Monday, February 10, 2014

என் தூக்கத்தை கலைத்த பெண்

போன வாரம் வெள்ளிக்கிழமை அலுவலகம் போனவுடனேயே, ஒரு கடுப்படிக்கிற வேலையை தலையில் கட்டினார்கள். அதாவது, புதன் கிழமை இரவு சீனாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளரின் கணினியில், நைட் ஜாப்பை செயல்படுத்தும் சாப்ட்வேரில் பிரச்சனை ஏற்பட்டிருக்கு. அந்த ஜாப்பை மீண்டும் செயல்படுத்தியவுடன் பிரச்சனை வரவில்லை. அதற்கு பிறகு வியாழக்கிழமை இரவு எந்த பிரச்சனையும் வரவில்லை. ஆனால் புதனன்று மட்டும் ஏன் அந்த பிரச்சனை வந்தது. அந்த பிரச்சனையை இங்கு உருவாக்க முடிந்தால், அதன் அடிவேரை கண்டுப்பிடித்துவிடலாம்னு நினைத்து, என்னிடம் அதே பிரச்சனையை இங்கு உருவாக்கு என்று தந்தார்கள். நானும் அன்று முழுவதும் கண்கட்டு வித்தை,மாயாஜால வித்தைன்னு ஏகப்பட்ட வித்தைகளையெல்லாம் கையாண்டுப்பார்த்தேன், ஆனால் அந்த பிரச்சனையை மட்டும் உருவாக்க முடியலை. கடைசில சீச்சீ, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லி, 6.30 மணியயைப் போல வீட்டுக்கு கிளம்பினேன்.  இப்படி 9 மணிநேரமும், அக்கம்பக்கம் கூட திரும்பாம வேலை செஞ்சதுல, என்னிடம் இருந்த தம்மாத்தூண்டு மூளையும் சோர்ந்துப்போச்சு. அதனால இரண்டாவது trainல ஏறி உட்கார்ந்தவுடனே தூங்க ஆரம்பிச்சுட்டேன். என் பக்கத்துல ஒரு இந்தியப் பெண்மணி உட்கார்ந்திருந்தார்கள். நான் மொபைலில் நாற்பது நிமிஷம் கழிச்சு அலாரம் அடிக்கிற மாதிரி செட் பண்ணிவிட்டு, தூங்க ஆரம்பித்துவிட்டேன் . இத்தனைக்கும் நான் படிப்பதற்கு நூலகத்திலிருந்து கொண்டுவந்திருந்த ராஜேஷ்குமார் நாவலை வேறு வச்சிருந்தேன். ஆனால் அன்றைக்கு படிக்கிற மூட் எல்லாம் இல்லை.
 
