Tuesday, September 23, 2014

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - சைவ மாநாட்டில் மேடையேற்றிய நாடகம்



அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே,

சென்ற மாதம் இங்கு சிறப்பாக நடைபெற்ற சைவ மாநாட்டில் அடியேன் எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றிய "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்ற நாடகத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பதிகிறேன்.
சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்களில், மாமனாக வந்து வழக்குரைத்த படலம்" என்ற திருவிளையாடலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு கோர்த்து ஒரு நாடகமாக வழங்கினோம்.

இந்த நாடகத்தின் முக்கிய நியதியானது -

"நல்லவர்களை இறைவன் என்றைக்குமே கைவிட்டது கிடையாது. எந்த ரூபத்திலையாவது வந்து அவர்களுக்கு நன்மை புரிந்துக் கொண்டுத்தான் இருக்கிறான்" என்பதாகும்.



கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கதாப்பாத்திரங்கள்:

  1. சொக்கன்
  2. சொக்கனின் மனைவி கீதா
  3. சொக்கனின் பங்காளி சண்முகம்
  4. வக்கீல் சபாபதி
  5. தனபதி
  6. தனபதியின் மனைவி சுசீலை
  7. தனபதியின் தங்கை அன்னம்
  8. அன்னத்தின்      மகன்
  9. தனபதியின் பங்காளி ராக்கம்மா
  10. தனபதியின் பங்காளி வானதி
  11. ஊர்      தலைவர்
  12. அசிரிரி குரல்

கட்சி – 1

இடம் – சொக்கனின் வீடு

காட்சியமைப்பு – சொக்கன் வீட்டிற்குள் நுழைகிறார்

கீதா – வக்கீல் என்னங்க சொல்றாரு?

சொக்கன் – அவர் என்னத்தைப் புதுசா சொல்லப்போறாரு. கேஸ் நம்ம பக்கம் ஜெயிக்கிறது கொஞ்சம் கஷ்டம்னு சொல்றார்.

கீதா – உங்க பெரியப்பா மகன், அப்பவே நம்ம புள்ளைங்க பேர்ல எழுதின உயிலை சட்டப்படி பதிஞ்சிருந்தாருன்னா, நாம இன்னைக்கு இப்படி கோர்டு, கேஸ்ன்னு அலைய வேண்டாம்.

சொக்கன் – அவருக்கு பங்காளி சண்முகம் இப்படி கேஸ் போடுவாருன்னு தெரியலை, அதனால வெறும் பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாரு.

கீதா – நாம நல்லா சாமியை கும்பிடுவோம், எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்.

(அப்போது சண்முகம் தன் குழந்தைகளோடு உள்ளே வருகிறார். அவரைப் பார்த்துவிட்டு கீதா முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே போகிறார்)





சொக்கன் – வா சண்முகம். எப்படி இருக்கே. என்னதான் நீ எனக்கு எதிரா கோர்ட்ல கேஸ் போட்டிருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களை வரவேற்காம இருக்க மாட்டேன்
சண்முகம் – இந்த பாரு சொக்கா, நான் உன் வீட்டுல ஒண்ணும் விருந்து சாப்பிட வரலை. பேசாம கேசை வாபஸ் வாங்கிக்கன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.

சொக்கன் – என்ன ஆனாலும் சரி, நான் கேஸை வாபஸ் வாங்க மாட்டேன். ஏன் நீ கேஸை வாபஸ் வாங்குறதுதானே?

சண்முகம் – சரி, அப்ப ஒண்ணு பண்ணுவோம், ரெண்டு பேரும், நம்ம அண்ணனோட சொத்தை ஆளுக்கு பாதி, பாதியாக பிரிச்சுக்கலாம். என்ன சொல்ற?

