Sunday, July 20, 2014

ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 2 (விசா வழிமுறைகள்)




முதலில் ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்வது எப்படி என்று பார்ப்போம்.


ஐம்பது வயதுக்கு கீழ் இருப்பவர்களால் எந்த நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவிற்கு யாருடைய உதவியுமின்றி எளிதாக புலம் பெயர முடியும். “Points Based Skilled Migration (Subclasses 189, 190 and 489) visa” மூலம் permanent resident(PR) ஆக ஆஸ்திரேலியாவில் புலம் பெயருவது. PR விசாவின் மூலம் வருபவர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழலாம். படிக்கவும், வேலை பார்க்கவும் முடியும். வேலைகளை மாற்றிக்கொள்ளவும் முடியும். Medicare(ஆஸ்திரேலியாவின் உடல் ஆரோக்கியத்திற்கான திட்டம்) பதிவு செய்து கொள்ள முடியும். ஆஸ்திரேலிய குடிமகனாக மாற முடியும். இன்னும் பல உரிமைகளை இந்த விசா பெற்றுத்தரும். ஆனால் ஒரே ஒரு உரிமையைத் தவிர, அது ஓட்டுப் போடும் உரிமை. அந்நாட்டு குடிமகன்களாக இருந்தால் தான் ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும். அவ்வாறு குடிமகன்களாக இருந்து ஓட்டுப்போடாமல் இருந்தால், அவர்கள் அபராதம் செலுத்தவேண்டும்.

சரி, நம் விஷயத்திற்கு வருவோம். இந்த Points Based Skilled Migration விசாவிற்கு அடிப்படைத் தகுதியானது, points based test இல், குறைந்தது 65 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். (இது தற்சமயம் உள்ள நிலவரம்).  அது என்ன points based test:

இந்த தேர்வில், நம்முடைய வயது, ஆங்கில அறிவு, கல்வித்தகுதி, வேலை போன்றவற்றிலிருந்து குறைந்தது 65 புள்ளிகளை எடுத்தால், தைரியமாக இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு மேல் அதிக விவரங்களை அளிக்கும்.


Factor
Description
Points
Age
18-24
25 points
25-32
30 points
33-39
25 points
40-44
15 points
45-49
0 points
English language
Competent English - IELTS 6
0 points
Proficient English - IELTS 7
10 points
Superior English - IELTS 8
20 points
Australian work experience in nominated occupation or a closely related occupation
One year Australian (of past two years)
5 points
Three years Australian (of past five years)
10 points
Five years Australian (of past seven years)
15 points
Overseas work experience in nominated occupation or a closely related occupation
Three years overseas (of past five years)
5 points
Five years overseas (of past seven years)
10 points
Eight years overseas (of past 10 years)
15 points
Qualifications
(Australian or recognised overseas)

                Offshore recognised apprenticeship
                AQFIII/IV completed in Australia
                Diploma completed in Australia

10 points
Bachelor degree (including a Bachelor degree with Honours or Masters)
15 points
PhD
20 points
Recognition of Australian Study
Minimum two years fulltime (Australian study requirement)
5 points
Designated language
5 points
Partner skills
5 points
Professional Year
5 points
Sponsorship by state or territory government
5 points
Sponsorship by family or state or territory government to regional Australia
10 points
Study in a regional area
5       


இந்த பட்டியலைப் பார்த்தால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, விசாவை விண்ணப்பிதற்கு தான் அனுமதி, மற்றபடி வயதுக்கான புள்ளிகள் ஒன்றும் கிடையாது. 

அது போல், ஆங்கில அறிவிற்கு – IELTS (International English Language Testing System), தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது Reading, Writing, Listening and Speaking என்ற நான்கு திறன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒவ்வொரு திறனிலும் 8 புள்ளிகள் (Band 8) எடுத்தால் தான் (அதிகப்பட்சமே 9 புள்ளிகள் தான்), ஆங்கில அறிவுக்கான 20 புள்ளிகளை எடுக்க முடியும். இதில் Band 6க்கு கீழ் இருந்தால், இந்த விசாவிற்கு அனுமதி கிடையாது.

“Australian work experience” என்று போட்டிருக்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம் என்று பார்த்தால், வேலை விஷயமாக ஆஸ்திரேலியாவில் வந்து வேலை பார்த்திருந்தாலோ, அல்லது அஸ்திரேலியாவில் வேலை விசாவில் (work visa) வேலை பார்த்துக்கொண்டிருந்து, இந்த PR விசாவை விண்ணப்பித்தால் அதற்கான புள்ளிகள் கிடைக்கும்.

Designated Language” இதற்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தால், அந்த புள்ளிகள் கிடைக்கும். www.naati.com.au (National Accreditation Authority for Translators and Interpreters)  – இதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Subclasses 189 – அதாவது சொந்த முயற்சியில் இந்த விசாவை விண்ணப்பிப்பது. இந்த முறையில் கடைசி மூன்று பட்டியலும் உதவாது.

“Sponsorship by state or territory government” மற்றும் “Sponsorship by family or state or territory government to regional Australia” விசாக்களில், எந்த மாநில அரசாங்கத்தின் உதவியாக இந்த விசாவை விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநிலத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும். பிறகு தான் மற்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுட்டியை கிளிக் செய்தால் மேல் விவரங்களை அறிய முடியும் - http://www.immi.gov.au/allforms/pdf/1119.pdf

மேற்கண்ட புள்ளிகளிலிருந்து, 65 புள்ளிகள் கிடைத்து விட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லலாம். முதலில் EOI (Expression of Interest) யை விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான சுட்டி - http://www.immi.gov.au/Work/Pages/SkillSelect/SkillSelect.aspx 

இங்கு (submit an EOI) என்ற சுட்டியை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் உங்களைப் பற்றிய தகவல்கள் (வேலை, படிப்பு போன்றவைகள்) கேட்கப்படும். பிறகு உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்திற்குள், விசாவை விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விசாவிற்கான இந்திய ரூபாய் முதன்மை விண்ணப்பத்தாரருக்கு (Primary Applicant) – ரூ207,600.00. மேலும் ஒரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18+)  - ரூ. 103,800. மேலும் ஒவ்வொரு கூடுதல் விண்ணப்பதாரருக்கு (Additional Applicant 18வயதிற்கு கீழ்) – ரூ. 51,900.00 ஒரு குடும்பத்திற்கு( 2+2) விசாவிற்கான செலவு  - ரூ. 415,200.

என்னடா, விசா கட்டணமே ரூபாய் நான்கு இலட்சமா என்று யோசிக்க வேண்டாம். கண்டிப்பாக அது ஒரு முதலீடு தான்.

அடுத்த பகுதியில், மற்ற மூன்று விசாக்களைப் பற்றி (“TOURIST”, “WORK VISA” மற்றும் “STUDENT”) பார்க்கலாம்.


-தொடரும்

 


Wednesday, July 16, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்





மூன்றாம் அதிகாரம்
கல்வி கற்றல்

ஐயா அவர்கள் இளைமைப் பருவத்தில் பள்ளிக்கூடத்து உபாத்தியாரிடத்துப் படித்துக்கொண்ட பின், 17ஆவது வயசில் வியாபார முறையை உத்தேசித்து யாழ்பாணம் போயிருந்த காலத்தில், அங்கே சுத்தாத்து வைத சைவ சித்தாந்த வியவஸ்தாபகராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானையடுத்து அத்தியந்த பக்தி விசுவாசத்துடன் சிஷ்யராக விருந்து, அவர்களிடத்தும், அவர்களுடைய மருகரும், முதன் மாணவருமாகிய வித்துவ சிரோமணி ஸ்ரீமத் பொன்னம்பல பிள்ளையவர்களிடத்தும், தமிழ் இலக்கண, இலக்கிய புராண இதிகாச முதலியவைகளை முறையாகப் பாடங்கேட்டுக் கொண்டார்கள்.


(ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்)

மேற்படி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் தம்மையடுத்த மாணாக்கராயுள்ள மற்றைத் தனவைசிய நகரத்தார்களை அழைக்கும் பொழுது அவர்கள் பெயருடன் “செட்டியார்“ என்று சேர்த்து அழைப்பார்கள். ‘ஐயா அவர்களை மட்டும் அவர்கள்பால் வைத்த அன்புரிமை மேலிட்டால் “சொக்கலிங்கம்” ‘ என்று பெயர் மாத்திரையாகவே சொல்லியழைப்பார்கள்.
ஐயா அவர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களுடைய திருவடிப் பாதுகையை பத்திர புஷ்பங்களால் பூசித்து வந்தார்கள். பின்பு நாவல குரு வணக்கம் என்று ஒரு பதிகமும் பாடி வணங்கியிருக்கிறார்கள். எப்பொழுதும் அவர்களுடைய மேன்மையையும், தீரத்தையும், கீர்த்தியையும் அடிக்கடி புகழ்ந்து பேசி வருவார்கள்.

மேலும், சிறந்து விளங்குகின்ற தேவகோட்டை மாநகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, புகழிடங் கொடுத்த பட்டினம் பூம்புகார்க்காணியாகவும், இருப்பைக் குடிக்கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவும் உடைய சூடாமணிபுரமுடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே), திருப்பெருந்துறை அண்ணாமலைச் செட்டியாரவர்கள் குமாரராகிய நாராயணச் செட்டியார் என்னும் ஸ்ரீலஸ்ரீ வன்றெண்ட தேசிகரவர்களையடுத்து சிஷ்யராக இருந்து அநேக இலக்கண இலக்கியங்களும், சாஸ்திரங்களும் பாட முறையிற் கேட்டுக்கொண்டார்கள். பின்பு, “வன்றெண்ட குருஸ்துதி” என்னும் நூலியற்றி அதில் அவர்களது தேக வியோகத்தைக் குறித்துத் தமக்குள்ள பிரிவாற்றாமையை விளக்கியிருக்கின்றார்கள். ஐயா அவர்கள் தாமியற்றி வெளியிட்ட நூல்களிலெல்லாம் தம்மை ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள் மாணாக்கரென்றே  வெளியிட்டமையின், வன்றெண்டரவர்களிடத்திலேயே பல நூல்களும் நிரம்பக் கற்றுப் புலமை நிரம்பப் பெற்றார்கள் என்பது தெரிகிறது.

ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்களிடம் பாடங்கேட்டுக்கொண்ட பின்பு; சிறப்புற்றேங்கிய காரைமா நகரின் கண்ணே, தனவைசியர் குலத்திலே, குலசேகரபுரம் பூம்புகார்க்காணியாகவும் , இளையாற்றக் குடிக் கோயில் பாண்டி நாட்டுக் காணியாகவுமுடைய கழநிவாசற் குடியார் கோத்திரத்திலே  (பட்டத்திலே), “சாலக்கரையார்” வீடு என்னும் குடும்பத்திலே, ஸ்ரீமான் மெய்யப்ப செட்டியார் செய்த அரும் பெருந் தவத்தால் அவதரித்த ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் உத்தமோத்தம  துவாதசாந்தபுரமாகிய மதுரைமா நகரத்தையடைந்து ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு நால்வகை மலரெடுத்து அத்தியற்புத விசித்திரக் கட்டுமாலை முதலிய புஷ்பப் பணிவிடைகள் செய்துகொண்டும், அமராபதிபுதூர் நகர தனவைசிய ஸ்ரீமான்கள் வயி.நாக.ராம. வகையார்களைக் கொண்டு ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயிலில் விமானம், மண்டபம், கோபுரம், திருமதில் முதலிய திருப்பணிகளை நடப்பித்து வருங்காலத்தில், அவற்றை அதி நுட்பதிட்ப    தீட்சண்யமாகிய பார்வையுடன் நடத்தியும், மேலும், தேவிக்கோட்டை ஸ்ரீமான்களாகிய, மெ. வகையாரைக் கொண்டும், அமராபதிபுதூர் வயி. நாக. ராம. வகையாரைக் கொண்டும் மற்றும் அன்பர்களைக் கொண்டும், அத்தலத்தில் அறுபத்துமூவர் குருபூசை மடம், திருநந்தனவனம் முதலியவைகளை தாபனஞ் செய்வித்தும் ,  முப்பத்தைந்து வருடகாலம், அம் மதுரைமா நகரின் எல்லையை விட்டு நீங்காது இருந்து, சுவர்ணகஞ்ச ஸ்நானானுட்டான  நித்திய நியம சிவபூஜை ஜெப தபத்தியான பாராயண பிரதக்ஷிண விரதசீலராய்ச் சாஸ்திர விற்பன்னராய் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசுவர தரிசனானந்தப் பெருவாழ்வுடையராய் நிர்மலானந்தக்கரண சிவத்தியான ஞானயோகச் சிவானுபூதிச் செல்வராய் விளங்கிக் கொண்டிருக்கு நாளில், ஐயா அவர்கள் அடுத்துச் சிஷ்யராக இருந்து, அவர்களுடைய நியமமேலீட்டால்  அவர்களுக்கு அவகாசங் கிடைப்பது அருமையாயிருந்தமையால், பக்தி விசுவாசத்துடன் நிழல்போல் விடாது பின் பற்றி நின்று கேட்பன கேட்பாரானார்கள்.  மேற்படி சுவாமிகளும் ஐயா அவர்களுடைய அத்தியந்த பக்தி சிரத்தை முதலியவைகளை நோக்கி, சிவாஸ்த்திர பாடஞ் சொல்லுதலும் சிவதருமம் என்று கருதி, திருமாலை கட்டும்பொழுதும், பிரதக்ஷினம்  வரும்பொழுதும், முறை வழுவாது பெரிய புராணம், சித்தாந்த சாஸ்திரம் முதலிய நூல்களை பாடஞ் சொல்லி வந்தார்கள்.

ஐயா அவர்கள் அவ்வாறு பாடங்கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் மூத்த மனைவியார் சிவபதம் அடைந்தமை தெரிந்தும் பாடங் கேட்குதலில் மிகுந்த சிரத்தையுடையவர்களாய் மதுரைமா நகரிலேயிருந்து, பின்பு கொஞ்சநாட் சென்று, சுவாமிகளால் வற்புறுத்தப்பட்டு ஊருக்கு வந்தார்கள்.

பின்பு, மேற்படி சுவாமிகள் நிரதிசயானந்தப்பெரும் பேறு பெற்றபின், ஐயா அவர்கள் மேற்படி சுவாமிகள் பேரில் “மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப் பத்தந்தாதி” என்னும் ஒரு தோத்திர நூலும், மேற்படி சுவாமிகள் சரித்திரச் சுருக்கமும் இயற்றிப் பாராட்டினார்கள். அந்த சுவாமிகளுடைய திருவடிப் பாதுகையை ஐயா அவர்கள் பூஜை செய்கிற வேதிகைக்குப் பக்கத்தில் வைத்து நித்தியமும் பத்திர புஷ்பங்கொண்டு அருச்சித்து வந்தார்கள்.

முற்கூறிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் , ஸ்ரீலஸ்ரீ வன்றெண்டரவர்கள், ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப சுவாமிகள் ஆகிய மூன்று குருமூர்த்திகளிடத்திலும் ஐயா அவர்கள் எப்பொழுதும் பக்திவிசுவாசத்துடனிருந்து, சமயம் வாய்த்த போதெல்லாம் அம்மூன்று குரவர்களுடைய குணாதிசயங்களையும், அருமை பெருமைகளையும் பாராட்டிப் பேசிக்கொண்டாடி வருவார்கள்.   அப்பெரியார்களுக்கும், ஐயா அவர்களுக்கும் புந்தியிற் பதிந்துள்ள உரிமை மகிழ்ச்சியைப் பற்றி:-
திருப்புத்தூர்ப் புராணத்தில்

     “மாற்றமொன்று சொலச்சொலித்தம் மகவம் மாற்றம்
           வயங்காமை யுரைப்பமகிழ் பிதாக்கண் மானத்
     தேற்றமிலேற் குணர்த்தியவன் ரெண்ட நாதன்
           றிருவால வாயர்மெய் யப்ப னெம்மான்  
     ஆற்றுபணி கொண்டடியென் முடியிற் சூட்டு
           மாறுமுக நாவலர்கோ னவன்றாட் கன்பே
     போற்றுவழி வந்தவிமற் சரமெய்ச் சீலர்
           புந்திமகிழ் வுறுவரென்சொற் புன்மை நோக்கி”.

எனவரும் செய்யுளால் நன்கு விளக்கியுள்ளார்கள். ஐயா அவர்கள் தங்களுடைய ஆசிரியர் மூவர்க்கும் அவரவர் சிவபத மடைந்த திருநக்ஷத்திரத்திலே குருபூசை நடத்தியும், நடப்பித்தும் அவர்களுடைய சரித்திரங்களை எடுத்து விரிவாகப் பிரசங்கித்தும் பாராட்டி வருவார்கள்.


மூன்றாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-----------------------------------
நான்காம் அதிகாரம்

கல்விகற்பித்தல் 

Monday, July 14, 2014

ஆஸ்திரேலியா: வழிகாட்டி தொடர் – 1



நான் வலைச்சரத்திற்கு ஆசிரியராக இருந்த சமயத்தில் இந்த பதிவை அறிமுகப்படுத்தினேன் -  ஹாங்காங் - ஒரு அறிமுகம். அன்றிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கும் இந்த மாதிரி ஒரு வழிகாட்டி தொடர் எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின் முதல் படியாக இந்த பதிவை எழுதியிருக்கிறேன். முடிந்த வரை ஒவ்வொரு வாரமும் இந்த தொடரை எழுதுகிறேன். நான் இங்கு அதிகமாக குறிப்பிட்டு சொல்வது சிட்னியைத்தான். மற்ற நகரங்களைப் பற்றி எனக்குத்தெரிந்த அளவில் தகவல்களை அளிக்கிறேன். இந்த தொடரின் உண்மையான நோக்கம் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு சரியான தகவல்களை அளித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே. அதனால் உங்கள் பார்வைக்கு எங்கேனும் தவறுகள் தென்பட்டால், தெரியப்படுத்துங்கள், உடனே திருத்தி விடுகிறேன்.  மேலும் கூடுதல் தகவல்களை சொல்லத் தவறியிருந்தாலும், கூறுங்கள், அவைகளையும் சேர்க்கிறேன்.

     ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு நிறைய மார்க்கங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானவர்கள் கீழ்கண்ட இந்த நான்கு மார்க்கங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவிற்குள் நுழைகிறார்கள்.

1. ஆஸ்திரேலியாவிற்கு மற்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவது (“PERMANENT RESIDENT” ஆக வருபவர்கள்)

2. ஆஸ்திரேலியாவிற்கு படிப்பதற்காக வருவது (“STUDENT” ஆக வருபவர்கள்)

3. ஆஸ்திரேலியாவிற்கு வேலை விஷயமாக வருவது (“WORK VISA”வில் வருபவர்கள்)

4.  ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வருவது(“TOURIST” ஆக வருபவர்கள்) 

முதலில், இந்த நான்கு வழிகள் மூலம் எவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு வரலாம் என்று பார்ப்போம். உள்ளே வந்த பிறகு, எவ்வாறு ஆஸ்திரேலிய மண்ணில் காலூனலாம் என்று பார்க்கலாம்.
-தொடரும்

  


Wednesday, July 9, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்



எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் படிக்க....

Monday, July 7, 2014

சைவம் - விமர்சனம்



தலைவா திரைப்படத்தில் நான் தோன்றுவதற்கு காரணமாயிருந்த இயக்குனர் விஜய்யிடமிருந்து வந்திருக்கும் படம் தான் சைவம். இந்த படத்தை அவருடைய தந்தை தயாரித்திருக்கிறார். பொதுவாக செட்டிநாடு என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது அசைவ உணவு தான். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் ஏறக்குறைய 90 சதவீத மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அவ்வாறு அசைவம் சாப்பிடும் ஒரு நகரத்தார் குடும்பம் சைவமாக மாறுவது தான் இந்த படத்தின் ஒரு வரிக்கதை. ஒரு குறும்படத்துக்கான கருவை எடுத்துக்கொண்டு இரண்டு மணி நேர திரைப்படமாக நமக்கு வழங்கியிருக்கிறார் இயக்குனர். இன்றைக்கு வரும் அனைத்து திரைப்படங்களும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையாக குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக இருப்பது தான் சைவத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் எந்த ஒரு இடத்திலும் இரட்டை அர்த்த வசனங்களோ, முகம் சுழிக்கக்கூடிய நடனங்களோ என்று எதுவுமே இல்லை. நகைச்சுவை காட்சிகளும், திணிக்கப்படாமல், படத்தோடு ஒன்றி வருவது இயல்பாக இருக்கிறது. ஆனால் அதே சமயம்  திரைக்கதை பலமாக இல்லாததால், ஒரு தொய்வு ஏற்படுவதை உணர முடிகிறது.

கதை என்னவென்று பார்த்தால், செட்டிநாட்டு ஊரான கோட்டையூரில் வசிக்கும் பெரியவர் நாசருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களில் மகள் துபாயிலும், இரு மகன்கள் வெளியூரிலும் வசிக்க , ஒரு மகன் மட்டும் பெற்றோர்களோடு கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறார். மூன்று ஆண்டுகள் கழித்து திருவிழாவிற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அச்சமயத்தில், பேத்தி சாராவிற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக, தாங்கள் குலதெய்வத்துக்கு செலுத்தவேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாதது நியாபகத்துக்கு வருகிறது. அதன்படி சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை திருவிழாவில் பலி கொடுப்பதாக முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு அந்த சேவல் காணாமல் போய்விடுகிறது. இறுதியில் அந்த சேவலை கண்டுபிடித்து சாமிக்கு பலி கொடுத்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சேவலை தேடுகிறோம் என்ற பெயரில், குடும்பத்தில் உள்ளவர்கள் அடிக்கும் கூத்தும், மகளின் பேரனாக வரும் அந்த குட்டிப்பையனும் ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவன் “wifi” இருக்கிறதா என்று ஆயாவிடம் கேட்பதும், அதற்கு நாசரின் மனைவி, அவனிடம், “இது சாக்குப்பை, கூடைப்பை”  என்று கூறுவதும், பிறகு வீட்டு வேலைக்காரனும், தன் பங்குக்கு, “இவ என்னோட wife, இவுங்க இராமநாத ஐயாவோட wife, இவுங்க உங்க மாமாவோட wife என்று கூறுவதும் இதற்கெல்லாம் பதிலாக அந்த குட்டிப்பையன் கடுப்பாகி, முகத்தில் கோபத்தை காட்டுவதும் சரியான நகைச்சுவை கலாட்டா. அந்த வீட்டிற்குள்ளேயே மாமன் மகன், அத்தை மகள் இருவரிடமும் நடக்கும் விடலைக்கதால் சுவாரசியம். வருஷம் 16 படத்தில் மற்றவர் முன்னிலையில் கார்த்திக்கும், குஷ்புவுக்கும் இருக்கும் காதல் வெளிப்பட்டு விடுவதுமாதிரியான காட்சி இருக்கும். அதுமாதிரியே இந்தப்படத்திலும் அவர்கள் இருவரின் காதலும் வெளிபட்டுவிடும். இதனால் தானோ என்னவோ வருஷம் 16 படத்தை, இவ்விருவரின் காதல் அத்தியாயம் நியாபகப்படுத்திகிறது போல. நாசரின் பேரனாக இக்கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் நாசரின் மகனான லுப்துபுதீனாம்.

நாசர் தான் இதில் நாயகன், ஆனால் அவருக்கு அதிகப்படியான வசனங்கள் கிடையாது. நாயகி என்று பார்த்தால், பேத்தியாக வரும் சாரா தான் நாயகி. நிறைய இடங்களில் தன் கண்களாலே பேசி பாராட்டை அள்ளிக்கொள்கிறார். மற்றபடி இப்படத்தில் நடைத்த அனைவரும் தங்களின் பங்கை உணர்ந்து மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செட்டிநாட்டு வீதிகளையும், வீடுகளையும் அழகாக காட்டியிருக்கிறது.

நான் ஏற்கனவே தலைவா படத்தில், எங்களின் நகைச்சுவைப் பகுதியின் கவனக்குறைவை சுட்டிக்காட்டியிருந்தேன். தலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்ட ஆள் மாறாட்டங்கள்

இந்த படத்திலும் இயக்குனர் சில இடங்களில் அதே தவறை செய்திருக்கிறார். செட்டிநாட்டு வழக்கப்படி தாத்தாவை, ஐயா என்று தான் சொல்லுவார்கள். இதில் ஆரம்பத்தில் மகன் வயிற்றுப் பேரன்கள் இருவரும் , நாசரைப் பார்த்தவுடன் "எப்படியிருக்கீங்க ஐயா" என்று சரியாக சொல்லுவார்கள். பிறகு இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளும்போது, தாத்தா என்று சொல்லிக்கொள்ளுவார்கள். இதனை நாட்டுக்கோட்டை செட்டியாரான இயக்குனர் எப்படி கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. மற்றொரு இடத்தில், சேவலை காணோம் என்று புகார் கொடுப்பதற்கு காவல் நிலையம் செல்லுவார்கள். காவல் நிலைய பலகையில் “காவல் நிலையம் மதகுப்பட்டி” என்றிருக்கும் (இயக்குனரின் சொந்த ஊர் மதகுப்பட்டியாகும்). உள்ளே போலீஸ் காவலாளி அவர்களிடம், நீங்கள் எந்த ஊர் என்று கேட்பார், அதற்கு அவர்கள் நாங்கள் கோட்டையூர் என்று சொல்லுவார்கள். கோட்டையூருக்கும், மதகுப்பட்டிக்கும் ஏறக்குறைய 40கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் தள்ளி, இவர்கள் இந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்களாம். கொஞ்சமாவது லாஜிக் வேண்டும். ஆனால், இயக்குனரும் சரி, அவருக்கு கீழ் இணை மற்றும் உதவி இயக்குனர்கள் யாரும் இந்த மாதிரி சின்ன சின்ன தவறுகளை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தான் கொடுமை.

இறுதியாக இந்த படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று ஒரு முறை பார்க்கலாம்.


Saturday, July 5, 2014

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை



சொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை

சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்

சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்



இரண்டாம் அதிகாரம்
இல்வாழ்க்கை
--------------------------
ஐயா அவர்கள் பதினாறாவது வயசில் பிரசோற்பத்தி வருட ஆவணி மீ அ வு கோட்டையூரில் தனவைசியர் குலத்திலே பெருங்குடியிலே மண்ணூருடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே) வீர பாண்டியபுரம் பூம்புகார்க் காணியாகவும், மாற்றூர் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய, கவீ.ராம. இராமநாதச் செட்டியார் குமாரியாகிய இலக்குமி அம்மையார் என்பவரைத் திருமணஞ்செய்து கொண்டார்கள். தாது வருட மாசி மீ முதல் காரைமா நகரையடுத்த முத்துப் பட்டணத்தில் இல்லம் அமைத்துக்கொண்டு பெற்றோர் முதலியவர்களுடன் அதில் வாசஞ்செய்து வந்தார்கள்.

இருபத்து நான்காம் வயசில் பிரமாதி வருட ஆவணிமீ அ உ திருப்புனவாசல் முதன்மையாரும், பழம்பதிநாதர் பூஜா துரந்தரருமாகியபா தரக்குடி ஸ்ரீலஸ்ரீ வேங்கடாசலபதி குருசுவாமிகளிடத்தில் நகர தனவைசியர் கிரமப்பிரகாரம் காரைமா நகரில் சிவதீஷை பெற்றுக்கொண்டார்கள்.

ஐயா அவர்கள் தமது இருபத்தெட்டாவது வயசில் தம் மனைவியராகிய இலக்குமி அம்மையார் சுபானு வருட ஐப்பசிமீ செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தமையால்; இருபத்தொன்பதாவது வயசில் பார்த்திப வருட ஆனிமீ உயஅ காரைமா நகரையாடுத்த முத்துப்பட்டினத்தில் தனவைசியர் குளத்தில் பெருங்குடியிலே மருதேந்திரபுரமுடையார் கோத்திரத்திலே (பட்டத்திலே)  வீரபாண்டியபுரம் பூம்புகார்க் காணியாகவும் வைரவன்கோவில் பாண்டிநாட்டுக் காணியாகவுமுடைய ராம. மெ. சின்னச் சாத்தப்ப செட்டியார் குமாரியாகிய விசாலாட்சி அம்மையார் என்பவரை இரண்டாவது திருமணஞ்ச் செய்து கொண்டார்கள். ஐயா அவர்கள் முதன் மனைவியாரிடத்துப் பிறந்த மீனாட்சி என்னும் புத்திரிக்குச் சந்ததி விருத்தியடைந்திருக்கிறது.

இரண்டாவது மனைவியாரிடத்து முதற் பிறந்த திலகவதி என்னும் புத்திரிக்கும் சந்ததி விருத்தியாய் வருகின்றது. இரண்டாவது தோன்றிய இராமநாதராகிய திருநாவுக்கரசு செட்டியார் என்னும் ஓர் சற்புத்திரருக்கும் சந்ததி விருத்தியாகி வருகின்றது. அச்சற் புத்திரரும் சைவ சமயாசார சீலராய்ச் சிவ பக்தராய்ச்சிறந்து விளங்கி வருகின்றார்.

ஐயா அவர்களுக்கு நாற்பத்து நான்காம் வயசில் சார்வரி வருட மார்கழி மீ சு உ அபரபட்சச் சதுர்த்தசி திதியில் இரண்டாவது மனைவியாராகிய விசாலாட்சி அம்மையார் சிவபத மடைந்தனர்.

ஐயா அவர்கள் அதிபாலிய முதல் காரைமா நகர் அறுபான்மும்மை நாயன்மார் குருபூசை மடத்திற்கு மிகுதியும் போக்குவரவு வைத்துக்கொண்டு ஸ்நாநம் நித்திய நியம சிவபூசை பாராயணம் ஸ்ரீ அனுகூல விநாயகர் தரிசனம் சிவதரிசனம் முதலில சிவபுண்ணியங்களைத் தவறாது செய்துகொண்டு காலந்தோறும் இல்லத்துக்குச்சென்று திருவமுது செய்து வந்தார்கள்.

ஐயா அவர்களுடைய தந்தையார் சுபானு வருட மாசி மீ எ உ சொந்த இல்லத்தில் கந்தபுராண படனம் நடைபெற்று வருங்காலத்தில் சிவ பதமடைந்தனர். அவருக்கு செய்ய வேண்டிய பிதுர் கர்மங்கள் யாவும் சிரத்தையுடன் அதி விமரிசையாக விதிப்படி ஐயா அவர்கள் செய்தார்கள்.

ஐயா அவர்கள் தம்முடைய தாயாரை மகாமக ஸ்நாநங் கருதிக் கும்பகோணத்திற்கு அழைத்துப்போயிருந்தார்கள். அங்கே தாயாருக்கு உடம்பு அசௌகரியமாயிருக்கக் கண்டு திருவாரூருக்கு அழைத்து வந்து அத்தலத்தில் தங்கி தக்க வைத்தியம் பார்க்கச்செய்து, தொண்டு செய்துகொண்டுவந்தார்கள். அப்படி இருக்கும் நாளில் அந்தத் திவ்ய புண்ணிய ஸ்தலத்தில் துன்முகி வருட மாசி மீ எ உ தாயார் சிவபதமடைந்தனர். அவருக்கு செய்யவேண்டிய மாதுர்கர்மங்கள் யாவும் விதிப்படி சிரத்தையுடன் செய்து முடித்து ஊருக்கு வந்தார்கள். தந்தை தாயாராகிய இருமுது குரவர்களுடைய வருஷாப்திக முதலியவற்றையும் சிரத்தையுடன் நடத்தி வந்தார்கள்.

வேதாரணியம் என்ற உத்தமஸ்தலத்தில் அறுபத்து மூவர் திருமடாலயத்தில் தமது சஷ்டியப்தபூர்த்தி சாந்தியைத் தோகைமலை சுப்பிரமணியக் குருக்களையா முதலிய சிவாச்சாரியார் முகமாகச் சிவகாம முறைப்படி செய்து கொண்டார்கள். ஸ்ரீவேதாரணியே சுவரருக்கும், யாழைப்பழித்த மொழியம்மையாருக்கும், பரிவார தேவர்களுக்கும், கும்ப ஸ்தாபனங்கள் செய்து பூசித்து அபிஷேக பூசை, நைவேதனங்கள் செய்வித்துத் தெரிசனஞ் செய்து கொண்டார்கள்.

ஐயா அவர்கள், குடும்பத்திலிருக்குங் காலத்திலும் “தாமரையிலையிற் தண்ணீர்போலப்” பற்றற்று நின்று குடும்பத்துடனும், தனித்தும், அன்பு மேலீட்டால் இடையிடையே அநேக சிவஸ்தல யாத்திரை செய்து கொண்டு வந்தார்கள். ஸ்ரீ சிதம்பரத்தில் இருக்குங் காலத்தில் அக்ஷய வருஷத்தில் ஸ்ரீகாசி யாத்திரைசெய்து புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து பல சிவஸ்தல தெரிசனஞ் செய்துகொண்டு வந்தார்கள். அந்த யாத்திரை முற்றியபின் “காசி விஸ்வேசர் அடைக்கலப் பதிகம்” என்னும் நூலியற்றினார்கள்.

இரண்டாம் அதிகாரம் முற்றுப்பெற்றது.
-------------------------------------------------
மூன்றாம் அதிகாரம்

கல்வி கற்றல் 

Thursday, July 3, 2014

ATM அட்டை இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்



 
ATM அட்டை இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்
 
இருபது வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக வேலை பார்க்க ஆரம்பித்தபோது, சம்பளத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்தார்கள். அதற்கு பிறகு, சம்பளத்தை என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்த்தார்கள். அதனை நான் பணம் எடுக்கும் சீட்டையோ (withdrawl slip) அல்லது காசோலையையோ (cheque) பயன்படுத்தி அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருக்கிறேன். பிறகு வெளிநாட்டிற்கு சென்றபோது தான் இந்த “தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை (ATM)” பயன்படுத்த ஆரம்பித்தேன். முதன்முதலில் அந்த இயந்திரத்தை பயன்படுத்தியபோது, நான் அடைந்த ஆச்சிரியத்துக்கு அளவே இல்லை. இந்த இயந்திரத்துக்குள் ஒரு அட்டையை போட்டா, நமக்கு பணம் கிடைக்குதேன்னு தொழிநுட்ப வளர்ச்சியைக்கண்டு ரொம்பவே ஆச்சிரியப்பட்டிருக்கேன்.  சில நாட்களுக்கு முன்பு இங்கு “GET CARDLESS CASH” என்றொரு விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது. அது பற்றி ஒரு நண்பரிடம் பேசிய போது தான், முழு தகவலும் தெரிந்து கொள்ள முடிந்தது. பொதுவாக நாம் இந்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு அதற்கான அட்டையை உபயோகப்படுத்துவோம். ஆனால், இந்த முறையில் அட்டையை பயன்படுத்தாமல் பணம் எடுக்க முடியும். நாம் அந்த அட்டையை (ATM card) கொண்டு வருவதற்கு மறந்து விட்டாலோ அல்லது யாருக்காவது உடனடியாக பணமாக கொண்டுக்க வேண்டும் என்றாலோ, இந்த முறை மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை முதலில் நானே சுயபரிசோதனை செய்து பார்த்தேன். மிகவும் எளிதாக அட்டை இல்லாமல் பணம் எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
     நம்முடைய அலைபேசியில் குறிப்பிட்ட வங்கியின் APPயை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் (இங்கு நான் சொல்லுவது CBA அதாவது common wealth bank of australia). அதில் “GET CARDLESS CASH” ஆப்ஷனை பயன்படுத்தி, நம்முடைய கணக்கிலிருந்து பணத்தை ATMக்கு அனுப்பிய பிறகு, கடவுட்சொல் (password) நம்முடைய அலைபேசிக்கோ, அல்லது நாம் கொடுத்த வேறொருவரின் அலைபேசிக்கோ வரும். அந்த கடவுட் சொல்லை பயன்படுத்தி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பணம் எடுத்துக்கொள்ளலாம். மிகவும் முக்கியம் - முப்பது நிமிடத்திற்குள் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது.
     இந்தியாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்து விட்டதா என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்டபொழுது, “Bank of India” போன்ற ஒரு சில வங்கிகள் இம்முறையை பயன்படுத்துகின்றன என்று பதில் அளித்தார். அதில் ஒரு சின்ன வேறுபாடு என்னவென்றால், நாம் அடுத்தவருக்கு இம்முறையில் பணம் அனுப்ப விரும்பினால், அவருடைய அலைபேசி எண்ணையும், அவருக்கான வங்கி எண்ணையும் வங்கிக்கு இணையம் வழியாகவோ, அலைபேசி வழியாகவோ அனுப்பினால், அந்த நண்பரின் அலைபேசிக்கு வங்கி ஒரு கடவுட் எண்ணை அனுப்பும். அதனை பயன்படுத்தி அவர் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
     சரி, இன்றைக்கு அட்டை இல்லாமல் அந்த தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்க முடிகிறது, அடுத்து நம் கணக்கில் பணம் இல்லாமல், அந்த இயந்திரத்தில் பணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள் வெகு தூரம் இல்லை!!.