நல்லா தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஒரு பயங்கிரமான கனவு. கனவுல, வீட்டு அம்மணி கதவுக்கு வெளியில நின்னுக்கிட்டு இருக்காங்க. ஆஹா, நம்மளோட வரவை எதிர்பார்த்துத்தான் "வழி மேல் விழி வைத்து" காத்துக்கிட்டு இருக்காங்கன்னு, ரொம்ப சந்தோஷமா நான்  காரை விட்டு இறங்கி, அவுங்க கிட்ட போனேன். அப்பத்தான் தெரிஞ்சுது அவுங்க  வழி மேல் விழி வைத்து காத்துக்கிட்டில்லை, பத்திரக்காளியாட்டாம் உக்கிரமா நின்னுக்கிட்டு இருக்காங்கன்னு. என்னையப் பார்த்தவுடனே, வீட்டுக்கு வரதுக்கு இவ்வளவு லேட்டான்னு முறைச்சுக்கிட்டே கேள்வி கேட்டாங்க. நான் பம்மிக்கிட்டே, ஆபிஸ்ல ரொம்ப வேலைம்மான்னு சொன்னேன். அவ்வளவுதான், என் கையில டப்பு, டப்புன்னு, எதையோ வச்சு அடிக்கிற மாதிரி இருந்துச்சு. சட்டுன்னு முழிச்சுட்டேன். பார்த்தா, உண்மையிலேயே என் பக்கத்தில் இருந்த அந்த இந்தியப்பெண்மணி தான் மொபைல் போனை வச்சு என்னை அடிச்சு எழுப்பிக்கிட்டு இருந்தாங்க. எனக்கோ முதல்ல ஒண்ணுமே புரியலை. அப்பாடா கனவுன்னு நினைச்சு சந்தோசப்பட்டேன். ஆனா உடனே, இவுங்க எதுக்கு நம்மளை போனை வச்சு அடிக்கிறாங்கன்னு பயம் வந்துடுச்சு. அப்ப train "Easthills" அப்படிங்கிற ஒரு ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டு இருந்துச்சு. நான் அவுங்களை பேந்த பேந்த முழிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்ததை பார்த்தவுடனே, அவுங்க நீங்க இந்த ஸ்டேஷன்ல தானே இறங்கணும், இறங்கலையான்னு கேட்டாங்க. என்னது! இந்த ஸ்டேஷன்ல நான் இறங்கணுமான்னு திருப்பி கேட்டேன். அவுங்களும், நீங்க இந்த ஸ்டேஷன் இல்லையா, அப்ப எந்த ஸ்டேஷன் நீங்கன்னு கேட்டாங்க. நான் இங்கில்பர்ன்ங்கன்னு சொன்னேன்., அவுங்களுக்கு அப்பத்தான் ஏதோ தப்பு பண்ணிட்டோம்னு புரிஞ்சுது. உடனே, அவுங்க சாரிங்க, ரொம்ப சாரிங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி,  நீங்க இந்த ஸ்டேஷன்ல இறங்கின மாதிரி இருந்துச்சு, அதனால தான் நீங்க ஸ்டேஷனை விட்டுடப் போறீங்கண்ணு எழுப்பினேன். தப்பா எடுத்துக்காதீங்கன்னு கெஞ்சாத குறையா சொன்னாங்க. (இதெல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள்). நானும், இதுவே எனக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னாடி நீங்க எழுப்பியிருந்தீங்கன்னா  எனக்கு கோபம் வந்திருக்கும், ஆனா இப்ப, நான் தாங்க உங்களுக்கு நன்றி  சொல்லணும், என்னைய ஒரு பயங்கிரமான கனவிலிருந்து காப்பாத்தினதுக்குன்னு சொன்னேன். அவுங்களுக்கு நான் சொன்னது ஒண்ணும் புரியலை, அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடின்னு கேக்க ஆரம்பிச்சாங்க, அதுக்குள்ள அவுங்க இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததுனால, என்கிட்ட மறுபடியும் ஒரு மன்னிப்பைக்கேட்டு இறங்கிப் போனாங்க.
ஆமா, அது என்ன கல்யாணத்துக்கு முன்னாடி, தூங்கும்போது எழுப்பியிருந்தா கோபம் வரும்னு கேக்கிறீங்களா, வேற ஒண்ணும் இல்லைங்க, கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் தூங்கும்போது கனவுல பொண்ணுங்க எல்லாம் வருவாங்க, அப்படி வர்ற கனவை கலைச்சா கோபம் வருமா வராதா, நீங்களே சொல்லுங்க.

16 comments:

  1. Replies
    1. உங்களுக்கு வேண்டுமானால் அது நல்ல கனவு என்று தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு - ???
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

      Delete
  2. ச்சே இந்த பொண்ணுங்களே ரொம்ப மோசமப்பா அழகாக இருக்கும் ஒருத்தர் தனியா ரயில்போனால் கூட இப்படியா அவங்க எங்க போறாங்க வராங்க இருங்குறாங்கன்னு நோட் பண்ணுறது...

    சரி பொண்ணுங்க ரொம்ப மோசமென்றே வச்சுகலாம் ஆனால் அவங்களை மயக்கிற மாதிரி ரயிலில் எதாவது பண்ணி போவது உங்களுக்கு தப்பா தோனலையா நண்பா...


    சரி அடுத்த லோடு பூரிக்கட்டையை ஆஸ்திரேலியா பக்கம் அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணனும்


    நானும் தினமும் எதாவது இந்திய பொண்ணு நம்மை கவனிக்கிறதா என்று ஏக்கத்தோடு செல்லுகிறேன் ஹும்ம்ம்ம் நமக்கு மச்சம் இல்லை மச்சம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. முதல்ல நான் அழகானவன்னு சொன்னதுக்கு பாராட்டுக்கள் தலைவா.

      "//அவங்களை மயக்கிற மாதிரி ரயிலில் எதாவது பண்ணி போவது //" - அந்த வயசு எல்லாம் தாண்டி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு. நான் சிவனேன்னு ஆபிஸ் போய் வந்துக்கிட்டு இருக்கேன், அவுங்களா என்னைய கவனிக்கறதுக்கு நான் என்னங்க பண்றது.