சொக்கன் – இதபாரு, நான் உன்னைய தவிர வேற யார் கூட வேண்டுமானாலும் சொத்தை பங்கு போட்டுப்பேன், ஆனா உன் கூட மட்டும் சொத்துல பங்கு போடவே மாட்டேன். நீ நல்லவனாக  இருந்தா, அண்ணனோட கடைசிக் காலத்துல அவரை உன்கூட வச்சு பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம் இல்ல. அப்ப அவருக்கு ஒண்ணும் செய்யாம, இப்ப சொத்துல பங்கு கேட்டா என்ன நியாயம்?

சண்முகம் – இத பாரு, நான் சொல்ற வழிக்கு வரலைன்னா, அப்புறம் சொத்துல உனக்கு ஒண்ணுமே கிடைக்காது, பார்த்துக்க.

சொக்கன் – அண்ணன், அவரோட சொத்தை எங்கள் பிள்ளைங்க பேர்ல எழுதின விவரத்தை சட்டப்படி பதிவு பண்ணலைன்னாலும், கேஸ் என் பக்கம் ஜெயிச்சு ,அந்த சொத்து முழுவதும் என் கிட்ட தான் வரும். அதை நீ பார்க்கத்தான் போற.  

சண்முகம் – ஓ! அதனால தான், நீ கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்னு சொல்றியா!!! (சத்தமாக சிரிக்கிறார்). எனக்கும் அவர் அண்ணன் தானே, அவர் என் கிட்டேயும்,சொத்தெல்லாம் உன் பிள்ளைகளுக்குத்தான்னு கையெழுத்து போட்டு கொடுத்திருக்காரே. அதைத்தான் நான் நாளைக்கு கோர்ட்ல தாக்கல் செய்யப்போறேன். அதனால சொத்தெல்லாம் எனக்கு தான்னு வரப்போகுது, நீ நாமத்தை போட்டுக்கிட்டு போக வேண்டியது தான்.

(சண்முகம் வெளியே போகிறார். கீதா உள்ளே வருகிறார்)

கீதா – என்னங்க, உங்க பங்காளிகிட்டேயும், உங்க அண்ணன் எழுதி கொடுத்திருப்பாரா?

சொக்கன் – நீ வேற, அவர் அப்படி எல்லாம் பண்ணியிருக்கவே மாட்டாரு. இவன் ஏதோ ஃப்ராட் பண்ணியிருக்கான். கையெழுத்தை வச்சு, யார் கிட்ட இருக்கிறது உண்மைன்னு, கோர்ட்ல சொல்லிடுவாங்க.

கீதா – எனக்கென்னவோ ரொம்ப பயமாக இருக்குதுங்க. நாம வேற ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளை வச்சிருக்கோம். அதுகளுக்கு கல்யாணம் காட்சின்னு பண்ணனும். அந்த சொத்து இருந்தா, நல்ல இடத்துல ரெண்டு பேரையும் கல்யாணம் செய்யலாம். அப்புறம் உங்க அண்ணன் பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு,ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவை ஏத்துக்கலாம். முடிந்த அளவு பாழடைந்த கோயில்களையெல்லாம் புதிப்பிக்க முயற்சி  செய்யலாம்.இப்படி அந்த சொத்தை வச்சு, நான் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன்.  

சொக்கன் – கவலையேப்படாதே, எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான்.

கீதா – நானும் அந்த நம்பிக்கையில தாங்க இருக்கேன். உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம வாழ்ந்ததுக்கு, நாம தான் அவரை நல்லா பார்த்துக்கிட்டு, எல்லாம் செஞ்சோம். அவரும் நம்ம மேல பிரியமா இருந்தாரு. அவரை வச்சு பார்த்துக்கிட்ட புண்ணியத்துக்காவது, அந்த ஆண்டவன் அவரோட சொத்தை நமக்கு கொடுக்கணும்.

சொக்கன் – அண்ணாகத்தான், இஷ்டப்பட்டு தன் சொத்தெல்லாம் நம்ம பசங்க பேருக்கு எழுதி வைக்கிறேன்னு எழுதி வச்சார்.அதனால கண்டிப்பாக அந்த ஆண்டவன் நம்ம பக்கம் தான் இருப்பான். நம்ம வாழ்க்கையில நடக்கிறதை பார்க்கும்போது, அந்த காலத்துல ஈசன் புரிந்த திருவிளையாடல் ஒண்ணு எனக்கு நியாபகத்துக்கு வருது.

கீதா – திருவிளையாடல்னா, சிவாஜி நடிச்ச திருவிளையாடலையா  சொல்றீங்க?

சொக்கன் – அந்த படத்துல “தருமிக்கு பொற்கிழி அளித்த படலத்தை” காட்டியிருப்பாங்க. அது மாதிரி சிவன் 64 திருவிளையாடல்களை புரிந்திருக்கிறார். அதுல “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்ன்னு” ஒண்ணு இருக்கு. அந்த திருவிளையாடல் மாதிரியே தான், இப்ப நம்ம வாழ்க்கை இருக்கு.

கீதா – அந்த கதையை கொஞ்சம் சொல்றீங்களா.

சொக்கன் – இங்க ஒரு வாரமா, நாரத காண சபாவில, ஒய் .ஜி மகேந்திரனோட நாடக குழு, திருவிளையாடல் நாடகத்தை போட்டுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு போடுற 3 நாடகத்துல, அந்த “மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தையும்” போடுறாங்க. வா, போய் பார்க்கலாம்.


கட்சி – 2

இடம் – நாரத காண சபா

காட்சியமைப்பு – மாமனாக வந்து வழக்குரைத்த படலம் நாடகம் அரங்கேறுகிறது

(சுந்தரேச பாதசேகரனின் ஆட்சிக்காலத்தில் தனபதி என்ற வணிகர் தன்  மனைவி சுசீலையுடன் மதுரை நகரில் வசித்து வந்தார். பெரும் செல்வந்தரான வருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.ஆஸ்தியை    வருங்காலத்தில் ஆள ஒரு குழந்தை வேண்டுமே! சுந்தரேச பெருமானிடம் அவர்கள் வைக்காத வேண்டுதல் இல்லை. வருடங்கள்  ஓடியதே தவிர குழந்தை பிறக்கிற வழியைக் காணோம்.  இனி நடப்பதை பாருங்கள்)

சுசீலை -  ஐயனே, அந்த சுந்தரேசன் கண்ணைத் திறக்க மாட்டானா? இனிமேல் நமக்கு குழந்தையே பிறக்காதா?

தனபதி - அவ்வாறு அதைரியம் கொள்ளாதே சுசீலை. நம்முடைய வேண்டுதலுக்கு அந்த ஈசன் செவி சாய்ப்பான்.

(இருவரும் அந்த இறைவனை தொழுதுவிட்டு, வெளியே போய் மீண்டும் உள்ளே வருகிறார்கள்)

தனபதி – சுசீலை, யாம் ஒன்று சொல்லுவோம், கேட்கிறாயா?

சுசீலை – சொல்லுங்கள் ஐயனே, நான் என்றைக்கு தங்களின் பேச்சை மீறியிருக்கிறேன்.

தனபதி – நமக்கும் வயதாகிறதொழியே, குழந்தை பிறப்பதாக இல்லை. நம்முடைய ஆஸ்தியை நமக்கு பின் கட்டிக்காப்பதற்கு, எம்முடைய தங்கையின் மகனை சுவீகாரம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

சுசீலை – மிகவும் பொருத்தமான செயல் ஐயனே. அப்படியே செய்யுங்கள்.

தனபதி – சரி, தங்கையின் இல்லத்திற்கு செல்வோம்.






காட்சி – 3

இடம் – அன்னத்தின் இல்லம்

காட்சியமைப்பு – தனபதியும், சுசிலையும் அங்கு வருகிறார்கள்

அன்னம் – வர வேண்டும் அண்ணனே, வர வேண்டும் அண்ணியாரே. வர வேண்டும். வர வேண்டும்.

(அப்போது வருண் இருவர் காளிலும் கீழே விழுந்து வணங்குகிறான்)

வருண் – பணிகிறேன் மாமா

தனபதி – (வருணை எழுப்பி), யாம் உனக்கு தாய் மாமன் அல்ல. இனி, நீ எம்மை தந்தையே என்று தான் அழைக்க வேண்டும்.

சுசீலை – ஆம் மகனே, இனி நான் தான் உன் தாய்.

அன்னம் – (அதிர்ச்சியாக) தாங்கள் இருவரும் என்ன சொல்கிறீர்கள்? இந்த சின்னவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

தனபதி – அம்மா அன்னம், உன் மகனை யாம் சுவீகாரம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறோம். தமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?

அன்னம் – அப்படியா, மிக்க மகிழ்ச்சி அண்ணா. இனி எம்முடைய புதல்வனைப் பற்றி எனக்கு பயம் இல்லை. தங்களிடம் வளர்ந்து பெரிய ஆளாக வந்துவிடுவான்.

தனபதி – வந்த வேலை மிகவும் சுலபமாகி விட்டது. யாம் நல்லதொரு சுபமுகூர்த்த நாளில், இப்பாலகனை எம்முடைய புதல்வனாக சுவிகரித்துக்கொள்கிறோம். நாங்கள் விடைபெறுகிறோம் சகோதரி.

(இருவரும் கிளம்பி செல்கிறார்கள்)

அன்னம் – மகனே, இனிமேல் மாமாவும், மாமியும் தான் எல்லாம். அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடந்து வருங்காலத்தில் மாமனைப் போல் பெரிய ஆளாக வர வேண்டும்.

வருண் – ஆகட்டும் அன்னையே. தங்கள் சொல்படியே நடக்கிறேன். 


காட்சி – 4

இடம் – தனபதியின் இல்லம் 

காட்சியமைப்பு – அன்னம் அங்கு வருகிறார்

அன்னம் – அண்ணியாரே, என் புதல்வன் எப்படி இருக்கிறான்?

சுசீலை – வா அன்னம். என்னது உன் புதல்வனா? அவனைத்தான் நாங்கள் சுவீகாரம் செய்து கொண்டோமே. இனிமேல் அவனை அப்படி கூப்பிடாதே.

அன்னம் – என்னது அப்படி கூப்பிட கூடாதா? நீங்கள் சுவீகாரம் செய்துகொண்டாலும் அவன் என் மகன் இல்லை என்று ஆகிவிடுமா?, பத்து திங்கள் என் வயிற்றில் அவனை சுமந்து ஈன்றவள் நான் தானே.  

சுசீலை – நீ இவ்வாறு பேசுவது, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இரு, நான் சென்று என் ஐயனிடம் இதைப்பற்றி எடுத்துரைக்கிறேன்.

(அப்போது வருண் அங்கு வந்து தன் தாயோடு பேசிக் கொண்டிருக்கிறான். சுசிலையும் தன் கணவனிடம் முறையிடுகிறாள்)

சுசீலை – ஐயனே, நம்முடைய பாலகனுக்கு தங்களின் தங்கை தான் தாயாம், நானில்லையாம். இப்படியே சென்றால், நம் பாலகன் என்னை அன்னையே என்று அழைக்க கூட மாட்டான். தங்களின் தங்கைக்கு தாங்கள் தான் புரிகிற மாதிரி எடுத்துரைக்க வேண்டும்.

தனபதி – அன்னம், நீ அடிக்கடி உன் புதல்வனை இங்கு பார்க்க வருவது மிகவும் தவறு. அவன் இப்பொழுது எங்கள் மகன். மேலும் நீ தான் அவனின் தாய் என்றால், அவன் சுசிலையை தாயாக ஏற்றுக்கொள்வானா?

அன்னம் – அண்ணா, ஐயகோ, இக்து என்ன கொடுமை, ஈன்றெடுத்த புதல்வனை மகனே என்று அழைப்பதற்கு கூட முடியாதா? அவனை தாங்கள் சுவீகரித்தாலும் அவன் என்னுடைய மகன் என்பதில் மாற்றம் இல்லை.

தனபதி – இவ்வாறு ஒரு எண்ணத்தோடு, இனி நீ இங்கு வர வேண்டாம்.

அன்னம் – அண்ணா, என்னையா வர வேண்டாம் என்று சொல்கிறீர்கள். என் புதல்வனால் தான் தங்களுக்கு இறுதிக்கடன் நடந்து, நீங்கள் சொர்க்கத்தை அடைய முடியும். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

(அன்னம் செல்கிறாள். தனபதி இறைவனை தொழுகிறார்)

தனபதி – சுந்தரேசா! எனக்கு குழந்தை இல்லாததால் தானே இப்படி ஒரு வசைக்கு ஆளானேன். இப்பிறவியில் என் வேண்டுதலை ஏற்க மறுத்தாய். அடுத்தபிறவியிலாவது அந்த பாக்கியத்தைக் கொடு. சுசீலை, சுசீலை.

சுசீலை – ஐயனே, அழைத்தீர்களா?

தனபதி – எமக்கு வாழ்க்கையின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் இனி ஒரு ஷணம் கூட இங்கிருக்க வேண்டாம். புறப்படு, நாம் கானகத்துக்கு சென்று அங்கு தவ வாழ்க்கையை மேற்கொள்வோம்.

சுசீலை – தங்களின் வாக்கே எனக்கு தேவ வாக்கு . புறப்படலாம் ஐயனே.

22 comments:

  1. ஆஹா, குடும்ப சகிதம் கலக்குறீங்க... வாழ்த்துக்கள் நண்பரே....
    நாளைக்காக காத்திருக்கிறேன்...
    இதன் காணொளி இல்லையா ? நண்பரே...
    ஓவியா, இனியா இருவருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வேறொரு நண்பர் இதன் காணொளியை எடுத்திருக்கிறார். நேரம் கிடைக்கும்போது, அவர் வீட்டிற்கு சென்று காணொளியை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும். அது எப்பொழுது முடியும் என்று தான் தெரியவில்லை.

      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. நன்றாக இருக்கிறது சார். வசனங்கள் கூட சிம்பிளி சூப்பர்ப்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. மிகவும் அருமையாக இருக்கிறது! நாடகக் கலையிலும் அசத்தறீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  4. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...நாடம் இயல்பாக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      விடுமுறையை நல்ல முறையில் கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவரும் நலம் தானே?

      Delete
  5. வாழ்த்துக்கள்.... !!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கிங் சார்

      Delete
  6. குடும்பமே நாடகத்தில்
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      Delete


  7. உரையாடலும் அருமை. படங்களும் அருமை. வாழ்த்துக்கள்!காணொளியை வெளியிடுங்கள் தங்களின் நடிப்பை பார்த்து இரசிக்கிறோம். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காணொளியை வெளியிட முயற்சிக்கிறேன் .
      தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. மிகவும் நன்றாக இருக்கின்றது சகோ. இது காணொளியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கு. நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காணொளியை வெளியிட முயற்சிக்கிறேன்.தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
  9. ஆஹா சொக்கன் சார் எங்கேயோ போயிட்டீங்க....அருமை அருமை! கை கொடுங்கள் சார்.... காணொளி? யுடுயூபில் போடலாமே சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துளசி சார்.

      யுடுயூபில் காணொளியை பதிவேற்ற முற்சிக்கிறேன்.

      Delete
  10. எல்லோருக்கும் எங்கள் அன்பான இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்! முதலில் இந்த பின்னூட்டம் மீண்டும் வருகின்றோம் முழுவதும் நன்றாக வாசித்து விட்டு....வலைச்சரப்பணி இருப்பதால்தான்....

    இன்று முடிந்தால் வலைச்சரம் வருகின்றீர்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களும், கனிவான கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் மற்றும் சகோதரி கீதா.

      Delete
  11. மனமார்ந்த வாழ்த்துகள் சொக்கன்......

    அடுத்த பகுதியையும் படிக்க இப்போதே செல்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete