ்டிக் கவர்லேயோ அதை பிடிச்சு பூங்கா மாதிரி உள்ள எடத்துல ஒரு ஓரமா விட்டுடுங்கன்னு சொன்னாங்க.  ஐயையோ இது என்னடா, நம்மளையே பிடிக்கச் சொல்றாங்களேன்னு ஒரே கவலையாயிடுச்சு. நமக்கு சின்ன வயசிலிருந்தே இந்த விலங்கியல் பாடம்னாலே பெரிய அலர்ஜி. விலங்குகளை எல்லாம் படம் வரையிறதே பிடிக்காது, இதுல அதை தொட்டு எப்படி தூக்குறது. என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. 

சரிங்க, நானே புடிச்சு தூக்கி போட்டுடுறேன்ன்னு சொல்லி போனை கட் பண்னினேன். உடனே அம்மணிக்கிட்டேயிருந்து போன். எங்கள் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிற மராட்டிய நண்பர்  வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை அம்மணி சொல்லியிருக்காங்க. அந்த நண்பரும் அவரோட மனைவியும்,  எங்க வீட்டுக்கு பின்னாடி பெரிய ரெண்டு அரணை இருக்குது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாங்க ஒண்ணும் அதைப் பத்தி கண்டுக்க மாட்டோம். நீங்க என்னடான்னா அந்த சின்ன குழந்தைக்கு போய் இப்படி பயப்பிடுறீங்க. அது ஒண்ணும் பண்ணாதுங்க. அதனால நீங்க கவலைப்படமா போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எங்க அம்மணி யாரு, அதை பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்குது, என்னைய விட எங்க வீட்டுக்காரருக்கு அது கிட்ட ரொம்ப பயம், அதனால நீங்க கொஞ்சம் வந்து அதை தூக்கி போட்டுடுறீங்களான்னு கேட்டிருக்காங்க. அந்த நண்பரும் நான் இதுக்கு சரியான ஆள் இல்ல, என் மகன் தான் சரியான ஆளு, அவன் பள்ளிக்கூடத்திலுருந்து வந்தவுடனே உங்க வீட்டுக்கு அனுப்புறேன்னு சொல்லியிருக்காரு. அவுங்க பையன் பதினோராம் வகுப்பு படிக்கிறவன்.  கொஞ்ச நேரத்துல அவனும் அவனுடைய மற்ற இரண்டு நண்பர்களும் (சீன மாணவன் மற்றும் வெள்ளைக்கார மாணவன்) மூவரும் எங்கள் வீட்டிற்கு வந்து ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக்கொண்டு அதைப் பிடிக்க முயன்று, கடைசியில் அதை வெற்றிக்காரமாக பிடித்து  பக்கத்திலுள்ள பூங்கா ஓரமாக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். (இவர்கள் அல்லவா தைரியசாலிகள்..) 

ஒரு வழியாக அந்த அரணை எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அன்றைக்கு இரவு நான் வீட்டுக்கு வந்தவுடன், அம்மணியிடம் அவுங்க அதை பிடிக்கும்போது நீ சில புகைப்படங்களை எடுத்திருக்கலாமே என்று கேட்டேன். நான் அந்த புகைப்படங்களை எடுத்து என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டார்கள். நீ புகைப்படம் எடுத்திருந்தால், நான் வலைப்பூவில் எழுதுவதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன். உடனே அவர்கள் அப்படி எழுதணும்னு நினைத்த நீங்கள் நம் வீட்டிலிருந்த அந்த அரணை மட்டுமாவது புகைப்படம் எடுத்திருக்க வேண்டியது தானே என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது நல்ல கேள்வி தான், ஆனால் எனக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. பின்ன அவுங்களிடம் நான் பயப்பிடாத மாதிரி நடிச்சேன்னு சொல்ல முடியுமா?

பி.கு: அப்ப மேல உள்ள இரண்டு படங்களும் உங்கள் வீட்டில் இருந்த அரணை இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்கு கேக்குது. அந்த படங்கள் எல்லாம் கூகிள் ஆண்டவர் உபயம். ஹி.. ஹி... 

34 comments:

  1. இதுக்கு போயி இவ்வளவு கலாட்டாவா ?
    திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி வாங்கி கொடுத்தால் தின்று விட்டு அடுத்த வீட்டுக்கு போயிருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. நான் சைவமாச்சே, அப்புறம் எப்படி.
      அதுவும் இல்லாம இங்க திண்டுக்கல் தலைப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் இங்கு கிடைக்காதே...

      Delete
    2. நீங்க வேற கில்லர்ஜி...அப்படி சொக்கன் சகோவே செஞ்சு போட்டிருந்தாலும் (சைவம் தான்!!! அரணைக்குப் பிடிக்குமோ தெரியலை...!!) அந்த அரணை இன்னும் நாலு முழத்துக்கு நீல நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அவங்க வீட்டிலயே குடியிருந்திருக்கும்!!!

      கீதா

      Delete
  2. // காயப்போட்ட துண்டு துணிங்க எல்லாம் நீங்களே போய் எடுத்துக்கிட்டு வாங்கன்னு //

    ஓஹோ இப்போதான் புரிஞ்சது :) அதெல்லாம் எடுக்கணும்னுதானே நீங்க அரணை மேட்டரை வீட்ல சொல்லல

    ReplyDelete
    Replies
    1. இதையெல்லாம் இப்படி வெளிச்சம் போட்டு சொல்ல கூடாது.
      எடுக்குறது மட்டும் இல்ல, ஒரு மூட்டை தொவைச்ச துணியை காய வேற போடணும். அதுவும் அவுங்க எதிர்பார்க்கிற மாதிரி காயப்போடணும். இதெல்லாம் நடக்கிற காரியமா

      Delete
    2. ஹையோ ஏஞ்சல்!! நான் லேட்டாகிப்புட்டேன்....இதைத்தான் நான் வாசிச்சதும் சொல்ல நினைச்சேன்...சொக்கா...சொக்கா உமக்குப் போய் இப்படி ஆகிப் போச்சே!!!

      கீதா

      Delete
  3. கர்ர்ர்ர் :) நான்கூட உங்க வீட்டு படம்னே நினைச்சி உங்களை அவசரப்பட்டு பாராட்ட இருந்தேன் :) ஹாஹாஹா
    அழகான அனுபவமா பகிர்ந்திருக்கிங்க :) உங்க பிள்ளைங்க அதை பார்க்கல்லியா ??

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரியும் இப்படியெல்லாம் நீங்கள் பாராட்டுவீர்கள் என்று, அதனால் தான் உண்மையை சொல்லிட்டேன், ஏன்னா நான் உண்மையானவன் ஆச்சே.

      ஓ! அவுங்களைப் பற்றி சொல்ல மறந்துட்டனா!
      ஓவியாவும், இனியாவும் அதை பார்த்து எல்லாம் பயப்பிடலை. அவுங்க ரெண்டு பேரும் போய் நின்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க, அம்மணி தான் பயந்துக்கிட்டு கிட்டே எல்லாம் போகாதீங்கன்னு உள்ள கூப்பிட்டுக்கிட்டாங்க.

      Delete
    2. படத்தைப் பார்த்ததும் நானும் அப்படித்தான் நினைச்சேன் ஏஞ்சல்! அண்ட் சொக்கன் சகோ!! பொதுவா நான் பதிவுல கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சு பதில் வேர்ட்ல அடிச்சுக்கிட்டே வருவேனா ..நல்ல காலம் இன்று சொக்கன் சகோவின் பதிவை முழுசும் வாசிச்சுட்டுத்தான் கருத்து அடிச்சேன்...அதனால் தெரிஞ்சு போச்சு படம் கூகுளார்னு!!

      சொக்கன் சகோ சூப்பராஎழுதியிருக்கீங்க...

      கீதா

      Delete
  4. என் பொண்ணு அங்கே இருந்திருந்தா :) அப்படியே அந்த நீல நாக்கை தூக்கிட்டு ரூம்ல வச்சி வளர்த்திருப்பா :) அவ்ளோ ஆசை அவளுக்கு

    ReplyDelete
    Replies
    1. இதுக்காகவே ஒரு தடவை இங்க வாங்க, நிறைய அந்த நீல நாக்கை தூக்கிட்டு போய் வளங்க ....

      Delete
    2. ஏஞ்சல் என் பையனையும் சேர்த்துக்கங்க...அம்மை எவ்வழி அவ்வழி வாரிசுகள்?!!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  5. / அதுக்கு அவுங்க ரொம்ப கூலா, அது ஒரு அப்பிராணிங்க. யாரையும் ஒண்ணும் பண்ணாது.//
    ஹாஹாஹா ஒரே வீட்ல ரெண்டு அப்பிராணிங்க இருக்கக்கூடாதுன்னு சொல்லி பார்த்திருக்கணும் நீங்க :)

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லியிருந்தால், வீட்டுல அந்த ரெண்டாவது அப்பிராணி யாருன்னு பிரச்சனை வந்திருக்கும்

      Delete
  6. இந்த மாதிரி அரணைகள் என்றாலே எனக்கு ஒரு அருவருப்பு..... ஆனால் என் பெண்ணிற்கோ இவைகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் அந்த ஆசைக்கு நான் தடை போட்டுவிட்டேன்.. அட்லீஸ்ட் பாம்பாவது வளர்க்கலாம் என்று ஆசை அதற்கு நான் ஒகே ஆனால் மனைவி தடை

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஒரு விதமான அருவருப்பு தான் இவைகளை எல்லாம் கண்டால்.
      உங்கள் மனைவி ஊருக்கு போயிருக்கும்போது ஒரு பாம்பை வாங்கி வளர்க்க ஆரம்பித்து விடுங்களேன். என்ன உங்கள் மனைவி திரும்ப வந்தவுடன் உங்களுக்கு போனஸாக புரிக்கட்டையால இன்னும் ரெண்டு அடி கிடைக்கும் அவ்வளவு தானே.

      Delete
    2. பாம்பு ஓகேன்னா அப்போ அந்த அனகோண்டாவை உங்களுக்கு fwd பண்ணிடறேன்

      Delete
  7. ஆமாம் உங்க ஊரில் கல் கிடைக்காதா? நானாக இருந்தால் என் பெண் இல்லாவிட்டால் கல்லால் அடித்தே கொண்ரு இருப்பேன் ஹும்ம்

    ReplyDelete
    Replies
    1. கல்லை தூக்கி அதன் மேல போடுறதுக்கே எனக்கு பயமா இருக்கே.
      அடுத்த தடவை அது வந்துதுன்னா, சொல்லிவிடுறேன் நீங்களே இங்கு வந்து அது மேல கல்லை போட்டுட்டு போங்க. ஆனா இதை நண்பனுக்கு செய்யுற உதவிய நினைச்சு நீங்களே அமெரிக்காவிலிருந்து டிக்கெட் போட்டுக்கிட்டு வரணும். வெளியில தங்காம எங்கள் வீட்டுலே தங்கிக்கிட்டு, இந்த வேலையை முடிச்சுக்கொடுங்க

      Delete
    2. நான் அதன்மேல் ஹிட் அடித்தேன். (ஏஞ்சல் கிட்ட சொல்லிடாதீங்க...)

      Delete
    3. அமெரிக்காவா இந்தியாவான்னு மல்ட்டிகிட்ட கேட்டதில் அது இந்தியாவை டச் பண்ணுச்சி .இதொ வாறேன் மெட்ராஸுக்கு அரணை மேல் ஹிட்டடிச்சவரை த்ரிஷா கைல புடிச்சி கொடுக்க

      Delete
  8. சுவாரஸ்யமாக இருந்தது அரணை கதை! சின்ன வயதில் இதைப்பார்த்தாலே பயமாக இருக்கும். மேலே பட்டால் விஷம் என்பார்கள். அது கெடுதல் செய்யாது என்பதையறிய ஆச்சரியமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அது ஒன்றும் பண்ணாதுன்னு தான் சொல்றாங்க.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... நீல நாக்கு அழகி! ஒன்றும் செய்யாது என்றும் சொல்வார்கள். சிலர் இது நக்கினால் உடனே மரணம் என்றும் பயமுறுத்துவார்கள்!

      Delete
  10. நல்ல அனுபவம். என்னால் வீட்டிலும் மூன்று அரணைகள் ஒரு நாள் திடீர் விஜயம் செய்தன. அவை மாடிப்படி இறங்கி இடுக்கில் ஒளிந்து கொள்வதும், அவ்வப்போது மாடியேறி வரிசையாக அணிவகுத்து வருவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒருஞாயிறு பிற்பகல் சோபாவில் பாதி படுத்த நிலையில் கண்ணயர்ந்து நேரம் யாரோ என்னை உற்று நோக்குவது போலிருக்க, கண் விழித்தால் நாடு ஹாலில் அரணை! முகத்தை நிமிர்த்தி எண்ணெய் பார்த்தாவாறிருந்தது.

    அதை விரட்டும் முயற்சியில் வீட்டுக்குள்ளேயே அனுப்பி விட்டேன். பிறகுதான் தெரிந்தது, அதன் மற்ற இரு நண்பர்களும் (சகோதரர்களும்?) கூடவே வந்து ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் என்று!

    விரட்டுவதற்குள் படாத பாடுபட்டு விட்டேன்!

    அடடா... நானும் இதை வைத்து ஒரு பதிவெழுதும் வாய்ப்பை இழந்து விட்டேனே!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் இப்பக் கூட பதிவு எழுதலாம் நீங்க!!! நாட் டூ லேட்!!!

      கீதா

      Delete
  11. ஹா ஹா சொக்கா சொக்கா!! சகோ இதுக்குப் போயி அலட்டிக்கலாமா!!! பாவம் அரணை...அது ஒன்னுமே பண்ணாது...ம்ம்ம் ஆனால் ஒரு சிலருக்கு அதைக் கண்டால் பயம் அல்லது அருவருப்பு உண்டாகும் தான்...

    பாருங்க அந்தக் குட்டிப் பசங்களுக்கு என்னா தைரியம்னு....!!! நாம மட்டும் அதுங்க இடத்துல எல்லாம் போயி வீடு கட்டுவோம் எல்லாம் செய்வோம்...அதுங்க மட்டும் நம்மாண்ட வந்துடக் கூடாது!! இன்னா நியாயம்பா!! ஹாஅ ஹா ஹா ஹா ஹா

    சரி சரி முறைக்காதீங்க!!!!

    கீதா

    ReplyDelete
  12. இதுக்கே இப்படியா?!
    சரி பதிவு தேத்த இப்படி ஒரு நிகழ்வுன்னு எடுத்துக்கலாம்..

    நமக்கு இதுலாம் ஜுஜுபி

    ReplyDelete
  13. ரொம்ப சுவாரஸ்யம் தான்...


    ஆனாலும் எங்களுக்கும் இவங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சமா உதறல் தான்

    ReplyDelete
  14. அரணையை அடித்து கொல்லாமல் இடம் மாற்றி விட்ட மாணவர்களுக்கு ஒரு பூங்கொத்து...

    ReplyDelete
  15. விஷபூச்சிகள் எதுவும் அண்ட விடாமல் ''அரணாக'' இருந்து நம்மை காப்பதால்தான் அதற்கு ''அரணை'' என்று பெயர் வைத்தார்களோ என்னமோ....!

    ReplyDelete