      நான் கையால அடி வாங்குறது பத்தாதுன்னு, பூரிக்கட்டையால வேற அடி வாங்கணுங்கிறீங்க. ஏங்க உங்களுக்கு அப்படி ஒரு ஆசை.

      நான் கன்னி ராசிக்காரனுங்க!!!!!!!!

      Delete
  3. அதானே...?

    அந்தப் பெண்மணி எவ்வளவு கவனித்துள்ளார்கள்...! எதற்கும் அந்தப் பெண்மணியிடம் (இனி) ஜாக்கிரதையாக இருங்க...! ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்மணி மட்டும் இல்லைங்க. இன்னும் சில பேர் என்னைய கவனிச்சுக்கிட்டு தான் இருந்திருக்காங்க, நான் கூட, நம்ம அழகா இருக்கோம் அதனாலதான் நம்மளை கவனிக்கிறாங்கன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன். என்னைய கவனிக்கிறதுக்கு முக்கிய காரணமே, நான் தமிழ் புத்தகங்களை வாசிச்சுக்கிட்டு போறது தான்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. எனக்கு தெரிஞ்சு, trainல தமிழ் புத்தகம் படிக்கிற ஒரே ஆளு நான் தான்.

      சரிங்க, இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்துக்கிறேன்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. நல்லா சொல்லியிருக்கிறீங்க
    சூப்பர் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆத்மா

      Delete
  5. so எழுப்பின பொண்ணு சுமாரா தான் இருந்திருப்பாங்க.
    என்ன சகோ ரைட்டா?
    ஏன்ன அழகான பெண்ணா இருந்தா கா.மு விக்கு முன்னும்
    கோபம் வந்திருக்காதே:)

    ReplyDelete
    Replies
    1. என்னை வம்புல மாட்டி விட்டுடிவீங்க போல சகோ!. உண்மையைச் சொன்னால், வீட்டில் விளக்கமாறு தான் பேசும். (பூரிக்கட்டைகள் எல்லாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்பட்டிருப்பதால்). அதுவும் ஒன்றுக்கு மூன்று விளக்கமார்கள் (எங்கள் வீட்டில் பெண்கள் ராஜ்யம் தான்) பொய் சொன்னால், "எப்போதும் உண்மையை சொல்லுபவன்" என்ற என் பிம்பம் உடைந்துவிடும்.

      இந்த மாதிரி ஒரு சிக்கல்ல மாட்டிவிடலாமா என்னைய?

      Delete
    2. அஹ்ஹா அஹா ஆஹா ! புரிந்துவிட்டது சகோ !

      Delete
  6. வணக்கம் சகோதரா.!
    கல்யாணத்திற்கு முன் கோபம் வரும் என்று உண்மையை ஒத்துக் கொண்டு விட்டீர்கள் அல்லவா நல்ல பிள்ளை தான்.ம் ம் ம். அந்தக் காலத்தில் மனைவி அப்படித் தான் வழி மேல் விழி வைத்து காத்திருப்பார் என்று சொல்வார்கள் கணவன் வருகைக்காக. இந்தக் காலத்தில் அது எல்லாம் சாத்தியம் இல்லை. உங்களுக்கு கனவில் ஆவது காத்திருந்தாரரே அதை நினைத்து சந்தோசப்படுங்கள் சகோதரரே.
    நன்றி ! வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்துக்கு முன்னாடி தான் கோபம் எல்லாம். இப்ப கோபமா அப்படின்னா என்ன என்ற ரேஞ்சில் தான் இருக்கிறது.
      கனவிலும் நான் தான் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டேன். அவர்கள் தான் "பத்திரக்காளியாட்டாம் உக்கிரமா நின்னுக்கிட்டு இருந்திருக்காங்களே"

      என்ன பண்ணுவது, இந்த ஆண் ஜென்மம் என்றைக்குமே பாவப்பட்ட ஜென்மம் தான்.

      Delete
  7. ஆஹா.... நீங்க எப்போதும் இறங்கும் இடம் கூட நோட் பண்ணி வச்சி இருக்காங்களே.... எதுக்கும் வீட்டுல இதை எல்லாம் சொல்லி மாட்டிக்காதீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. இதையெல்லாம் வீட்டுல சொல்லிக்ட்டு இருப்பாங்களா என்ன!!!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete