Friday, March 22, 2019

மறக்க முடியாத ஆசிரியர்




எல்லோருக்கும் பள்ளிக்காலத்திலும், கல்லூரி காலத்திலும் தங்களுக்கு மிகவும் பிடித்த, மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று சிலர் இருப்பார்கள். அந்த வகையில் எனக்கும் என்னுடைய கல்லூரி காலத்தில் ஆசிரியர் மாணிக்கம் மிகவும் பிடித்தமான ஒரு ஆசிரியர். இன்றைக்கும் நினைவில் இருந்து நீங்காத ஒரு ஆசிரியரும் கூட. 

மாணிக்கம் ஆசிரியர் இவ்வாண்டு ஓய்வு பெறுகிறார் அவரைப் பற்றி எழுதிக்கொடுங்கள் என்று நான் படித்த கல்லூரியிலிருந்து ஒரு விண்ணப்பம் வந்தது. ஓய்வு பெறுகிற அளவிற்கு அவருக்கு வயதாகி விட்டதா என்று நினைக்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் 1990ஆம் ஆண்டு நான் கல்லூரியில் அடிஎடுத்து வைத்த முதல் நாள், கணினித் துறை தலைவர் என்று அவர் தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டபோது, ஒரு முதுகலை படிப்பு பயிலும் மாணவரைப்போல் தான் அவருடைய தோற்றம் இருந்தது. அப்படி ஒரு மாணவர் போல் அன்று தோற்றமளித்த அவர் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்று நினைக்கும்போது, எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது.

அவரைப் பற்றி சில வரிகள் உங்களின் பார்வைக்காக....

மிகவும் கடினமான பாடங்களைக்கூட அனைவருக்கும் எளிதில் புரியும்படியாக அவர் வகுப்பு எடுக்கிற விதமே தனி அழகு தான். எனக்குத் தெரிந்து அந்த மூன்று ஆண்டுகளில் அவர் யாரையும் மிகவும் கோபமாக திட்டியது கூட கிடையாது. அந்த அளவிற்கு அவர் எல்லாவற்றையும் (எங்களின் குறும்புகள் உட்பட)அனைத்தையும் சுலபமாக எடுத்துக்கொண்டு பொறுமையாக எங்களுக்கு புரிகிற மாதிரி அறிவுரை வழங்குவார். எங்களிடம் ஒரு ஆசிரியர் போல் பழகாமல், ஒரு தோழனைப் போல் பழகுவது தான் அவருடைய தனிச் சிறப்பு. 

இரண்டாம் ஆண்டு விடுமுறையில் நானும், நண்பன் ரமேஷும் “சக்தி சுகர்ஸ்” கரும்பு ஆலையில் குறுகிய கால பயிற்ச்சிக்காக (Inplant Training) கல்லூரியிலிருந்து முன் அனுமதி பெறாமல் சென்றிருந்தோம். அந்த பயிற்சியானது, கல்லூரி தொடங்கிய பின்பும், இருபது நாட்களுக்கு தொடர்ந்ததனால் கல்லூரியின் வருகைப்பதிவிற்கு பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்து நாங்கள் இருவரும் மாணிக்கம் ஆசிரியரிடம் சென்று சூழ்நிலையை விளக்கினோம். அப்போது அவர் எனக்குத் தெரியாமல் நீங்கள் எவ்வாறு இந்த மாதிரி செயலில் இறங்கலாம் என்று கோபிக்காமல், எந்த ஒரு ஈகோவையும் பார்க்காமல், நான் முதல்வரிடம் சொல்லி உங்களின் வருகைப்பதிவிற்கு ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் ஆரம்பித்த பயிற்சியை செவ்வனே முடித்துவிட்டு கல்லூரிக்கு வாருங்கள் என்று கூறி தான் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உயர்வுக்கு என்றும் காரணமாக இருப்பவர் என்று நிருபித்தார். 

ஒவ்வொரு முறையும் கோபால் செய்முறை வகுப்பில் (cobol programming) நான் தடுமாறியபொழுது எல்லாம், என்னுடன் அமர்ந்து, பொறுமையாக நான் செய்கின்ற தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி, தவறுகள் வராமல் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பலமுறை எனக்கு விளக்கி வகுப்பு எடுத்தார். அவருடைய அந்த அடித்தளம் தான், பிற்காலத்தில் கோபால் ப்ரோக்ராம்மிங்கில் (cobol programming) கிட்டதட்ட 23 ஆண்டு காலம் என்னால் கோலோச்ச முடிந்தது.
  
அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த இரண்டு விஷயங்களே போதுமானது அவர் எப்படிப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்கு.

அவரை வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை. அதனால் இறைவனிடம் அவருடைய ஓய்வு காலம் மிகவும் ஒரு சிறந்த காலமாக விளங்க வேண்டும், மேலும் அவர் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடும், மிகவும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


பின் குறிப்பு: சென்ற ஆண்டு தான் எங்களின் 25ஆம் ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. வேறொரு பதிவில் அதனை பற்றி  எழுதுகிறேன். அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் மேல உள்ள புகைப்படம் 

Sunday, March 3, 2019

எங்கள் வீட்டில் குடியிருந்த Blue Tongue Lizard - அரணை




நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளின் பின்புறத்தில் (backyard) இந்த அரணை இருக்கிறது, இது ஒன்றும் பண்ணாது, மேலும் இது இருந்தால் பூச்சிகள் எல்லாம் வராது என்று கூறியிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் அதனை ஆச்சிரியமாக கேட்டிருக்கோமேயொழிய பெரிதாக எடுத்துக்கொண்டது கிடையாது. ஆனால் நான்கைந்து நாட்களுக்கு முன்பு, இந்த அரணை எங்கள் வீட்டு பின்புறத்தில் காற்றுவாங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்து விட்டேன். இது என்னடா நம்ம வீட்டுக்கும் வந்துவிட்டதே என்று ஒரு நிமிடம் பயந்து போனேன். நான் அதை பார்த்து பயந்ததை விட, இந்த அரணை தன்னுடைய திருமுகத்தை அம்மணிக்கு  காட்டினால் என்ன பண்றதுன்னு தான் எனக்கு பெரிய பயமே. ஏன்னா அம்மணி ஒரு சின்ன பல்லியை பார்த்தாக்கூட பத்து வீட்டுக்கும் கேக்கிற மாதிரி ஒரு கத்து கத்துவாங்க. பல்லின்னா அப்படி ஒரு அலர்ஜி. அப்படியிருக்கும்போது இந்த அரணையை பார்த்துட்டா, அதனால எல்லா சாமிக்கிட்டேயும், அம்மணி இதை பார்த்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். என்னோட வேண்டுதல்  வெறும் ரெண்டு நாளைக்கு மட்டும் தான் பலிச்சுது. அந்த ரெண்டு நாளும் அவுங்க கண்ணுக்கு அது தட்டுப்படவே இல்லை. நானும் நிம்மதியா இருந்தேன். 


மூன்றாவது நாள்,  நான் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தேன். அம்மணி காயப்போட்ட துண்டை எடுப்பதற்காக பின் பக்கம் போயிருக்கிறார்கள்.  திடீரென்று  "என்னங்க இங்க வாங்க" என்று ஒரு பெரிய சத்தம். நானும் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சு போய் பார்த்தா, அவுங்க நின்ற  இடத்துலேயே நின்றுகிட்டு இருந்தாங்க . என்னைய பார்த்தவுடன், ஏங்க அந்த "blue tongue" நம்ம வீட்டுக்கும் வந்துடுச்சுங்கன்னு ஒரே புலம்பல். சரி உள்ள வா பார்த்துக்கலாம்னு சொன்னா, நான் உள்ள வரமாட்டேன்னு ஒரே அடம். அப்புறம் அவுங்களை கையை பிடிச்சு உள்ள கூட்டிக்கிட்டு வந்தா, இனிமே நான் பின் பக்கம் போக மாட்டேன், காயப்போட்ட துண்டு துணிங்க எல்லாம் நீங்களே போய் எடுத்துக்கிட்டு வாங்கன்னு ஒரே அழிச்சாட்டியம். நானும் உள்ளுக்குள்ள பயத்தை வச்சுக்கிட்டு வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டு, போய் காயப்போட்டிருந்த துணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன். 

இதுக்குத்தான் பேசாம ஒரு யூனிட்டை (அபார்ட்மெண்ட்டை) வங்கியிருக்கலாம். நீங்க தான் வீடா வாங்கணும் அப்பத்தான் நல்லதுன்னு சொல்லி இந்த வீட்டை வாங்குனீங்கன்னு ஒரே புலம்பல். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, அந்த ஜந்து வீட்டை விட்டு சீக்கிரம் போயிடனும்னு வேற ஒரு ஆர்டர். 

நானும் மறு நாள் எங்கள் கடையில் இருந்துக்கிட்டு, blue tongue rescue நிறுவனத்தை கூப்பிட்டு, இந்த மாதிரி, இந்த மாதிரி எங்கள் வீட்டில அந்த ஜந்து வந்துடுச்சு, என் மனைவி வீட்டு பின் பக்கத்துக்கே போக மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுன்னு கேட்டேன். அதுக்கு அவுங்க ரொம்ப கூலா, அது ஒரு அப்பிராணிங்க. யாரையும் ஒண்ணும் பண்ணாது. உங்க வீட்டுல அது இருக்குதுன்னா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்.  நீங்க சொல்றதை பார்த்தா, அது ஒரு குழந்தை தான். பேசாம நீங்க உங்க வேலையை பாருங்க. அது ஒரு தொந்தரவும் கொடுக்காது. இன்னும் சொல்ல போனா, அது இருக்கிறதுனால உங்கள் வீட்டுக்கு பூச்சி, சிலந்தி எல்லாம் வராதுன்னு சொன்னாங்க. நான் உடனே, நீங்கள் சொல்றது எல்லாம் எனக்கு புரியுதுங்க, ஆனா என் மனைவி அதை பார்த்து ரொம்ப பயப்பிடுறாங்களே, அதனால  நீங்கள் யாரையாவது அனுப்பி அதை பிடிச்சுக்கிட்டு போயிடுறீங்களான்னு கேட்டேன். உடனே அவுங்க நோ, நோ, நாங்கள் எல்லாம் யாரையும் அனுப்ப முடியாது. நீங்களே  ஒரு பெரிய டப்பாவிலோ இல்ல பிளாஸ்டிக் கவர்லேயோ அதை பிடிச்சு பூங்கா மாதிரி உள்ள எடத்துல ஒரு ஓரமா விட்டுடுங்கன்னு சொன்னாங்க.  ஐயையோ இது என்னடா, நம்மளையே பிடிக்கச் சொல்றாங்களேன்னு ஒரே கவலையாயிடுச்சு. நமக்கு சின்ன வயசிலிருந்தே இந்த விலங்கியல் பாடம்னாலே பெரிய அலர்ஜி. விலங்குகளை எல்லாம் படம் வரையிறதே பிடிக்காது, இதுல அதை தொட்டு எப்படி தூக்குறது. என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. 

சரிங்க, நானே புடிச்சு தூக்கி போட்டுடுறேன்ன்னு சொல்லி போனை கட் பண்னினேன். உடனே அம்மணிக்கிட்டேயிருந்து போன். எங்கள் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்கிற மராட்டிய நண்பர்  வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை அம்மணி சொல்லியிருக்காங்க. அந்த நண்பரும் அவரோட மனைவியும்,  எங்க வீட்டுக்கு பின்னாடி பெரிய ரெண்டு அரணை இருக்குது. அது பாட்டுக்கு அது இருக்கும், நாங்க ஒண்ணும் அதைப் பத்தி கண்டுக்க மாட்டோம். நீங்க என்னடான்னா அந்த சின்ன குழந்தைக்கு போய் இப்படி பயப்பிடுறீங்க. அது ஒண்ணும் பண்ணாதுங்க. அதனால நீங்க கவலைப்படமா போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா எங்க அம்மணி யாரு, அதை பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்குது, என்னைய விட எங்க வீட்டுக்காரருக்கு அது கிட்ட ரொம்ப பயம், அதனால நீங்க கொஞ்சம் வந்து அதை தூக்கி போட்டுடுறீங்களான்னு கேட்டிருக்காங்க. அந்த நண்பரும் நான் இதுக்கு சரியான ஆள் இல்ல, என் மகன் தான் சரியான ஆளு, அவன் பள்ளிக்கூடத்திலுருந்து வந்தவுடனே உங்க வீட்டுக்கு அனுப்புறேன்னு சொல்லியிருக்காரு. அவுங்க பையன் பதினோராம் வகுப்பு படிக்கிறவன்.  கொஞ்ச நேரத்துல அவனும் அவனுடைய மற்ற இரண்டு நண்பர்களும் (சீன மாணவன் மற்றும் வெள்ளைக்கார மாணவன்) மூவரும் எங்கள் வீட்டிற்கு வந்து ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரை வைத்துக்கொண்டு அதைப் பிடிக்க முயன்று, கடைசியில் அதை வெற்றிக்காரமாக பிடித்து  பக்கத்திலுள்ள பூங்கா ஓரமாக விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். (இவர்கள் அல்லவா தைரியசாலிகள்..) 

ஒரு வழியாக அந்த அரணை எங்கள் வீட்டை விட்டு போய்விட்டது. அன்றைக்கு இரவு நான் வீட்டுக்கு வந்தவுடன், அம்மணியிடம் அவுங்க அதை பிடிக்கும்போது நீ சில புகைப்படங்களை எடுத்திருக்கலாமே என்று கேட்டேன். நான் அந்த புகைப்படங்களை எடுத்து என்ன பண்றதுன்னு திருப்பி கேட்டார்கள். நீ புகைப்படம் எடுத்திருந்தால், நான் வலைப்பூவில் எழுதுவதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன். உடனே அவர்கள் அப்படி எழுதணும்னு நினைத்த நீங்கள் நம் வீட்டிலிருந்த அந்த அரணை மட்டுமாவது புகைப்படம் எடுத்திருக்க வேண்டியது தானே என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது நல்ல கேள்வி தான், ஆனால் எனக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை. பின்ன அவுங்களிடம் நான் பயப்பிடாத மாதிரி நடிச்சேன்னு சொல்ல முடியுமா?

பி.கு: அப்ப மேல உள்ள இரண்டு படங்களும் உங்கள் வீட்டில் இருந்த அரணை இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்கு கேக்குது. அந்த படங்கள் எல்லாம் கூகிள் ஆண்டவர் உபயம். ஹி.. ஹி... 

Friday, February 22, 2019

கருப்பு பணம் - ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா மீட்குமா?



உலகத்தில் பல  நாடுகளில் கருப்பு பணப்புழக்கம் கொஞ்சமாவது இருக்கத்தான் செய்கிறது. அதற்கு  சீனாவும் விலக்கல்ல.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு உள்ள ஒரு புள்ளிவிவரத்தின் படி, கருப்பு பணம் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் சீனா தான் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்தியா நான்காவது இடம் தான்.

கோடிக்கணக்கான பணம் சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா   போன்ற நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறது. அவ்வாறு வெளியேறிய பணத்தை உள்ளே கொண்டு வருவதற்கான வேலையை சீன அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் தான் பெரும்பாலான அந்த கறுப்புப் பணம்  ரியல் எஸ்டேட்  தொழிலில் முடக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தவுடன் , சீன அரசாங்கம்  கோல்ட் கோஸ்ட் மாநிலத்தில் உள்ள இரண்டு முன்னாள் காவல் துறை அதிகாரிகளை ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் மூலமாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அந்த அதிகாரிகளின் வேலையானது கறுப்புப் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து, அந்த சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை திரும்பி சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டத்திற்கு பெயர் தான் "ப்ராஜெக்ட் டிராகன் (Project Dragon )"

இதுவரைக்கும் $80 மில்லியனுக்கான சொத்துக்களை கண்டறிந்திருக்கிறோம். எங்களின் உத்தியானது மிகவும் எளிமையானது மற்றும் சட்டத்துக்கு உட்பட்டதாகும் என்று அந்த இரண்டு அதிகாரிகள் கூறுகிறார்கள். 


பார்ப்போம் இவர்கள் அந்த சொத்துக்களை எல்லாம் மீட்டு, அந்த பணத்தை சீனாவிற்கே திருப்பி அனுப்புகிறார்களா இல்ல நம்ம மோடிஜியின் கறுப்புப் பண மீட்பு திட்டத்ததைப் போல் வெறும் புஸ்வானமாகி விடுமா என்று!!








Thursday, February 14, 2019

காதலர் தினம்





இது ஒரு மீள்பதிவு. இந்த பதிவு எழுதியே ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த பதிவுல அடுத்த வருஷம்   சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லியிருந்திருக்கிறேன். இன்னைக்குத்தான் மறுபடியும் இந்த பதிவை படிக்கும்போது அப்படி சொன்னதே நியாபகத்துக்கு வந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மணி இந்த நாளைப் பற்றி நினைக்கிறது எல்லாம் இல்லை. அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்ல. 


இனி இந்த மீழ் பதிவுக்குள் போகலாம். 

எங்களுக்கு திருமணமான புதுசுல, வீட்டு அம்மணி ஒவ்வொரு காதலர் தினத்துக்கும், “இன்னைக்கு காதலர் தினம், எனக்கு என்னங்க வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு கேப்பாங்க”. நானும் சலிக்காம நமக்கு தான் 365 நாளும் காதலர் தினமாச்சே, அப்புறம் எதுக்கு தனியா, இந்த நாளை வேற கொண்டாடணும்னு சொல்லி ஒண்ணும் வாங்கித்தராம மழுப்பிவிடுவேன். இந்த பதிலையே கேட்டுக்கேட்டு, அவுங்களுக்கும் புளிச்சுப்போயிருக்கும்னு நினைக்கிறேன்,அதனால அந்த மாதிரி கேக்கிறதையே நிறுத்திட்டாங்க. 

இந்த வருஷம் எங்களுக்கு 14வது காதலர் தினம். அடுத்த வருஷம் எதாவது நல்லதா வாங்கிக்கொடுக்கலாம், அதனால இந்த வருஷம் அதற்கு முன்னேற்பாடா, ஒரு ரோசா பூவை வாங்கிக்கொடுக்கலாம்னு நினைச்சு, ஆபிஸ்லேருந்து வரும்போது, ஒவ்வொரு பூக்கடையா ஏறி எறங்கினேன். சொல்லி வச்ச மாதிரி, எல்லா கடன்காரங்களும் ஒத்த ரோசா பூவை பத்து டாலருக்கு விக்கிறாணுங்க. அடப்பாவிகளா, இதுக்கு எங்க வீட்டிலேயே ஒரு பூவை பறிச்சு, அதுக்கு கொஞ்சம் ஜிகினா வேலை பண்ணி, கடைல வாங்கின மாதிரி செட்டப் செஞ்சு அவுங்களுக்கு, காதலோடு கொடுக்கலாமேன்னு நினைச்சு, வீட்டுக்கு வந்தேன்.

ஆனா பாருங்க, எங்க வீட்டுல இருக்குற ஒரு செடிக்கும் நாங்க தண்ணியே ஊத்தமாட்டோம். அப்பப்ப பெய்யுற மழைல தான் அந்த செடிங்க உயிர் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற மூணு,நாலு ரோசாச்செடியில, ஒரு பூ கூட பூக்கலை. அந்த செடிங்க எல்லாம், “வா மகனே, நீங்க எங்களுக்கு ஒழுங்கா தண்ணி ஊத்த மாட்டீங்க, ஆனா நாங்க மட்டும் நீங்க நினைக்கிற நேரத்துல பூ பூக்கணுமா, ஆ,அஸ்கு ,புஸ்குன்னு நினைச்சிருக்கும் போல. ஆக மொத்தத்துல வீட்டிலிருந்து பூவை பறிச்சு கொடுக்கலாம்னு நினைச்ச நினைப்புலையும் மண்ணு விழுந்துடுச்சு. 

உம், அப்படி சொல்ல முடியாது, எங்க வீட்டு அம்மணிக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு, வீட்டுக்குள்ள போனேன். கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்தேன், அவுங்களா கேக்கிற மாதிரி தெரியலை, அதனால, நானே என்னம்மா, இன்னைக்கு காதலர் தினமாச்சே, நீ ஒண்ணுமே என்கிட்ட கேக்கலை, அப்படின்னு அவுங்க வாயை கொஞ்சம் பிடுங்கினேன். உடனே அவுங்களுக்கு கோபம் வந்துடுச்சு. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல ஒரு காதலர் தினத்தன்னைக்காவது எனக்கு ஒரு பூவாவது வாங்கிக் கொடுத்திருக்கிங்களான்னு கேட்டாங்க. (அவுங்க கணக்குல கொஞ்சம் வீக், கல்யாணம் ஆகி எத்தனை காதலர் தினம் வந்திருக்குன்னு கரெக்டா சொல்ல தெரியலை!!!). ச்சை, நம்ம வீட்டு பூச்செடிங்க எல்லாம் காலை வாரி விட்டுச்சேன்னு நினைச்சுக்கிட்டு, கோவிச்சுக்காதேடா, அடுத்த வருஷம் இதே நாள்ல சர்ப்ரைஸா உனக்கு ரொம்ப பிடிச்சதை வாங்கித்தரேன்னு சொல்லி ஒரு வழியா அவுங்களை சமாதானப்படுத்தினேன். (இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல, அப்ப பார்த்துக்கலாம்னு ஒரு நம்பிக்கை!!!).

உண்மையான காதல் எந்த பருவத்தில வருதுன்னு என் கோணத்தில் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். 

விடலைப் பருவத்தில்
வருகிற காதலோ
வெறும் இனக் கவர்ச்சியே

திருமணம் முடிந்தவுடன்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமம் தான் அதிகமாக இருக்கும்

நடுத்தர வயதில்
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
காமமும் காதலும் சரிசமமாக இருக்கும்

வயதான காலத்தில்  
தன் துணையின் மேல்
வருகிற காதலில்
நூறு சதவீதம் காதல் மட்டுமே இருக்கும்


எல்லோருக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள். 

Sunday, February 10, 2019

அரசுப் பள்ளிக்கு படிப்புச் சீர் வழங்கிய பெற்றோர்

அரசாங்கம் கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு வரை அரசுப் பள்ளிகளுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. ஆனால் தனியார் பள்ளிகள் புற்றிசல்  போல் முளைத்த பிறகு மக்களிடம் அரசுப்பள்ளியா  என்று ஏளனம் இருந்து வருகிறது. சமீப காலங்களில் அந்த ஏளனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து விட்டது,அதற்கு மிக முக்கிய காரணம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தான். இருந்தும் நிறைய பெற்றோர்கள் தனியார் பள்ளி தான் நல்ல பள்ளி என்கிற எண்ணத்தை  மாற்றிக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தான் இலட்சம் இலட்சமாக பணத்தை தனியார் பள்ளிகளிடம் வாரி இறைத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பதிவில் வரும் பெற்றோர்களைப் பார்த்து, அரசுப் பள்ளிகளைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 


இந்த  செய்தியை   எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று  தெரியவில்லை.ஒரு நல்ல விஷயத்தை செய்தவர்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு.  





நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர் வரிசையாக வழங்கினர்.  கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இந்த பள்ளியில் தான் கல்வி கற்று பின்னர் ஆசிரியராக  பயின்றவராம். 



இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களாக மடி கணினி,பென்சில், தண்ணீர் தொட்டி , இன்வெர்டர், அலமாரி, மின் விசிறி போன்ற 7 இலட்ச ரூபாய்க்கான பொருட்களை பெற்றோர்களும், ஊர் மக்களும்  பட்டாடை உடுத்தி மேல தாளங்களுடன் ஊர்வலமாக வந்து பள்ளிக்கு வழங்கினார்கள். இப்படி ஊர்வலமாக வந்த பெற்றோர்கள் மற்றும் பொது மக்களை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் . 





இவ்வளவையும் செய்த அந்த ஊர் மக்கள் கடைசியில் சொன்ன அந்த வாக்கியம் தான் அவர்கள் எந்த அளவிற்கு அரசுப் பள்ளியின் மீது பாசத்தையும், உரிமையையும் வைத்திருக்கிறாரகள் என்று தெரிகிறது. 

"அரசு மட்டுமே பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் அரசு பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தாயான நாங்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருட்களை அளித்து இருப்பதாக தெரிவித்தனர்."

நான் முன்பு சொன்ன மாதிரி நிறைய பெற்றோர்கள் பணத்தை கொட்டிக்கொடுத்து, பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி சந்தோசம்  அடைகிறார்கள். இந்த பெற்றோர்களும் அரசுப் பள்ளிக்காக பணத்தை செலவழித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அடைந்த சந்தோஷமும் , மனத்திருப்தியும் அந்த பெற்றோர்கள் அடைந்திருப்பார்களா என்றால் கேள்விக்குறி தான். 

Monday, January 28, 2019

சிட்னி ஸ்ரீ கற்பக விநாயகர் குடமுழுக்கு விழா

வலைப்பூ உறவுகளுக்கு வணக்கம். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்து உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்துவந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் செய்ய  ஆரம்பித்துவிட்டேன்.  அதனால்  தான் வலைப்பூ உலகத்திற்குள் என்னால் வர இயலவில்லை. 

இந்த வருடத்தில் இருந்து சற்று நேரத்தை ஒதுக்கி வலைப்பூவிற்குள் மீண்டும் வரலாம் என்று எண்ணி இந்த பதிவிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஆனால் நான் பின்பற்றுபவர்களின் பதிவுகளுக்கு கருத்துக்களை பதிவிட முடியுமா என்று தெரியவில்லை . அதனால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். 

வேலையில் இருக்கும்போது எவ்வாறு நேரம் கிடைத்தது என்பதை வேறொரு பதிவில் சொல்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு எழுத ஆரம்பிக்கும்போது எதைப்பற்றி முதலில் எழுதுவது என்று யோசித்தேன். ஆனால் அதிக நேரம் மூளையை பயன்படுத்த விடாமல் என் அப்பன் விநாயகன் என்னை காப்பாற்றி  விட்டான். ஆம் சிட்னியில் நேற்று நடைப்பெற்ற குடமுழுக்கு விழவைப்பற்றித்தான் இந்த பதிவு.

முதலில் எனக்கும் இங்குள்ள கற்பக  விநாயகர் கோயிலுக்குமான  உறவை  சொல்லி விடுகிறேன். நாங்கள் இங்கு சிட்னி வந்து முதன் முதலில் சென்ற கோயிலே இந்த  தான். பொதுவாக வெளிநாடுகளில் உள்ள கோயில்களில் அமாவாசையன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் மோட்ச தீபம் தான் ஏற்றுவார்களே தவிர எள்ளும் தண்ணியும் இறைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பிள்ளையார் கோயிலில் உள்ள குருக்கள் மட்டும் தான் அதனை செய்து கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு அமாவாசையன்று இந்த கோயிலுக்குச் சென்று என் தந்தைக்கு தர்ப்பணம் செய்துவிட்டு  அலுவலகம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். இதனாலேயே குருக்களும்  என்னுடன் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் வீட்டில் நடக்கும் எல்லா விசேடங்களுக்கும் இந்த குருக்கள் தவறாமல் வந்து விடுவார். அதாவது எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் 16ஆம் நாள்  புண்ணியசானம், வீட்டு கிரகப்பிரவேசமும், என் பெற்றோருக்கு வருடாந்திர திதி கொடுப்பது என்று எல்லாவற்றிருக்கும் இந்த குருக்கள் தான் செய்து கொடுப்பது  வழக்கம். திதி  கொடுக்கும் நாளில் வீட்டு அம்மணிக்கு தோது இல்லையென்றால், நான் பிள்ளையார் கோயிலிலேயே கொடுத்து விடுவேன். சென்ற வருடம், குருக்கள் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று பத்திரிகை வைத்தார். இந்த அளவிற்கு எனக்கு பிள்ளையார் கோயிலோடும் குருக்களோடும் ஒரு உறவு இருந்துகொண்டு இருக்கிறது. மேலும் இந்த கோவில் எனக்கு எப்பவுமே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலைத்தான் நினைவு படுத்தும்.  

ஒரு வாரத்திற்கு முன்பு குருக்களிடம் அழைப்பு வந்தது. அதாவது, கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்தோடு வந்து விடுங்கள் என்று. அதனால் எப்படியாவது கும்பாபிஷேகத்துக்கு போய்விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு துர்க்கை அம்மன் கோயிலில் நடைப்பெற்ற குடமுழுக்கு விழாவிற்கு தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. அதனால் இந்த தடவை சரியான நேரத்துக்கு (8.30-9.30 மணிக்குள்)செல்ல வேண்டும் என்று ஒரு பரபரப்பு இருந்தது. குடமுழுக்குக்கு முதல் நாள் அதாவது சனிக்கிழமை அன்று எண்ணைக்காப்பு. இங்கு நம் கைகளாலேயே சுவாமி சிலைகளுக்கு எண்ணைக்காப்பு செலுத்தலாம். எனக்கு இந்த அனுபவம் முதன் முதலில்18 ஆண்டுகளுக்கு முன்பு  யுகேயிலுள்ள (UK) பர்மிங்காம் நகரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் முருகன் சிலையை ப்ரதிஷ்ட்டை செய்யும்போது கிடைக்கப்பெற்றது. சனிக்கிழமை காலை 11 மணி வாக்கில் எண்ணைக்காப்பு செலுத்தினோம். ஓவியாவுக்கும் இனியாவுக்கும் எண்ணைக்காப்பு சாத்துவது மிகவும் பிடித்து போய் விட்டது.

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் அடித்து பிடித்து வீட்டை விட்டு கிளம்பி 7.50 மணியளவில் flemington (இந்த இடத்தில் தான் பிள்ளையார் கோவில் இருக்கிறது) வந்து சேர்ந்தோம். வண்டியை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு 10 நிமிடம் நடந்து கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது, இராஜ  கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. பிறகு கூட்டத்தோடு சேர்ந்து நாங்களும் கோயிலுக்குள்  சென்றோம், பார்த்தா அங்கே ஏற்கனவே அவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் எப்படியோ உட்கர்ந்து, பிள்ளையார் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடப்பதை பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு அது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் சன்னிதானத்தின் விமானத்திற்கு  நடந்த கும்பாபிஷேகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. அங்கே முடியும் சமயத்தில் நாங்கள் பின்னாடி இருக்கும் சிவன் சந்நிதானத்தின் முன்பு அமர்ந்து விட்டோம். அதனால் கண்குளிர சிவனுக்கு நடந்த கும்பாபிஷேகத்தை கண்டு களித்தோம். பிறகு எல்லாம் முடிந்து வெளியே வந்தவுடன் சர்பத்தும், சாம்பார் சாதமும் வழங்கினார்கள். அங்கேயே இருந்து மகா தீபாராதனையை பார்த்துவிட்டு, அன்னதானத்தையும் முடித்துவிட்டு வரலாம் என்று பார்த்தால் நண்பர் ஒருவர் தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு அழைத்து இருந்தார், அதனால் அங்கே செல்ல வேண்டியதாகி விட்டது. 







































கும்பாபிஷேகத்திற்காக அழைத்து வரப்பட்ட பசுக்கள் 


சென்ற மாதத்தில் தான் அரிமளத்தில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது. ஊரில் இருந்திருந்தால் அந்த கும்பாபிஷேகத்தை போய் பார்த்திருந்திருக்கலாமே என்று ஒரு ஏக்கம் இருந்தது. கடைசியில் இங்கேயே கும்பாபிஷேகத்தை பார்த்து அந்த ஏக்கத்தை போக்கியாச்சு. 

Saturday, January 2, 2016

ஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது




(நேற்று இரவு(31ஆம் தேதி) சிட்னியில் நடந்த வண்ணமயமான வாண வேடிக்கை)

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த வருடமும் நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்க அந்த இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியா திடீரென்று ஒரு நாள், அப்பா நீங்கள் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பீர்கள்? நாங்கள் உங்களை மீசை இல்லாமல் பார்க்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார். என்னடாயிது, வம்பா போச்சு, நமக்கு இருப்பதோ அருகம்புல்லு மாதிரியான ஒரு மீசை,அதையும் எடுக்க வேண்டும் என்று சொல்லுகிறாரேன்னு கவலை. எப்படியும் அவரை தாஜா செய்து விடலாம் என்று எண்ணி, ஓவியாவிடம், இல்லடா, அப்பாவுக்கு மீசை இல்லாமல் இருந்தால் பார்க்கவே நல்லா இருக்காதுன்னு ஒரு பிட்டை போட்டேன். அதெல்லாம் முடியாது, நீங்கள் மீசையை எடுத்து தான் ஆகணும் என்று ஒரே பிடிவாதம். கூட இனியாவும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் பத்தாதுன்னு, வீட்டு அம்மணியும், ஏங்க பிள்ளைங்க ஆசைப்படுறாங்க, பேசாம மீசையை ஒரு தடவை மட்டும் எடுத்துடுங்க என்று அவர்கள் பங்குக்கும் எடுத்து விட. ஆஹா, நம்மளை சரியாக கார்னர் பண்ணிவிட்டார்களே,இவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்து, நமக்கு கை வந்த கலையை உபயோகித்து விட வேண்டியது தான் என்று அந்த கலையை பிரியோகப்படுத்தினேன். (அது வேற ஒண்ணும் இல்லைங்க, வீட்டு அம்மணி ஏதாவது கேட்டால், முடியாக்டு என்று சொன்னால் தானே பிரச்சனை, சரி செய்யுறேன், செய்யுறேன் என்று சொல்லி மழுப்புவது தான்). அந்த மாதிரி ஓவியாவிடம், நம்முடைய தமிழ் பள்ளி முடியட்டும், பிறகு நான் மீசையை எடுக்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு அந்த மீசை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
இருபது நாட்களுக்கு முன்பு தமிழ் பள்ளி முடிவடைந்தது, இனி ஜனவரி மாதம் கடைசி சனிக்கிழமை தான் திறக்கும். அதற்கு பிறகு ஓவியாவும் மறந்து விட்டார். நானும் பரவாயில்லை அம்மணி மாதிரி ஓவியாவும் மறந்து விட்டார். நம்முடைய மீசை தப்பித்தது என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷத்திலும் இன்று காலை மண் விழுந்தது. ஜனவரி ஒன்றாம் தேதி காலையில் ஓவியா எழுந்தவுடன், அப்பா நீங்கள் தமிழ் பள்ளி முடிந்தவுடன் மீசை எடுக்கிறேன்னு சொன்னீங்க,இன்னும் எடுக்கவேயில்லை. அதனால கண்டிப்பா இன்றைக்கு நீங்கள் மீசையை எடுக்கணும் என்று கூறிவிட்டார். நானும் அடுத்த வாரம் எடுக்கிறேனே என்று கேட்டுப்பார்த்தேன். என்னுடைய போக்கு புரிந்து, நீங்க இப்படியே மீசையை எடுக்காம நாளை ஓட்டிடுவீங்க,அதனால இன்னைக்கு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று கூறினார். அம்மணியும் ஏங்க வருடப்பிறப்பு அதுவுமா குழந்தையை ஏமாத்தாதீங்க, இன்னைக்கு மீசையை நீங்க எடுக்கிறீங்க என்று சொல்லிவிட்டார்.

சரி, ஓவியாவிடம் நம்ம பருப்பு வேகலை, இன்றைய தினம் இந்த அழகான மீசைக்கு வேட்டுத்தினமாகிவிட்டதே என்று எண்ணிக்கொண்டு தில்லுமுல்லு படத்தில் ரஜினி அழுதுக்கொண்டே மீசையை எடுப்பாரே, அது மாதிரி நானும் மீசையை எடுத்துவிட்டு குளியலையறையிலிருந்து வெளியே வந்தேன். குளியலைறைக்கு வெளியிலேயே ஓவியா அம்மணியின் அலைபேசியில் காமிராவை ஆன் செய்துகொண்டு காத்திருந்தார். நான் வெளியே வந்தவுடன் என்னை ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் எதுக்கு என்று கேட்டதற்கு, தம்பி பெரியவனானவுடன் அவனிடம் காட்டுவதற்கு என்று கூறினார். பிறகு என்னை பார்த்து,பார்த்து ஓவியாவும் இனியாவும் சிரி,சிரி என்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சிறிது நேரம் கழித்து, இனியா அப்பா,put back your மீசை” என்று ஒரு போடு போட்டார். ஐயையோ, இது  வம்பாயிடுச்சுன்னு, ஏன் உங்களுக்கு நான் மீசை இல்லாமல் இருப்பது பிடிக்கலையான்னு கேட்டேன். அதற்கு இனியாவும்,ஓவியாவும் ஆமாம் எங்களுக்கு பிடிக்கலை என்று கூறினார்கள். உடனே எல்லாம் மீசை வராது. இன்னும் கொஞ்ச நாள் ஆகணும் அப்பத்தான் மீசை வரும் என்று சொன்னேன். நான் சொன்ன பதிலை கேட்டுக்கொண்டிருந்த அம்மணி, ஏங்க எனக்கு நீங்க மீசை இல்லாமல் இருப்பது தாங்க பிடிச்சிருக்கு என்று ஒரு இடியை இறக்கினார்கள்.


இந்த நல்ல நாள் அதுவுமாக மீசை விஷயத்தில் நான் இப்படி மாட்டிக்கொண்டனே, ஆண்டவா இதென்ன சோதனை,பிள்ளைகளுக்கு நான் மீசையோடு இருப்பது தான் பிடிக்கிறது. மனைவிக்கு நான் மீசை இல்லாமல் இருப்பது தான் பிடிக்கிறது. இப்போது நான் யார் பக்கம் சாய்வது?